அன்புள்ள ஜெ.,
இலக்கிய உலக ஆளுமைகள் பலருடனும் நெடுங்காலம் பழகி வந்துள்ள நீங்கள் தஞ்சை, திருச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த எவருடனும் அவ்வளவாகப் பழக்கம் இல்லை என்னும் கருத்துப்பட அண்மையில் ஓரிடத்தில் எழுதியிருந்தீர்கள். திருவையாற்றில் வளர்ந்தவன், (பிறந்த ஊரான) திருச்சியில் வசிப்பவன் என்னும் அடிப்படையில் உங்கள் கருத்து எனக்குச் சற்றே ஏமாற்றமளித்தது. மேலும், ஆவணப் படங்கள் பற்றி நீங்கள் எழுதியவற்றையும் படித்தேன்.
இவ்விரு விஷயங்களையும் இணைப்பதான ஒரு கேள்வியையே உங்கள் முன் வைக்கிறேன். சைவ மற்றும் பாரதித் தமிழறிஞரும் ஆங்கில மொழியில் ஆழங்காற்பட்ட வாசிப்பும் புலமையும் வாய்ந்த மொழிபெயர்ப்பாளருமான ’சேக்கிழார் அடிப்பொடி’ தி.ந.ராமச்சந்திரன் அவர்களைப் பற்றி திரு.ரவி.சுப்பிரமணியம் உருவாக்கிய ஆவணப்படத்தை இப்போதுதான் யூட்யூபில் கண்டு முடித்தேன். உடனே இக்கேள்வியை உங்களுக்கு எழுதத் தோன்றிற்று. வீட்டு நூலகம் என்பதை பால்ய வயதிலேயே அனுபவித்துத் திளைத்த, நூற்கள் மீது ஆறாக் காதல் கொண்ட நீங்கள், மாபெரும் தனிப்பட்ட நூலகம் ஒன்றினைத் தனது இல்லத்தில் வைத்திருப்பவர் என்னும் முறையிலாவது எப்போதேனும் தி.ந.ரா அவர்களைச் சந்தித்தது உண்டா?
அன்பன்
ரமீஸ் பிலாலி,
திருச்சி.
***
அன்புள்ள ரமீஸ் பிலாலி அவர்களுக்கு
நான் திரு டி.என்.ராமச்சந்திரன் அவர்களை தமிழினி வசந்தகுமார், தினமணி சிவக்குமார் வழியாக அறிவேன். ஒருமுறை அவரது இல்லத்திற்குச் சென்றிருக்கிறேன். ஒருமுறை அவருடன் ஒரு கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசியிருக்கிறேன். இதெல்லாம் பத்துப்பதினைந்தாண்டுகளுக்கு முன்.
பொதுவாக நான் திருச்சிப் பக்கம் வருவதில்லை. வந்தாலும் அவ்வழியாகக் கடந்துசெல்வதுதான் வழக்கம். ஆகவே அவரைத் தொடர்ந்து சந்திக்க வாய்ப்பில்லாமல் போயிற்று
தமிழின் தொன்மையான நூல்கள், அரியநூல்களின் பெரும் சேகரம் டி.என்.ஆர் அவர்களிடமுள்ளது என அறிவேன். தமிழின் இரு மகத்தான தனியார் நூலகங்களில் ஒன்று அது. இன்னொன்று புதுக்கோட்டை கிருஷ்ணமூர்த்தி –டோரதி கிருஷ்ணமூர்த்தியின் சேகரிப்பு. அவற்றை அமைப்புரீதியாக முறையாக பாதுகாக்க [ரோஜாமுத்தையாச் செட்டியார் நூலகம் போல] ஏதேனும் வெளிநாட்டுப் பல்கலைகள் முயலவேண்டும்.
திரு டி.என்.ராமச்சந்திரன் பற்றி என் நண்பர் ரவிசுப்ரமணியம் எடுத்த ஆவணப்படமும் முக்கியமானது.
ஜெ
ரவி சுப்ரமணியம் ஆவணப்படம்
***
டி என் ராமச்சந்திரன் உரை