சன்னிபாதை

https://youtu.be/SRsMRBawro4

ஜெ

கேரளத்தில் சன்னி லியோனுக்குக் கூடிய கூட்டம் பெரும்பாலான மலையாளிகளை அவமானப்பட வைத்திருக்கிறது. அலுவலகத்தில் அதைப்பற்றிப் பேசினாலே விரும்பமாட்டேனென்கிறார்கள். அது ஃபேக் வீடியோ என்றுகூட சிலர் சொன்னார்கள். தாங்கள் கல்வியில் முன்னேறியவர்கள், அறிவுபூர்வமானவர்கள், அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள் என்பது மலையாளிகளின் எண்ணம். நம்மூரில் ஜெயலலிதா கருணாநிதி மீதான கட்டவுட் வழிபாடுகளை எல்லாம் அவர்கள் நக்கலுடன்தான் பேசிக்கொள்வார்கள். இப்போது மிகவும் கூச்சப்படுகிறார்கள்.

மாரியப்பன் செல்வராஜ்

***

அன்புள்ள மாரியப்பன்,

கேரளம் தமிழகத்தைவிட கல்வியறிவில், அரசியல்பிரக்ஞையில் மேம்பட்ட மாநிலம் என்பது உண்மை. ஆனால் அந்தநிலையில் அது இருந்துகொண்டே இருக்கிறது என்பது பிரமை. இதை பலமுறை எழுதியிருக்கிறேன்.

கேரளத்தின் சரிவுக்கான காரணங்கள் பல. ஒன்று, வளைகுடாநாடுகள், அமெரிக்காவிலிருப்பவர்கள் அனுப்பும் பணத்தால் நிகழும் ‘மணியார்டர் எக்கானமி’. அங்கே வரும் பணத்தை அங்கேயே முதலீடு செய்ய வழியில்லை. ஏனென்றால் தொழில்கள் இல்லை. ஆகவே எளிய சேவைவணிகம், கறுப்புப்பண வணிகம் ஆகியவையே மேலெழுந்துவந்தன. கட்டுமானத் தொழிலேகூட ஒருவகை கறுப்புப்பணத்தொழில்தான்

வேறெந்த தொழிலுக்கும் கேரளத்தில் இடமில்லை என்பதனால் சுற்றுலாத்தொழில் ஊக்குவிக்கப்பட்டது. சுற்றுலாத்தொழில் அடிப்படையில் போதை, விபச்சாரம் ஆகியவற்றை பெருக்குகிறது. ஒட்டுமொத்தமாக கையில் பண ஓட்டத்துடன் பண்பாட்டுப்பயிற்சி இல்லாத ஒரு பெரிய இளைஞர்கூட்டத்தை உருவாக்கியதே இப்பொருளியலின் விளைவு.

இதைக் கேரளத்தில் எங்கும் காணலாம். கேரளச் சுற்றுலா மையங்களில்தான் பெண்கள் சீண்டப்படுவது இந்தியாவிலேயே அதிகம். இதன்பொருட்டு கோழிக்கோடு முதல் திருவனந்தபுரம் வரை இங்குள்ள கடற்கரைகள் அனைத்தையும் எட்டுமணிக்கு மூடிவிட போலீஸ் ஆணை உள்ளது. மாலை ஏழுமணிக்குமேல் கேரளத்தில் தெருக்களில் போதையில் அலையும் இளைஞர்கள மட்டுமே காணமுடியும்

இன்னொரு கோணத்தில் இவ்வீழ்ச்சிக்கு அரசியலும் ஒரு காரணம். இடதுசாரி இலட்சியவாதம் தொண்ணூறுகளுடன் வீழ்ச்சியடையத் தொடங்கியது. இன்று இடதுசாரிக் கட்சி அங்கே நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தொழிலாளர்கூட்டமைப்பு மட்டுமே. கூலி, மிரட்டல் அன்றி இலட்சியவாதம் ஏதுமில்லாதது. இலட்சியவாத யுகத்தின் கடைசித்தலைவர் அச்சுதானந்தன். அந்த வெற்றிடத்தை அங்கே சாதியரசரியல் நிரப்பி வருகிறது.

இன்றைய கேரளத்தின் ஒருபகுதி சென்றயுகத்தின் பண்பாட்டு –அரசியல் பயிற்சியால் இந்தியாவின் பிறபகுதிகளைவிட பலமடங்கு மேம்பட்டதாகவே உள்ளது. ஆனால் இன்னொருபகுதி வெறும் குடிக்கும்பலாக மாறிவிட்டிருக்கிறது. தராசில் அந்தத்தட்டு எடைகொண்டபடியே செல்கிறது

மலையாளத்தில் வலிப்புநோயை ஸன்னிபாதை என்பார்கள். இது கேரளத்தின் வலிப்புநோய்

ஜெ

முந்தைய கட்டுரைகிராதம் செம்பதிப்பு வருகை
அடுத்த கட்டுரைதுளிக்கனவு