89. அடுமனைசேர்தல்
சுபாஷிணி தன் பெயரைச் சொல்லி அழைக்கும் பல்வேறு குரல்களை கேட்டுக்கொண்டிருந்தாள். பலமுறை எழுந்து மறுமொழி கூறியதாகவே உணர்ந்தாலும் அவள் உடல் உடைந்த பொருட்களைப் போட்டுவைக்கும் இருண்ட சிற்றறைக்குள் மூலையில் போடப்பட்ட ஒரு கால் உடைந்த நிலைப்பீடத்தின் அடியில் முதுகு வளைத்து முகம் முழங்கால்களுடன் சேர்த்து ஒடுங்கியிருந்தது. அங்கிருந்தபோது அவ்வரண்மனை முழுக்க அலைந்த காலடிகளை மெல்லிய துடிப்புகளாக கேட்கமுடிந்தது. பெருவிலங்கொன்றின் கருவறைக்குள் இருப்பதுபோல உணர்ந்தாள். நோவெடுத்து தலை தாழ்த்துகிறது. நீள்மூச்சு விடுகிறது. குளம்பு மாற்றிக்கொள்கிறது. குருதித் துடிப்புகளின் ஒலி கேட்கிறது. எக்கணமும் அது தன்னை வெளியே உமிழ்ந்துவிடக்கூடும்.
அவள் மேல்மூச்சுடன் மீண்டும் உடலை ஒடுக்கிக்கொண்டாள். ஒலிகள் ஓய்ந்தன. மிக அருகே இறுதியாக அவள் பெயரை அழைத்துக்கொண்டு கடந்து சென்ற முதுசெவிலியின் காலடி தேய்ந்து மறைந்தபோது அவள் மெல்ல உடலை தளர்த்தினாள். கால்களை நீட்டி முகத்தில் படிந்த ஒட்டடைகளை அகற்றியபின் கைகளை மார்பில் கட்டிக்கொண்டாள். எங்கோ எவரோ ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். மொழி முற்றிலும் புரியாததாக இருந்தது. மொழி புரிவது அணுக்கத்தால்தான். அகலங்களில் பொருளிழக்கிறது அது. மொழி முற்றிலுமாகப் புரிவதற்கு எத்தனை அணுக்கம் தேவை? உடலோடு உடல் ஒட்ட வேண்டும். உடலுக்குள் புகுந்துவிட வேண்டும். உள்ளத்துக்குள் இணைய வேண்டும்.
அவள் மீண்டும் பெருமூச்சுவிட்டாள். அழவேண்டும்போல் இருந்தது. ஆனால் எத்தனை முயன்றும் உள்ளே செறிந்திருந்ததை அழுகையாக ஆக்க முடியவில்லை. இடைநாழியில் முதுசேடி நடந்துசென்றாள். “முற்றத்தில் அனைவரும் சென்று நிற்க வேண்டியதில்லை. சிலர் இங்கே அறைகளுக்குள்ளும் இருக்கவேண்டும். எந்நிலையிலும் அரண்மனையை முற்றொழிந்து சென்றுவிடக்கூடாது. முற்றொழிந்த அறைகளில் மூத்தவள் குடியேறுகிறாள்” என்றாள். யாரோ “விளக்குகளை கொண்டுசென்றுவிட்டீர்களா?” என்றார்கள். தன் கைகளைத் தாழ்த்திய பின்னர்தான் வளையலோசையைக் குறித்து சுபாஷிணி எண்ணினாள். “என்ன ஓசை அது?” என்றாள் முதுசெவிலி. எவரோ “எங்கே?” என்று கேட்டார்கள். “இங்கே இந்த சிற்றறைக்குள்” என்றபடி முதுசேடி அருகே வந்தாள். “ஓர் அகல்விளக்கைக் கொடு” என்றாள்.
சுபாஷிணிக்கு நெஞ்சு படபடத்தது. அங்கு ஒளிந்திருந்ததை தெரியப்படுத்துவதற்கு தன்னுள் வாழ்ந்த பிறிதொன்று விழைந்திருக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது. கதவு மெல்ல திறந்து கைவிளக்குடன் சிவந்து எரிந்த முதுசெவிலியின் முகம் தோன்றியது. அவள் நிழல் பெருகி எழுந்து கூரைமேல் படிந்து வளைந்து அவர்கள் இருவரையும் பார்த்தது. “இங்கிருக்கிறாயா?” என்றாள். சுபாஷிணி ஒன்றும் சொல்லவில்லை. “எழு! உன்னை பார்க்கவேண்டும் என்று பேரரசி கேட்டார்கள்.”
சுபாஷிணி “இல்லை நான்…” என்று சொல்ல. “என்ன இல்லை? இப்போது அவர்கள் இங்கு சைரந்திரி அல்ல. நம் அரசிக்கே ஆணையிடும் பேரரசி. பாரதவர்ஷத்தின் தெய்வங்கள்கூட அவர்களை மறுத்துப்பேச முடியாது என்கிறார்கள். எழு!” என்றாள் முதுசெவிலி. சுபாஷிணி கையை ஊன்றி எழுந்து நின்றாள். முழங்கால்கள் வலித்தன. “அவர்கள் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். உன்னை தோட்டத்தில் தேடுவதற்கு சேடியரை அனுப்பியிருக்கிறேன். நீ இங்கு அமர்ந்திருக்கிறாய்” என்றபின் “நீ எங்கோ ஒளிந்திருக்கிறாய் என்று எனக்குத் தோன்றியது. நான் ஒளிந்திருக்க வாய்ப்புள்ள இடங்களை தேடியிருக்கலாம்… முதலில் இங்கு வந்திருப்பேன். உன் அகவையிலிருந்து உள்ளமும் விலகிவிட்டது. வா!” என்று அவள் தோளைப் பிடித்து வெளியே கொண்டுசென்றாள்.
“நாசிகை… வா இங்கே!” என்று அப்பால் கைவிளக்கோடு சென்ற இன்னொரு சேடியை அழைத்தாள். அவள் நின்று நோக்க “இவளை நீராட்டி நல்லாடை அணிவித்து முற்றத்திற்கு கூட்டி வா! பேரரசி கிளம்பிக்கொண்டிருக்கிறார். அதற்குள் வந்தாகவேண்டும்” என்றாள். நாசிகை “என்ன நல்லாடை? இளவரசி என்று அணி செய்யலாமா?” என்றாள். முதுசெவிலி நகைத்து “இவளும் ஏதேனும் நாட்டு இளவரசியோ என்னவோ? யார் கண்டது? இத்தனை நாள் நம்முடன் இருந்தவள் பேரரசி என்று நாம் அறிந்தோமா என்ன?” என்றபின் திரும்பிச் சென்றாள். நாசிகை அவளிடம் “விரைந்து நீராடு. பேரரசி முதற்புலரிக்குள் கிளம்பிவிடுவார்” என்றாள்.
சுபாஷிணி மறுமொழி ஏதும் சொல்லாமல் அவளுடன் சென்றாள். அகத்தளத்தின் சிறிய குளத்தில் ஏற்கெனவே ஏழெட்டு பெண்கள் நீராடிக்கொண்டிருந்தனர். அவள் படிகளில் இறங்கியபோது ஒருத்தி “இன்னமும் ஒருத்தி நீராடாமல் இருக்கிறாளா? பேரரசி கிளம்புகையில் அணிபுனையாமல் எவரும் இருக்கக்கூடாதென்று ஆணை. எங்கள் வேலை முடிவதற்கு இவ்வளவு பொழுதாகிவிட்டது” என்றாள். அவர்களின் முகங்களைப் பார்க்காமல் சுபாஷிணி அணிந்திருந்த ஆடைகளுடன் நீரிலிறங்கினாள். “யாரிவள்? ஆடை மாற்றாமல் நீராடுகிறாள்?” என்று ஒருத்தி கேட்டாள். இன்னொருத்தி தாழ்ந்த குரலில் ஏதோ சொன்னாள்.
நீரில் மூழ்கி எழுந்து கூந்தலை பின்னால் அள்ளிச் சரித்தபோது அவள் என்ன சொன்னாள் என்பதை அவள் மனம் எடுத்து வைத்திருந்தது. அடுமனையின் பிச்சி. அவள் புன்னகைத்தாள். குளிர்ந்த நீரில் மூழ்கி எழுந்தபோது அதுவரை இருந்த உள்ளச்சுமை அகன்றுவிட்டிருந்தது. நீந்திக் கரையேறி ஆடைகள் உடலில் ஒட்டிக்கொள்ள காலடியில் நீர் சொட்ட நின்றபோது தான் புன்னகைத்துக்கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். இருளுக்குள் அவர்கள் எவரும் அறியாமல் ஒளிந்திருக்கும் உவகை. அவர்கள் அத்தனை பேரும் தன் முகத்தை நோக்கிக்கொண்டிருக்கையில்கூட ஒளிந்துதான் இருக்கிறோம் என எண்ணினாள்.
படிகளில் ஏறி உடை மாற்றும் இடத்திற்குச் சென்றாள். நாசிகை வெண்ணிற கீழாடையையும் இளஞ்செந்நிறப் பட்டு மேலாடையையும் அவளிடம் கொடுத்தாள். “இதை அணிந்து வரும்படி பேரரசியின் ஆணை. உனக்கென எடுத்து வைத்திருந்திருக்கிறார்” என்றாள். அவள் அந்தப் பட்டாடையைத் தொட்டு “இதையா?” என்றாள். நாசிகை “அணியுங்கள், இளவரசி” என்றாள். சுபாஷிணி சில கணங்கள் அதை நோக்கிக்கொண்டு நின்றபின் தலையசைத்தாள். ஆடை மாற்றி நுனி சொட்டிய கூந்தலை கைகளால் பற்றி நன்கு உதறி தோளுக்குப்பின் விரித்திட்டபடி அவள் இடைநாழிக்கு வந்தாள்.
அகத்தளத்தின் இடைநாழிகளும் அறைகளும் ஒழிந்துகிடந்தன. மிக அப்பால் ஓர் அறையிலிருந்து முதிய சேடி ஒருத்தி கைவிளக்குடன் அகன்று செல்ல அவள் நிழல் தூண்களை நெளிந்தாடச் செய்து தானும் உடன் ஆடியபடி மறைந்தது. சிலம்பு ஒலிக்க அவள் படிகளில் இறங்கினாள். தன் சிலம்பொலியைக் கேட்டு திடுக்கிட்டவள்போல திரும்பி படிகளைப் பார்த்தாள். முகப்புக் கூடத்தில் எவரும் இல்லை. முற்றத்தின் ஒளிப்பெருக்கு சாளரங்களின் ஊடாக வந்து செந்நிறக் கம்பளங்களென விழுந்து கிடந்தது. அவ்வொளியில் தூண்களின் வளைவுகள் மிளிர்வு கொண்டிருந்தன. படிகளின் அருகே அவள் தயங்கி நின்று மீண்டும் திரும்பிவிடலாமா என்ற எண்ணம் கொண்டபோது அப்பால் பிறிதொரு அறையிலிருந்து கைவிளக்குடன் வெளிப்பட்ட முதுசேடி “இங்கென்ன செய்கிறாய்? முற்றத்திற்குப் போ! உன்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள்.
தலையசைப்பால் ஆம் என்றபடி அவள் மெல்ல முற்றத்திற்குச் சென்றாள். படிகளில் இறங்கி பெருந்தூண் ஒன்றின் அருகே சென்று அதைப் பற்றியபடி தலையைமட்டும் நீட்டி பார்த்தாள். சுதேஷ்ணையும் உத்தரையும் அரசணிக்கோலத்தில் அகம்படியினரும் அணிச்சேடியரும் சூழ நின்றுகொண்டிருந்தனர். சைரந்திரி வெண்பட்டாடை அணிந்து அணிகளேதும் இன்றி குழலை விரித்து இடைவரை அலைசரிய விட்டிருந்தாள். அங்கிருந்த அனைவருக்கும்மேல் அவள் தலையும் தோளும் தெரிந்தன. நெய்ப்பந்தங்கள் எரிந்தாடிக்கொண்டிருந்த ஒளியில் முற்றம் ஓவியச்சீலையென அலைபாய்ந்தது. சுபாஷிணியின் அருகே வந்து நின்ற முதுசேடி “விராடபுரியின் இளவரசி இத்தனை எளிதாக நாடு நீங்குகிறார். ஊழ் ஒன்று வகுத்தால் ஓராயிரம் கைகளினூடாக அங்கே கொண்டுசென்று சேர்த்துவிடுகிறது” என்றாள்.
இன்னொரு சேடி “மணச்சடங்குகளேதும் பெரிதாகச் செய்ய வேண்டியதில்லையென்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் இன்னும்கூட முடியும் நகருமில்லாத ஊரோடிகளாகவே இருக்கிறார்கள். இளவரசியை இங்கு விட்டுவிட்டுச் செல்லலாம் என்றுகூட பேரரசர் யுதிஷ்டிரர் சொன்னார். இல்லை அவர்களுடன் கிளம்பியே தீருவேன் என்று இளவரசி சொல்லிவிட்டார். ஆகவே இருளிலேயே கட்டுச்சோறு கொடுத்தனுப்புவதுபோல இளவரசியை கையளிக்கிறார்கள்” என்றாள். சுபாஷிணி அச்சேடியை பார்த்தாள். அந்த முகத்தை பலமுறை பார்த்திருந்தும்கூட அவள் பெயரோ அவள் இயல்போ தெரிந்திருக்கவில்லை.
“ஒவ்வொருவருக்கும் அவரவர் பாதை வகுக்கப்பட்டுள்ளது. நாம் என்ன சொல்ல முடியும், இல்லையா?” என்றாள் மற்றொரு சேடி. சுபாஷிணி தலையசைத்தாள். முன்னரே சடங்குகள் அனைத்தும் நடந்துவிட்டிருந்தன எனத் தெரிந்தது. உத்தரை சுதேஷ்ணையின் கால்களைத் தொட்டு சென்னிசூடியபின் சூழ்ந்திருந்த செவிலியரிடமும் சேடியரிடமும் நன்மொழி சொன்னாள். சைரந்திரி புன்னகையுடன் ஒவ்வொரு சேடியாகப் பார்த்து இன்மொழி உரைத்து சிலர் தோள்களைத் தட்டி சிலர் கைகளைப்பற்றி விடை கொண்டாள். சிலர் கண் கலங்கினர். சிலர் அவள் கால்களை தொடப்போனபோது அதைத் தடுத்து தழுவிக்கொண்டாள்.
அவள் தன்னை பார்க்கிறாளா என்று சுபாஷிணி நெஞ்சிடிப்புடன் காத்து நின்றாள். அவள் தன்னை பார்க்கலாகாதென்று ஓருள்ளமும் பார்க்கமாட்டாளா என்று பிறிதொரு உள்ளமும் தவித்தன. அவள் விழி தன்மேல் பட்டதும் அவள் பார்வை தவறாதென்று தான் நன்கறிந்திருந்ததை உணர்ந்தாள். அருகே வரும்படி சுபாஷிணியை நோக்கி சைரந்திரி கையசைத்தாள். அவள் தயங்கி காலெடுத்து வைத்து தலைகுனிந்து நிலத்தை நோக்கியபடி மெல்ல நடந்து சென்றாள். தன்னை அங்கிருந்த அத்தனை விழிகளும் நோக்குவதை உணர்ந்தாள்.
சுபாஷிணி அருகணைந்ததும் சைரந்திரி அவள் தோளைப்பற்றி தன்னுடன் சேர்த்துக்கொண்டாள். அவள் காதில் “உன் அடுமனையாளனுடன் ஒருநாள் நீ இந்திரப்பிரஸ்தத்துக்கு வரவேண்டும். அங்கு என்னுடன் இருப்பாய்” என்றாள். கண்ணீர் பெருக கால்கட்டைவிரலால் நிலத்தை அழுத்தியபடி தலைகுனிந்து தோள் குறுக்கி அவள் நின்றாள். சைரந்திரி “நன்மங்கலம் கொள்க! நிறை மைந்தர் பெருக, இல்லறம் செழிக்க வாழ்க!” என்று அவள் தலைமேல் கைவைத்து வாழ்த்தினாள்.
சுதேஷ்ணை “எதுவும் பேரரசி அறியாததல்ல. என் மகள்…” எனத் தொடங்க அவள் கைகளைப்பற்றி “அறிவேன். தங்கள் மகள் பெறும் மைந்தன் பாண்டவர்களின் கொடிவழியில் முடிசூடுவான் என்று இளையவர் உரைத்த சொல் ஒருபோதும் பிழையாகாது” என்றபின் மீண்டும் ஒருமுறை வணங்கி நடந்து சென்றாள். உத்தரை அப்பால் அவளுக்காக காத்திருந்தாள். அவள் தோளைத்தட்டி தேரிலேறும்படி சொல்லி சைரந்திரி தானும் ஏறிக்கொண்டாள். புரவி தலையைச் சிலுப்பி மூச்சு சீறியது. பாகன் அதை மெல்ல தட்டியதும் சகடங்கள் உயிர்கொண்டன. மெல்ல குலுங்கியபடி அது சாலையில் ஏறி சிறுகோட்டைமுகப்பில் எரிந்த மீன் நெய் விளக்குகளின் ஒளியில் சுடர்கொண்டு அப்பால் இருந்த சாலைக்குள் நுழைந்து இருளில் புதைந்து மறைந்தது. இரு கைகளாலும் நெஞ்சை அழுத்தியபடி சுபாஷிணி நோக்கி நின்றாள்.
சுதேஷ்ணை அவளை நோக்கித் திரும்பி “உனக்காக மணமங்கலப் பரிசுகளை அளித்துச் சென்றிருக்கிறார் பேரரசி. உன் மணமகன் எவரென்று நீயே சொல்வாய் என்று ஆணையிட்டிருக்கிறார்” என்றாள். சுபாஷிணி பேசாமல் நின்றாள். “யாரவன்? பெயரை சொல்! அரண்மனை ஏவல்தலைவனை அனுப்பி அவனை வரச்சொல்கிறேன்” என்றாள் அரசி. அவள் தொண்டையில் இருந்து குரல் எழவில்லை. “உன் பெயரென்னடி?” என்றாள் அரசி. சூழ்ந்திருந்த பெண்களின் கண்கள் தொடுவதை உணர்ந்து உடல் மெய்ப்புகொள்ள தலைகுனிந்து நின்றாள். “சுபாஷிணி” என்று நிலம்நோக்கி சொன்னாள். “அவன் பெயரென்ன?” என்றாள் அரசி. அவள் நிமிர்ந்து “நான் அவர் பெயரை சொல்லலாகாது. முதலில் என் பெயரை அவர் சொல்லவேண்டும்” என்றாள்.
சுதேஷ்ணை “ஏன்?” என்றாள். முதுசேடி “அரசி, அதுதான் முறை. பெண் கோரி ஆண் மறுக்கக்கூடாது என்பது நூல்கூற்று. அது அவளில் கருக்கொண்ட குழந்தைகளுக்கு உலகுமறுத்தலாக பொருள்படும்” என்றாள். சுதேஷ்ணை புரியாமல் நோக்கியபின் “சரி. அவனை வந்து முறைப்படி உன்னை பெண் கேட்கச் சொல்” என்றபின் திரும்பினாள். நிமித்திகன் சங்கு ஊதி அவள் அகல்வதை அறிவித்தான். கொடிவீரனுக்குப் பின்னால் தளர்ந்த காலடிகளுடன் செல்லும் பேரரசியை சுபாஷிணி நோக்கி நின்றாள். பின்னர் படிகளில் ஓடி ஏறி இடைநாழியை அடைந்தாள். மீண்டும் தன் இருண்ட அறைக்குள் சென்று ஒடுங்கிவிட வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் இடைநாழியில் நின்றபோது அங்கு செல்லத் தோன்றவில்லை. அவள் விழிகள் ஒளியை நாடின. வெளியே செறிந்திருந்த இருள்வானை, விண்மீன்களை நோக்கியபடி சாளரத்தருகே நின்றாள்.
சாளரத்தினூடாக சைரந்திரி ஏறிய தேர் நீங்கிய இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் சுபாஷிணி. புலரிக்கு இன்னும் நெடுநேரம் இருக்கிறது என்று தோன்றினாலும்கூட அவளால் அந்த இடத்திலிருந்து விழிவிலக்க முடியவில்லை. ஒவ்வொரு நிகழ்வாக சைரந்திரியுடன் அங்கு வாழ்ந்த ஓராண்டையும் அவள் எண்ணிக்கொண்டிருந்தாள். ஒவ்வொன்றிலும் வாழ்வதாகவும் ஒவ்வொன்றையும் அருகிருந்து நோக்குவதாகவும் ஒவ்வொன்றையும் நெடுங்காலத்திற்கப்பாலென நினைவுகூர்வதாகவும் உள்ளம் பிரிந்து நடித்தது. சைரந்திரியின் அந்தத் தருணங்களின் உணர்வுமுகங்களும் உடலசைவுகளும் சிறுவிழியசைவுகளும்கூட அத்தனை தெளிவாக தன்னுள் பதிந்திருப்பதை உணர்ந்தாள். வானிலிருந்து உதிரும் அருமணிகளை அள்ளிப்பொறுக்கிச் சேர்ப்பதுபோல் அவளுடன் இருந்த ஒவ்வொரு கணத்தையும் பெற்றுக்கொண்டிருந்திருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டாள்.
மாடிப்படிகளில் கால்கள் மெத்திட்டு ஏறிச்செல்லும் சைரந்திரியை கண்டாள். காலடியின் தசை வாழைப்பூ நிறத்திலிருந்தது. மரப்படிகளில் அது அழுந்தி எழுந்து செல்லும்போது கணுக்கால்களின் நரம்பொன்று மெல்ல அசைந்தது. இளம் சிப்பிகள் போன்ற நகங்கள். நின்றிருக்கையில் புன்னகையெனக் குவிபவை. நடக்கையில் நாகச்சுழல் ஆடுகளத்தின் சோழிகளென விரிந்து குவிபவை. அவள் சாளரத்தில் தலைசாய்த்து கண்ணீர் விடத்தொடங்கினாள். மெல்ல உடல்தளர துயின்று மீண்டும் விழித்துக்கொண்டாள். சற்று நிலைமாறி நின்று மீண்டும் சைரந்திரியையே சென்றடைந்தாள்.
அத்தனை உருண்ட முழங்கையை, அத்தனை இறுகிய மணிக்கட்டை அவள் கண்டதில்லை. விரல்கள் ஒவ்வொன்றும் கடையப்பட்டவைபோல முழுமையானவை. அவள் சுட்டுவிரலைப் பற்றியபடி “தேவி, நீங்கள் வில்லேந்துவீர்களா?” என்றாள். “என் கந்தர்வர்களில் ஒருவன் வில்லவன். அவனிடமிருந்து கற்றுக்கொண்டேன்” என்றாள். “மற்போர்?” அவள் சுபாஷிணியின் தலையை பற்றிச்சுழற்றி “சொன்னேனே, பிறிதொருவன் மல்லன்” என்றாள். சிரிக்கையில் உதடுகள் இழுபட கன்னம் இருபுறமும் ஒதுங்கும்போது விழிகளில் ஒளிநிறைந்தது. “நீங்கள் அறியாதது ஏதேனுமுண்டா, தேவி?” என்றாள். அவள் சிரித்து “எல்லையற்றது இப்புவியின் வஞ்சம். அதை தெய்வங்களும் அறியமுடியாது” என்றாள்.
ஒவ்வொரு கணமும் உடன் இருந்திருக்கிறோம் என்ற உணர்வெழுந்ததுமே இனி இல்லை என்ற எண்ணம் எழுந்தது. அவள் சென்ற வழியைப் பார்த்து உடல் விம்மினாள். படியில் இறங்கி ஓடி முற்றத்தைக் கடந்து சாலையினூடாக தேரை பின்தொடர்ந்து ஓடவேண்டும் என்ற வெறி எழுந்தது. அவ்வாறு பிச்சியென கைவீசிக் கூச்சலிட்டபடி ஓடும் அவளை அவளே பார்த்து உடல் விதிர்த்து நின்றுகொண்டிருந்தாள். பிறிதொருவரை எண்ணியதே இல்லை. இப்புவியில் பிறிதெவரும் என்னுள்ளம் நுழைந்ததில்லை, பேரரசி. கதிரவனேதான் என நடிக்கும் நீர்த்துளி போன்றவள் நான். மீண்டும் இடைதளர தோள்களை சாளரத்தில் சாய்த்துக்கொண்டு கைகளால் தலையைத் தாங்கி நெய்ப்பந்தம் அசைந்த கோட்டைமுகப்பை பார்த்தபடி நின்றாள்.
பிறிதொரு முறையும் தேவியைப் பார்க்க வாய்க்காதென்ற எண்ணம் எழுந்தது. ஒருவேளை பார்த்தால் தானறிந்த தேவி அல்லாமல் இருக்கலாம் அவள். ஆனால் இப்போது தன்னுள் நிறைந்திருப்பவள் எப்போதும் இருப்பாள். மீண்டும் அவள் துயில்கொண்டாள். மீண்டும் சைரந்திரியுடன் இருந்தாள். அவள் குழலை அள்ளி தன் மடியிலிட்டு விரல்களால் நீவியபடி “நீண்ட குழல் நல்லூழ் அளிப்பதில்லை என்கிறார்களே, தேவி?” என்றாள் சுபாஷிணி. “யார் சொன்னது?” என்றாள் சைரந்திரி. “என் குழலைத் தொட்டுச் சீவும்போதெல்லாம் பிற சேடிகள் சொல்கிறார்கள்” என்றாள். சில கணங்களுக்குப்பின் சைரந்திரி “அரிதென்றும் மேலென்றும் நாம் கொண்டிருக்கும் எதுவும் நல்லூழை கொண்டுவருவதில்லை, சிறியவளே” என்றாள். “நல்லூழ் கொண்டவர்கள் முற்றிலும் வெளிப்படாது இங்கு வாழ்ந்துமுடிப்பவர்கள்.”
“நல்லூழ் என்றால் எது?” என்றாள் சுபாஷிணி. சைரந்திரி நகைத்து “சொன்னதுமே அதைத்தான் நானும் எண்ணிக்கொண்டேன்” என்றாள். “எஞ்சுவதென ஏதுமின்றி செல்வோமென்றால் இருப்பதற்கு ஏது பொருள்? பொருளின்மையை உணர்ந்தபின் நிறைவென்று ஒன்று உண்டா? நிறைவளிக்காதது உவகை என்றாகுமா என்ன?” அவள் பேசியது சுபாஷிணிக்கு புரியவில்லை. “என் குழலை எண்ணி எனக்கும் அவ்வப்போது அச்சம் எழுவதுண்டு, தேவி” என்றாள். சைரந்திரி அவள் கையைப்பற்றி “உனக்கு நல்லூழ்தான். ஏனென்றால் நீ வெளியே நிகழ்வதேயில்லை. உனக்குள் பிறிதொருத்தியாகி உலகறியாது வாழ்ந்து நிறைவாய்” என்றாள். அவள் “ஆம்” என்று சொல்லி மெல்ல சிரித்தாள்.
“அது நன்று. பெண்கள் தங்கள் உடலை அதன் அருமை அறிந்து காக்கும் ஒருவனிடம் அளித்துவிட்டு உள்ளத்தை தங்களுக்கென வைத்துக்கொள்ள வேண்டும்” என்றாள் சைரந்திரி. “என்ன?” என்று அவள் கேட்டாள். பின்னர் சிரிக்கலானாள். அச்சிரிப்பொலியைக் கேட்டு சைரந்திரி திரும்பிப்பார்த்தாள். “தாங்கள் சொல்வதை நான் வேறு யாரிடமாவது சொன்னால் என்னைப்போலவே தாங்களும் பிச்சி என்று சொல்லிவிடுவார்கள்” என்றாள். சைரந்திரி உரக்க நகைத்து “என்னை பலர் பிச்சி என்று சொல்லியிருக்கிறார்கள்” என்றாள்.
தலை அசைந்து சரிய விழித்துக்கொண்டு வெளியே பார்த்தபோது புலரியின் மணிவெளிச்சம் நிறைந்திருப்பதை சுபாஷிணி உணர்ந்தாள். ஆடையை சீர்படுத்தி பெருமூச்சுடன் செல்வதற்காகத் திரும்பியபோது கோட்டைமுகப்பில் சம்பவன் வந்து தொழுத கையுடன் நிற்பதைக் கண்டாள். அவனுக்குப் பின்னால் அவன் குலத்தவர் மூவர் கையில் மங்கலப்பொருட்கள் பரப்பிய தாலங்களுடன் நின்றிருந்தனர். அவள் பெருமூச்சுவிட்டாள். உவகையோ பதற்றமோ ஏற்படவில்லை. உள்ளமென்ற ஒன்றே உள்ளே இல்லை என்றுதான் தோன்றியது.
சுபாஷிணி அமர்ந்திருந்த சிற்றறையின் சாளரத்தினூடாக வெளியே இருந்த ஊண்கூடத்திலிருந்து இரு நிரைகளாக உணவருந்தி கைகழுவி வந்துகொண்டிருந்த முகங்களை பார்க்க முடிந்தது. ஊழ்கமாலையின் மணிகளென ஒவ்வொரு முகமாக அவள் முன் தோன்றி அப்பால் கடந்து சென்றது. அவர்களுக்கு முன்னால் பின்உச்சிப்பொழுதின் வெயில் இறங்கிய பசும்தோட்டத்திலிருந்து வந்த மெல்லொளி முகங்களை ஒளிபெறச் செய்தது. விண்ணளந்தோன் ஆலயத்தில் அவனைச் சூழ்ந்திருக்கும் அடியவரும் முனிவர்களும் தெய்வங்களும் கொண்டிருக்கும் முகவுணர்வு அது என்று அவளுக்குத் தோன்றியது.
அவள் தலை சரித்து நோக்கெல்லை வரை தெரிந்த முகங்கள் அனைத்தையும் நோக்கினாள். ஒருகணம் உளம் பொங்கி விழி நிறைந்தாள். எத்தனை எளியவர்கள்! வஞ்சமும் விழைவும் கரவுகளும் சினமும் இவர்கள்மேல் விழுந்து மறைந்து செல்லும் நிழல்கள் மட்டுமே. அத்தனை பேரையும் அன்னையர் பெற்றிருப்பார்கள். மடியிலிட்டு அமுதூட்டியிருப்பார்கள். தன் உடல் மெய்ப்பு கொள்வதை முலைகள் இறுகி காம்புகள் கூச்சம் கொண்டு விரைப்பதை உணர்ந்தாள்.
கதவு திறக்கும் ஓசை கேட்டு திடுக்கிட்டு நோக்கியபோது சவிதை அறைக்குள் வந்தாள். “என்ன செய்கிறாய் அங்கே? நீ ஆடை மாற்றிக்கொள்ள வேண்டும். சற்று நேரத்தில் அத்தனை பேரும் பந்தலில் அமர்வார்கள்” என்றாள். வியர்த்த முகத்தை முந்தானையால் துடைத்தபடி “எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பதற்றத்தில் உப்பை இனிப்பில் கலந்து தொலைக்கப்போகிறேன்” என்றவள் “இனி என்ன சடங்குகள்?” என்றாள். “இனிமேல்தான் சடங்கே. அக்காலத்தில் சடங்கு என இருந்தது இது மட்டுமே. மீதியெல்லாம் பிறகு வந்தவை” என்றாள். அவள் சொல்வதை புரிந்துகொண்டு சுபாஷிணி புன்னகைத்தாள். “நீ என்ன நாணமெல்லாம் அடைவதே இல்லையா? பூவாடை கொடுத்தபோதும் மலர்மாற்றிக்கொண்டபோதும்கூட உன்னிடம் நாணமே தெரியவில்லை. தாலிகட்டியபோது உன் தலையை நான்தான் பிடித்து குனித்துவைத்தேன்” என்றாள் சவிதை. “தெரியவில்லை, அக்கா” என்றாள் சுபாஷிணி.
“அடுமனைச்சூதரின் குலதெய்வங்கள் நூற்றுக்கும்மேல் உள்ளனர். அனைவரையும் சிறு கூழாங்கற்களாக செம்பட்டுக்கிழியில் பொதித்து எடுத்துக்கொண்டு செல்வோம். அனைவருக்கும் பலியும் கொடையும் உண்டு. இன்றிரவெல்லாம் சடங்குகள் இருக்கும்” என்றாள் சவிதை. சுபாஷிணி “உணவுண்டு செல்பவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன்” என்றாள். சவிதை வந்து அவள் அருகே நின்று வெளியே பார்த்து “ஆம், உண்டு செல்பவர்களை பார்ப்பதென்பது அடுமனையாளர்களுக்கு பேருவகை அளிப்பது. இப்புவியில் வாழ்வதற்கான பொருள் என்னவென்று தெரியும்” என்றாள்.
சுபாஷிணி “அடுமனையாளர் அவ்வாறு நோக்குவார்களா?” என்றாள். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “இல்லை நான் வெளியே இருப்பவள் என்பதனால் அடைந்த மெல்லுணர்வு இது என்று எண்ணினேன். அடுமனையாளருக்கு அது நாள்தொழில் என பழகியிருக்கும் அல்லவா?” என்றாள். சவிதை “இவ்வுள எழுச்சியை அடையாத அடுமனையாளர்களே கிடையாது” என்றாள். “போர்வீரர்கள் போருக்குப்பின் பெருங்கசப்பை அடைகிறார்கள். சிற்பிகள் தாங்கள் வடித்த சிற்பத்தின் குறைகளை மட்டுமே பார்க்கிறார்கள்” என்றாள் சுபாஷிணி.
சவிதை “ஆனால் சூதர்களிடம் கேட்டுப்பார். பாடி முடித்தபின் அவர்கள் குறையை உணர்வதுண்டா என்று” என்றாள். சுபாஷிணி “கேட்டிருக்கிறேன்” என்றாள். “அவர்கள் பாடி முடித்ததும் பாடலில் இருந்து மிகவும் கீழிறங்கி வந்துவிட்டதாக உணர்வார்கள்.” சவிதை “ஆம், பாடும்போது அவர்கள் நெடுந்தொலைவு சென்றுவிடுகிறார்கள்” என்றாள். பின்னர் சிரித்தபடி “அப்படியென்றால் அடுமனைத்தொழில் ஒன்றே ஆற்றிமுடித்த பின்னரும் நிறைவு தருவது” என்றாள் அவள். “விளையாட்டில்லை, மெய்யாகவே அதை உணர்கிறேன். அடுமனையாட்டி என்று வாழ்வதொன்றே முழு நிறைவு தருவது.” சவிதை “அய்யய்யோ! சொல்லிப் பரப்பிவிடாதே. தவம் மேற்கொள்ளச் செல்லும் முனிவர்களெல்லாம் இங்கு வந்துவிடப் போகிறார்கள்” என்றாள்.
வெளியே குழந்தையின் வீறிடல் கேட்டது. கோகிலமும் சிம்ஹியும் உள்ளே வந்தனர். சிம்ஹியின் இடையில் மென்தசைமடிப்புகள் கொண்ட தொடைகளும் புயங்களிலும் அக்குள்களிலும் தசைமடிந்த கைகளும் செல்லத்தொந்தியும் கொண்டிருந்த ஆண்குழவி இருந்தது. அது கைகளை விரித்து கால்களை உதைத்து எம்பி சினத்துடன் கூச்சலிட்டுக்கொண்டிருந்தது. முகம் சிவந்து சுருங்கி கண்கள் இடுங்கியிருந்தன. “என்ன சொல்கிறான்?” என்றாள் சுபாஷிணி சவிதை “இப்போதுதான் வயிறு நிறைய ஊட்டி இவளிடம் கொடுத்துவிட்டு சற்று விலகினேன். அதற்குள் நினைவு வந்துவிட்டது” என்றாள்.
அவள் குரல் கேட்டு குழவி இரு கைகளையும் நீட்டி கால்களை உதைத்து அன்னையை நோக்கி எம்பியது. “என் அரசனல்லவா? என் தெய்வமல்லவா? என்ன அழுகை? அம்மா வருவேன் அல்லவா?” என்று சொன்னபடி சவிதை அக்குழந்தையை இரு கைகளாலும் வாங்கினாள். அவள் இரு கைகளும் குழவியின் எடையால் கீழிறங்க கழுத்து இழுபட்டு இறுகியது. உடலை உந்தி அதை சுழற்றித் தூக்கி தன் இடையில் வைத்துக்கொண்டாள். இரு கைகளாலும் அது அவள் மேலாடையை விலக்கி முலைகளை பற்றிக்கொண்டது. “எப்படித்தான் இவனைச் சுமந்து அலைகிறாளோ? இடைநாழியிலிருந்து இங்கு கொண்டுவருவதற்குள் என் இடை இற்றுவிட்டது” என்றாள் சிம்ஹி.
சவிதை சுபாஷிணியிடம் “இவனுக்காகவே உடல் வளர்த்தேன்” என்று சொன்னாள். “கருவிலிருக்கையில் என்னைப் பார்த்த ஒவ்வொருவரும் அஞ்சினார்கள். வயிற்றுக்குள் இரண்டு மூன்று குழந்தைகள் இருக்கும் என்றார்கள். எனக்குத் தெரியும் என் வயிற்றுக்குள் வாழ்பவன் பெருமல்லன் என்று. நான் இங்கு வந்த முதல்நாளே அதை வலவர் என்னிடம் சொன்னார். அன்றிரவே கனவில் நான் இவனை கண்டுவிட்டேன். இவ்வடிவில் அல்ல, பேருடலுடன் புடைத்தெழுந்த தசைகளுடன் மல்லனென களம் நின்று தொடை தட்டி கைகளை உயர்த்தி கூச்சலிடுகிறான். உடலெங்கும் தசைகள் அலைகளென எழுகின்றன. அன்றிரவு விழித்துக்கொண்டு நெஞ்சைப்பற்றியபடி விம்மி அழுதேன். உண்மையில் அன்றிரவு அடைந்த பேருவகையை இவன் பிறந்தபோதுகூட அடையவில்லை.”
“ஆம், கருவுற்றிருக்கையில் வலவர் ஒவ்வொரு நாளும் இவளுக்கு மடியில் அமர்த்தி உணவூட்டினார்” என்றாள் சிம்ஹி. “நான் இங்கு வந்தபோது பழுத்த இலை போலிருந்தேன். பத்து நாட்களுக்குள் உடல் முழுக்க பொன் மின்னத்தொடங்கிவிட்டது. வலவருடன் சேர்ந்து பெருங்கலங்களை தூக்கிக்கொண்டு வருபவளாக மாறிவிட்டேன். இவன் பிறந்தபோது மூன்று மடங்கு எடையிருந்தான். வயிற்றிலிருந்து இவனை வெளியே எடுத்த வயற்றாட்டி அஞ்சி கூச்சலிட்டாள். அவளால் இரு கைகளாலும் தூக்கி மேலெடுக்க முடியவில்லை. இவன் அழுத குரல் கேட்டு வெளியே இருந்து வந்த பெண்கள் திகைத்துவிட்டனர். பிறந்த குழந்தை இத்தனை பெருங்குரலெடுத்து அழுமென்று அவர்கள் எண்ணியதே இல்லை.”
“என்னிடம் ஆண் குழந்தை என்றாள் வயற்றாட்டி. பொதுவாக குழந்தை வாய் வைத்து உறிஞ்சுகையில்தான் முலை சுரக்கும் என்பார்கள். நான் இவன் முகத்தை பார்த்த உடனேயே சுரக்கத் தொடங்கினேன். என் முலையாடைகளை விலக்கி இவன் வாயை கொண்டுவருவதற்குள் இரு காம்புகளிலிருந்தும் பால்சரடுகள் பீறிட்டு இவனை முழுமையாக நனைத்துவிட்டன. ஒரு முலையில் இவன் அருந்தும்போது பிறிதொரு முலை ஊறிப் பாய்ந்து இவனை முழுக்காட்டும். ஆகவே அதை ஒரு கிண்ணத்தில் பிடித்து மீண்டும் ஊட்டுவேன். ஆனால் அதெல்லாம் ஒரு பதினைந்து நாட்கள்தான். அதற்குள் இரு முலைகளையும் ஒட்ட உறிஞ்சி உண்டுவிட்டு மேலும் பாலுக்கு அழத்தொடங்கிவிட்டான்” என்றாள் சவிதை.
“எத்தனை மாதமாகிறது?” என்றாள் சுபாஷிணி குழவியின் தண்டை அணிந்த சிறுகால்களைத் தொட்டு ஆட்டியபடி. “எட்டு மாதம்” என்றாள் சவிதை. ஏவற்பெண்டு “அதற்குள் ஊனுணவு உண்ணுகிறான், நம்ப மாட்டாய்” என்றாள். “ஊனா?” என்றாள் சுபாஷிணி திகைப்புடன். சவிதை “அவன் உண்பதே அன்னையின் முலையைத்தானே? பால் போதாமல் ஆகும்போது ஒருநாள் இதை கடித்துத் தின்றுவிடப்போகிறான் என்று தோன்றும்” என்றாள். “அன்றெல்லாம் ஊனை முதலில் சற்று மசியவைத்து ஊட்டுவேன். இப்போது அப்படி அல்ல, நேரடியாகவே கொடுத்துவிடலாம். அவனே ஈறுகளால் மென்று விழுங்கிவிடுவான்.”
கோகிலம் “வயிற்றுக்குள் அனல் உறங்குகிறது. இன்று வரை எதுவும் செரிக்காமல் இருந்தது இல்லை” என்றாள். ஒரு முலையை உண்டு முடித்ததும் குழந்தை “ஆ!” என்று ஒலி எழுப்பி ஆணையிட்டது. “இதோ. இதோ, என் அரசே” என்றபின் இன்னொரு முலையை அதன் வாயில் வைத்தாள் சவிதை. அதன் தலையை வருடியபடி “உடலிலுள்ள கடைசி சொட்டு குருதியையும் உருக்கி அளித்துவிட வேண்டுமென்று தோன்றுகிறதடி. முலை உண்டு முடிக்கையில் எப்போதும் ஏமாற்றம்தான், அடுத்து மீண்டும் ஊட்ட இன்னும் எத்தனை பொழுதாகுமோ என. ஊறி நிறையவேண்டும் என்று வேண்டிக்கொள்வேன். விழித்திருக்கும் நேரமெல்லாம் இவனுக்கு ஊட்டிக்கொண்டிருக்கிறேன். கனவுகளில் இவனைத்தான் காண்கிறேன்” என்றாள்.
குழந்தையின் இரு கால்களும் சுவைநாவென நெளிந்துகொண்டிருந்தன. அடிக்கால் மென்மையில் முத்தமிட்ட சுபாஷிணி “இவன் பெயரென்ன?” என்றாள். “மாருதன்” என்றாள் சவிதை. “குழந்தை பிறப்பதற்கு முன்னரே பெயரை வலவரே இட்டுவிட்டார்.” கோகிலம் “இங்கு ஒவ்வொருவரும் அவர் நினைவைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில காலத்தில் ஆளுக்கு நூறு கதைகள் சொல்வதற்கு இருக்கும்” என்றாள்.
முதியவளான மிருகி உள்ளே வந்து “என்ன இங்கு நின்று பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? அணி செய்யவில்லையா? அங்கு குலமுதியோர் திரளத் தொடங்கிவிட்டனர்” என்றாள். “மூத்தவளாகிய அன்னை சினம்கொண்டுவிட்டாள்” என்று கோகிலம் சொன்னாள். “சீ, வாயை மூடு! நீ கிளம்புகிறாயா இல்லையா?” என்றாள் மிருகி. “இதோ” என்று சுபாஷிணி எழுந்தாள். சவிதை “நீ சென்று ஆடையணிந்துகொள். நான் இவனை சற்று வெந்நீராட்டி கொண்டுவருகிறேன்” என்றாள். “வெந்நீராட்டுவதற்குள் இன்னொருவர் உணவை ஒருக்கியிருக்க வேண்டும். நீராடுவதற்குமுன் என்ன உண்டிருந்தாலும் நீராடியபின் உடனடியாக அழத்தொடங்கிவிடுவான்.”
மீண்டும் ஒருமுறை குழவியின் இரு கால்களிலும் முத்தமிட்டுவிட்டு சுபாஷிணி அடுத்த அறைக்குள் சென்றாள். ஆடையை அங்கு சிறிய மூங்கில் பெட்டிகளில் வைத்திருந்தனர். சிறிய ஆடி அவள் உடலின் துளியையே காட்டியது. அவளுடன் வந்த சிம்ஹி “அரண்மனையில் பெரிய ஆடிகளில் முழு உடலை பார்த்திருப்பீர்கள். இங்கே கையளவு ஆடிதான். எனக்கு பெரிய விழைவு முழுதாக என்னை பார்க்கவேண்டும் என்று” என்றாள். சுபாஷிணி அந்த ஆடியை கையிலெடுத்தபடி “எதற்கு முழுதாகப் பார்க்கவேண்டும்? தேவையான அளவு மட்டும் பார்த்தால் போதாதா?” என்றாள்.