தி ஹிந்து –நாளிதழ் அறத்தின் சாவு
வாஞ்சி,தி ஹிந்து, டி .ஆர்.வெங்கட்ராமன்
தி ஹிந்து, ஊடக அறம் -கடிதங்கள்
வாஞ்சி -இந்துவின் மன்னிப்புகோரல்
அன்புள்ள ஜெ
தி ஹிந்து மீதான உங்கள் விமர்சனத்தைக் கண்டேன். நாளிதழ்களின் விமர்சனங்களை இத்தனை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்ன? நீங்கள் தி ஹிந்துவை மிகவும் கடுமையாக எழுதியதுபோலத் தெரிந்தது
ரமணி
*
அன்புள்ள ஜெ
தி ஹிந்து ஆங்கில வெளியிடும் செய்திகள் உங்களுக்கு உடன்பாடானவையா? அவை நம்பகமான செய்திகள் என நினைக்கிறீர்களா? தமிழ் ஹிந்து அதன் ‘தரத்தை’ இழந்துவிடுவதைப்பற்றி அவ்வளவு கவலைப்படுகிறீர்கள். இந்து என்றாலே இந்திய எதிர்ப்பு என்றுதானே அர்த்தம்?
ஆர்.பி.சீனிவாசன்
***
ஜெமோ,
உங்களுக்கு இந்த செய்தியை புகைப்படமாக அனுப்பலாம் என்றிருந்தேன். அதற்குள் நீங்களே வெளிவிட்டருக்கிறீரகள்.
உங்களுக்கும் கிருஷ்ணன் அவர்களுக்கும் இந்து மிகவும் கடமைப்பட்டுள்ளது. ஊதியம் பெற்றுக்கொண்டு வேலை செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய சிரத்தை. இந்துவின் ஊழியர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அன்புடன்
முத்து
***
அன்புள்ள நண்பர்களுக்கு
ஆங்கில இந்து இன்றுவரை இழந்துவிடாமலிருப்பது அதன் தகவல்சார்ந்த நம்பகத்தன்மையும் செய்திவெளியீட்டில் தரமும், மொழியின் சமநிலையும். அவை தமிழ் ஹிந்துவிலும் தொடரவேண்டும் என்பதே என் விருப்பம். அதையே குறிப்பிடுகிறேன்.
ஹிந்து தமிழில் வெளிவருகிறது என்றபோது உருவான எதிர்பார்ப்பு இதுதான். ஆனால் தமிழ் ஹிந்துவின் நிருபர்கள் ஆசிரியர்கள் பலர் ஜூனியர் விகடன் போன்ற வம்புப்பத்திரிகைகளில் இருந்து வந்தவர்கள். அல்லது சிற்றிதழ்ச்சூழலின் காழ்ப்புகளில் இருந்து வந்தவர்கள். அவர்கள் தங்கள் எல்லைகளை மீறி மேலெழுந்து ஹிந்துவின் தரத்தை ஓர் இலக்காகக் கொள்ளவேண்டும்.
நாளிதழில் பிழைச்செய்தி வந்தபோது நான் அதைப் பெரிதாக எண்ணவில்லை. ஆனால் அச்செய்தி பிழையென தமிழின் முதன்மையான சிந்தனையாளர்கள் சொன்னபின்னரும்கூட அவர்கள் அதில் கவ்விக்கொண்டிருந்ததுதான் பெரிய பிழை. அது நான்மடிப்பு வம்பிதழ்களின் மனநிலை. நாளிதழ்களுக்குரியது அல்ல. நாளிதழ் அறம் என ஒன்றுண்டு, செய்திகளுக்கு பொறுப்பேற்பது. அது ஆங்கில ஹிந்து இன்றும் கடைப்பிடிப்பது. அது தமிழில் தவறவிடப்படலாகாது
எல்லா இதழ்களும் அரசியல் சாய்வு கொண்டவை. உலகம் முழுக்க நாளிதழ்கள் அப்படி ஏதேனும் சாய்வுடன்தான் செயல்பட்டு வருகின்றன. ஹிந்து இடப்பக்கம் சாய்ந்தது. அதை அந்நாளிதழ் மறைக்கவுமில்லை. அதை விமர்சனம் செய்யலாம், வசைபாடுவது பொருளற்றது. வேண்டுமென்றால் ஒரு வலப்பக்க நாளிதழை வலதுசாரிகள் வளர்த்தெடுக்கலாம். இணையாக நிறுத்தலாம்.
ஆனால் பொதுவாக நாளிதழ்கள் அரசுக்கு எதிரானவை, அமைப்பை விமர்சனம் செய்பவை. நாளிதழ்களிடம் பெருவாரியான வாசகர்கள் எதிர்பார்ப்பது அதுதான்
*
இன்று நான்கு தளங்களில் இதழ்கள் கவனமாக இருக்கவேண்டும்.
சாதியவரலாறுகள். எந்த ஆய்வு அடிப்படையும் இல்லாமல் மனம்போனபோக்கில் சாதிப்பெருமையை வரலாறாக எழுதிக்குவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவற்றை எதிர்த்து விவாதிப்பதற்கான வெளியை வன்முறை, மிரட்டல் மூலம் அடைத்துவிட்டிருக்கிறார்கள். காழ்ப்புகள் முன்முடிவுகளுடன் வரும் இந்தப் பொய்வரலாறுகளை அபப்டியே அச்சிலேற்றிவிடும் பிழையை இதழ்கள் செய்யக்கூடாது. இந்து போன்ற நாளிதழ் ஒன்றை வெளியிடுவதனாலேயே அதற்கு நம்பகத்தன்மை அமையும். அதை மேற்கோளாகக் காட்டமுடியும். ஆகவே அதை எப்படியேனும் ஹிந்துவில் ஏற்றிவிட முயல்வார்கள். ஆங்கில ஹிந்து இதில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. தமிழ் ஹிந்து இதில் எச்சரிக்கையாக இல்லை.
நிருபர்களுக்கு சாதிப்பெருமைகளோ முன்முடிவுகளோ இருக்கலாம். அல்லது உண்மையிலேயே அவர்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக ‘ஸ்கூப் ஸ்டோரி’க்காக பாய்பவர்களாக இருக்கலாம். நாளிதழின் ஆசிரியர் அவற்றை கண்காணிக்கும் பொறுப்பு கொண்டவர். வழிநடத்தவேண்டியவர். நாளிதழ்ச்செய்தியின் முதன்மைப்பொறுப்பு அவருக்கே. ஆகவே அவர்தான் அச்செய்திகளை பரிசீலிக்கவேண்டும். ஆதாரபூர்வமானவையா என நோக்கவேண்டும். தேவையானபோது நிபுணர்கள், ஆய்வாளர்களின் தரப்பை கேட்டறியவேண்டும். இத்தகைய எந்தக்கட்டுரையையும் கொஞ்சம் தாமதித்து அச்சிடுவது நல்லது. ஆசிரியரை மீறி அச்சேறவிடாமலும் இருக்கவேண்டும்
அரசியல், சமூகதளங்களில் உள்ள புரளிச்செய்திகள். அப்துல்கலாம் பற்றி காமராஜர் பற்றி, சினிமாப்பிரபலங்கள் பற்றி வம்புகளை அளப்பது ஒரு பொதுமனநிலை. அவை இன்று சமூக ஊடகங்களிலும் வாட்ஸப்களிலும் பரவுகின்றன. அவற்றை சுவாரசியம் கருதி செய்தி என்று அச்சிட்டுவிட்டால் அதைப்போல நாளிதழைச் சிறுமைசெய்வது வேறில்லை
அரைகுறைகளின் கருத்துக்கள். கீழடி குறித்து ஒரு கட்டுரை வருகிறது என்றால் சம்பந்தப்பட்டவர் தொல்லியலில் எந்த அளவுக்கு அனுபவமும் ஆய்வும் கொண்டவர், அவர் தன் எல்லைக்குள் நின்று பேசுகிறாரா என இரண்டும் கூர்நோக்கப்படவேண்டும். தமிழகம் போல போலி மொழி ஆய்வாளர்கள், போலி வரலாற்றாய்வாளர்கள் மண்டிய நிலம் இந்தியாவில் வேறில்லை. எல்லாமே கடைசியில் போலிப்பெருமித உற்பத்தியையே சென்றடையும். கொரியாவின் முதல் அரசி ஒரு தமிழ்ப்பெண் போன்ற அபத்தக்களஞ்சியக் கட்டுரைகள் இந்த வகையானவை. ஆசிரியர்குழு இவற்றில் மிகக்கவனமாக இருந்தாகவேண்டும்
விமர்சனங்கள். இவ்விஷயத்தில் தமிழ் ஹிந்து கவனமாகவே இருக்கிறதென நினைக்கிறேன். ஒருவர் இன்னொரு ஆளுமையை விமர்சனம் செய்கிறார் என்றால் அவர் புறவயமான தரவுகளின் அடிப்படையிலும் தன் நீண்ட செயல்பாட்டின் பின்புலத்தில் நின்றுகொண்டும் அதைச்செய்யவேண்டும். உணர்ச்சிகரம் இன்றி நிதானமான மொழியில் அமைந்திருக்கவேண்டும். விமர்சிக்கப்பட்டவர் மறுமொழி சொல்ல வாய்ப்பளிக்கப்படவேண்டும்.
ஜெ