84. நீர்ப்பாவை நடனம்
சுபாஷிணி சைரந்திரியின் சிற்றறைக் கதவை மெல்ல தட்டி “தேவி… தேவி…” என்று அழைத்தாள். சில கணங்களுக்குப்பின் தாழ் விலக புறப்படுவதற்கு சித்தமாக ஆடையணிந்து சைரந்திரி தோன்றினாள். அவள் தோளில் கைவைத்து புன்னகைத்து “செல்வோம்” என்றாள். இடைநாழியினூடாக நடக்கையில் “என்னடி சோர்வு?” என்று சைரந்திரி கேட்டாள். சுபாஷிணி தலையசைத்தாள். “உன் கண்களில் துயிலின்மை தெரிகிறது. சில நாட்களாக நன்கு மெலிந்துவிட்டாய். கழுத்தெல்லாம் வரி வரியாக இருக்கிறது” என்றாள் சைரந்திரி. சுபாஷிணி தலைகுனிந்து நடந்து வந்தாள். அவள் தோளில் கைவைத்து “சொல், என்ன?” என்றாள் சைரந்திரி. “ஒன்றுமில்லை” என்றாள் சுபாஷிணி. அவள் தொண்டை அடைத்திருந்தது.
“என்னவென்று எனக்குத் தெரியும்” என்றாள் சைரந்திரி. சுபாஷிணி விழிகளைத் தூக்க “பெண்ணென்றால் பொறுத்திருந்துதான் ஆகவேண்டும். கனி மடியில் உதிர்வதற்காகக் காத்திருப்பதே காதலில் அவளுக்கு வகுக்கப்பட்டுள்ள இடம்” என்றாள். சுபாஷிணி “ஐயோ, அதில்லை” என்று பதற்றத்துடன் சொல்லத் தொடங்க அவள் தோளை மெல்ல தட்டி சிரித்தாள் சைரந்திரி. சுபாஷிணி தலைகுனிந்தாள். ஏனென்று தெரியாமல் அவளுக்கு கண்ணீர் வந்தது.
இருவரும் படிகளில் இறங்கியபோது அங்கே இரு சேடியர் காத்து நின்றிருந்தனர். ஒருத்தி சைரந்திரியிடம் “அரசி கிளம்பிவிட்டார். தங்களை அங்கு வரச்சொன்னார்” என்றாள். “அங்கா?” என்றபின் ஒருகணம் எண்ணி “நன்று, அங்கு செல்வோம்” என்றாள். அவர்கள் நடக்கையில் சுபாஷிணி மெல்ல “எங்கு செல்கிறோம்?” என்றாள். “மருத்துவநிலையில் இளவரசர் உத்தரர் இருக்கிறார். அவரைப் பார்க்க அரசி செல்கிறார்கள். இளவரசியும் அங்கு வரக்கூடும் என்றார்கள்” என்றாள் சைரந்திரி. சுபாஷிணி “கலிங்க நாட்டுச் செய்தி வந்துள்ளது என்று அறிந்தேன்” என்றாள். சைரந்திரி “ஆம், இங்கு அனைவரும் எதிர்பார்த்திருந்ததுதான்” என்றாள்.
“இளவரசர் துயருற்றிருப்பார் என்று நினைக்கிறேன். எப்போதும் அதையே சொல்லிக்கொண்டிருந்தார்.” சைரந்திரி சுபாஷிணியைப் பார்த்து புன்னகைத்து “துயரை வெல்வதற்கு அவர் தனக்குரிய வழியை கற்றுக்கொண்டிருக்கிறார். இங்கிலாத உலகில் வாழ்பவர்களுக்கு இங்குள்ள துயர்கள் சென்று சேர்வதில்லை” என்றாள். “இன்று இளவரசரின் பிறந்தநாள் என்று சேடி சொன்னாள்” என்றாள் சுபாஷிணி. அந்த உரையாடல் அவள் உள்ளத்தை எளிதாக்கவே அவள் தொடர்ந்து பேச விரும்பினாள். “வழக்கமான குலதெய்வப் பூசனைகள் வேண்டியதில்லை என்று அரசர் ஆணையிட்டுவிட்டதாக சொன்னார்கள்.”
“ஆம்” என்றாள் சைரந்திரி. சுபாஷிணி “போர் முரசு முழங்கிவிட்டதால் எந்த விழவும் கொண்டாட வேண்டாமென்பது அமைச்சரின் ஆணை. ஆகவே சென்ற ஆண்டு போலன்றி இந்த ஆண்டு இளவரசரின் பிறந்த நாள் எளிதாக கடந்து செல்கிறது. பேரரசி புலரியிலேயே கொற்றவை ஆலயத்திலும் மூதன்னையர் ஆலயத்திலும் வழிபட்டு முடித்து மலர் கொண்டுவந்திருக்கிறார். இளவரசியும் ஆலயங்களில் இளவரசருக்காக வணக்கமும் வேண்டுதலும் செய்திருப்பார் என்றாள் தலைமைச்சேடி சுதார்யை” என்றாள். சைரந்திரி புன்னகையுடன் “நாமும் ஏதாவது வேண்டுதல் செய்ய வேண்டுமல்லவா?” என்றாள்.
சுபாஷிணி சிரித்து “நாமா? நாம் எதற்கு? செய்வதென்றால்கூட அதற்கு இப்போது பொழுதில்லையே?” என்றாள். சைரந்திரி சுற்றும்முற்றும் பார்த்தபின் அங்கு தூணில் தொங்கிய மலர்த்தோரணத்தைப் பார்த்து “அந்த மலர் மாலையை எடு” என்றாள். “இதையா? இது சற்று வாடியிருக்கிறதே?” என்றாள். “தாழ்வில்லை, எடு” என்றாள் சைரந்திரி. “ஒரு தாலம் கொண்டு வா.” சுபாஷிணி சிரித்து “அய்யோ” என்றாள். “கொண்டு வாடி.” சுபாஷிணி அப்பால் ஒரு அறைக்குள் இருந்த தாலத்தை பார்த்தபின் சிரித்தபடி ஓடிச்சென்று அதை எடுத்து வந்தாள். அதில் அந்த மலர் மாலையை சுழற்றி வைத்து “இது போதும்” என்றாள் சைரந்திரி. “பார்த்ததுமே தெரிந்துவிடும்” என்றாள் சுபாஷிணி. “அவருக்குத் தெரியாது” என்றாள் சைரந்திரி. உடன்வந்த சேடியர் சிரித்துக்கொண்டிருந்தனர். “சிரிக்கவேண்டாம்” என்றாள் சைரந்திரி.
அவர்கள் மருத்துவநிலைக்குச் சென்றபோது இடைநாழியில் காவல் பெண்டுகள் நின்றிருந்தனர். சைரந்திரியைக் கண்டதும் தலைவணங்கி உள்ளே ஆற்றுப்படுத்தினர். சைரந்திரியும் சுபாஷிணியும் உடன்சென்ற சேடியரும் மருத்துவசாலைக்குள் நுழைந்து அதன் இடைநாழியில் நடந்தார்கள். அவர்களை எதிர்கொண்ட மருத்துவ உதவியாளன் “இளவரசர் முதன்மை அறையிலிருக்கிறார்” என்றான். சைரந்திரி தலையசைக்க அவன் “நானே அழைத்துச்செல்கிறேன்” என்றான். அவன் முகமே காமத்தின் மடமை வெளிப்படும் சிரிப்பு கொண்டிருந்தது. “மருத்துவ உத்தரர்” என்றாள் சுபாஷிணி. சேடியர் சிரிக்க அவன் திரும்பி “என்ன சொன்னீர்கள்?” என்றான். “உத்தரரின் மருத்துவர் நீங்கள் என்றேன்.” அவன் “ஆம், நான் அவரை இரவில் பார்த்துக்கொள்கிறேன்” என்றான்.
அறைக்குள் நுழையும்போது சைரந்திரி உத்தரனின் உரத்த குரலை கேட்டாள். “அவர்களுக்கு ஏன் துணிவு வந்தது என்று தெரியும். அழிவு துணிவைத்தான் முதலில் கொண்டுவருகிறது என்பார்கள். விராடபுரியுடன் எதிர்த்து எவர் வெல்ல முடியும்? மாமன்னர் நளன் பயிற்றுவித்த புரவிகள் நம்மிடம் உள்ளன. நமது வல்லமை எதுவென்று நாமறியாவிட்டாலும் நம்மிடம் தோற்று அஞ்சி ஒடுங்கியிருக்கும் ஷத்ரியர் அனைவருக்கும் தெரியும்” என்றான் உத்தரன். “இதுவும் நன்றே. நமக்கு நம் ஆற்றலை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு அமைகிறது. உண்மையை சொல்லபோனால் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு பெரும்போர் நிகழ்ந்தாகவேண்டும். இல்லையேல் படைகளின் உள ஆற்றலும் நம்பிக்கையும் குறையும். படைப்பயிற்சியென்பது வெறும் விளையாட்டென எண்ணிக்கொள்வார்கள்.”
“இன்றைய மெய்ப்பாடு வீரம் போலிருக்கிறது” என்றாள் சுபாஷிணி. “நேற்று முழுக்க காவியத் துயரம்.” சேடியர் சிரித்தனர். “இப்போரை நமது தெய்வங்கள் நமக்கு அளித்தன என்று கொள்வோம். இதில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமும் எனக்கில்லை. விராடம் அதன் மூதன்னையரால் மூதாதையரால் குலதெய்வங்களால் மும்முறை வாழ்த்தப்பட்டது.” அவர்கள் உள்ளே நுழைகையில் சுபாஷிணி தாழ்ந்த குரலில் “எங்கோ உளப்பாடம் செய்திருக்கிறார் போலும்” என்றாள். விழிகளால் குரல் எடுத்துப் பேசாதே என்பதுபோல் அவளை அடக்கிவிட்டு சைரந்திரி உள்ளே நுழைந்தாள்.
உத்தரனைச் சுற்றி பெண்கள் அமர்ந்திருந்தனர். காலடியில் சிலர் அமர்ந்திருக்க சிலர் சுவர் சாய்ந்து நின்றிருந்தனர். உத்தரன் “கீசகன் கொல்லப்பட்டதால் அஸ்தினபுரி ஊக்கமடைந்திருக்கிறது. ஆனால் விராடபுரியின் ஒவ்வொரு நிஷாதனும் ஒரு கீசகன் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். அதை அவர்களுக்கு இந்தப் போர் கற்பிக்கும்” என்றான். சைரந்திரியைப் பார்த்ததும் புன்னகைத்து “வருக!” என்றபின் “நான் அணுகிவரும் போரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன்” என்றான்.
சைரந்திரி “தங்களுக்காக வேண்டிக்கொண்டேன், இளவரசே” என்றபின் மலர்த்தாலத்தை நீட்டினாள். உத்தரன் அதை வாங்கி கண்களில் ஒற்றி அப்பால் வைத்துவிட்டு செல்லச் சலிப்புடன் “காலையிலிருந்து எனக்கான வேண்டுதல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒருகணமும் ஓயாது பெண்டிரின் வேண்டுதல்கள் நம் மூதாதையரிடம் சென்று கொண்டிருப்பதைக் கண்டால் அவர்கள் எரிச்சலுற்று என்னை மேலும் சில நாட்கள் இங்கே படுக்க வைத்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது” என்றான். “தங்கள் கால்வலி குறைந்திருக்கிறதா?” என்றாள் சைரந்திரி. உத்தரன் “வலி இருக்கிறது. காரகனைப்போன்ற புரவியில் ஊர்வதென்பது சினம்கொண்ட சிம்மத்தின்மேல் செல்வது. நான் விழுந்ததை அவன் எதிர்பார்க்கவில்லை. கொட்டிலில் வருந்தியபடி உடல் சிலிர்த்து கால்மாற்றி துயருற்று நின்றிருக்கிறான் என்றார்கள். சற்று நடக்க கால் ஒப்பும்போது சென்று பார்த்து அவனை ஆறுதல்படுத்த வேண்டும்” என்றான்.
சைரந்திரி அவன் காலருகே நின்றாள். “நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? போர்! ஆம், இந்தப் போரில் நிஷாதர்கள் யாரென்பது ஷத்ரியர்களுக்கு தெரியவரும். அது அவர்கள் ஒருநாளும் மறக்காத பாடமாக அமையும்.” சைரந்திரி “போருக்கு யார் படைத்தலைமை ஏற்பது என்பதுதான் பேச்சாக இருக்கிறது” என்றாள். “யார் படைத்தலைமை ஏற்றால் என்ன? ஒவ்வொரு நிஷாதனும் ஒரு படைத்தலைவன் போலத்தான்” என்றான் உத்தரன். சுபாஷிணி “இளைய விராடர் படைத்தலைமை ஏற்கக்கூடுமென்று ஒரு பேச்சிருக்கிறது” என்றாள். உத்தரன் முகம் மலர்ந்து அவளை நோக்கி “ஆம், நான்தான் இயல்பாகவே விராடத்தின் படைத்தலைவன்” என்றான்.
“காலையிலிருந்தே அமைச்சரும் படைத்தலைவரும் வந்து என்னிடம் இதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு எனக்குப் புரிகிறது. உண்மையை சொல்லப்போனால் நான் உடல் தேறி வரவேண்டுமென்று வேண்டுதல் எழுவதற்கு ஏதுவாக அமைவது அந்த எதிர்பார்ப்புதான். என் கால் சற்றே நலம்கொண்டுவிட்டிருந்தால் இந்நேரம் கோட்டை முகப்பில் படைகளை சூழ்கைக்காக நிரைப்படுத்திக்கொண்டிருப்பேன். நாளை புலரியில் படைகளுக்கு முன்னால் எனது கரும்புரவியில் தலைமை தாங்கி சென்றுகொண்டிருப்பேன்” என்றான் உத்தரன். “என்ன செய்வது? இது ஊழ்.”
“கால்வலி இருந்தாலும் தேரில் அமர்ந்து செல்லலாமே?” என்றாள் சைரந்திரி. “ஆம், தேரில் செல்வதற்கு இப்போது எந்தத் தடையும் இல்லை. ஆனால் யார் தேர் ஓட்டுவது? நான் இரு கைகளாலும் அம்பு விடுபவன். பாரதவர்ஷத்தில் அஸ்தினபுரியின் விஜயனுக்குப் பிறகு சவ்யசாஜி நானே என்று சூதர் பாடிய பாடலை நினைவுறுகிறாயா?” என்றான். சேடி ஒருத்தி “பிரஃபூதர் எழுதிய காவியம்” என்றாள். “ஆம், பிரஃபூதர் எழுதிய காவியம்” என்று அவன் சைரந்திரியிடம் சொன்னான். சுபாஷிணி “அவரா? அவர் கவிதையெழுதுவாரா? அடைப்பக்காரர் அல்லவா?” என்றாள். உத்தரன் சினத்துடன் “அவர் அடைப்பக்காரர் மட்டும் அல்ல” என்றபின் “என்னை வைத்து திறம்பட ஓட்டும் தேரோட்டிகளே இங்கில்லை. இதுதான் உண்மை” என்றான். “மெய்” என்றாள் சைரந்திரி.
உத்தரன் மேலும் ஊக்கம் கொண்டு “உண்மையை சொல்லப்போனால் அஸ்தினபுரியின் அர்ஜுனனைப் போன்ற ஒரு தேரோட்டி எனக்குத் தேவை. அவர் எனக்கு தேரோட்டுவார் என்றால் எனக்கு படைத்துணையே தேவையில்லை. தனியொருவனாகச் சென்று மச்சர்களின் அந்த எலிக்கூட்டத்தை சிதறடித்து மீள்வேன்” என்றான். “அவர்தான் இப்போது இல்லையே” என்றாள் சுபாஷிணி. “ஆம், அதைத்தான் சொல்ல வருகிறேன். அவர் இல்லை. அவருக்கு நிகரானவர்களும் இல்லை. தேரோட்ட ஆளில்லாமல் இதோ இங்கு நான் படுத்திருக்கிறேன்.” சுபாஷிணி “ஆனால் அனைத்து இடர்களையும் கடந்து சென்று வெல்வதுதானே வீரர்களின் கடமை?” என்றாள்.
“ஆம். அதைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். புரவியில் நான் செல்ல இயலாது, தேரோட்ட ஆளில்லை. அப்படியென்றால் எப்படி இந்தப் போரை நான் நடத்த முடியும்?” என்றான். “எப்படி?” என்றாள் சுபாஷிணி. “முடியும்” என்று அவன் புன்னகைத்தான். “படைக்கலங்களால் செய்யப்படுவதல்ல போர்” என்றான். சுபாஷிணி “விலங்குகளால் செய்யப்படுவதோ?” என்றாள். சேடிகள் சிரிக்க “அறிவிலாது பேசலாகாது. போரென்பது அறிவை படைக்கலமாகக் கொண்டது. படைக்கலமேந்தி களம் நின்று போராடுவது இரண்டாம் கட்டம். படைசூழ்கையை வகுப்பதில் உள்ளது படைத்தலைவரின் திறன்” என்றான்.
“ஆம், அதற்கு படைத்தலைவர்கள் வேண்டுமே?” என்றாள் சுபாஷிணி. “நான் இருக்கிறேன். படைகளை நான் நடத்துவேன். அதைத்தான் சொல்ல வந்தேன்” என்றான் உத்தரன். இன்று மாலையே போருக்கான அறிவிப்பு வந்துவிடுமென்றார்கள்” என்றாள் சைரந்திரி. “ஆம், போர்முரசுதான் கொட்டிவிட்டதே? உச்சிப்பொழுதுக்குள் படை ஒத்திகை முடிந்துவிடும்” என்று உத்தரன் சொன்னான். “நாளை புலரியில் படைகள் கிளம்புகின்றன. அரசாணையை அந்தியில் கொற்றவை பூசனைக்குப் பிறகு அவையில் வெளியிடலாம் என்று ஆபர் என்னிடம் சொன்னார். படை ஒத்திகை முடிந்தவுடனே அதை வெளியிடுவதுதான் சிறந்தது என்றேன். ஏன்?”
“ஏன்?” என்றாள் சைரந்திரி. “கேள், சொல்கிறேன். வீரர்கள் தங்கள் இல்லம் திரும்பி குழந்தைகளிடமும் மனைவியிடமும் விடைபெற்று அந்திக்குள் படைமுகாம்களை வந்தடைந்துவிடலாம். இன்று முன்னிரவிலேயே அவர்கள் படுத்து நன்கு துயின்றார்கள் என்றால்தான் நாளை காலையில் புத்துணர்வுடன் கிளம்பமுடியும். ஆபர் நான் சொன்னதை ஏற்றுக்கொண்டார். திறமையானவர்தான். ஆனால் படைகளின் உள்ளம் அவருக்குத் தெரியாது. அதை பிறிதொரு படைவீரனால்தான் புரிந்துகொள்ள முடியும்.”
அரசியும் இளவரசியும் வருவதை ஏவலன் வந்து அறிவித்தான். சைரந்திரி எழுந்து நின்றாள். வலம்புரிச்சங்கின் ஒலி கேட்டது. சுதேஷ்ணை கையில் தாலத்துடன் வந்தாள். தொடர்ந்து உத்தரை வந்தாள். அவர்கள் தாலங்களை அவனுக்கு அளிக்க அவன் வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு அப்பால் வைத்தான். கொற்றவையின் குங்குமத்தை அவன் நெற்றியில் வைத்து “நூறாண்டு வாழவேண்டும்” என்றாள் சுதேஷ்ணை. “தங்கள் வாழ்த்துக்கள் நலம் கொணரட்டும், அன்னையே” என்றான் உத்தரன். உத்தரையும் அவனுக்கு செந்தூரமிட்டு வாழ்த்தினாள்.
“படைப் புறப்பாட்டைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்” என்றான் உத்தரன். “இன்று விராடத்தின் மிகப் பெரிய இக்கட்டே என் உடல்நிலைதான். படைகளை தலைமைதாங்க ஆளில்லை. என்ன செய்வது? நான் இங்கிருந்தே படைசூழ்கையை அமைக்கலாமென்று சொல்லிக்கொண்டிருந்தேன்.” உத்தரை “தாங்கள் முதற்படைத்தளபதியாக முன்செல்வதாக அரசாணை” என்றாள். “நானா? என்னால் எழுந்து அமரவே முடியாதே? தவறான செய்தி” என்றான். உத்தரை “அல்ல” என்றாள். “அரசாணையை படித்து நோக்கியபின்புதான் வருகிறேன்.”
உத்தரன் படபடப்புடன் எழுந்தமர்ந்து “என்ன சொல்கிறாய்?” என்றான். “தாங்கள்தான் படைநடத்தி செல்லப்போகிறீர்கள், மூத்தவரே” என்றாள். “நானா? நான் எப்படி? என்னால் வலியை தாங்கமுடியாமல் படுத்திருக்கிறேன். நேற்றிரவெல்லாம் இறந்துவிடுவேன் என்றே ஐயுற்றேன்” என்றான். “வேண்டுமென்றால் மருத்துவரிடம் கேள். உண்மையில் என்னால் இப்போதுகூட அசையமுடியவில்லை. எலும்புகள் உடைந்து நொறுங்கியுள்ளன.”
“எப்படியாயினும் அரசகுடியைச் சேர்ந்த ஒருவர்தான் படைநடத்திச் செல்லமுடியும். தாங்கள் முன்னால் சென்றால்தான் படைவீரர்கள் ஊக்கம் கொள்வார்கள். அரசகுடி அரண்மனையில் அமர்ந்துகொண்டு படைகளை மட்டும் அனுப்பினால் அது இழிசொல்லுக்கு இடமாகும். அதை எண்ணியே தாங்கள் படைநடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்றாள் சைரந்திரி. “என்னை கேட்காமல் எப்படி அறிவிக்கலாம்? என்னிடம் எவருமே எதையும் சொல்லவில்லையே? இதென்ன அறமின்மை? இதை தட்டிக்கேட்க ஆளில்லையா?” என்று உத்தரன் கூச்சலிட்டான்.
“இல்லையே, ஆபர் வந்து தங்களிடம் சொன்னார் என்றார்களே?” என்றாள் சைரந்திரி. “ஆம், ஆபர் சொன்னார். ஆனால் என்னால் இயலாது. என் கால் இன்னும் சீரடையவில்லை என்று நான் சொன்னேன். மருத்துவரை அழைத்து அவரிடம் விளக்கச்சொன்னேன். மருத்துவரே அவரிடம் விரிவாக விளக்கினார்.” சைரந்திரி “யார், வெளியே நின்றிருக்கிறாரே, அவரா?” என்றாள். “ஆம், சுக்ரன் என்று பெயர். திறன்கொண்டவன்.” சைரந்திரி “தெரிகிறது” என்றாள். சுபாஷிணி “தாங்கள் தேரில்தான் செல்லப்போகிறீர்கள்” என்றாள். “தேரில் செல்லலாம், ஆனால் தேரை யார் ஓட்டுவது? பயிலாத ஓட்டுநர் ஓட்டினால் படைக்களத்தில் நான் எப்படி போர்புரிய முடியும்? என் திறனுக்கு நிகரான பாகன் வேண்டாமா?”
உத்தரை “எனது ஆசிரியர் பிருகந்நளை தேரை ஓட்டுவார்” என்றாள். சுதேஷ்ணை “அவளா? அவள் ஆணிலி அல்லவா?” என்றாள். “ஆம்! ஒரு ஆணிலி என் தேரை ஓட்டலாகாது. அது எனக்கு இழுக்கு. நாளை நூல்களில் ஆணிலியை முன்னிறுத்தி போர்புரிந்தான் என்று என்னைப்பற்றி சொல்வார்கள்” என்றான். “அவர் ஆண் உரு தாங்கி வருவார். அவரென்று எவருக்கும் தெரியாது” என்றாள் உத்தரை. “எனக்குத் தெரியுமே? அந்த இழிவை என்னால் தாங்க முடியாது. அவள் வேண்டியதில்லை. நான் மறுக்கிறேன்… உயிர்போனாலும் அவள் ஓட்டும் தேரில் நான் ஏறமாட்டேன்” என்றான் உத்தரன்.
சுதேஷ்ணை “ஆம், அவனுக்கு உவப்பில்லாத ஒருவர் தேரை ஓட்டினால் அவனால் போரிட முடியாது” என்றாள். உத்தரை சினத்துடன் அன்னையை நோக்கி “அன்னையே, தாங்கள் சற்று வாயை மூடிக்கொண்டிருங்கள். உங்கள் மைந்தனை இவ்வண்ணம் ஆக்கியதே உங்கள் அறியாமைதான்” என்றாள். ஒருகணம் அறியாமல் சைரந்திரியை திரும்பி நோக்கியபின் முகம் சிவந்து எழுந்த சுதேஷ்ணை “என்னடி பேசுகிறாய்? யாரிடம் பேசுகிறாய் என்று தெரிகிறதா?” என்றாள். “விராடரின் மனைவியிடம், விராடபுரி அரசியிடம் பேசுகிறேன். அரசிபோல பேசும்படி கோருகிறேன். அகத்தளத்துப் பெண்டிரின் குரலில் பேசுவது அரசிக்கு எந்த வகையிலும் உகந்ததல்ல” என்றாள் உத்தரை.
அரசி உடல்பதற மீண்டும் சைரந்திரியை பார்த்துவிட்டு “இதெல்லாம் யார் சொல்லி எழும் சொற்களென்று எனக்குத் தெரியும். நான் பார்க்கிறேன்” என்றாள். பிறகு மூச்சு ஏறி இறங்க கைகள் பதைக்க சொல்லுக்காக தத்தளித்தபின் “என் மைந்தனை ஆணிலி கொண்டுசெல்லவேண்டாம்” என்றாள். “ஆணிலியாக இருப்பதைவிட அது ஒன்றும் இழிவில்லை” என்றாள் உத்தரை. “என்னடி சொல்கிறாய்?” என்று சுதேஷ்ணை கூவினாள். “ஆம், இவர் ஒரு போருக்காவது சென்றால் விராடத்தின் இழந்த மதிப்பு சற்றாவது மீளும்.”
“என் மைந்தன் போர்முனையில் சாக நான் விடமாட்டேன். அனைவரும் அறிவார்கள் அவனுக்கு போர் தெரியாதென்று. எவரோ வஞ்சம்கொண்டு அவனை வேண்டுமென்றே படைமுகப்புக்கு அனுப்புகிறார்கள்” என்றாள் சுதேஷ்ணை. உத்தரன் “ஆம், அன்னையே. இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது. என்னை கொல்ல நினைக்கிறார்கள்…” என்றான். “என் மைந்தன் உயிர் பிரிந்தால் இந்த நாடு வேறு சிலர் கைகளுக்கு செல்லும். பெண்கொள்ள வருபவர்கள் இந்நாட்டை கைப்பற்றுவார்கள்…” என்றபின் அவள் சீற்றத்துடன் உத்தரையை நோக்கி “அதுதான் இச்சூழ்ச்சியின் பின்னால் உள்ள எண்ணம்” என்றாள்.
உத்தரன் உத்தரையை நோக்கி “நீதான் தந்தையிடம் சொன்னாயா, நான் படைநடத்திச் செல்லவேண்டுமென்று?” என்றான். உத்தரை ஏளனத்துடன் உதடு வளைய “எவர் சொன்னாலும் சொல்லாவிடினும் தாங்கள்தான் படைமுகம் செல்லவேண்டும். அது அரசாணை” என்றபடி எழுந்தாள். “நான் செல்லப்போவதில்லை. நான் எவர் ஆணையிட்டாலும் செல்லப்போவதில்லை” என்றான் உத்தரன். “நீ செல்ல வேண்டியதில்லை. நான் உன் தந்தையிடம் பேசிக்கொள்கிறேன்” என்றபின் சுதேஷ்ணை மீண்டும் சைரந்திரியை பார்த்தபின் திரும்பிக்கொண்டு “நான் இந்த நாட்டின் அரசி. இங்கு அரசருக்குப்பின் என் சொல்லே நெறியென்றாகும். நானே ஆணையிடுகிறேன்” என்று மூச்சிரைக்க சொன்னாள். கால்கள் அதிர்வொலி எழுப்ப திரும்பிச் சென்றாள். அவளுடன் சேடிகளும் சென்றனர்.
சைரந்திரி “அரசி சொன்னதை தாங்கள் ஏற்கிறீர்களா? தங்களைப்போன்ற பெருவீரர் படைமுகப்பில் இறந்துவிடுவார்கள் என்கிறார்களே?” என்றாள். உத்தரன் கண்களில் நீர் தளும்ப குரல் தழுதழுக்க “அவர் சொன்னதுதான் உண்மை. என்னால் போர்புரிய முடியாது” என்றான். “சவ்யசாஜி என்றீர்கள்?” என்றாள் சுபாஷிணி. “அதெல்லாம் நான் வெறுமனே சொல்லிக்கொள்வது. மெய்யாகவே இதுவரை நான் ஒருமுறைகூட இலக்கில் அம்பை எய்ததில்லை. படைமுகம் சென்றால் எழும் முதல் அம்பிலேயே தேர்த்தட்டில் இறந்துவிழுவேன்” என்றான்.
சைரந்திரியின் கைகளைப்பற்றியபடி “சைரந்திரி, உன் சொற்களை அரசர் கேட்பார். நீ சென்று சொல், என்னை இழந்துவிடவேண்டாம் என்று” என்றான். அவன் கண்ணீர் கன்னங்களில் வழிந்தது. மூக்கை உறிஞ்சி மேலாடையால் துடைத்தபடி “இளவரசனாகப் பிறந்ததனால் நான் களம் சென்று சாக வேண்டுமா என்ன? இளவரசுப் பதவியை துறக்கிறேன். எங்காவது ஓடிச்சென்று எளிய குதிரைக்காரனாக வாழ்ந்துகொள்கிறேன்” என்றான். உத்தரை எழுந்து ஏளனத்துடன் “குதிரைக்காரனாக வாழவேண்டுமென்றால் குதிரை ஏறத் தெரியவேண்டுமல்லவா? அது தெரிந்தால் எப்படி இப்படி விழுந்து கால் ஒடிந்து கிடப்பீர்கள்?” என்றாள்.
உத்தரன் வெறிகொண்டு “நீதான் என்னை கொல்லப்பார்க்கிறாய்! நான் செத்தால் என் நாடு உனக்கென்று திட்டமிடுகிறாய்” என்று கூவினான். நரம்புகள் புடைக்க பற்களைக் கடித்து கைநீட்டியபடி “கலிங்கத்து இளவரசி என்னை மணக்கமாட்டாளென்று சொன்னதே உன்னால்தான். உனது ஒற்றர்கள் என்னைப்பற்றி பிழையான செய்திகளை அவர்களிடம் சொல்லியிருக்கிறார்கள்” என்றான். உத்தரை சினத்துடன் சிரித்து “என்ன பிழையான செய்திகள்? புரவியிலிருந்து உருண்டு அவர்கள் காலடியில் விழுந்து கிடந்ததா? அதை நான் சொல்லித்தான் அவர்கள் அறிந்தாக வேண்டுமா?” என்றாள்.
“அது விபத்து. அது அவர்களுக்கும் தெரியும். என்னைப்பற்றி நீ என்ன சொன்னாய் என்று நான் விசாரித்து தெரிந்துகொள்ளத்தான் போகிறேன்” என்றான். உத்தரை “அதெல்லாம் பிறகு. நாளை புலரியில் நீங்கள் தேர் ஏறி போருக்குச் செல்கிறீர்கள்… இது உறுதி” என்றாள். “செல்லப்போவதில்லை. மாட்டேன்… எவர் சொன்னாலும் உடன்பட மாட்டேன்” என்றான். அவள் எழுந்துகொண்டு திரும்ப “என்னை வற்புறுத்தினால் நான் உயிர்துறப்பேன்” என்று கூவினான். “நன்று! களம்சென்று உயிர்துறவுங்கள்…” என்றபடி உத்தரை தன் தோழிகளிடம் வரும்படி தலையாட்டிவிட்டு நடந்து சென்றாள்.
உத்தரன் “நான் என்ன செய்வேன்? அனைவரும் சேர்ந்து என்னை கொல்லப்பார்க்கிறார்கள்” என்றபின் உரத்த குரலில் விசும்பி அழத்தொடங்கினான். சுபாஷிணி சிரிப்பை அடக்குவதற்காக உதடுகளைக் கடித்தபடி சாளரத்தை பார்த்தாள். சைரந்திரி உத்தரனின் தலையை கையால் தொட்டு “இளவரசே, எனது சொற்களை நம்புகிறீர்களா?” என்றாள். “உன்னை நம்புகிறேன். இந்த இக்கட்டிலிருந்து என்னை நீ காப்பாற்ற முடியும்” என்றான் உத்தரன். “அப்படியானால் இது என் சொல். இந்தப் போரில் நீங்கள் இறக்கப்போவதில்லை. வென்று மீளப்போகிறீர்கள். இந்த நகரம் உங்கள்மேல் அரிமலர் வீசி வாழ்த்தி கொண்டாடப்போகிறது. பெருவீரர் என்ற பெருமை உங்களுக்கு இந்தப் போரால் அமையும். நீங்கள் இழந்த கலிங்கத்து இளவரசி உங்களை நாடி வருவாள். நம்புங்கள்” என்றாள்.
“அது எப்படி? உண்மையில் எனக்கு ஒன்றுமே தெரியாது. என் எதிரே ஒருவர் வாளை உருவினாலேயே என் நெஞ்சு திடுக்கிடுகிறது” என்றான் உத்தரன். “உங்களை பிருகந்நளை அழைத்துச் செல்வாள் அல்லவா, அவளை நம்புங்கள்” என்றாள் சைரந்திரி. “அந்த ஆணிலியை…” என்று அவன் தொடங்க “அவளுக்கு விஜயன் என்னும் கந்தர்வனின் துணை உண்டு. அவன் போரை நிகழ்த்துவான்” என்றாள் சைரந்திரி. “கந்தர்வனா? அதை எப்படி நம்புவது?” என்றான் உத்தரன். “நம்புங்கள்… அவளிலிருந்து அந்த கந்தர்வன் வெளிப்படுவான். பாரதவர்ஷத்தின் எந்தப் பெருவீரனும் அவள் முன் நிற்க முடியாது” என்றாள்.
உத்தரன் கேவலோசை எழுப்பினான். “அவள் முன் நிற்கும் தகுதி படைத்தவர் ஒருவரே. அங்கநாட்டார் கர்ணன். அவர் இப்போது உகந்த உள நிலையில் இல்லை. மச்சர் படைகள் அவர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டவையும் அல்ல. தாங்கள் வென்று மீள்வீர்கள்” என்றாள் சைரந்திரி. “என்னால் நம்ப இயலவில்லை” என்றான் உத்தரன். “என் சொற்களை நம்புங்கள். பிருகந்நளையை நம்புங்கள்” என்றாள் சைரந்திரி. உத்தரன் மஞ்சத்தில் குப்புறக் கவிழ்ந்து தலையணையில் முகம் புதைத்து தோள்கள் குலுங்க அழுதுகொண்டிருந்தான். அவன் தலையை மெல்ல தொட்டபின் செல்வோம் என்று விழிகாட்டினாள் சைரந்திரி.
வெளியே செல்லும்போது சுபாஷிணி “அரசரிடம் இளவரசரை எப்படியாவது தவிர்த்துவிடச் சொல்லுங்கள், தேவி” என்றாள். “ஏன்?” என்றாள் சைரந்திரி. “அவர் அழுவதைக் காணும்போது உளம் நெகிழ்கிறது” என்றாள் சுபாஷிணி. சைரந்திரி புன்னகையுடன் “பார்ப்போம்” என்றாள்.