இன்று [8 -8-2017] ஓர் அழைப்பு. ”நான் சுகதகுமாரி பேசுகிறேன், என்னைத் தெரியுமா?” ஒருகணம் பரவசம் அடைந்தேன். ”உங்களைத்தெரியாதவர்கள் உண்டா? உங்கள் கவிதைகளை வாசித்திருக்கிறேன். மொழியாக்கம் செய்திருக்கிறேன். அரங்குகளில் தொலைவில் இருந்து பார்த்திருக்கிறேன்” என்றேன்
என்னுடைய ஆதர்சங்களில் ஒருவர். மலையாளம் அறிந்தவர்கள் அனைவரும் அறிந்திருக்கும் மிகச்சில இலக்கியவாதிகளில் ஒருவர். எம்.டி.வாசுதேவன் நாயர், ஓ.என்.வி.குறுப்பு போன்றவர்களுக்கு சினிமாப் புகழ் இருந்தது. பால் சகரியா வுக்கு அரசியல்புகழ் உண்டு. சுகதகுமாரி இரு வட்டங்களையும் முழுமையாகவே தவிர்த்துவிட்டவர்
சுகதகுமாரி கவிஞர். கூடவே களப்போராளி. அவரது தந்தையும் சுதந்திரப்போராட்ட வீரருமான கவிஞர் போதேஸ்வரனில் இருந்து பெற்றுக்கொண்ட அனல் அது. பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டிருந்த அவரை 1982ல் சைலண்ட் வேலியை காப்பதற்காக நடந்த சூழியல் போராட்டம் மையத்துக்கு கொண்டுவந்தது
அதன்பின் கேரளத்துச் சூழியலுணர்வின் அடையாளமாகவே சுகதகுமாரி கருதப்பட்டார். பல களங்கள். அரசும் எதிர்க்கட்சியும் இணைந்து அவரை வசைபாடியதுண்டு. ஊடகங்கள் புறக்கணித்தது உண்டு. ஆனால் அவருக்கு எப்போதும் தன் திசை பற்றியும் தன் நேர்மை பற்றியும் ஆழமான நம்பிக்கை இருந்தது
சுகதகுமாரியின் போராட்டங்களில் மனித உரிமைகள் இணையான முக்கியத்துவம் கொண்டவை. பெண்களின் உரிமைக்கான பல போராட்டங்களை ஒருங்கிணைத்திருக்கிறார். கேரளத்தின் மனநோய் காப்பகங்களின் குரூரமான நடத்தைளுக்கு எதிராக அவர் முன்னெடுத்த போராட்டமே மனநோயாளிகளுக்கான மானுட உரிமைகளைப்பற்றிய சட்டங்களுக்கும் நெறிகளுக்கும் வழிவகுத்தது
ஆதரவற்ற பெண்களுக்கான அபய என்னும் அமைப்பையும் அத்தாணி என்ற அமைப்பையும் சுகதகுமாரி உருவாக்கினார். கேரள வனிதா கமிஷனின் தலைவராக செயலாற்றியிருக்கிறார்.
களமிறங்கிய பெரும்பாலான போராட்டங்களில் வெற்றியைத்தான் அவர் சந்தித்திருக்கிறார். அதற்குக் காரணம் அவருடைய காந்திய அணுகுமுறை. எடுத்துக்கொண்ட இலக்கை திசைமாற்றவோ குழப்பவோ அவர் எவரையும் அனுமதித்ததில்லை. சாத்தியமான அனைத்து ஆதரவையும் திரட்டுவார். இலக்கு அடையப்படும்வரை தொடர்ச்சியாகப் போராடுவார். அதற்கு ஊடகங்களைப் பயன்படுத்திக்கொள்வார். எதிர்மறையான உணர்ச்சிகளையோ பொறுப்பற்ற சீண்டல்களையோ செய்வதில்லை. தன்னை முன்னிறுத்திக் கொள்வதுமில்லை
சுகதகுமாரியின் கவிதைகளும் அவருடைய இயல்புகொண்டவையே. மலையாள விமர்சகர் ஒருவர் சுட்டியதுபோல அவை ‘அன்னையின் சீற்றம்’ என வரையறுக்கத்தக்கவை. மென்மையான உறுதியான குரலில் பேசுபவை. உணர்ச்சிகரமானவை. கூரிய படிமங்களும் இசைத்தன்மையும் உடையவை. அவர் மேடைகளில் தன் கவிதைகளை வாசிக்கையில் பல்லாயிரம்பேர் அவற்றைக் கேட்க வந்துகொண்டிருந்தனர்
1936ல் திருவனந்தபுரத்தில் பிறந்த சுகதகுமாரி ஆசிரியையாகப் பணியாற்றியவர். இன்று முதுமையில் உடல்நலமில்லாமல் இருக்கிறார். முதியகுரலில் “நீ எழுதிய எல்லாவற்றையும் வாசித்திருக்கிறேன். உறவிடங்கள் தொகுதியைத்தான் முதலில் வாசித்தேன். சற்றுமுன் யானைடாக்டர் வாசித்தேன். என் வாழ்த்துக்களைச் சொல்லவேண்டும் என்று தோன்றியது” என்றார்
“நன்றி. இந்நாளில் எனக்கு இது ஒரு பெரிய ஆசி” என்றேன். “நன்றாக இரு. நிறைய எழுதுகிறாய் என்றார்கள். வெண்முரசு எப்போதாவது மலையாளத்தில் வந்தால் வாசிக்கலாம் என நினைப்பதுண்டு. நான் அப்போது இருந்தால்…” என்றார். என் மனைவி குழந்தைகளைப்பற்றி விசாரித்தார்
அவர் பேசிமுடித்தபின் நெடுநேரம் ஆழ்ந்த மனநிறைவுடன் அமர்ந்திருந்தேன். ஏனென்றால் மாமலர் நூலுருவாக்கம் நிகழ்கிறது. அதன் முன்னுரையை நேற்றுத்தான் எழுதியிருந்தேன். அன்னையரின் கதையாகிய அதை சுகதகுமாரிக்குத்தான் சமர்ப்பணம் செய்திருந்தேன். அதை அவரிடம் சொல்லவில்லை. அதைச் சொல்வதும் பெரிதல்ல என்று தோன்றியது. அவர் அதையெல்லாம் எப்போதோ கடந்திருப்பார்