வாசிப்பு கடிதங்கள்

vish

வாசிப்பு என்பது போதையா?
வாசிப்பும் இலக்கிய வாசிப்பும்

ஆசிரியருக்கு,

புத்தகம் படிப்பது என்பதில் ஊரில் குறைவில்லை என்றே நினைக்கின்றேன். இத்தனை தமிழ்நாட்டில் பல பதிப்பகங்கள், தினசரிகள் என உள்ளன. ஆனால் ஏன் படிக்கிறோம் என்பது வேறு கேள்வி. வேலைக்கு போய் சம்பாதிக்க, ஏதேனும் நுட்பம் கொள்ள, பரிட்சை எழுத என பல தேடல்கள் உண்டு. இதனால் என்ன பயன் என கேள்வி சகஜம். பயன் என்பது புறம் சார்ந்த ஓன்றாகதான் இருக்கின்றது. வெளி நோக்கி மகிழ்வினை தேடுதல் போட்டியை மையமாக கொண்ட சமகால சூழலில் நேரம் எடுப்பதாக உள்ளது. உள்நோக்கி, அக கட்டுமானம் என்பதை புத்தகங்களில் மக்கள் தேடுவதில்லை. வாய்மொழி சமூகமல்லவா? அக மகிழ்வினை, அக குழப்பங்களை விடுவிக்க ஓரளவுக்கு ஆரோக்கியமானவர்கள் சுற்றம், ஜோஸ்யம், கோவில், டிவி என பலவாறு தேடுகின்றார்கள். அக குழப்பங்கள் குடி, காமம், பொருந்தா செயல்கள் எனவும் சிதறுகின்றது. டாஸ்மாக்கெல்லாம் நிரம்பி வழிகிறதல்லவா? அகத்தினையும் புத்தகத்தினையும் தொடர்பு படுத்தும் நுட்பம் வாய்மொழி சமூகத்தில் வெகுஜன உளவியலுக்கு நெருக்கமற்று உள்ளது.

ஒரு இருளரங்கில் பலர் சூழ அமர்ந்து காட்சி சித்திரங்களை காண்பதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கின்றது. சூதர் சொல்ல சூழ அமர்ந்திருக்கும், கூத்து நிகழ பார்த்து மகிழ்ந்திருக்கும் காட்சிதான் நினைவுக்கு வருகின்றது. வாய்மொழி வழியே தலைதலை முறையாக சுற்றம் சூழ கேட்டுப்பழகிய பின்னர் தனிமையில் அமர்ந்து வாசிக்க வருமா என தெரியவில்லை. சினிமா, நாடகம் , இசை என சூதர் சொல் பேசாதார் நாள் பொழுது தமிழ் சூழலில் இல்லை.

இந்திய மரபில் எளிமைப்படுத்தப்பட்ட மெய்ஞான வடிவங்கள் பல உண்டு. பஞ்சதந்திர கதைகள், ஜாதக கதைகள், இதிகாசம் மேலமைந்த புராண கதைகள், பொன்னர் சங்கர் , மதுரை வீரன், சுடலை மாடன் கதை போன்ற உள்ளூர் கதைகள் என சொல்லிக் கொண்டே போகலாம். இடைவிடாது மெய்ஞானத்தினை எளிய மொழியிலாக்கி வாய்மொழி சமூகத்திற்கு கொடுத்துக் கொண்டே இருந்த அறிவு சமூகம் இருந்து கொண்டே இருந்தது. உதாரணத்துக்கு கிணற்று தவளை கதை, பஞ்சதசியில் வரும் பத்து பேரை எண்ணும் கதை போன்றவை பெரிய உண்மைகளை சொல்லும் சிறந்த உதாரணங்கள். மக்களுக்கு கதைகள் அகத்தினை நோக்கி சொல்லின. வாய்மொழி சமூகத்தில் கதைகள் உயிரானவை, ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்பவை,உறவுகளை சொல்பவை, உலகை புரிந்து கொள்ள உதவுபவை. இங்குள்ள பூர்விக அமெரிக்கர்களின் வாழ்விலும் கதைகள் மிக முக்கியம். ஆன்மிக முக்கியத்துவம் உடையது.

இன்று தமிழ் சமூகத்தில் புத்தகம் பேசும் தோழமைகள்,வழிகாட்டிகள் பலரும் ஐரோப்பிய மையம் கொண்டவர்கள். ஐரோப்பிய வரலாறு, மானுடவியல், ஹெலனிஸ்டிக், ஹுப்ராயிக் தழுவலும், மோதலும் என அங்கு உடைத்து நிகழ்ந்த நிகழ்வுகள் பல. ஆர்கானிக் ஆக அந்த மண்ணில் எழுந்த அலை இது. புத்தகம் என்பது ஹுப்ராயிக் சமூகம் வளர்கையில் மைய அச்சாக ஆக்கப்பட்ட சமூகமது. நாவல், சிறுகதைகள் போன்றவை அங்கிருந்து எழுந்து வருகின்றன. இங்கு வந்து சேர்ந்து கலக்க நேரமாகின்றது.

அன்புடன்
நிர்மல்

***

அன்புள்ள ஜெ,

வாசிப்பு குறித்த அபிலாஷ் அவர்களின் கட்டுரையும் அது குறித்த தங்கள் கட்டுரையையும் படித்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு, சென்னை ஆழ்வார்பேட்டை நூலகத்தில் நடந்த ஓர் இலக்கியக் கூட்டத்தில் நான் உரையாற்றிய போது சொன்ன அதே கருத்தை தான் தாங்களும் சொல்லியிருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி. உங்களைப் போல் மிக விரிவாக என்னால் சொல்ல இயலவில்லை. ஆனால், சாரம் ஒன்று தான். எனக்கு முன்னால் பேசிய அதிஷா அவர்கள் கூட வாசிப்பை புகைப் பழக்கத்தோடு ஒப்பிட்டு பேசினார். என் உரையை இப்படி முடித்திருந்தேன் : “நம்மில் பெரும்பாலானோர் வாசிப்பை போதை என்கிறோம். தயவு செய்து இனி அப்படிச் சொல்லாதீர்கள். Reading is not an addiction. It is a passion. I am not addicted to reading. I am passionate about reading”.

அன்புடன்,
தீனதயாளன்
‘வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும்’ என ஒரு பழமொழி இருக்கிறது. உண்மைதான். மனிதனின் உடல் வளர்ச்சிக்கு உணவும் மருந்தும் எவ்வளவு உதவி செய்கின்றனவோ, அது போலவே மனிதனின் மன வளர்ச்சிக்கும், ஆளுமை விருத்திக்கும் புத்தகங்கள் உதவுகின்றன. புத்தகங்கள் வாசிக்கும்போது சில படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென்பது பலருக்குத் தெரியாமலிருக்கும். அது ‘வாசிக்கும் கலை’ எனப்படுகிறது.

வாசிக்கும் கலை குறித்து வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் 1972 இல் தோமஸ் மற்றும் ரொபின்சன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட SQ3R (எஸ்.க்யூ.த்ரீ.ஆர்) முறை பிரபலமான ஒரு முறை. இங்கு SQ3R முறையின் கீழ் புத்தகமொன்றை வெற்றிகரமாக வாசித்து முடிப்பதற்கு ஐந்து படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

S – Survey ( தேடிப் பார்த்தல்)
Q – Question ( கேள்வி எழுப்புதல்)
R – Read (வாசித்தல்)
R – Retrive ( மீளவும் பார்த்தல்)
R – Review (விமர்சித்தல்)

இங்கு முதல் படிமுறை S – Survey ( தேடிப் பார்த்தல்) ஆகும். தேடிப்பார்ப்பதில் நூலின் பெயர், நூலாசிரியர், பிரசுரிக்கப்பட்டுள்ள ஆண்டு, முன்னுரை மற்றும் அறிமுகம், பக்கங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை ஆராய்ந்து பார்ப்பது முக்கியமாகும். நூல் குறித்த கேள்விகளை எழுப்புவது இரண்டாவது படிமுறையாகும்.

‘இந்த நூலை வாசிப்பதால் எனக்குப் பயனிருக்குமா?’

‘இதில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் என்னென்ன?’

போன்ற கேள்விகளை எழுப்பி விடை கண்டுகொள்வது அவசியமாகும். அவ்வாறு விடைகளைக் கண்டுகொண்ட பிற்பாடு, அந் நூலை வாசிக்க ஆரம்பிப்பது மூன்றாவது படிமுறை. மிகுந்த அவதானத்தோடு புத்தகங்களை வாசிப்பது மிக முக்கியமானது. அவ்வாறு அவதானத்துடன் வாசிப்பதோடு, வாசித்த விடயங்களை மீளவும் மனதிற்குள் மீட்டிப் பார்ப்பது நான்காவது படிமுறை. இவ்வாறு செய்யும்போது நீங்களே அந் நூல் குறித்த ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். அடுத்ததாக இங்கு ஐந்தாவது படிமுறையானது, முழுமையாக நூலை வாசித்து முடித்த பிற்பாடு, அந் நூல் குறித்து விமர்சிப்பதாகும்.

இந்த வழிமுறையில் புத்தகமொன்றை வாசித்து முடித்த பின்பு, அறிவு விருத்தியாகியிருப்பதோடு, மனதும் மகிழ்வுடன் இருக்கும். இதனால் வாசிக்கும் ஆர்வமும் அதிகரித்து, நேரமும் பயனுள்ள முறையில் கழியும்.

மாணவர்கள் பரீட்சைகள் எழுதிவிட்டு, பெறுபேற்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலகட்டமானது தரமான புத்தகங்களை வாசிப்பதற்கென உகந்த காலம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்களது நேரத்தைப் பயனுள்ளதாக்குவதோடு, நல்லதொரு வழிகாட்டியையும் அவர்களுடனேயே இருக்க வைப்பது போலாகும்.

– எம்.ரிஷான் ஷெரீப்

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 95
அடுத்த கட்டுரைசின்ன அண்ணாமலை ‘சொன்னால்நம்பமாட்டீர்கள்’