அன்புள்ள ஜெ
செங்கல்பட்டு பாரதியார் மன்ற போஸ்டரில் ‘இலக்கிய இமயம்’ என்று எழுதியிருந்தது. அதை குறைந்தபட்சம் கவனிக்கவாவது செய்தீர்களா ??
அல்லது இதெல்லாம் ஏற்கனவே வழங்கப்பட்டு ஏற்கப்பட்டுவிட்டதா? எப்படி இருந்தாலும் சரி, வாழ்த்துக்கள் !!
மதுசூதனன் சம்பத்.
அன்புள்ள மது,
அதைப்பற்றி நண்பர்களிடம் கேட்டேன். ‘இனிமே இப்டித்தான்’ என்று சொல்லிவிட்டார்கள். இனிமேல் எழுத்தாளர் இமையத்தை என்னவென்று சொல்வீர்கள் என்று கொஞ்சம் குழப்பமாகக் கேட்டேன். இலக்கிய ஜெயமோகன் என்று சொல்வதாக எழுதிக்கொடுத்துவிட்டோம் என்றார்கள்.
நல்ல கூட்டம். ராஜகோபாலன் சொன்னபின்னர்தான் அதற்கான காரணம் விளங்கியது. நான் ஆவிக்குரிய எழுப்புதல்கூட்டத்தின் தேவசெய்தியாளர் போஸில் இருக்கிறேன். எனக்கே மேடையில் எழுந்து நின்றபோது ‘அக்கினி அக்கினி அக்கினி அக்கினி “ என்று பல்லைக்கடித்தபடி உறுமவேண்டும் போல இருந்தது
ஜெ
***
அன்புள்ள ஜெ மோ,
வாயுறை என்றால் என்ன? தெரியாமல் கேட்கிறேன்
ஆனந்த்
***
ஆனந்த்
அக்கால பண்டிதர்கள் வாயில் வெற்றிலை போட்டுக்கொண்டுதான் இலக்கியவிவாதம் செய்வார்கள். வாயூறுதல் சகஜம், அதிலிருந்து வந்த சொல்லாக இருக்கலாம்.
யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை என்று திருமூலர் சொல்கிறார். இதிலிருந்து இலக்கியத்தை அசைபோடுவதுதான் வாயுறை என்றும் அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்
- உண்கை
- உணவு
- அறுகம்புல்
- அன்னப்பிராசனம்
- கவளம்
- மருந்து
- உறுதிமொழி
- மகளிர் காதணி .
என்று வையாபுரிப்பிள்ளை அகராதி எட்டு பொருள் அளிக்கிறது. இதில் எட்டாவதுபொருளில்கூட எடுத்துக்கொள்ளலாம். முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருப்பதனால். நண்பர் யோகேஸ்வரன் ஐந்தாவதுபொருள் என்றார். அம்மாம்பெரிய ஆனைக்கவளம். குருஜி சௌந்தர் ஆறுதான் பொருத்தம் என்றார். பேதிமருந்து.
இடித்துரைப்பது, அறிவுரைகூறுவது வாயுறை வாழ்த்து என்பது தமிழிலக்கணம். தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம் என ஐந்துநூல்களை ஐந்திலக்கணம் என்று பிற்கால தமிழாசிரியர் சொல்வதுண்டு. முத்துவீர கவிராயரின் முத்துவீரியம் என்னும் இலக்கணநூல் வாயுறைவாழ்த்து என்பதை இப்படி சொல்கிறது.
கடுவும் வேம்பும் கடுப்பன ஆகிய
வெஞ்சொல் தாங்க மேவாது ஆயினும்
பின்னர்ப் பெரிதும் பயன்தரும் என்ன
மெய்ப்பொருள் அறம் அருட் பாவால் விளம்புதல்
வாயுறை வாழ்த்தென வைக்கப் படுமே.
வேம்பு, கடுக்காய் போல கசப்பும் துவர்ப்பும் கொண்ட கடுஞ்சொற்கள் கொண்டு தாங்கமுடியாததாக இருந்தாலும் பின்னர் அவை மருத்துவ நன்மையை அளித்து பயன் தருவதுபோல மெய்ப்பொருளாகிய அறத்தை அருட்பாவால் முன்வைத்தலை வாயுறை வாழ்த்து என்கிறார்கள் முன்னோர்
சரிதானே? அதாவது கடுக்காய் கொடுத்தல். அதைத்தானே குருஜி சௌந்தர் சொன்னார்?
ஜெ
***