கன்யாகுமரி பற்றி…

index

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

கோவை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய “கன்னியாகுமரி” நாவலை இப்போது வாசித்து முடித்தேன். வெண்முரசு வாசித்து வரும் நிலையில் கன்னியாகுமரி இரண்டு நாட்களை எடுத்துக் கொண்டுவிட்டாள். மாமலர்-நீர்க்கோலம் பீமனையும் திரௌபதியையும் உடன் வைத்துக் கொண்டு வெண்முரசின் விழி கொண்டேதான் கன்யாகுமரியைத் தரிசிக்க முடிந்தது.

தேள் கொட்டிய குரங்காக தவிக்கிறான் ரவி. கன்னியாகுமரியின் ஓட்டலில் நடக்கும் அந்த அசம்பாவிதம் என்னும் தேள் கொட்டி இராவிட்டாலும், வேறு ஏதேனும் சமயத்தில் வேறு தேள் கொட்டி இருந்தாலும் அதேவிதமாகவே தவித்திருப்பான். அகங்காரம் அகங்காரம் மட்டுமே ஆண் என்ன? பெண் என்ன?. தாழ்வுணர்ச்சி, அதன் காரணமான வெறுப்பு. அவன் பெண்களை வெறுக்கிறான் – அல்ல அவன் பெண்ணில் எழும் ஆண்மையையே வெறுக்கிறான். பெண்ணில் இருக்கும் ஆண்மை வெளிப்பட அதைவிட தன் ஆண்மை குறைவுடையதோ என்று எண்ணுபவன் அவர்களை சிறுமை செய்கிறான். ஆணில் இருக்கும் பெண்மையை பெண்மைக் குறைவுடையவள் சிறுமை செய்யக்கூடும். ஆண்மை அழகானது, அது ஆணுக்கு மட்டுமே உரியது அல்ல. பெண்மை அழகானது, அது பெண்ணுக்கு மட்டுமே உரியது அல்ல. வெற்று அகங்காரம் கொடியது. ரவி எல்லாத் திசைகளிலும் குறைகண்டு தவிக்கிறான். விமலாவை சிறுமை செய்ய ஆன மட்டும் முயன்று தோற்கிறான் சிறுமை கொள்கிறான்.

விமலாவைக் காக்க முடியாத தன் இயலாமையின் வலியை விட அவள் நிமிர்ந்து கொள்வதன் வலியே அவனை படுத்துகிறது. பெண் முற்றும் அஞ்சிப் பணிவதையே, தன் அகந்தை நிறைவு செய்படுவதையே கன்னிமை என்று கொள்கிறான் ரவி.

ஏகயாய ராஜகுமாரி – கன்னியாகுமரி – என்றோ ஒருநாள் சிறுவயதில் தேவியை தன் அக்காவாக உணர்கிறான். அவள் துயரில் பங்கு கொள்கிறான். தன் பிழைகளுக்கு அப்பால், தன் அகந்தைக்கு அப்பால், முன்பு அவளை நெருங்கி நோக்கிய நோக்கால், அவள் அருள் அவனில் கலை வடிவம் கொண்டு எழுகிறது. பின்னர் வெற்று அகந்தையால் தன்னைத் தானே தவறான திசை செலுத்தி பிறிதொருமுறை கலை அவனில் எழவே முடியாத இடம் நோக்கி சென்று விடுகிறான், இதை ப்ரவீணா தன் கடிதத்தில் சரியாகவே தெரிவிக்கிறாள். கடலில் வழியற்று தவிப்போருக்கு தன் மூக்குத்தி ஒளியால் வழி காட்டும் தேவியின் கருணையை இழக்கிறான். அருளின், கலையின், மெய்மையின், அறவுணர்வின், அன்பின் சகல கதவுகளையும் அடைத்துக் கொள்கிறான். தேவி கசப்பு அடைந்து அவனை கைவிடுகிறாள். கன்னியாகுமரி அவனைக் கைவிடுகிறது. உலகமே அவனை அவன் அகந்தையுடன் தனியே விட்டு அகல்கிறது. தன்னைத் தானே முற்றுலுமாக வீழ்த்திக் கொள்கிறான். “அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது” என்றுதான் தோன்றுகிறது.

விமலா அழகானவள். தன் வாழ்வில் நிகழ்ந்த அசம்பாவித்ததை ஆண்மையுடன் கடக்கிறாள், தனக்கு தீங்கிழைத்தவனை தாய்மையுடன் கடக்கிறாள். எவ்வகையிலும் அவள் தன் உயரத்தில் இருந்து இறங்குவதே இல்லை. கேட்டிலும் ஒரு நன்மை ரவி அவள் வாழ்கைத் துணை என அமையாது போனது. அவள் அவனுக்கானவள் அல்ல. அவளது இடம் உயர்ந்தது.

பிரவீணா தன் கலை ஆர்வத்தால் – அதன் தேடலால் சிறுமைகளை பொறுத்துக்கொள்கிறாள். “நானே கன்னிதான்” என அவள் சொல்வதை அவள் தன் ஆண்மையைக் குறை சொல்வதாக பதறுகிறான் ரவி. அதை அறிந்தாலும் உண்மையில் கன்னிமை என்பது உடல் சார்ந்ததது அல்ல என்று அவள் அறிந்திருக்கிறாள். தன் ஆசிரியர் மகாபாத்ராவின் கருத்துக்களை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறாள், தன் கலைக்காக தன்னை சமர்ப்பிப்பதுக் கொள்ளும் தன்மை உள்ளவள். ரவியை பொறுத்தவரை அவள் பெண் என்று ஆவது உயர்வது என்றால் அவளைப் பொறுத்தவரை அப்படி ஆவது தாழ்வது தான். பெண் என்று ஆவது மட்டுமல்ல ஆண் என்று ஆவதும் தாழ்வது தான். அவளது கலை ஆண்-பெண் என்பவை கடந்து உயரத்தில் இருப்பது. அழகுணர்வு, நீதிஉணர்வு, உண்மைக்கான தேடல், அது தரும் அற்புதமான மனநிலை எல்லாம் தன்னைக் கடந்து எழும்போது மட்டுமே சாத்தியமானது என்னும் தெளிவுள்ளவள். இவ்வகையில் ப்ரவீணாவும் வேணுகோபாலனும் ஒன்றுதான். உந்துதலுக்கான அகந்தையின் தேவையையும், கலை நிகழ அதை உரிய நேரத்தில் ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதையும் உணர்ந்தவனாகவே இருக்கிறான் வேணுகோபாலன். கன்னிமையும் தாய்மையும் ஒன்று தான் என்கிறான் வேணுகோபாலன். அழகான கதை ஒன்று சொல்கிறான் – மீன்பிடி இயந்திரப்படகு மாலுமியின் கதை – உண்மையில் ரவியின் வாழ்கையை ஒத்த இக்கதையில் ரவிக்கு ஒரு வழிகாட்டுதல் இருக்கிறது, காதலி-மகள்-தாய் என்று. கன்னிமையில் இருந்து தாய்மைக்கு தன் மனதை நகர்த்துவதன் மூலம் ரவி தன் அகந்தையைக் கடந்துவிட முடியும்.

கன்னியாகுமரி – எப்போதும் காத்திருக்கும் கன்னி பெண்மை என்றால், அருகே மோனத்தவம் இருந்த அவ்வன்னையின் புதல்வன் சுவாமி விவேகானந்தரைத்தான் ஆண்மை எனக் கொள்ள விரும்புகிறேன். அமெரிக்கப் பெண்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள், எளிதில் காதல் வயப்படுபவர்கள். அவர்களை அன்னையராகக் கருதி, தன்னை அவர்கள் தம் மகனாக கருதுமாறு சுவாமி விவேகானந்தர் அவர்களிடம் சொன்னதாக படித்த ஞாபகம். அவர் போன்ற துறவியர்க்கு மட்டுமல்ல. இங்கு எல்லாருக்குமே பெண் என்றால் தாய் தான். அவள் எந்த உறவில் இருப்பினும் அன்னை தான். இது அவர்களைத் தாழ்த்த ஆண்கள் செய்யும் தந்திரம் அல்ல. அவர்களை உயர்த்த செய்ததும் அல்ல, உண்மையில் இது ஆண்கள் தங்களை உயர்த்திக் கொள்ள – பெண்ணை காமம் கொண்டு உடல் சார்ந்தே நோக்கும் தன்மையைக் கடந்து செல்வது, தங்களிடமும் உள்ள பெண்மையைக் கொண்டு அவர்களை சந்திப்பது.

காத்திருக்கும் கன்னி இந்திய பெருவெளியில் கிளைகள் பரப்பி இருக்கும் தேவியரின் ஆணிவேர். பெண்ணில் வலம் அமைந்த கோவிற்காக காத்திருக்கிறாள். தன்னிறைவிற்காக காத்திருக்கிறாள். அவனும் அவளுக்காக காத்திருக்கிறான். அத்துடன் அவள் காத்திருக்கும் கன்னி மட்டுமல்ல, அவன் மீதுற்ற அன்பினால் வேள்வித் தனல் பாய்ந்து அவன் தாண்டவத்தில் உடல் பாகங்களை திசைபரப்பி சக்தி பீடங்கள் என்று நிலை கொண்ட இறைவியும் கூட. மேற்கே பலுச்சிதானம் முதல் கிழக்கே அஸ்ஸாம் வரை, காஷ்மீரம் முதல் குமரி-இலங்கை வரை. ஒரு எல்லை வரைந்தது போல். தேவியின் ஆண்மை வெளிப்படும், அவளது வீரசாகசங்கள் வெளிப்படும் போர்களில் சிவன் அவளது உத்தரவுப்படி தூதனாக மட்டுமே செயல்படுகிறார். அவளது சண்டைக் காட்சிகளில் அவர் குறுக்கிடுவதே இல்லை. கதை அப்படித்தானே போகிறது?. தீயினும் வெய்யன் தாயுமானவன் என ஆக “நான் பெண் இருக்க உனக்கேன் பெண்மை என்று அன்னை கேட்கவில்லையே?

சமூக வெளியில் பெண்ணின் நிமிர்வையும் அவளுள் வெளிப்படும் ஆணையும் வெல்லமுடியாத போது பெண் தெய்வ வழிபாட்டை ஒழித்து கடவுள் ஆண் மட்டும்தான் என்று மதம் கொண்ட சிறுமை நிறைந்த ஆண்களின் தேசங்கள், வெளியின் செயல்கள் கடுத்தபோது தங்கள் வசதி-உபயோகத்திற்காக பொறுப்புகளிருந்து கழன்று கொள்வதற்காக பெண் முழுவதுமாக ஆணாகவே வாழ்வதுதான் “பெண்ணியம்” என்று போதிக்கும் ஆண்களின் தேசங்கள். இரண்டுக்கும் இடையில் இந்த தேசத்துக்கான பெண்ணியம் எங்கோ இருக்கிறது. அதை கண்டறிந்து எவ்வாறு வேண்டும் என்று வகுப்பதை பெண்களேதான் செய்யவேண்டும். வேண்டுமானால் ஆண்கள் உதவலாம்.

உங்களுக்கு என் நன்றி, நல்லதொரு நாவல் ஈந்தமைக்கு.

அன்புடன்

விக்ரம்,

கோவை

***

முந்தைய கட்டுரைகுறள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைசொல்லி முடியாதவை