ஏழாம் உலகம் கடிதங்கள்

Ezham-Ulagam-Wrapper---final

 

” நாவல் வாசிப்பது என்பது நிகர்வாழ்க்கைக்கு சமானமானது” இந்த வரிகள் இடையறாது நெஞ்சில் குமிழியிட்டபடி இருக்கிறது.ஏழாம் உலகம் இப்போதுதான் படித்து முடித்திருக்கிறேன்.போத்திவேலு பண்டாரத்துக்கும் ஏக்கியம்மைக்கும் இடையே நடக்கும் சம்பாஷணை முத்தம்மையின் பிரசவம் பற்றியது என அறியப்படும் கணம் நெஞ்சை விம்ம செய்கிறது.அங்க அவயங்கள் குறைபட்ட குழந்தைகள் பிறப்பெடுக்கும் முறைமை தொரப்பன்,குய்யன் உரையாடல் மூலம் நுட்பமாக தெரியபடுத்தப்பட்டுள்ளது. எந்த குற்ற உணர்ச்சியுமற்று அங்கஹுனர்களை ‘உருப்படிகள்’ என்று அழைப்பவர்களின் இழிநிலையை அந்த வார்த்தையே படம் பிடித்து காட்டுகிறது.பண்டாரம் லாட்ஜில் போகம் முடிந்து தூங்கி எழும் போது சின்னவள் நினைவில் வருவதும்,பின்னாளில் அவள் விலைமாதுவின் வீட்டுக்கு காதல் திருமணம் செய்து கொண்டு போவதும் ஒத்திசைவாக அமைந்து விடுகிறது.

 
இந்த நாவலில் வரும் எவருமே நல்லவன்,கெட்டவன் என்ற இருமைக்குள் அடைபடுவதில்லை.வாழ்க்கை என்னும் சுழல் விளக்கு இருளையும் ,ஒளியையும் மாறி மாறி பாய்ச்சி அலைகழித்தபடியே இருக்கிறது.பெருமாள் தாலி கட்டியவுடன் அவனுடன்வாழ துடிக்கும் எருக்கின் எத்தனிப்பும் , பின் சிண்டன் நாயரிடம் அவள் கொள்ளும் இணக்கமும் அவளை பற்றிய அவதானிப்புகளை சுக்குநூறாக்குகிறது.மாங்காண்டி சாமி மீண்டும் போத்தி பண்டாரத்திடம் வந்ததும் பாட ஆரம்பிக்கும் போது நாவல் உச்சகணத்தை தொட்டு முடிவடையும் போது நம்முள் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது ஏழாம் உலகத்தின் குரல்.
அன்புடன் ,
ஜானகிராமன்,வேதாரண்யம்

அன்புள்ள ஜெ

ஏழாம் உலகம் நாவலை இப்போதுதான் வாசித்தேன். நான் வாசிக்கும் முதல் நாவல் இது. அதிர்ச்சியும் அருவருப்பும் அறச்சீற்றமும் அடையச்செய்யும் பகுதிகள் கொண்ட நாவல் என்ருதான் முதலில் தோன்றியது. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் உள்ள நுட்பங்கள்தான் அதை நல்ல நாவலாக ஆக்குகிறது என்பது பின்னர்தான் புரிந்தது.

உதாரணமாக பிச்சைக்காரர் ‘இருபதுகோடி ரூபாய்’ என்று ஏகத்தாளமாகச் சொல்கிறான். ஆனால் யோசித்துப்பார்த்தால் அவருக்கு அந்தப்பணம் ஒரு பயனும் இல்லாதது என தெரிகிறது. கடைசிப்பைசாவைக்கூட அவர் குய்யனுக்கு கொடுத்துவிடுகிறார். அவரால்தான் பணத்தை அப்படி அலட்சியமாகச் சொல்லமுடியும்

அதேபோல குய்யன் நிரபராதி என்பது ஆரம்பத்தில் வேடிக்கையாக இருந்தது. அதன்பிறகு அது எவ்வளவுபெரிய ஸ்டேட்மெண்ட் என்று தெரிந்தது. பல நுட்பமான அடுக்குகள் கொண்ட நாவல் இது

செல்வராஜ் மாரியப்பன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81
அடுத்த கட்டுரைநத்தையின் பாதை -கடிதங்கள்