ஆயுர்வேத மாட்டிறைச்சி

DHXvgWAU0AAFdUW

சன்னி லியோனுக்கு கூட்டம் கூடியதைப்பற்றி கேரளஅறிவுஜீவிகள் கொந்தளிக்கிறார்கள். மல்லுப் பண்பாடுக்கு என்றே சில தனித்தன்மைகள் உண்டு என்பதை அவர்கள் அறிவதில்லை. எதெல்லாம் வருகிறதோ எல்லாமே நல்லதுதான் என்பதே அதன் முதல் மந்திரம். வந்ததெல்லாம் நம்முடையதாக ஆகிவிடவேண்டும் என்பது இரண்டாவது

ஆயுர்வேதப்பாவமன்னிப்பு, புரட்சிக்கிருஷ்ணஜெயந்தி,இஸ்லாமியத் திருவோணம், மாக்பெத் கதகளி, சம்ஸ்கிருத விளிம்புநிலைக் கதையாடல், நம்பூதிரிகாம்ரேட், கள்ளுக்கடைக்காந்தி என மல்லுக்கள் புதிது புதிதாக கிளம்பி வந்துகொண்டே இருப்பதற்குரிய கலாச்சார ஊற்றுமுகம் ஒன்று ஆழத்தில் உள்ளது.  ஆகவேதான் சீனாவின் முதலாளித்துவகம்யூனிசம் கேரளத் தோழர்களுக்கு தெளிவாகப்புரிகிறது.

புராணக் கலைக்களஞ்சியத்தை வெட்டம் மாணியும் இந்துதர்மசாஸ்திர பெருந்தொகுதியை ராவ்பகதூர் செறியானும் தொகுப்பது இதனால்தான். கிருஷ்ணபக்தியில் ஊறிய யூசஃபலி கேச்சேரி, ராமாயண உரை எழுதும் எம்.எம்.பஷீர், கதகளி சங்கீதம் பாடும் கலாமண்டலம் ஹைதர் அலி என கேரளக்கலவையின் வெற்றிமுகங்கள் பல.

ஆகவே நாளையே சன்னி லியோன் கேரளத்தில் புதிய கலைவடிவங்களை உருவாக்கினால் ஆச்சரியப்படமாட்டேன். பொதுவாக நான் மல்லுக்களைப்பற்றி ஆச்சரியமே படுவதில்லை.

ஆனால் என்னையும் ஆச்சரியப்பட வைத்தது இந்த மெனுதான். அட போட்டுவிட்டேன். இது மல்லுக்களின் இருபதோராம் நூற்றாண்டு மகத்தான கண்டுபிடிப்பேதான். தேடி சாப்பிட்டுவிடவேண்டும்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 89
அடுத்த கட்டுரைகோசாலைகள் பற்றி…