சார்
வணக்கம். தங்களின் “இரவு“ நாவலை நேற்று படித்தேன். அது குறித்து சில வரிகள் எழுத ஆசை.
இரவை விரும்பும் மனிதர்கள் ஒரு சமுதாயம் அல்லது குழுமமாக இணைகிறார்கள். அவர்களுக்கான இயற்கை சூழல்களே அலாதிதான். காயல். படகு. என மனதை கிறுக்காக்கும் புறச்சூழல்கள். இரவு விரும்பிகள் தங்களின் செயல்முரண்களை முரண்களாக்கி பார்க்காமல் அனுபவிக்கிறார்கள். (விரும்பிதானே இரவை தேர்ந்தெடுக்கிறார்கள். பிறகென்ன முரண். என்று தோன்றினாலும் பொதுபுத்தி சற்று முரணாக்கி பார்ப்பதால் இந்த வரிகள்) அதற்கேற்ப பணத்தேவைகளுக்காக பகல்களில் ஆலாய் பறக்கும் தேவையற்றவர்களாக கதாபாத்திரங்களின் சித்தரிப்பு.
சரவணன் முதலில் ஆச்சர்யப்பட்டாலும். பிறகு தன்முனைப்பாகவே அதனுள் ஒண்டிக் கொள்கிறார். நீலிமாவுடனான அவரின் இரவுக் காதல் யட்சியின் காதலாகவே மனம் வரையறை செய்துக் கொள்கிறது. உள்ளே செல்ல செல்ல. ராத்திரி உணவகங்கள். கூடுகைகள். ஆசிரமங்கள். சர்ச்சுகள். என வித்யாசமான அனுபவம். மங்கிய விளக்கொளியில் மழைக் கொட்டும் இரவொன்றில் காயலுக்குள் படகொன்றில். இரு பக்கங்களையும் நிறைக்கும் வீடுகள் ஊடே கடப்பது போல வித்யாசமான அனுபவம். நாவல் நெடுக மனதை அந்த கட்டுக்குள்ளேயே வைத்திருப்பது ஆசிரியரின் சாமர்த்தியம்தான். சிக்கலற்ற நடை. ஆங்காங்கே தெளித்தது போல மலையாள உரையாடல்கள். “ஆடிட்டர் இங்கிலீஷ்.“ “போலீஸ் இங்கிலீஷ்.“ வளமையான தமிழ் என வழக்கம் போல களிநடனம்தான்.
கமலத்தை ஒல்லியாக. உயரமாக. மாநிறக்கூட்டுக்குள். தொளதொளப்பான பைஜாமா உடைக்குள் துறுதுறுப்பான செயற்பாடுகளுக்குள் மனது நிறைத்து வைத்திருக்க. திடீரென்று கொலையாகிறார். சரவணன் அந்த அதிர்வை எதிர்க்கொள்ளும் விதம் அச்சுஅசலாக மனம் செயல்படும் போக்கிலேயே நிகழ்கிறது.
பகல் என்பது இரவின் எச்சம். இரவை பழம் என்று வர்ணித்தால். பகல் என்பது அந்த பழத்தின் சப்பிப் போடப்பட்டு வெளிறி கிடக்கும் கொட்டை என்பதாக நாவல் முழுவதும் ஊடாடிக் கிடக்கும் கிறக்கமான சலசலப்புகள் வாசிப்பிற்கு புதிய அனுபவம். கவிதையாக படமெடுக்கலாம்.
நன்றி சார்.
அன்புடன்
கலைச்செல்வி.
***