சார் வணக்கம்
இன்று தங்களின் தளத்தில் வெளியான நகலிசைக்கலைஞன் வாசித்தேன். நீங்கள் ஜானகி லெனினின் இப்புத்தகத்தைக் குறித்து எழுதிய சில நாட்களில் ’’எனது கணவரும் ஏனைய விலங்குகளும் ‘’ தமிழ்ப் பதிப்பை பாரதி புத்தகாலயத்திலிருந்து வாங்கினேன். முழுவதும் வாசித்தும் விட்டேன், மிக அழகிய வித்தியாசமான நூல். ஆங்கிலத்தில் சில பகுதிகளை வாசித்திருக்கிறேன் இருந்தும் தமிழில் மிக மிக அருமையாக இருக்கிறது , இயற்கையை விட்டு வெகுதூரம வந்துவிட்ட மக்களுக்கு சின்னத் தொட்டியில் செடி வளர்ப்பதே பெரும் பாடாகவும், அலுப்பூட்டும் ஒன்றாகவும் இருக்கையில், கரடி சிறுத்தை, மலைப்பாம்புகள், நாய், முதலை ஏன் கரையான், எலி, எறும்புகள் தவளைகள், என்று அனேக விலங்குகளுடனான ராம் மற்றும் ஜானகியின் அந்நியோன்யமான, சாகசங்களும் அன்பும் புரிதலும் நிறைந்த வாழ்க்கையையும், இயற்கையைக் குறித்த அரிதான பல தகவலகளையும் சொல்லும் இந்த புத்தகம் அனைவரும் அவசியம் வாசித்து அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
வரும் 30 ஆம் தேதி இந்த புத்தகத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி கோவையில் ஒரு உரையாற்றவும் இருக்கிறேன் சார்
இயற்கையுடன் இணைந்த வாழ்வின் அனுபவங்களையும் அற்புதங்களையும் இன்பங்களையும் அது கற்றுத்தரும் விலைமதிப்பற்ற பாடங்களையும் அடுத்த தலைமுறையினரும் இந்த புத்தகததை வாசிப்பதின் மூலம் கட்டாயம் தெரிந்துகொள்வார்கள்.
திரு காட்சன் அவர்கள் இப்பொழுது பணியாற்றிக்கொண்டிருக்கும் பனைசார்ந்த ஆவணப்படம் குறித்து அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் . அதன் ஒரு பகுதியாக செப்டெம்பரில் ஒரு மணி நேரம் பனையின் தாவர வகைப்பாட்டியல் -Taxonomy of Palmyra Palm- குறித்து நான் பணி புரியும் கல்லூரியில் என் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறேன் அதையும் ஆவணப்படுத்துகிறார்கள். நீங்கள் திரு காட்சனைக்குறித்தும் அவர் எங்கள் கல்லூரியில் நடத்திய பயிலரங்கைக்குறித்த என் கடிதத்தை உங்களின் தளத்திலும் வெளியிட்ட பிற்குதான் Palmyra palm conservation ல் ஒரு சிறு கிராமத்தைச்சேர்ந்த தாவரவியல் ஆசிரியையான என்னாலும் சிறு பங்காற்ற முடிந்திருக்கிறது.
எங்கள் மாணவரகள் சென்ற ஆகஸ்டில் நடந்த பனைஓலைப்பொருட்களின் பயிலரங்கிற்குப்பின்னர் தொடந்து இன்றும் பனைஓலைப்பொருட்கள்செய்துகொண்டே இருக்கிறார்கள், இந்த வருட இறுதியில் கல்லூரியில் ஒரு கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்ய இருக்கிறோம் காட்சன் அவரகளின் அழகிய பனைஓலைசித்திரங்களுக்கும் எங்கள் மாணவரகளின் பனைஓலைதயாரிப்புகளுக்கும் சேர்த்து
பாண்டிச்சேரியில் ஒரு பயிலரங்கில் திரு பி என் எஸ் பாண்டியன் எனும் பனைத்தொழிளாலர்களின் வாழ்விற்கென காட்சனைபோலவே பாடுபடுபவரை சந்தித்தேன். அவர் இயக்கிய விழியிழந்த ஒரு பனையேறியைக்குறிதத ‘’ அகவிழி’’ என்னும் ஆவணப்படம் பார்த்தேன்.
https://www.youtube.com/watch?v=7-jSoPSzLTg
முதல் முறையாக உடல் குறைபாடுடைய ஒருவரைக்குறித்து அறிந்த பின்னும் பச்சாதாபம் இரக்கமெல்லாம் தோன்றாமல் அவரின் தன்னம்பிக்கையைக் குறித்து மகிழ்வாக இருந்தது காட்சனையும் பாண்டியனையும் அறிமுகம் செய்து வைத்தேன் காட்சன் பாண்டிச்செரியும் செல்லவிருக்கிறார்.
தங்களின் இணைய தளம் இலக்கியம் வாசிப்பவர்களுக்கு மட்டுமல்லாது , மாணவர்கள், ஆசிரியர்கள்,அருட்பணியாளர்கள் பனைத்தொழிலாளார்கள், என பல தளங்களில் இயங்குபவர்களுக்கு அவர்களின் வாழ்வினை மாற்றவும் மேம்படுத்தவும் உதவிக்கொண்டிருகிற்து
பனைத்தொழிலாளர்கள் மேம்பாட்டுக்கும், அழிந்துகொண்டிருக்கும் பனைமரங்களைக்காப்பற்றவும், தாவரவியலை புத்தகங்களில் மட்டுமே வாசித்துக்கொண்டிருந்த இளைஞர்களை பாடப்புத்தகங்களைக்கடந்து இயற்கையை அறிந்துகொள்ளவும் நேசிக்கவும் பயனடையவும் நீங்கள் பெரிதும்உதவி செய்திருக்கிறீர்கள்
மிக்க அன்புடனும் நன்றிகளுடனும்
லோகமாதேவி