வாசிப்பதும் பார்ப்பதும்

leenaவாசிப்பு என்பது போதையா?

லீனா மணிமேகலை

அன்புள்ள ஜெ…

தமிழ் ஸ்டுடியோவின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய லீனா மணிமேகலை ஆவணப்படம்என்பது இருப்பதை அப்படியே காட்டுவதால் அது கலை வடிவம் அல்ல என நீங்கள  சொல்வதாக சொன்னார்.

பிறகு பேசிய அடூர் கோபாலகிருஷ்ணன் உங்கள் கருத்து தவறு என்றார்

நீங்கள் பல ஆவணப்படங்களை பாராட்டி எழுதியதைப் படித்திருக்கிறேன்…. மேற்கண்ட கருததை எந்த சந்தர்ப்பத்தில் என்ன அர்த்தத்தில் சொன்னீர்கள் என அறிய விரும்புகிறேன்….

பேரன்புடன்

பிச்சை

***

அன்புள்ள பிச்சை,

புத்தகவாசிப்பை குறித்து நான் எழுதிய கட்டுரையில் உள்ள காட்சியூடகம் குறித்த என் குறிப்பை ஒட்டி வந்த எதிர்வினைகளை கூர்ந்து கவனித்தேன். நண்பர் சிலர் எதிர்வினைகளைத் தொகுத்தும் அனுப்பியிருந்தனர். வழக்கமாக நான் என்ன சொல்கிறேனோ அதை எதிர்த்து மேலும்பேசுபவர்கள் நான் சொல்வதற்கான ஆதாரங்களை அவர்களே பேசிப்பேசி அளிப்பது வழக்கம். அதுவே நிகழ்ந்தது. இங்கே கருத்துக்களை மிகமிக எளிமையான வடிவில் தனக்கேற்ப மாற்றிக்கொண்டபின்னரே பேசத்தொடங்குகிறார்கள்.

ஒன்று, நான் ஆவணப்படங்களால் எந்தப்பயனும் இல்லை என்று சொல்லவில்லை. நான் முக்கியமான ஆவணப்படங்களின் நல்ல சேகரிப்பு கைவைசம் உள்ளவன். தொடர்ந்து ஆவணப்படங்களைப் பார்ப்பவன். இப்போது தத்துவம்சார்ந்த ஆவணப்படங்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆவணப்படங்களைப்பற்றி அவ்வப்போது அறிமுகக்குறிப்புகளும் எழுதுகிறேன் – விமர்சனம் எழுதுவதில்லை.

தமிழில் ஆவணப்படங்கள் போதுமான அளவுக்கு இல்லை என்றும் இன்று குறைந்த செலவில் ஆவணப்படங்கள் எடுத்து செலவே இல்லாமல் வெளியிடமுடியும் என்றும் பலமுறை எழுதியிருக்கிறேன். நம் தொல்லியல்நிலைகள் பற்றியும் சிந்தனையாளர்களைப்பற்றியும் நூற்றுக்கணக்கான ஆவணப்படங்கள் இன்று நமக்குத்தேவை. குறைந்தது விஷ்ணுபுரம் விருதுபெறும் படைப்பாளியைப்பற்றியாவது ஓர் ஆவணப்படம் எடுக்கலாம் என்ற எண்ணம் வந்ததே அதனால்தான்.

ஆவணப்படங்களால் அறிவு வளர்வதில்லை என்று நான் சொல்லவில்லை. அதை கருத்துக்களைப் உள்வாங்கிக் கொள்ளும் தன்மைகொண்ட எவராலும் புரிந்துகொள்ளமுடியும்.  ஆனால் அந்த வரியை நான் சொன்னதாக எண்ணிக்கொண்டு ஏகப்பட்ட பொங்கல்கள். அவர்களின் அந்தச் சிந்தனை எல்லையைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன்.

நான் சொன்னது காட்சியூடகம் மொழியூடகத்துக்கு பதிலி ஆக ஒருபோதும் அமையமுடியாது என்றுதான். அதற்கான காரணத்தையும் பலமுறை சொல்லியிருக்கிறேன். மானுடமனதில் சிந்தனை என்பது மொழிவடிவிலேயே ஓடுகிறது. வாசிப்பு அந்த அகமொழியை வலுப்பெறச்செய்கிறது. அதுவே சிந்தனையின் வலிமையும் ஆகிறது. காட்சியூடகம் நம் அகமொழியை தீட்டுவதில்லை. அது வெறுமே காட்சிப்படிமங்களையே அளிக்கிறது.

முதன்மையாக வாசிப்புஊடகத்தை வைத்துக்கொண்டு காட்சியூடகத்தை இரண்டாம் தளமாகச் சேர்த்துக்கொள்பவர்களுக்கு  காட்சியூடக அறிதலும் மொழியாக ஆகக்கூடும். அப்போதும் அது மொழியாக ஆகவேண்டும், இல்லையேல் பயனில்லை. மொழியூடகம் இல்லாமல் காட்சியூடகத்தை மட்டுமே நம்பியிருப்பவர்களால் பொதுவாக கருத்துக்களை உருவாக்கும், வெளிப்படுத்தும் திறனை அடைய முடியாது. புகழ்பெற்ற திரைமேதைகளிலேயேகூட தெளிவான சிந்தனையுடையவர்கள் வாசிப்பினூடாக அதை அடைந்தவர்கள்தான்.

மொழியூடகத்துக்கும் காட்சியூடகத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு இதுதான். மனிதனின் உள்ளத்தில் மொழி ஓடிக்கொண்டிருக்கிறது. அது அவனுக்கு ஒருவயதுக்குள் கிடைத்துவிடுகிறது. மொழி என்பதே குறிகளின், குறியீடுகளின்,கருத்துருக்களின் பெருந்தொகுப்பு. மொழியியல் இதுசார்ந்து ஏராளமாகப் பேசியிருக்கிறது. நான் அதற்குள் செல்லவிரும்பவில்லை. ஒரு நூலை வாசிக்கையில் ஏற்கனவே உள்ளே அமைந்துள்ள மொழியைக்கொண்டே அதை அணுகுகிறோம். நம் உள்மொழியை மாற்றாமல் ஒரு நூலை வாசிக்கமுடியாது. வாசிக்கையில் நாம் அதற்கு அளிக்கும் உழைப்பு என்பது இதுதான்.

ஒவ்வொரு நூலுடனும் நம் அகமொழி மோதுகிறது. அதற்கேற்ப தன்னை உருமாற்றிக்கொள்கிறது. ஆகவேதான் மொழிவழி அறிதல் நம் சிந்தனையை மாற்றியமைக்கிறது. காட்சியூடகம் அதைச் செய்வதில்லை.மிகச்சிறந்த ஆவணப்படங்கள்கூட. ஆவணப்படங்களிலேயே கூட அதிலுள்ள மொழிவெளிப்பாடுகளையே நம் அகமொழி சந்திக்கிறது. காட்சிப்படிமங்களை அல்ல.

வாசிப்பின் முதன்மையைப் பற்றிச் சொல்ல இதைக்குறிப்பிட்டேன். சென்ற கால்நூற்றாண்டாக காட்சியூடகம் பிரம்மாண்டமாகப் பெருகி நம்மைச் சூழ்ந்துள்ளது. மானுட அறிவுப்பரிமாற்றத்திற்கும் அறிவுத்திரட்டுக்கும் அதுவே போதுமானது என்னும் எண்ணம் மிகச்சிலரிடம் உள்ளது. அது பிழை என்பதே இன்றைய புரிதல் என்றுதான் நான்குறிப்பிட்டேன்.

காட்சியூடகம் எளிதாக இருப்பதனால் அதில் அதிகமாக ஈடுபடுபவர்கள் உள்ளனர். வாசிப்புக்குக் கொடுக்கவேண்டிய உழைப்பை அதற்கு அளிக்கவேண்டியதில்லை. ஆனால் அதில் தாங்கள் அதிகமாக ஈடுபடுவதனாலேயே அதை முதன்மைப்படுத்துகிறார்கள். காட்சியூடகம் ஒருபோதும் மொழியூடகத்திற்கு மாற்றாக அமையாது. மொழியூடகமே மானுட அறிவின் ஊர்தியாக அமையமுடியும். ஆகவே வாசிப்பே முதன்மையானது.

வாசிப்பிலேயேகூட படிநிலைகள் உள்ளன. நம் அகமொழி சென்று மோதி உருமாறாத, அன்றாடதளத்திலேயே நம்மை ஒழுக்கிக் கொண்டுசெல்லக்கூடிய ,வாசிப்பு என்பது பயனற்ற வாசிப்பு. அதையும் அக்கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்

வாசிப்பு என்பது நூல்வாசிப்பாக இருக்கலாம். கிண்டில் போன்ற மின்னணுக்கருவியிலோ கணிப்பொறியிலோ செல்பேசியிலோ வாசிப்பதாக இருக்கலாம். வாசிப்பின் முதன்மையை நான் சுட்டிக்காட்டினேன். மொழிவழி அறிதலே மையப்போக்கு என்று குறிப்பிட்டேன்.

இது ஒரு கருத்து. காட்சியூடகத்தின் தரப்பிலிருந்துகொண்டு இதை மறுக்கவும் வாய்ப்புள்ளது என நான் அறிவேன். உதாரணமாக இவ்வாறு ஒருவர் வாதிடலாம். மொழிவழியறிதல் பெரும்பாலும் விழிப்புநிலைமனதை, தர்க்கத்தை நோக்கிப் பேசுகிறது. இலக்கியமாக ஆகும்போது மட்டுமே அந்த மேல்தளத்தைப் பிளந்து உள்ளே சென்று ஆழ்மனதுடன் உரையாடுகிறது. காட்சியூடகம் ஆழ்மனதுடன் நேரடியாக பேசுவது. ஏனென்றால் அது கனவுத்தன்மைகொண்டது. ஓவியம், இசை, நிகழ்த்துகலை ஆகியவற்றின் கலவையாக உள்ளது காட்சியூடகம். ஆகவே அது நுண்கலைகள் மட்டுமே சென்று தொடும் கனவுத்தளத்தை எளிதில் அடைகிறது. தர்க்கபூர்வமான அறிதலை விட ஆழ்மனம்சார்ந்த அறிதலே மேலும் முக்கியமானது. ஆகவே மொழியூடகத்தைவிட காட்சியூடகம் ஒருபடி மேல்.

— இப்படி எவராவது ஒருவர் எழுதியிருந்தால் மகிழ்ந்திருப்பேன். அதற்கு என்னிடம் பதிலும் உண்டு. அடிப்படையான சில கேள்விகளுக்கு இப்படித்தான் விவாதிக்க முடியும். இதில் எதுவும் சரியான,முழுமையான பதில்கள் அல்ல. சொல்பவரின் தனியனுபவம் சார்ந்தே அவை கருத்தில்கொள்ளப்படும்

*

லீனா மணிமேகலை சொன்னதற்கு வருகிறேன். லீனா சொன்னது நான் மேலே சொன்னவற்றைச் சார்ந்து அல்ல. லீனாவிடம் நான் பலமுறை பேசியவற்றை ஒட்டிய அவருடைய எதிர்வினை அது. எனக்கு தனிப்பட்ட முறையில் சினிமா உட்பட காட்சியூடகம் மீது பெரிய ஈர்ப்பு இல்லை. ஏன் என்னை அவை கவர்வதில்லை என்பதை என் நண்பர்கள் அனைவரிடமும் பேசியிருக்கிறேன். இருபதாண்டுகளுக்குமுன் மனுஷ்யபுத்திரனிடம் சுந்தர ராமசாமியின் வீட்டுமுகப்பில் அமர்ந்து பேசியது நினைவுக்கு வருகிறது. கடைசியாக சைதன்யாவிடம் ஆறுமாதம் முன்பு.

இது ஒரு தனிப்பட்ட கருத்து. இதற்கு மாற்றாக இதேபோன்ற வலுவான கருத்துக்கள் இருக்கமுடியும் என நான் அறிவேன். சைதன்யாவே சொல்லியிருக்கிறாள். உலகசினிமாவின் மிகமுக்கியமான படைப்பாளிகளின் படைப்புக்களை பார்த்திருக்கிறேன். கோபயாஷி, தர்கோஸ்வ்ஸ்கி, பெர்க்மான் , பாஸ்பைண்டர்  என எனக்குப்பிடித்த படைப்பாளிகள் பலர் உண்டு. புனுவல், கொதார்த் போன்ற பிடிக்காத மேதைகளும் உண்டு. ஆனால் புத்தகம் எனக்களித்த அனுபவத்தை எந்தச் சினிமாவும் அளித்ததில்லை.[சென்ற இருபதாண்டுகளாக சினிமாவை அவ்வளவு ஆர்வத்துடன் பார்ப்பதுமில்லை

அதற்கான காரணமாக நான் எண்ணுவது சினிமா பருவுலகை நம்பி செயல்பட்டாகவேண்டிய கட்டாயத்திலுள்ள கலைவடிவம் என்பதுதான். குதிரை என்றால் அது குதிரையைத்தான் காட்டவேண்டும். இலக்கியத்தில் அது அலையோ நெருப்போ தளிரோ ஆக இருக்கக்கூடும். ஆசிரியன் அறியாமலேயே வாசகனுக்குள் அது மாறிமாறி நிகழ்ந்தபடியே செல்லக்கூடும். எண்ணங்களும் உணர்வுகளும் என்னவாக இருந்தாலும் உடலில் ,பொருளில் அது வெளிப்பட்டாகவேண்டிய கட்டாயம் கொண்டது சினிமா என்னும் கலைவடிவம்.

அந்த எல்லையை மீற முயன்று விளிம்புவரைச் சென்றவர்களே நான் மேலே சொன்ன இயக்குநர்கள். அவர்களின் எல்லைகளையே நான் ரசிக்கிறேன் என்றுகூடத் தோன்றுகிறது. உதாரணம் வானம் என்றால் இலக்கியத்தில் ஒருபோதும் வானம் மட்டும் அல்ல. கோபயாஷியின் வானம் மட்டுமே சினிமாவில் பருவெளியான வானமாக அல்லாமலும் வருகிறது.

ஆகவே சிந்திப்பவர், தத்துவத்திலும் இலக்கியத்திலும் ஈடுபட முடிபவர், நேரடியாகவே பயணம்செய்து காட்சிகளுக்குள் செல்ல வாய்ப்புள்ளவர் சினிமாவை பெரிதாகப் பொருட்படுத்தவேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்

லீனா நான் அவரிடம் சொன்னதைத்தான் குறிப்பிடுகிறார். அதற்கு அவருக்கான பதில்களும் உண்டு,  அடூர் எப்போதும் இதையெல்லாம் புரிந்துகொள்ளக்கூடிய படைப்பாளி அல்ல. வாசிக்காத காட்சியூடகக்காரரின் அத்தனை எல்லைகளும் கொண்டவர் அவர். அவருக்கு ஒரு யதார்த்தச்சூழல் தெரியும், அதைச்சொல்லும் கலைவடிவப்பயிற்சி உண்டு. கனவுகளற்ற, ஆகவே நுண்சவால்கள் அற்ற ஒரு படைப்புலகு அவருடையது.

இந்தத்தளத்தில் ஒரு விவாதம் ஒரு சூழலில் ஏன் நிகழக்கூடாது? மேலைநாட்டு அறிவுச்சூழலில் எவ்வளவோ மையங்களில் தீவிரமான பரிசீலனைகள் நிகழ்ந்துள்ளன. நான் சொல்வதை முழுமையாக மறுத்து தன் தரப்பைச் சொல்லும் ஒருவரை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஏன் அப்படி ஒரு விவாதம் இங்கே நிகழ்வதில்லை?

’கொதித்தெழுந்து’.பேசுவது ‘ ‘மேதைகளுக்குரிய மிதப்பு’ ஆகிய பாவனைகளுக்கு அப்பால் நம்மால் ஏன் உருப்படியாக எதற்கும் ஒரு மறுதரப்பைச் சொல்லமுடிவதில்லை? அதையே நான் ஆரம்பத்தில் சொன்னேன். அதற்கு மொழிவழிப்பயிற்சி, வாசிப்பு தேவை என்று.

ஜெ

முந்தைய கட்டுரையானைடாக்டர்- மொழியாக்கம், பிரசுரம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86