எவருக்காக விளக்குகிறோம்?

trivandrum

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு

உங்களின் பழைய பதிவுகளில் உள்ளே உள்ளே என்று போய்க்கொண்டிருந்தபோது, அனந்த பத்மனாப சுவாமி கோவிலின் வைப்பு நிதியைப் பொதுவாக உபயோகப்படுத்துவது பற்றிய சற்றும் ஆதாரமற்று ஒருதலைப்பட்சமாக குறையும் மெலிதான வசவும் சேர்ந்த ஒரு கடிதத்திற்கு தங்களின் விளக்கமான பதிலைப் படித்தேன் (2011). நீங்கள் அதை எளிதாகக் கடந்து சென்றிருக்கலாம். ஆனால் மீண்டும் ஆதார பூர்வமான தகவல்களுடன் அதை விளக்கி நிறுவியிருக்கிறீர்கள். சமீபத்தில் கூட காட்டமான ஒரு கேள்விக்கு அப்படி ஒரு நீண்ட பதிலைப் படித்தேன்.

இவர்களுக்கு (ஒப்புக்கொள்ள சாத்தியமற்று இருந்தாலும்) பதிலாக மீண்டும் மீண்டும் ஆணித்தரமாக ஆதாரங்களை நிறுவுவதன் மூலம் தங்களின் முதல் பதிவை விட உறுதியாக வெளிப்படுகிறது இரண்டாம் பதிவு. இந்த ஒரு பயனைத்தவிர இப்படி “வயர் இழுத்து விளக்குப்போடும் குஞ்ஞுண்ணிகளுக்கு பதில் சொல்லுவது தேவையா? இந்தமாதிரி மனநிலையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? இத்தகைய கேள்விகள் உங்களை பதில் எழுதும் நேரத்திற்காவது சஞ்சலத்திற்கு உள்ளாக்காமல் இருக்கிறதா? ஒருவித சலிப்புக்கு ஆட்படுத்தவில்லையா? அத்தகைய நிலை உங்களின் பேரிலக்கிய வடிவங்களுக்குத் தேவையான மன எழுச்சியை பாதிக்காதா? தடங்கலற்ற ஒரு கொந்தளிப்பான மனோநிலையில் மட்டுமே நீங்கள் எழுதுவது சாத்தியம் என்று நினைக்கிறேன். உங்கள் எழுத்தின் ஆழம் அவ்வாறு என்னை நினக்க்கத்தூண்டுகிறது. எளிமையாகக்கூட உங்களுக்கு அந்த தவநிலை கைகூடலாம். ( என் நண்பர்களிடம் நீங்கள் எழுதுவதை ராஜாவின் இசை அமைக்கும் திறனோடு ஒப்பிட்டுச் சொல்வேன்)

நீங்கள் அடிக்கடி எழுதுவது போல், கீழ்மையிலேயே உழன்று சேற்றை வாரி இறைப்பதிலேயே இன்பம் காணும் வேடிக்கை மனிதர்கள் நிறைந்த உலகமாகிவிட்டது போல் தோன்றுகிறது. இப்படிப்பட்ட மனிதர்களை தினசரி வாழ்வில் அடையாளம்காண உங்கள் எழுத்து பெருமளவு எனக்கு உதவியது. ஆனால் கடந்து செல்வது அவ்வளவு எளிதானதாக எனக்கு அமையவில்லை. உங்கள் கருத்துகளை அறிய ஆவல்.

இறை உங்களுக்கு நலத்தை அருளட்டும்
அன்புடன்
சந்திரசேகரன்

அன்புள்ள சந்திரசேகர்

என்னைப் பொறுத்தவரை கேள்விகளுக்குப் பதில் சொல்வதென்பது எனக்கே பதில் சொல்வதே. நானே தெளிவுகொண்டு அதைத் தெளிவாகவும் சொன்னபின் மேற்கொண்டு பேசுவதில்லை.

இந்தவிவாதங்களைப் பார்த்தால் தெரியும், எந்தத் தகவலும், எந்த வாதமும் எவரையும் மாற்றுவதில்லை. ஆகவே இவை அவர்களை மாற்றுவதற்காகச் சொல்லப்படுவதுமில்லை. இத்தரப்பு இங்கே இருக்கவேண்டும். கருத்துக்களின் முரணியக்கத்தில் இதுவும் செயல்படவேண்டும். அவ்வளவுதான் நோக்கமே

பெரும்பாலான விவாதங்களில் தன்னை ஒருவகையாகக் காட்டிக்கொள்ளும்பொருட்டே கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. விரிவான தர்க்கபூர்வமான கட்டுரைகளுக்குக் கீழே அந்தக்கட்டுரையை எவ்வகையிலும் வாசிக்காத, கருத்தில்கொள்ளாத எதிர்வினைகளையே நாம் காண்கிறோம்.

ஆகவே நாம் விவாதிப்பது இவர்களுக்காக அல்ல. இரு தரப்பையும் வாசிக்கும், வெளியே குரல் தெரியாத, வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக. அவர்கள் உண்மையில் இருக்கிறார்களா? இருக்கிறார்கள், அவர்களில் ஒருவரையேனும் நேரில் சந்திக்காமல் ஒருவாரம் கடந்துசெல்வதில்லை. ஒவ்வொருநாளும் அவர்களில் இருவராவது கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் எழுதுவதற்கான நம்பிக்கை

ஜெ

***

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு
கனவில் படுத்திருப்பவன்
கோயில்நிலங்கள்
அனந்தபத்மநாபனின் இன்னொரு செல்வம்
பத்மநாபனின் நிதியும் பொற்காலமும்
அனந்தபத்மநாபனின் களஞ்சியம்
முந்தைய கட்டுரைஇல்லக்கணவர் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைசுரேஷ் பிரதீப்பின் ஒளிர்நிழல்