கடித உலகம்- கடிதங்கள்

vish

கடிதம் என்னும் இயக்கம்

அன்புள்ள ஜெ

வாசகர்கடிதம் என்பது வெறுமே ஒரு கடிதம் அல்ல. தீவிரவாசகர்கள் அந்த எழுத்தாளருடன் மானசீகமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒரு சிறுபகுதியையே கடிதமாக எழுதுகிறார்கள். நான் உங்களிடம்பேசிக்கொண்டிருக்கிறேன் ஜெமோ என்பதுதான் கடிதங்களின் அடிப்படை. அதை நீங்கள் பதிலளிக்காவிட்டாலும் பிரச்சினை இல்லை

அதேபோல சிலசமயம் நாம் சொல்லவேண்டியதை தொகுத்து எழுதும்போது அது கடிதமாகிறது. நிறையசமையங்களில் நான் எழுதியதுமே எனக்கு தெளிவாகிவிடுகிறது. அதற்குப்பின்னால் நான் அதை அனுப்புவதில்லை. அதோடு அதையே வேறு எவரேனும் எழுதியிருப்பார்கள். அது நானே எழுதியதாக நிறைவு அடைவேன்

உங்கள் இணையதளம் ஒரு பெரிய விவாதக்களமாக உள்ளது. நான் நாளிதழ்களின் வாசகர்கடிதங்கள் உட்பட அனைத்து இடங்களையும் வாசிக்கிறேன். முகநூலையும் வாசிக்கிறேன். இவ்வளவுபெரிய விவாதம் தொடர்ச்சியாக பத்தாண்டுகளாக நடந்துவரும் தளம் வேறு எதுவுமே இல்லை. இதை நீங்கள் சொன்னதுபோல வெளியே இருப்பவர்களால் புரிந்துகொள்ளமுடியாதுதான்

ஆர் ராஜபாண்டியன்

***

அன்புள்ள ஜெ

கடிதங்கள் பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். என்ன ஒரு பொற்காலம் என்ற எண்ணம் வந்தது. எவ்வளவு பெரியவர்கள் ஏற்றதாழ்வில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அய்யனார் பௌத்தர் என்பவருக்கு சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்களை பார்த்தேன். எவ்வளவு தீவிரமாக எழுதியிருக்கிறார். அவை அச்சில் வருமென்றே அவருக்குத்தெரிந்திருக்காது. அந்த அர்ப்பணிப்பையும் வெறியையும் இன்றுள்ளவர்களுக்கு புரிந்துகொள்ளமுடியாது. எதிலும் ஆர்வமில்லை. எங்குமே நிலைப்பதும் இல்லை. ஆகவே கேலியாக எதையாவது சொல்லிவிட்டுச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். அந்த லட்சணம் அவர்களின் எழுத்திலும் வருகிறது. மிகச்சிலர் தவிர பெரும்பாலான இன்றைய எழுத்தும் முன்பு சாவி, குங்குமத்தில் வெளிவந்த சாஃப்ட் போர்ன் கதைகள்தான். தமிழில் ராஜேந்திரகுமார், புஷ்பாதங்கத்துரைக்குத்தான் வாரிசுகள் அதிகம். காரணம் அந்தச்சிற்றிதழ்சார்ந்த தீவிரம் அழிந்ததுதான்

மகேஷ்

***

அன்புள்ள ஆசிரியருக்கு,

கடிதங்கள் பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப் படித்ததும் நான் மலரும் நினைவுகளில் மூழ்கிவிட்டேன். அலைபேசி இல்லாத காலத்தில் நண்பர்களுக்கு வாழ்த்துமடல்களையும் உடல்நல விசாரணைக் கடிதங்களையும் மடித்து வைத்து அனுப்பும்போதும் எனக்கு வரும்போது ஆவலுடன் மடிப்பு பிரித்து பார்க்கும்போதும்  கொண்ட மனவெழுச்சியை அலைபேசி வந்தபிறகு இழந்துவிட்டேன் என நினைக்கிறேன்.

அப்போதெல்லாம் சிரத்தையெடுத்து பூவேலைப்பாடுகொண்ட ஓவியம் வரைந்து என் எல்லா பள்ளித்தோழிகளுக்கும் விழாக்காலங்களில் அனுப்புவேன். இப்போதோ அதெல்லாம் இல்லை. முகநூலில் இரண்டு வரிகளில் சம்பிரதாய வாழ்த்துக்களுடன் முடிவடைந்துவிடுகிறது. பொங்கல் தீபாவளி கிறிஸ்மஸ் நியூ இயர் என எந்த வாழ்த்துமடல்களையும் வாங்க இப்போது நான் கடைகளுக்கு செல்வதில்லை. தோழிகளுக்கு கடிதங்களே எழுதுவதில்லை. கடிதம் என்று நான் பல வருடங்களுக்கு பிறகு -அதாவது கல்லூரி முடித்து இருபது வருடங்களாகப் போகின்றது

எழுத ஆரம்பித்தது தங்களின் எழுத்தில் நான் மூழ்கியபோதுதான். சென்றவருடம் ஊமைச்செந்நாய் சிறுகதைத் தொகுப்பு வாசித்துவிட்டு எனக்கு தோன்றியதை எழுதியிருந்தேன். எனக்கு தாங்கள் பதில் கடிதம் இட்டதும் எனக்கு தலைகால் புரியவில்லை. பலவருடங்களுக்கு முன் அடைந்த அந்த மகிழ்ச்சியைவிட பல்லாயிரம் மடங்கு அதிகமானதொரு மகிழ்ச்சி. ஆனால் இது ஒரு வித்தியாசமான மகிழ்வுணர்வு. அறிவார்ந்த தளத்தில் இயங்கிவரும் ஒரு பேராளுமையின் கனிவான ஒரு ஓரவிழி என்னைத் தீண்டியதாக நினைத்து புல்லரித்துப் போனேன். ஊண் ஊக்கம் மறந்தேன். அறம், கொற்றவை, காடு, விஷ்ணுபுரம், ரப்பர் என ஆரம்பித்து வெண்முரசின் முதற்கனலுக்குள் நுழைந்து ஏழுமுரசங்கள் தாண்டி இப்போது காண்டீபம் வந்திருக்கிறேன்.

கிறிஸ்டி

***

முந்தைய கட்டுரைவயக்காட்டு இசக்கி
அடுத்த கட்டுரைமன்மதன் -கடிதங்கள்