குறள் கடிதங்கள்

kural

குறளைப் பொருள்கொள்ளுதல்…

அன்பின் ஜெ….

நீங்கள் அளித்த பதிலுக்கு மிக்க நன்றி. இரு வகைகளிலும் பொருள் கொள்ளலாம் என்பது சரி என்றால் நான் ’பறியா’ என்பதற்கு பறிக்காமல் என்றே கொள்வேன். என் விளக்கம் இதுதான். வேலை எறிந்தவன் அந்த வேலை யானை கொண்டோடியது என அறிந்து வருந்துகிறான். அப்போது அவன் உடல் மேல் தைத்த வேலைக் காண்கிறான். அது வரையில் அது பிடுங்கப் படாமல் இருந்ததாலேயே அவனால் போரிட முடிந்திருக்கிறது. ஆனால் அவன் தன் மேல் தைத்த வேலை அது வரையில் உணரவில்லை. இப்போது உணர்ந்ததும் அவன் அதைப் பறிக்காமல் சிரிக்கிறான் ஏனென்றால் அடுத்ததாக வரும் யானை அல்லது எதிரியின் மேல் எறிய ஒரு வேல் கிடைத்து விட்டதே என்ற மன மகிழ்ச்சியின் காரணமாகத்தான்! அந்த வேலைப் பறித்தால் அவன் இறந்து விடலாம் என்பதுதான் அவனது உண்மை நிலை. அந்நிலையிலும் கூட அவனால் சிரிக்க முடிகிறது. அதுவே அவனது வீரத்தின் சிறப்பு!

இப்படிப் பொருள் கொள்வதும் சரியாக வரும் என்றால் அதையே வள்ளுவன் எழுதியதாகக் கொள்ளாலாம் தானே?

பாலா
ஐயா,
வணக்கம்.

செய்து செய்பு செய்யாச் செய்யூச்
செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர்
வான்பான் பாக்குஇன வினையெச் சம்பிற
ஐந்து ஒன்று ஆறும்முக் காலமும் முறைதரும்
என்பது நன்னூற்பா.

இவை வினையெச்ச வாய்பாடுகள்.

செய்து, செய்பு, செய்யா,செய்யூ, செய்தென – இறந்தகால வினையெச்ச வாய்பாடுகள்.

செய – நிகழ்காலம்;
மீதியுள்ளவை எதிர்காலம்.

செய்து – கடந்து சென்றான்.
செய்பு – காண்குபு (கண்டு) சென்றான்.
செய்யா – உண்ணாச் சென்றான்(உண்டுச் சென்றான்) எதிர்மறை போல் தோன்றினும், உடன்பாட்டுப் பொருள் தருவது.

செய்யூ – காணூ வந்தான்(காண வந்தான்;காணூஉ வந்தான் என்று அளபெடையாக எழுதுவதும் உண்டு.)

செய்தென – உணவு உண்டென பசி மறைந்தது. (உணவு உண்டு பசி மறைந்தது)

ஆகவே குறள் எண் 774-க்குப் பொருள் கொள்கையில், பறியா என்பதற்குத் தாங்கள் கூறியதுபோலப் பறித்து என்றே பொருள் கொள்ளவேண்டும்.

ஹரிகுமார்,
தங்கள் வாசகன்.

ஹரிகுமார்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 94
அடுத்த கட்டுரைகன்யாகுமரி பற்றி…