வாஞ்சி,தி ஹிந்து, டி .ஆர்.வெங்கட்ராமன்

vanchi

தி ஹிந்து –நாளிதழ் அறத்தின் சாவு

 

சற்றுமுன் தென்காசியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ்காரரும் இப்போது உச்சநீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றுபவருமான டி.ஆர்.வெங்கடராமன் அவர்கள் தொலைபேசியில் அழைத்தார். வாஞ்சிநாதனைப் பற்றி அவர் அறிந்த சில செய்திகளை பகிர்ந்துகொண்டார். அவற்றை உடனே பதிவுசெய்யவேண்டும் என்று தோன்றியது

 

ஆஷ் துரை  அவருடைய ஆளுகைக்கு உட்பட்ட செங்கோட்டையில் பணிநிமித்தமாகச் செல்லும்போது ஒரு தலித் கர்ப்பிணியை பிரசவத்தின்பொருட்டு பிராமணர்த்தெரு வழியாக கொண்டுசென்றார் என்பதனால்தான் அவரைக்கொல்ல வாஞ்சி முடிவெடுத்தார் என்னும் ஆதாரமே அற்ற கட்டுக்கதை ஒவ்வொரு ஆண்டும் வாஞ்சி நினைவுநாளன்று பரப்பப் படுகிறது.

 

செங்கோட்டையில் உள்ள அக்ரஹாரம் என்பது ஒற்றை திறப்பு உள்ளது. அதன்வழியாக எங்கும் செல்லமுடியாது. அங்குள்ள அத்தனை தெருக்களும் மையச்சாலைக்குத் திறப்பவை

 

அதைவிட முக்கியமானது ஆஷ் துரைக்கும் செங்கோட்டைக்கும் சம்பந்தமில்லை.ஆங்கிலேய ஆட்சியின் கீழ் உள்ள நிலம் அல்ல அது.அது அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதி. அங்கே ஆஷ் துரை சாதாரணமாக நுழையவேண்டுமென்றாலும் பல முறைமைகள் உண்டு.

 

இந்த அபத்தமான செய்தி இன்று ஒருவரை இன்னொருவர் மேற்கோள்காட்டுவதனூடாக வரலாறாக முன்வைக்கப்படுகிறது சிலரால். அதுவே இன்று வாஞ்சியின் வாரிசுகள் விஷயத்திலும் நிகழ்கிறது

 

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் திரு வெங்கட்ராமன் அவர்களின் முயற்சியால் வாஞ்சிக்கு சிலைவைக்கப்பட்டது. அப்போது வாஞ்சியின் வாரிசுகளுக்காக அரசு முறையான தேடுதல்களைச் செய்தது. வெங்கட்ராமன் அவர்களுக்கு நன்குதெரிந்த கோயில்அர்ச்சகரான கோபாலகிருஷ்ணன் என்பவர் வாஞ்சியின் தம்பி என்று தெரியவந்தது. அவரை எம்.ஜி.ஆரிடம் அழைத்துச்சென்று மனுகொடுக்கவைத்தார் வெங்கட்ராமன். அவருக்கு எம்,ஜி.ஆர் அரசு வீடும் உதவித்தொகையும் அளித்தது. அவரே வாஞ்சியின் சட்டபூர்வ ரத்தவாரிசாக அன்று எஞ்சியிருந்தவர். கோபாலகிருஷ்ணனின் பேரனும் கொள்ளுப்பேரர்களும் இன்று இருக்கிறார்கள்

vancj

வாஞ்சிக்குச் சிலை வைக்கும்போது அவர் கையில் துப்பாக்கியுடன் இருப்பதுபோல சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. அன்று காலிஸ்தான் பிரச்சினை உச்சத்தில் இருந்தமையால் அது தவிர்க்கப்பட்டு துப்பாக்கிக்குப் பதில் கையை தூக்கி கோஷமிடுவதுபோல அமைக்கப்பட்டது

 

நீண்டகாலத்திற்குப்பின்னர் இப்போது வாஞ்சியின் மகன் என்று சொல்லிக்கொள்ளும் ஜெயகிருஷ்ணனை வெங்கட்ராமன் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தார். வாஞ்சியைப்பற்றியும் அவருடைய கோத்திரத்தைபற்றியும் சில கேள்விகளைக் கேட்டபோது ஜெயகிருஷ்ணனால் எந்தப்பதிலும் சொல்லமுடியவில்லை. கற்பனையை ஓட்டி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பொய்யான செய்திகளைச் சொன்னார். எம்.ஜி.ஆரின் அரசு தேடியபோது உங்களிடமிருந்த செய்திகளைச் சொல்லியிருக்கலாமே என்று கேட்டதற்கு எம்ஜியாரே தன்னிடம் கோரியும் அரசின் உதவிகளை ஏற்க மறுத்துவிட்டதாக ஜெயகிருஷ்ணன் சொன்னார். சொல்லப்போனால் தன் பெயரையே அவர் மாற்றிச் சொன்னார். அவர் ஒரு கோமாளிபோலத் தோன்றினார்.

 

ஹிந்துவில் செய்தி வெளிவந்தபோது இச்செய்திகளை குள.சண்முகசுந்தரத்திடமும் இந்து நாளிதழிடமும் விரிவாக வெங்கட்ராமன் தெரிவித்தார். அவை பிரசுரிக்கப்படவில்லை. அந்த பிழையான கதை வேண்டுமென்றே நிலைநிறுத்தப்படுகிறது.

 

தமிழ் இதழியலின் மிகமிக துரதிர்ஷ்டவசமான நிகழ்வு இது

 

தி ஹிந்து, ஊடக அறம் -கடிதங்கள்

 

 

ஜெ

முந்தைய கட்டுரைஇருத்தலியல்,கசாக் -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 87