உச்சவழு -கடிதங்கள்

uchavazhu

 

அன்பு ஜெமோ,
உச்சவழு படித்தேன்.
இலைமேல் தவித்தாடிய துளி ஒன்று மெல்ல வழுக்கிச்சென்று , சேர்ந்தனைக்க வரும் கடலில், கருவில் சென்றடையும் சித்திரத்தை அடைந்தேன். பிறப்புக்கு எதிர்நிலை; ஆனால் கருவில் சென்றுசேர்வதால் அதுவும் ஒரு பிறப்பே.
ஒருவகையில் உச்சவழு, வான்காவின் புகழ்பெற்ற ஸ்டார்ரி நைட் ஓவியமேதான். அற்புதங்கள் நிறைந்த வான்வெளி; நேரெதிராக சலிப்பூட்டும் நகர்வெளி. இரண்டையும் இணைத்து, நகரத்தை விண்மீன்களிடம் சேர்ப்பது இறப்பைக்குறிக்கும் சைப்ரஸ் புதர்கள் மட்டுமே.

சிறந்த வாசிப்பனுபவம். நன்றி!

அன்புடன்,
ராஜன் சோமசுந்தரம் .

 

ஜெ

உச்சவழு சிறுகதையை சற்று முன்புதான் வாசித்தேன். முன்பு ஒருமுறை அதை வாசித்தது ஞாபகம் வந்தது. அப்போது அந்தக்கதைக்கு ஏதோ குறை இருப்பதுபோலத் தோன்றியது. அந்தக்கதையிலே ஏதோ நிகழும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேன். ஒன்றுமே நிகழாததுபோல அதனால்தான் தோன்றியது

இப்போது வாசிக்கும்போது அதிலுள்ள கதை முக்கியமல்ல என்று நினைக்கிறேன். அது காட்சியனுபவம். ஒருவனின் இறுதி நாள். அவன் சாகலாம். அல்லது திரும்பிச்செல்லலாம். எதுவானாலும் உச்சம். அதிலே என்ன வழு? அதையோசிக்கும்போதுதான் கதை மேலே செல்கிறது.

குணசேகர்

முந்தைய கட்டுரைவரையறைகள் பற்றி..
அடுத்த கட்டுரைஇடிதாங்கி