சுரேஷ் பிரதீப்பின் ஒளிர்நிழல்

suresh

தமிழின் இளம் எழுத்தாளர்களின் முதற்படைப்புகளை கவனித்தால் அவற்றை இரு வகைமைகளுக்குள் அடக்க முடியும் என்பதை அவதானிக்கலாம். ஒன்று: அவைபெரும்பாலும் அவர்களின் சொந்த அனுபவங்கள். அவர்கள் வாழும் சூழல், அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் ஆகியவற்றைச் சார்ந்தவையாக இருக்கும். சுயசரிதைத் தன்மை கொண்டிருக்கும். இவ்வகைப்படைப்புகளே எண்ணிக்கையில் மிகுதி. இன்னொரு வகையான படைப்புகள் அவ்வாசிரியர்கள் வாசித்த பிறபடைப்புகளால் தூண்டுதல் பெற்று அவ்வடிவில் எழுத முயன்றவை.

முதல் வகைப் படைப்புகள் ஓர் அசல்தன்மையைக் கொண்டிருக்கும் கூடவே பயில்முறையற்ற அப்பாவித்தனமாக கூறுமுறையையும் கொண்டிருக்கும். இரண்டாம் வகைப்படைப்புகள் புதிதாக எழுதுவதற்கான முயற்சி, மாறுபட்ட நடையை அடைவதற்கான பயிற்சி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அதே சமயம் அவை உள்ளீடற்றவையாக,செயற்கையானவையாகக் காணப்படும். இரண்டாம்வகையினர் பெரும்பாலும் எப்போதுமே எதையுமே பொருட்படுத்தும்படியாக எழுதுவதில்லை. ஏனென்றால் உள்ளம் பொங்கும் இளமையில்கூட ஒருவரிடம் சொல்வதற்கென தன் அனுபவத்தளம் என்று ஏதும் இல்லை என்றால் அவர் இலக்கியவாதி அல்ல. முதல் வகையினர் தங்கள் எழுத்து மிகச் சரியாக வெளிப்படும் ஒரு வடிவத்தை தாங்களே கண்டுகொண்டார்கள் என்றால் தங்களுக்குரிய படைப்பை உருவாக்குவர்.

உண்மையில் எழுத்தாளனின் சிக்கலே தன் அனுபவங்களை மிகச் சரியாக முன்வைக்கும் வடிவத்தையும் மொழிநடையையும் கண்டுகொள்வதுதான்.. இலக்கியப்பயிற்சி என்பது அவற்றை அடைவதற்காக மட்டுமே. அவன் எழுத்தாளன் என்றால் அவன் எழுதவேண்டியவை ஏற்கனவே திரண்டிருக்கும்

இளம் படைப்பாளிகளுக்கு இன்று இரண்டுவகையான மொழி நடைகள் எளிதில் கைவருகின்றன. ஒன்று, மிக விரைவான நாட்குறிப்பு நடை. அன்றாடவாழ்க்கையில் அவர்கள் எப்படி பேசி எழுதிப் புழங்குகிறார்களோ அப்படியே எழுதுவது. இன்று முகநூல் போல பொதுவெளியில் எழுதும் நாட்குறிப்புகள் அதிகரித்திருப்பதனால் பெரும்பாலானவர்களுக்கு இந்த நடையில் இயல்பான பயிற்சி இருக்கிறது. இன்னொன்று வணிக எழுத்துக்களில் இருந்து கற்றுக்கொள்ளும் அரட்டை நடை அல்லது வெறும்கூறல் நடை. ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்வதுபோன்ற நடை அது.

இவ்விருநடைகளின் கலவையாகவே இன்று பெரும்பாலான படைப்பாளிகளின் நடைகள் அமைகின்றன. அவற்றை ‘எளிமையான’ நடை என்றும் ‘பூஜ்யம்சித்தரிப்பு’ நடை என்றோ சொல்லி நியாயப்படுத்தியும் கொள்கிறார்கள். எளியநடை என்பது வழக்கமான நடை அல்ல. எளிய நடை என்பது எழுத்தாளனின் தனித்தன்மை வெளிப்படாத பொது உரைநடையும் அல்ல. அசோகமித்திரன் எளியநடை கொண்ட படைப்பாளி. ஆனால் அவருடைய நடை தனித்துவம் கொண்டது, அவருக்குரியது.

இலக்கியநடை பொதுவான நடையில் இருந்து வேறானதா? ஆம் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் இலக்கியம் பொதுவான அன்றாட விஷயங்களைச் சொல்வது அல்ல. அது ஆழ்மன வெளிப்பாட்டை,மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதேயளவு நுட்பமான பணி புறவுலகைக் கண்முன் நிறுத்தி நிகர்வாழ்க்கையை அமைப்பது. அதன்பொருட்டே அது சிடுக்காகிறது. தாவிச்செல்கிறது. அணிகொள்கிறது. படிமங்களைச் சூடுகிறது. நேரடியாகிறது. பூடகமாகிறது. அதைச்சென்றடைவதே இலக்கியப்பயிற்சி. அதை அடைந்தவனின் நடை அவன் எண்ணுமிடத்திற்குச் செல்வதாகவும் அவனுக்கே உரியதாகவும் அமையும்.

பல இளம்எழுத்தாளர்கள் தங்கள் தொடக்ககால எழுத்துக்களை வட்டார வழக்கிலேயே அமைப்பதற்கு காரணம் அது அவர்களின் பேச்சுமொழி என்பதனால்தான். அதை உரைநடையாக ஆக்கிக்கொள்வதற்கான ஒரு பயிற்சி கூட அவர்களுக்கு இல்லை என்பதனால்தான். ஓரளவுக்கு அதை உரைநடை வடிவுக்கு மாற்றிக்கொள்வார்கள் என்றால் அவர்களுக்குச்சற்று அணுக்கமான ஒரு நடையைச் சென்றடைந்துவிடுவார்கள். இந்த நடையில் இருந்து அவர்களுடைய ஆழ்மனதை ,அங்குள்ள படிமங்களை மிகச்சரியாக வாசகனுக்குக் கடத்தும் தனிநடை ஒன்றை அவர்கள் உருவாக்கிக்கொண்டார்கள் என்றால் அவர்கள் எழுத்தாளர்களாக வெற்றியடைகிறார்கள்.

அது ஒரு நீண்ட பயணம் ஒவ்வொரு கணமும் தன்னை தானே கண்காணித்துக்கொண்டு மேம்படுத்திக்கொண்டு கூர்படுத்திக்கொண்டு கண்டடைய வேண்டியது. அதற்கு விவாதங்களும் விமர்சனங்களும் ஓர் எல்லை வரைக்கும் உதவக்கூடும். அதைவிட அதிகமாக எழுத்துலகில் அவர்கள் பின்பற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டல்களும் அவதானிப்புகளும் உதவக்கூடுமென்பது என்னுடைய சொந்த அனுபவம். ஆற்றூர் ரவிவர்மாவையோ சுந்தர ராமசாமியையோ தவிர்த்து என்னுடைய புனைவு மொழியை நான் அடைந்திருக்க முடியாதென்று இன்று அறிகிறேன்.

*

சுரேஷ் பிரதீப்பின் ஒளிர்நிழல் என்ற முதல் நாவலின் முக்கியமான வெற்றி என்றுநான் கருதுவது தனியனுபவத் தளமும் வடிவம் மற்றும் மொழிக்கான தேடலும் என்னும் இரு கூறுகளும் சந்திக்கும் ஒரு கோட்டில் இந்நாவல் நகர்கிறது என்பதே. ஒன்று இது நேரடியாக தன் அனுபவங்களையும் உணர்வுகளையும் சிக்கல்களையும் சொல்லும் தன்வரலாற்றுத்தன்மை கொண்டுள்ளது. அதே சமயம் கள்ளமற்ற, பயிலாத தன்வெளிப்பாடு என்ற நிலையிலிருந்து முன் நகர்ந்து அவ்வுணர்வுகளையும் அனுபவங்களையும் சிக்கல்களையும் சொல்வதற்கு இலக்கியத்தில் இருந்து நவீன வடிவம் ஒன்றைக் கண்டடைவதற்கான முயற்சியையும் இது மேற்கொள்கிறது.

ஓர் இளம் எழுத்தாளர் சாதாரணமாகத் தொடங்கும் இடத்திலிருந்து மேலும் பல படிகள் முன்னிருந்து தன் தேடலை சுரேஷ் பிரதீப் மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.பெரும்பாலான தருணங்களில் எளியநேர் நடை கொண்டிருப்பினும் உளநுட்பங்களைச் சொல்லும்போது கூர்மையும் தீவிரமும் கொண்ட தனித்தன்மை திகழும் நடையை சுரேஷ் அடைந்திருக்கிறார்

இந்நாவல் மீபுனைவு [Meta-fiction] என்று சொல்லப்படும் வடிவில் அமைந்துள்ளது. மீபுனைவு என்பது எளிதாக சொல்லப்போனால் புனைவு பற்றிய புனைவு. புனைவுச்செயலை அவதானிக்கும் பிறிதொரு புனைவையும் தன்னுள்ளே கொண்டது. அதன் வசதிகள் என்னவென்றால் முதன்மைப் புனைவை அடுத்த கட்டப் புனைவு வழியாக நிரப்பிக்கொள்ளவும் இணைக்கவும் முடியும் என்பதுதான். அதன் தரிசனம் என்று பார்த்தால் வாழ்க்கை என்பதே நாம் புனைந்துகொள்வதுதான் என்னும் கண்டடைதல்.

மீபுனைவுகள் தொடர்ச்சியாக புறத்தே நிகழும் வாழ்க்கை என்பது பெரும்பாலும் தனிமனிதர்களால் தங்கள் அந்தரங்க உணர்வு சார்ந்து புனைந்துகொள்ளப்படுவதே என முன்வைக்கின்றன. ஒட்டுமொத்த அளவில் பார்த்தால் வரலாறென்பதே அவ்வாறான தொகைபுனைவுதான் என்று அவை காட்டுகின்றன. பொதுவாக மீபுனைவு எழுதப்பட்ட மைய வரலாற்றுப்பெருக்கிலிருந்து பிறிதொரு வரலாற்றை எடுத்து முன்வைப்பதற்கே வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நாவலில் மனித உணர்வுகளை கூர்மையாக சொல்வதற்கான ஒரு வடிவமாக ஆசிரியரால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உணர்வுகளைச் சொல்வதற்கான மிகப்பெரிய தடை என்பது அவ்வுணர்வுகளுடன் சொல்பவனுக்கு இருக்கும் உறவுதான். ஒன்றை நேரடியாக சொல்லும்போதே அதை எவ்வாறோ மிகைப்படுத்துகிறோம், மையப்படுத்துகிறோம், வரையறை செய்கிறோம். இவற்றினூடாக அதன் மேல் ஐயத்தையும் உருவாக்கிக்கொள்கிறோம். ஆகவேதான் புனைவெழுத்துக்கு சுயஅனுபவங்களுடனான படைப்புவிலக்கம் [Creative Distance ]மிக முக்கியமானது என்று சொல்லப்படுகிறது. உடனடியான உணர்வுகளையும் உடனடியான அனுபவங்க:ளையும் புனைவில் கொண்டுவருவது அனேகமாக சாத்தியமில்லை. காலத்தால் எண்ணத்தால் ஒரு தொலைவு நமக்குத் தேவைப்படுகிறது. மீபுனைவு. அத்தகைய தொலைவை புனைவுக்குள்ளேயே நமக்கு உருவாக்கி அளிக்கிறது

நம் கதையை வேறு எவரோ எழுதும் ஒரு நாவலின் கதாபாத்திரத்தின் கதையாக கதைக்குள்ளேயே நாம் மாற்றிக்கொள்ளும் போது அதை விலகி நின்று பார்ப்பவனுடைய கோணம் நமக்கு அமைகிறது. இந்தப்பார்வையால் அந்த அனுபவங்களை மறுவரையறை செய்யவோ விமர்சிக்கவோ வழி உருவாகிகிறது. இந்நாவலில் இந்த வசதியை சுரேஷ் பிரதீப் கூர்மையாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

எந்த வகையில் பார்த்தாலும் புனைவிலக்கியம் என்பது மனித அகவாழ்க்கையை சித்தரிப்பதுதான் புறத்தே வாழ்க்கை ஒவ்வொரு கணமும் ஓராயிரம் நிகழ்வுகளின் பெருக்கென அலையடித்து கொந்தளித்து சென்று கொண்டிருக்கிறது. அவையனைத்தையும் எவராலும் எழுத முடியாது. புனைவு அகத்தின் கதை மட்டும்தான் வெளி நிகழ்வுகள் அகத்தைச் சொல்வதற்காக மட்டுமே புனைவில் இடம் பெறுகின்றன. மனித உள்ளத்தை எவ்வகையிலேனும் வெளிப்படுத்தாத ஒரு புறநிகழ்வுக்கு இலக்கியத்தில் எந்த மதிப்பும் கிடையாது நேரடியாகவோ குறியீட்டு அடிப்படையிலோ பிரதிநிதித்துவ தன்மை கொண்டோ மனித உள்ளத்தை அது வெளிப்படுத்த வேண்டும்.

நான் சமகால இளைஞர்களின் புனைவுகளை பெரும்பாலும் உள்ளத்தை வெளிப்படுத்தாத வெறும் புறநிகழ்வுகளின் தொடர்ச்சியாகவே காண்கிறேன். அவற்றின் மேல் எனக்கு இருக்கும் பெரும் சலிப்பு என்பது இதனால்தான். ஒரு தருணத்தையோ ஒர் அனுபவத்தையோ பார்க்கும் பிற எவரும் அறியாத ஒன்றை வாசகனுக்கு சொல்லும்போது மட்டுமே எழுத்து எழுதப்படுவதற்கான அர்த்தத்தை அடைகிறது. அதை அனன்யதா என்று சமஸ்கிருதத்தில் சொல்வார்கள். பிறிதொன்றிலாத தன்மை. எழுத்தாளன் மட்டுமே கண்டு சொல்லும், முன்பு நாம் அறிந்திராத, ஒரு கோணமோ ஒரு வெளிப்பாடோ ஒரு நுண்ணுணர்வோ அச்சித்தரிப்பில் நிகழவேண்டும் .

ஆனால் அது வெளிப்படும்போது ‘ஆம் இது எனக்குத் தெரியும்’ என்று வாசகன் உள்ளம் ஆமோதிக்கிறது. இதன் பெயர்தான் இலக்கிய அனுபவம் என்பது. நாம் முன்பறிந்த ஒன்றை உண்மையில் நாம் உணர்ந்திருந்தோம் என்று நாமே அறியாதிருக்கையில் நமக்குக் காட்டுவதற்கு பெயர்தான் இலக்கியக்கலை என்பது . சமகால இளம் எழுத்தாளர்களில் குரூரமான வன்முறைச் சித்தரிப்பையோ ,பாலியல் சித்தரிப்பையோ, அருவருப்புச் சித்தரிப்பையோ துவதனூடாக படிக்கும் கணத்தில் உருவாக்கும் ஒரு மெல்லிய அதிர்வுக்கு அப்பால் சென்று நான் அறிந்திராத ஒன்றை அதேசமயம் என் ஆழம் அறிந்த ஒன்றை உணர்த்தும் படைப்புகளை மிகக் குறைவாகவே பார்க்கிறேன்

சுரேஷ் பிரதீப்பின் இந்நாவல் அதன் கலைத்தன்மையை அடைவது அதன் கணிசமான பக்கங்களில் முன்பு நாம் அறிந்திராத அகநகர்வை கூறியிருப்பதனால்தான். இத்தகைய நுண்ணிய அகச்சித்தரிப்புக்காகவும் முற்றிலும் புதிய சில திறப்புகள் நடக்கும் தருணங்களுக்காகவும் கலைப் பெறுமதி கொண்ட படைப்பென்று நான் இதைக்கூறுவேன். இதன் அடிப்படையில் தமிழில் மிக முக்கியமான படைப்பாளி ஒருவரின் வருகையை அறிவிக்கிறது என்று சொல்லலாம்.. அடுத்த கால்நூற்றாண்டில் தமிழ் மொழியின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவராக விளங்குவார் என்று எண்ணுகிறேன்.

உதாரணமாக சக்தி ,அருணா என்று இரு கதாபாத்திரங்களுக்கு இடையேயான உறவைச் சொல்லும் பகுதி. சக்தியை கவர்வதற்காக அருணா தன்னை பரிதாபத்திற்குரிய பெண்ணாக சித்தரித்துக்கொள்கிறாள். தன் கணவனுடனான உறவின் போதாமைகளைக் குறிப்பிடுகிறாள். இது ஒரு பொதுப்பார்வையிலேயே வாசகன் அறிந்தது தான்.ஆனால் கூடுதலாக ஒன்றும் சொல்லப்படுகிறது. அவனிடம் அவள் தன்னுடைய இழந்து போன காதல்களைச் சொல்கிறாள் அதற்காக உணர்வெழுச்சி அடைந்து கண்ணீர் மல்குகிறாள்.இது பெண்களின் நுணுக்கமான நாடகம். தான் விரும்பத்தக்கவளே என்று அவள் அவனிடம் சொல்கிறாள். பெரும்பாலும் இது அவள் அப்போது உருவாக்கிய ஒரு புனைவாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.அது மிக இயல்பாகவும் சொல்லப்படுகிறது. அத்துடன் அவளுடைய குழந்தை அந்த உறவை உருவாகும் ஓர் ஊடகமாகச் செயல்படுவதை நாவல் காட்டுகிறது. அது ஒரு நுட்பமான சாக்கு. அதைவைத்து இருசாராரும் ஆடிக்கொள்கிறார்கள்.

இருவரும் இரு ஆளுமைகளைப்புனைந்து முன்வைக்கிறார்கள்.கனிவும் ’பையன்தன்மை’யும் கொண்ட சக்தி. அபலையும் துயர்மிக்கவளும் கொழுகொம்பு தேடுபவளுமான அருணா. ஆனால் இரண்டுமே புனைவுகள். இருவருமே வேறுவகையானவர்கள். அது நாவலில் வெளிப்படும்போது இருவருக்குமே அதிர்ச்சி இல்லை. ஏனென்றால் இருவருக்குமே அது தெரிந்துமிருக்கிறது. இரு ஆளுமைகளைப் புனைந்து ஒரு கற்பனைமேடையில் ஆடவிட்டுப் புணர்ந்து விலகிக்கொள்கிறார்கள் இத்தருணம் ஒரு எளிய புனைவில் அமையாதது. கலைஞன் கண்டு சொல்வது. இத்தகைய நுட்பங்கள் நிறைந்திருந்ததனால் தான் இது புனைவு வெற்றி அடைகிறது.

கோமதியைக் கொலை செய்யும் வெற்றிச் செல்வன் அவளுடைய அடியை வாங்கிக்கொண்டு அவள் ஆடையை பற்றும்போது வெளிப்படும் கழுத்தின் தோளின் வெண்மையையும் மென்மையையும் கண்டு ஒருகணத்தில் பாலியல் ஈர்ப்படைந்து தயங்குவதும், அதை அவனுக்குதான் அனுமதித்தோமா என்று அவள் தன்னைப்பற்றி அறிந்து வெட்குவதும் ,அந்த வெட்கத்தினால் சீற்றமடைந்து அவனைத் தீவிரமாக புண்படுத்தும் சொல்லை சொல்வதும், அச்சொல்லால் சினம் கிளர்த்தப்பட்டு அவன் அவளைத்தாக்குவதும், அதன்பிறகு அவன் தோழர்கள் அவளை கற்பழித்துக்கொலை செய்வதும், அக்கற்பழிப்பை அவர்கள் உள்ளார்ந்த விலங்குணர்வின் கொண்டாட்டமாக ஆக்கிக் கொள்வதும், அவள் தன் தோரணையை இழந்து கெஞ்சும்தோறும் அவர்களின் களியாட்டுணர்வு மிகுவதும், அவள் அப்படிக் கெஞ்சும்போதே அதற்காக உள்ளூர கூசுவதும் இன்னொரு உதாரணத் தருணம். ஒரு நிகழ்வுக்குள் இத்தனை உள ஓட்டங்களைச் சொல்ல சுரேஷால் முடிந்திருக்கிறது.

olir

முடிந்தவரைக் கொடூரமாக இக்கற்பழிப்புக்கொலை காட்சியைச் சித்தரிப்பதைத்தான் வழக்கமாக இளம் தமிழ் எழுத்தாளர்கள் செய்து வருகிறார்கள். அவை உருவாக்கும் அதிர்ச்சிமதிப்பையே இலக்காக்குகிறார்கள். இலக்கியவாசகனுக்கு அதிர்ச்சி என ஏதுமில்லை. ஒழுக்கஎல்லையை மீறாமல் எவரும் இலக்கியம் வாசிப்பதில்லை. அவர்கள் அடையும் அதிர்ச்சிகள் அறம்சார்ந்தவை, தரிசனம் சார்ந்தவை.

கொடூரச்சித்தரிப்புகள் பாலியல்சித்தரிப்புகளை மட்டுமே அளிப்பவர்களிடம் அந்தச் சித்தரிப்பு தட்டையாக உள்ளது என்று சொல்லும்போது அவர்கள் ஆங்கிலத்திலிருந்து சில எழுத்தாளர்களின் பெயரை படைப்புகளை சொல்லிக்காட்டி அவர்கள் இதையெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்பார்கள். படைப்பாளிகளிடம் இருக்கும் அல்லாதவர்களிடம் விடுபட்டுப்போகும் அம்சம் பொதுப்பார்வையில் சிக்காத உளநகர்வின் நுட்பம்தான்..மேலே சொல்லப்பட்ட அத்தருணம் இருவரும் அடையும் உளரீதியான நுண்ணிய மாற்றங்களுடன் சொல்லப்படும்போது மட்டும் தான் அது கலையாகிறது. மாறாக எவ்வளவு கொடூரமாக எவ்வளவு அப்பட்டமாக இந்த வன்முறையும் பாலியல் உறவும் சொல்லப்பட்டிருந்தாலும் அதற்கு கலையில் இடம் கிடையாது.

*

ஒளிர்நிழல் சுரேஷ் பிரதீப் எழுதும் ஒளிர்நிழல் என்ற நாவல் பற்றிய நாவல். சுரேஷ் பிரதீப் இந்நாவலை எழுதியபின் தற்கொலை செய்துகொள்கிறார். [அத்தற்கொலையால் இந்நாவல் எவ்வகையிலும் மேலதிகமாக எதையும் அடையவில்லை. அத்தற்கொலைக்கான காரணங்களும் புனைவில் இல்லை. அது புனைவுக்குமேல் ஓர் அடைவாகவே நின்றுகொண்டிருக்கிறது] அதன்பின் இந்நாவல் வெளிவருகிறது. அதைப்பற்றிய விவாதங்கள் நிகழ்கின்றன. நாவலுக்குள் சுரேஷ் பிரதீப்பை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ,சுரேஷ் பிரதீப்பால் உருமாற்றம் செய்யப்பட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கை இருக்கிறது. அதில் குணா என்னும் கதாபாத்திரம் சுரேஷ் பிரதீப்புக்கு நெருக்கமான கதாபாத்திரமாக வாசிக்க இடமிருக்கிறது. அவனுடைய குடும்பப்பின்னணி அதன் அரசியல் சூழல் பழைய நிலப்பிரபுத்துவ காலம், அதில் ஒரு தலித்குடும்பம் அன்றைய ஒடுக்குமுறைச் சூழலிலிருந்து எழுந்துவந்தது என விரிந்து குணாவில் நாவல் முடிகிறது. நாவல் முடிந்த பிறகு இறந்து போன சுரேஷ் ப்ரதீப்பின் வாழ்க்கையை குணாவைக்கொண்டு அறிவதற்காக முயல்கிறார்கள் உறவினர்கள்

இந்தக்கட்டமைப்புக்குள் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாவலுக்குள்ளும் புறமும் நின்று அறிவதற்கான வாய்ப்பு அமைகிறது. இந்த விளையாட்டை எழுத்தாளன் செய்வது போல மேலதிகமாக உடன் சென்று வாசகன் செய்ய வேண்டியிருக்கிறது. அதுவே மீபுனைவுகளுக்கு வாசகன் அளிக்கவேண்டிய எதிர்வினை. கதாபாத்திரங்களின் மெய்நிகர் வாழ்க்கைக்குள் தானும் வாழும் அனுபவத்தை இவ்வகை புனைவுகள் அரிதாகவே அளிக்கின்றன. உண்மையில் வலுவான மீபுனைவு அந்த மெய்நிகர் வாழ்க்கையை அளித்து உடனே அதை உடைத்து மீண்டும் அதை அளித்து வாசகனுடன் விளையாடிக்கொண்டே இருக்கும். அந்த மெய்நிகர் வாழ்க்க்கையில் உணர்வுகளை அடைந்து, அது உடைபடுகையில் அவற்றின் பெறுமதியை வாசகன் உணர்வான்.

சுரேஷ் பிரதீப்பின் வெற்றி உணர்வுகளை மொழியால் மிகச் சரியாக பின்தொடர்ந்து எழுதப்பட்டிருக்கும் பகுதிகள் அன்றாடத் தருணங்களைக்கூட உள்ளே நிகழும் மெல்லிய உணர்வு மாற்றங்களின் பின்னணியில் பார்க்கும் பார்வை, வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் தெரிந்தும் தெரியாததுமான உள்ள விசைகளாலும் மோதலாலும் சமநிலையாலும் ஆனதே என்னும் பிரக்ஞை. எதிர்காலத்திலும் இவை சுரேஷ் பிரதீப்பை தமிழின் முக்கியமான படைப்பாளியாக நிலைநிறுத்தக்கூடும் இத்தடத்தில் அவர் தொடர்ந்து செல்வதும் கண்டடைவதும்தான் அவருடைய படைப்புகளின் முக்கியத்துவத்தை உருவாக்கும்.

*

இந்நாவலின் கலைப்பெறுமதியை உருவாக்குவது உளவியல் தருணங்களை மிக நேர்த்தியான சொற்றொடர்களால் ஆசிரியர் சென்று தொட்டிருப்பது என்றால் இதன் கலைக்குறைபாடு எக்கதையிலும் ’சென்றுவாழும்’ அனுபவம் நிகழவில்லை, அவை ’சொல்லப்படுவன’வாகவே நம்மிடம் வந்து சேர்கின்றன என்பது. ஆணும் பெண்ணும் கொள்ளும் ஈர்ப்பு, அவ்வீர்ப்புக்காக அவர்கள் கொள்ளும் தன் இழிவுணர்வு அதைக்கடந்து செல்லும் விசைகள் என ஒவ்வொரு தருணத்திலும் கண்டடைவதற்கு வாசகனுக்கு ஏராளமான பகுதிகள் உள்ளன. ஆனால் அவையனைத்தும் அவனுடைய அனுபவங்கள் ஆக மாறாமல் அப்பால் உள்ளன.

இதனுடைய மீபுனைவு தன்மை காரணமாக பல கதாபாத்திரங்கள் விரைந்த கோடுகளில் அமைந்த ஒழுங்கற்ற சித்திரங்களாக இருப்பதே இதற்கான காரணம். உதாரணமாக மீனா. அவளுடைய தோற்றம் குறித்த விவரணை, அவள் குணாவுடன் கொள்ளும் உறவின் சில தருணங்களின் சித்தரிப்பு தவிர அவள் யாரென்பதை வாசகன் வரைந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது பெரும்பாலான கதாபாத்திரங்கள் எளிய கோடுகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றன வாசகன் அவற்றை முழுமைப்படுத்தி கொள்வதற்குப் போதுமான அளவுக்கு நுண்குறிப்புகள் இல்லை ஆகவே குணா, சக்தி, அருணா போன்ற முக்கியமான சில கதாபாத்திரங்கள் தவிர பிறர் உளச்சித்திரமாக மாறுவதே இல்லை.

இவ்வாறு கதா பாத்திரங்கள் முழுமையான குணச்சித்திரங்களாக மாறாததனாலேயே பல தீவிரமான தருனங்கள் வெறும் புகைப்படக்கருவியின் சிமிட்டலில் சிக்கிய சித்திரங்களாக அசைவற்று இருக்கின்றன உதாரணமாக வாட்ச்மேன் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி. அவருடைய வீழ்ச்சிக்குப்பின்னால் ஒரு கதை ஆங்காங்கே குறிப்புகளாக வருகிறது. அத்தருணத்தில் அது ஒருங்கிணையவில்லை

இந்நாவல் பகைப்புலமாக ஒரு சமூகச்சித்திரததை கொண்டிருக்கிறது பள்ளர் சாதி தன்னுடைய ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து எழுந்து வந்து பொருளியல் வளர்ச்சி அடைந்து மாறிக்கொண்டிருக்கும் நவீன காலத்தை சந்திக்கும் காலகட்டத்தில் இந்நாவல் நிகழ்கிறது. மூன்று தலைமுறையாக இம்மாற்றத்தின் கதை ஓரிரு கதாபாத்திரங்களின் சிறிய சிறிய சித்திரங்கள் மூலம் தரப்படுகிறது. ஆனால் எத்தனை கற்பனை கொண்ட வாசகனுக்கும் கூட அச்சமூகமாற்றத்தின் சித்திரத்தை அளிப்பது போதுமானதாக இல்லை. மிகச் சுருக்கமாக எழுதப்பட்ட தனிப்பட்ட குறிப்புகளாகவே அவை நின்றுவிடுகின்றன

ஆகவே இது ஒட்டுமொத்தமாக இளைஞர்களின் பாலியல் தத்தளிப்பின் நுண்சித்திரமாக மட்டுமே நின்றுவிடுகிறது. பெண்களுடனான உறவை நுட்பமான தந்திரத்துடனும் தன்னலத்துடனும் எதிர்கொள்ளும் சக்தி அப்பாவித்தனமான அர்ப்பணிப்புடன் எதிர்கொள்ளும் குணா இருவருக்குமான முரண்பாடாக மட்டுமே இந்நாவலை இப்போதைக்கு வாசிக்க முடிகிறது. அது நுட்பமாகவும் உள்ளது. ஆகவே உத்த்தேசிக்கப்பட்ட இடம் நோக்கி எழாமலேயே நின்றுவிட்டது

ஓர் ஆற்றல்மிக்க இளம் படைப்பாளியை அறிமுகப்படுத்தும் படைப்பு இது. தமிழில் மறுக்கமுடியாத படி தன் இடத்தை நிறுவப்போகும் ஒருவரை பல பக்கங்களில் நமக்குக் காட்டித்தருகிறது. அப்பட்டமான மேல்தளத்தன்மை மட்டுமே கொண்ட சமகாலப் படைப்புகளுக்கு நடுவே புனைவுலகில் மேல்தளத்தன்மை என்பது ஒரு மாயத்தோற்றமே என்றும் அடியில் நிகழும் பின்னல்களையே புனைவுகள் உருவாக்குகின்றன என்றும் நம்பும் ஒருவரின் வருகை எல்லாவகையிலும் கொண்டாடத் தக்கது.

 [ஒளிர்நிழல் சுரேஷ் பிரதீப், கிழக்கு பதிப்பகம்,சென்னை]

முந்தைய கட்டுரைஎவருக்காக விளக்குகிறோம்?
அடுத்த கட்டுரைஹெச்.ஜி.ரசூல் இரங்கல்கூட்டம், தக்கலை