அன்புள்ள ஜெயமோகன்,
நேற்றைய தினம் தங்களின் கிராதம் கிடைக்கப் பெற்றேன்.
புத்தக அலமாரியிலிருக்கும் வெண்முரசின் பன்னிரண்டு நூல்களையும் ஒருசேரப் பார்க்கையில் பிரமிப்பு ஏற்படுகிறது. எத்தகைய அசுர உழைப்பு இது என்று மலைப்பு தட்டுகிறது. எனது அலமாரியின் ஒரு பகுதியை முழுக்கவே வெண்முரசு ஆக்கரமித்துக் கொண்டுவிட்டது.
பல ஆங்கில நூல்களுக்கான விமர்சனங்கள் யூடூப் தளத்தில் வீடியோக்களாகப் பார்க்கையில், தங்கள் வெண்முரசு பற்றியும் இப்படியாக வெளியிட ஆசை எழுகிறது.
ஒரு சிறு முயற்சியாக இந்த வீடியோ பதிவு.
அன்புடன்,
கேசவமணி
கிராதம் செம்பதிப்பு
ஜெமோ,
கிராதம் கையில் கிடைத்திருக்கிறது. சொல்வளர்காடு கிடைத்தவுடன் ஒரு நீண்ட கடிதத்தை உங்களுக்கு எழுதியிருந்தேன்.
கிராதம் கிடைத்தவுடனே முதலிரு அத்தியாயங்களை என் மனைவி கடவுளுக்கு மட்டுமே அர்ச்சனை பண்ணிக் கொண்டிருந்த அந்த வெள்ளிக்கிழமை மாலை வேலையில் படித்து முடித்தேன்.
வழக்கம் போல் பிச்சாண்டவரின் சித்தரிப்பு அவர் உருவத்தை கண்முன் நிறுத்தி விட்டது. கூடவே பயத்தையும் அருவருப்பையும். இவ்வருவருப்பு அதன் உச்சக் கட்டத்தை எட்டியது அவர் பெருச்சாளியை சுட்டு அதிலுள்ள வெண்ணிற சதையை உணபதற்காக பிளந்து எடுப்பது தான். வைசம்பாயனுக்கு கிடைக்கும் அதே அருவருப்பு வாசகர்களுக்கும் கடத்தப்படுகிறது உங்களுடைய சித்தரிப்பால்.
ஆனால், “தன்னையே சுவைக்கிறது பிரம்மம்” என வைசம்பாயன் உணர்ந்து திரும்பும் அந்த அத்வைதத் தருணத்தில், பிச்சாண்டவர் மேல் அதுவரைக் கொண்டிருந்த அருவருப்பும் பயமும் சட்டென சருகென உதிர்ந்து விடுகின்றன.
முதல் அத்தியாயத்திலுள்ள ஷண்முகவேலுவின் சித்திரம் உங்கள் சித்தரிப்புகளுக்கு இணையாக போட்டி போடுகிறது. உங்கள் சித்தரிப்பின் வழியாக உங்களை விட அதிகமாக பிச்சாண்டவரை உள்வாங்கிக் கொண்டிருக்கிறார். இலக்கணத்தை மீறிய இலக்கியம் போல.
அன்புடன்
முத்து
|
|