இருத்தலியலும் கசாக்கின் இதிகாசமும் – கஸ்தூரிரங்கன்
இனிய ஜெயம்
கசாக்கின் இதிகாசம் மீதான கஸ்தூரி ரங்கன் அவர்களின் கட்டுரையை வாசித்தேன். மிக முக்கியமான கட்டுரை. அக் கட்டுரை இலக்கிய வாசகன் யாருக்கும் மூன்று தளங்களில் சாவி ஆக பயன்படும் .
ஒன்று இந்த கசாக்கின் இதிகாசம் நாவலை விரித்துப் பொருள் கொள்ள. இந்த நாவலின் கட்டமைப்பு ,கதாபாத்திரங்கள் வழியே அதன் தேடல் , அதன் உள்ளுணர்வு செல்லும் ஆழம் அனைத்துக்கும் இந்த கட்டுரை முகம் அளிக்கிறது. வேதாந்த ஆசிரமத்திலிருந்து தப்பி வரும் ரவியின் வாழ்வு துவங்கி, முன் ஜென்ம நினைவு கொண்டு தனது முன்ஜென்ம பெற்றோரை தேடி செல்லும் சிறுமி வரை இந்த நாவலின் அனைத்து பாத்திரங்களையும் ,அதன் வழி ஆசிரியரின் தேடலையும் , அணுகி அறிய , அதன் வழி அந்த நாவல் தொடும் உள்ளுணர்வின் ஆழம் செல்ல வாசகனுக்கு இக் கட்டுரை நல்லதொரு கையேடு.
இரண்டு ஆசிரியர்களின் தத்துவ பலம் மீது திறனாய்வு செய்ய..
//நவீனத்துவம் அதன் சிகரம் அடைந்தது, வங்கத்தில் சுனில் கண்கோபாத்யாயா வழியே, கன்னடத்தில் யு ஆர் அனந்தமூர்த்தி வழியே, தமிழில் சுந்தரராமசாமி வழியே, எனக் கொண்டால் மலையாளத்தில் ஒ வி விஜயன் வழியே அது நிகழ்ந்தது. ஒப்பு நோக்க இவர்கள் அனைவரை விடவும் ஒரு படி முன்னால் நிற்கிறார் விஜயன்.//
மேற்க்கண்டவை நான் கசாக்கின் இதிகாசம் வாசித்துவிட்டு உங்களுக்கு எழுதிய கடித்தத்தில் உள்ள வரிகள். கஸ்தூரி ரங்கனின் கட்டுரையை அடிப்படையாக வைத்து இந்த ஒவ்வொரு எழுத்தாளரின் தத்துவ பலம் என்ன? எந்த எல்லையில் விஜயன் இவர்களைக் காட்டிலும் முன்னால் நிற்கிறார் என என் மறுவாசிப்பு வழியே இவர்களை வகுத்துக்கொள்ள உதவும்.
மூன்றாவதும் மிக முக்கியமானதும் எது சிறந்த படைப்பு [அதன் பொருள் யார் சிறந்த படைப்பாளி என்பதும் கூட ] என வரையறை செய்யும் அலகு ஒன்றினை இக் கட்டுரை அளிக்கிறது.
//தத்துவம், வரலாறு இவை இரண்டையும் முறையே மானுடத்தின் சிந்தனை, செயல் ஆகியவற்றின் வெளிவடிவமாகமாகக் கொண்டால், மானுடத்தை குறித்த அறிதலுக்கும், சிந்தனை செயல்பாட்டுக்கும் தத்துவமே (அது சிந்தனைப் பிரதிநிதி என்பதாலேயே) நெருக்கமானது. அதேசமயம் வரலாறே அதன் நிகழ்களம் என்பதால் கடினமே ஆயினும் அதன் மாபெரும் விரிவை தொகுத்து முறையாக அறிவுத்தளத்திற்கு உட்படுத்துவதே இச்செயல்பாட்டின் முழுமையாக அமையும். எனவே வரலாற்றால் அறிவிக்கப்பட்ட தத்துவப் புரிதல் (Historically informed study of philosophy) ஒன்றை சாத்தியப்படுத்த வேண்டியுள்ளது. புனைவுதான் எனும்போதும் நாவல் எனும் கலைவடிவம் இயங்கும் தளம் இதுவே. எனவே நல்ல நாவல் அளிக்கும் மானுடச் சித்திரம் முழுமைக்கு அருகில் செல்ல முடிகிறது.//
மேற்க்கண்டதே அந்த அலகு அல்லது கருதுகோள் .
என்னளவில் இதை ஒரு பிரகடனம் என்றே சொல்வேன். மாம்பழக் கவிராயரெல்லாம் கொடியை பறக்கவிட்டுக் கொண்டிருந்த சூழலில்தான் சுப்ரமணியும் எழுதிக்கொண்டு இருந்தான். மாயாவி , மேதாவி , அண்ணாவி எல்லாம் எழுதிக்கொண்டிருந்த சூழலில்தான் புதுமைப்பித்தன் எழுதிக்கொண்டு இருந்தான்.
சூழல் என்பது குட்டை போல. அந்தக் குட்டையில் பல கொசுக்கள் பிறக்கும் ,ரீங்காரம் இடும் , கடித்துகூட வைக்கும். ஆனால் அந்தக் குட்டை இருக்கும் வனத்துக்கு ராஜா அது அல்ல. அந்த வனத்தின் அரசன் சிம்மம். அதன் கர்ஜனை தனித்துவத்தின் சிம்ம கர்ஜனை. அந்த சிம்மமே பாரதியும் புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும். சூழலின் முகங்கள் காணாமல் போகும் , பாரதியும் ஜெயகாந்தனும் வரலாற்றில் எழுந்து வந்த முகங்கள். அவையே நமது பண்பாட்டின் பதாகைகள்.
இதை மீண்டும் எனக்குள் நான் சொல்லிப்பார்த்துக்கொள்ள ,துணை நின்ற அந்த பிரகடனத்தை முன்வைத்த கஸ்தூரி ரங்கனுக்கு என் அன்பும் வணக்கமும்.
கடலூர் சீனு
அன்புள்ள ஜெயமோகன்,
தங்களது “நாவல்“ நூல் முதன்முதலாக வந்தபோது, அதன் வழியாகவே நான் இந்நாவலைக் கேள்விப்பட்டேன். அப்போதிருந்தே அந்நாவல் மீது எனக்கு சொல்ல முடியாத ஈர்ப்பிருந்தது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான், யூமா வாசுகியால் அதைத் தமிழில் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. என் வாசிப்பனுபவத்தில், ஓ.வி.விஜயனின் கசாக்கின் இதிகாசத்தை வாசித்தது பெருமதியானது என நினைக்கிறேன். நீங்களின்றி இந்நாவலை நான் வாசித்திருக்க முடியாது.
கடந்தகால நினைவுகளை மீட்டெடுக்கும்போது நினைவின் அடுக்குகள் குழம்பியும், முன்னுக்குப் பின் முரணாகவும், புகைமூட்டத்துடன் மங்கலாகவும், சில இடங்களில் பளீரென பிரசாசம் நிரம்பியதாகவும் இருக்குமே அப்படித்தான் இருக்கிறது ஓ.வி.விஜயனின் கசாக்கின் இதிகாசம். இருநூற்றுக் கொச்சம் பக்கமுள்ள இந்நூலில் அகத்தியரின் கமண்டலமென வாழ்க்கையின் பிரம்மாண்டத்தையும் பின்னங்களையும் ஒருசேர அடக்கிவிடுகிறார் ஓ.வி.விஜயன்.
வாழ்வில் ஒரு முறையேனும் இந்நாவலை வாசித்த பின்னரே, நம் வாசிப்பு முழுமை பெறும் எனக் கருதுகிறேன். இந்நூலை வாசித்தவர்கள் பாக்கியவான்கள் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல?
https://kesavamanitp.blogspot.in/2015/04/blog-post.html
அன்புடன்,
கேசவமணி
அன்புள்ள ஜெமோ
கஸ்தூரிரங்கனின் கட்டுரை மிகநீளமானது, ஆகவே வாசித்து முடிக்க ஒருநாள் ஆனது. ஆனால் முக்கியமான கட்டுரை. முதல்பகுதியின் மிக நீண்ட தத்துவவரலாற்றைச் சொன்னபோது போச்சு நாவலைப்போட்டு கொத்துப்பரோட்டா போடப்போகிறார் என நினைத்தேன்.ஆனால் நாவலைப்பற்றிப்பேசும்போது சூட்சுமமாக கவித்துவமான பகுதிகளைப்பற்றி மட்டும் சொல்லிவிட்டுச் செல்கிறார். அது மிகமுக்கியமானது
அவர் சுட்டிச்செல்லும் மூன்று இடங்கள் நாவலைப்புரிந்துகொள்ள முக்கியமானவை. பரிணாமத்தில் செடியும் மனிதனும் இரண்டு கிளைகள், இரண்டு சகோதரர்கள் என்று ரவி நினைக்கும் இடம். அதைவிட செடியாகிய அக்காளை மனிதனாகிய தங்கை அறியமுடியாமல்போகும் இடம். இருத்தியலியலே அங்கேதான் கூர்மைகொள்கிறது. செதலிமலை எல்லாவற்றுக்கும் அப்பால் நின்றுகொண்டிருக்கும் அந்த பற்றற்ற நிலை. வண்ணத்துப்பூச்சிகளின் ஆத்மாக்கள் படபடப்பது. அதோடு கசாக்கில் எல்லாமே முடிந்தபின்னர்தான் கதை தொடங்குகிறது என்றபார்வை
அழகான படிமங்களை மட்டும் சேர்த்து தன் பார்வையை விளக்குகிறார் கஸ்தூரிரங்கன். அது முக்கியமானதாக உள்ளது
மனோகரன்