‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81

80. உள்ளொலிகள்

flowerஉத்தரை அவ்வேளையில் அங்கு வருவாள் என்று முக்தன் எதிர்பார்க்கவில்லை. பிருகந்நளையின் குடில் வாயிலில் மரநிழலில் இடைக்குக் குறுக்காக வேலை வைத்துக்கொண்டு கையை தலைக்குமேல் கட்டி வானை நோக்கியபடி விழியுளம் மயங்கிக்கொண்டிருந்தான். அவள் வரும் ஓசையைக் கேட்டு இயல்பாக தலை திருப்பி நோக்கியவன் இளவரசி என அடையாளம் கண்டதும் திடுக்கிட்டு எழுந்து நின்றான். வேல் அவன் உடலிலிருந்து உருண்டு கீழே விழுந்தது.

உத்தரை அருகே வந்து “ஆசிரியர் உள்ளே இருக்கிறாரா?” என்றாள். “ஆம், இளவரசி. ஓய்வெடுக்கிறார்” என்று முக்தன் சொன்னான். குனிந்து வேலை எடுக்க வேண்டுமா என்ற எண்ணம் வந்து அதைத் தவிர்த்து அக்குழப்பம் உடலில் ஒரு சிறு தத்தளிப்பாக வெளிப்பட “ஓய்வெடுக்கையில் அவர் எவரையும் பார்க்க ஒப்புவதில்லை” என்றான். “நான் வந்திருப்பதாக சென்று சொல்லுங்கள்” என்று சொன்னாள் உத்தரை. “அவர் பொதுவாக…” என்று முக்தன் சொல்லத்தொடங்கவும் கைகாட்டி “செல்க!” என்று கூர்கொண்ட விழிகளுடன் அவள் சொன்னாள்.

அவன் பணிந்து “இதோ” என்று குடிலின் படிகளில் ஏறி மூடியிருந்த மரக்கதவை மும்முறை தட்டி “ஆசிரியரே!” என்று அழைத்தான். இரண்டு முறை அழைத்த பின்னர்தான் உள்ளே ஒலி கேட்டது. “யார்?” என்று பிருகந்நளை கேட்டாள். “இளவரசி தங்களை பார்க்கும்பொருட்டு வந்திருக்கிறார்” என்றான். எப்போதுமே பிருகந்நளை கதவைத் திறக்க நெடுநேரம் எடுத்துக்கொள்வதுண்டு. அப்போது மறுமொழிக்கே அவன் காத்து நிற்கவேண்டியிருந்தது. “நான் ஆடை மாற்றிக்கொள்கிறேன். அதன் பிறகு உள்ளே அனுப்புக” என்றாள். “ஆணை” என்று தலைவணங்கியபின் வெளிவந்து “ஆடை மாற்றிக்கொள்கிறார். சற்று பொறுங்கள்” என்று முக்தன் சொன்னான்.

அவள் சற்று அப்பால் மரநிழலில் மார்பில் கைகளைக் கட்டியபடி நின்றாள். அவள் முகத்தை ஓரவிழியால் பார்த்தபோது அதில் கவலையும் பதற்றமும் தெரிவதைக் கண்டான். அவள் எதையோ முறையிடும்பொருட்டு வந்திருக்கிறாள் என்று தோன்றியது. அது என்னவாக இருக்கும் என்று எண்ணினான். வெறும் காவலனாக அவன் அதை எண்ணக்கூடாது என்பதே படைப் பயிற்றுவிப்பில் அவன் கற்றது. ஆனால் எண்ணாமலிருக்கவும் கூடவில்லை. ஏனெனில் அவள் அவனுக்கு இளவரசியல்ல. பிறிதொருத்தி. அவ்வெண்ணம் அவனை திடுக்கிடச் செய்தது.

அவளுக்கும் தனக்குமான உறவு எத்தகையது என்று அவனால் கணிக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அவள் பிருகந்நளையிடம் நடனம் கற்றுக்கொள்கையில் கூடத்திற்கு வெளியே அவன் காவல் நின்றிருப்பான். அவனைக் கடந்துதான் அவள் நடனக்கூடத்திற்கு செல்வாள். தொலைவிலேயே அவனை அவள் பார்த்துவிடுவாள் என்று அவனுக்குத் தெரியும். அவனைக் கண்ட முதற்கணமே அவள் உடல் மாறுபடும். மிடுக்குடன் தலைதூக்கி கைகளை சற்று மிகையாகவே வீசி இடையை நெளித்து நடந்து வருவாள். குரல் மிகுந்து ஒலிக்கும்.

பெரும்பாலும் அவ்வாறு மிகையொலி கொண்ட குரல் கேட்டுதான் அவன் அவளை பார்ப்பான். அருகணைந்ததும் தலைவணங்கி முகமன் உரைப்பான். ஒருமுறைகூட அவள் அவனை நோக்கி திரும்பியதோ அவன் உரைக்கும் முகமனுக்கு மறுமொழி சொன்னதோ எதிர்வினை காட்டியதோ இல்லை. ஓரிரு நாட்களுக்குள் அவன் புரிந்துகொண்டான், அவள் தன்னை வேண்டுமென்றே தவிர்க்கிறாள் என்று. அது இளவரசி எளிய காவலன்மேல் கொண்டுள்ள புறக்கணிப்பு அல்ல என்று அவனுக்குத் தெரிந்திருந்தது.

அதை நோக்கி செல்வதைத் தவிர்த்து மேலும் பணிவு கொண்டவனாக தன்னை காட்டிக்கொண்டான். அவளைக் காணும்போதெல்லாம் பதற்றத்துடன் எழுந்து இடைவரை வணங்கி உரத்த குரலில் முகமன் உரைத்தான். சில தருணங்களில் அது அவளுடன் வந்த தோழியருக்கு நகைப்பூட்டுவதாகவும் இருந்தது. அவள் உள்ளே சென்று பிருகந்நளையிடம் பேசும்போது மட்டும் குரல் மிகத் தாழ்ந்து ஒரு சொல்லும் புரியாதபடி மாறும். அத்தனை சிலம்பல்களில் அவள் கால் சதங்கையை மட்டும் அவன் தனித்தறிவான். அவ்வோசையிலிருந்தே உள்ளே அவள் என்ன செய்கிறாள் என்பதை அவனால் பார்க்க முடியும்.

நெடுநேரம் சலங்கையொலி கேட்காதிருக்கையில் அந்த ஒலியின்மையை ஒவ்வொரு கணமாக கேட்டபடி செவிகளே உடலாக அவன் அமர்ந்திருப்பான். பின்னர் உரக்க நகைத்தபடி கைவளைகளும் சதங்கைகளும் குலுங்க அவள் வெளியே செல்வாள். அவன் தலைவணங்குவதை கிளையசைவோ நிழலாட்டமோ என கடந்துசென்று இடைநாழியின் முனையில் வண்ணம் கரைந்தழிவதுபோல் மறைவாள். அதன் பின் அவன் நிமிர்கையில் எரிச்சலும் கசப்பும் உருவாகும்.

பிருகந்நளைக்கும் உத்தரைக்குமான உறவைப்பற்றி அவள் சேடியர் என்ன சொல்லிக்கொள்கிறார்களென்று உதிரிச் சொற்களினூடாகவே அவன் அறிந்திருந்தான். “மெல்ல இளவரசி ஆணாக வேண்டியதுதான். இருவரும் ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்துக்கொள்ள முடியும்” என்றொருத்தி சொன்னாள். பிறர் சிரிக்க அவன் விழிகளை விலக்கி உடலை இறுக்கிக்கொண்டு நின்றான். அவர்கள் தாழ்ந்த குரலில் தங்களுக்குள் பேசி கிளுகிளுத்துச் சிரித்தனர். ஒருத்தி மேலும் தாழ்ந்த குரலில் ஏதோ சொல்ல அனைவரும் பேரொலியுடன் வெடித்துச் சிரித்து கண்ணீர் மல்க உடல் துவண்டனர். இருவர் எழுந்து வயிற்றைப் பற்றியபடி அப்பால் ஓடினர். அங்கு நின்றிருக்க முடியாமல் அவன் மெல்ல விலகிக்கொண்டான்.

கதவு திறந்து பிருகந்நளை வெளியே வந்து “வருக, இளவரசி!” என்றாள். இளவரசி அவளை நோக்கி சென்று “தங்களை தனியாக சந்திப்பதற்காக வந்தேன், ஆசிரியரே” என்றாள். பிருகந்நளை சுற்றும் நோக்க “சேடியருக்குத் தெரியாது” என்றாள் உத்தரை. “வருக!” என்று உத்தரையை பிருகந்நளை உள்ளே அழைத்துச் சென்றாள். முக்தனிடம் “இளவரசி அருந்துவதற்கு குளிர்நீர்” என்றாள். “வேண்டியதில்லை” என்று உத்தரை சொன்னாள். “என் குடிலுக்கு முதல் முறையாக வந்திருக்கிறீர்கள்” என்றாள். “வருக!”

இருவரும் உள்ளே சென்று அமர்வதை திறந்த வாயிலினூடாக முக்தன் பார்த்தான். பிருகந்நளை சுவரோரமாக மரத்தாலான மணையில் ஒரு காலை கிடைமடித்து இன்னொரு காலை நிலைமடித்து அதன் மேல் கைகளை வைத்துக்கொண்டு அமர்ந்தாள். அவளுக்கெதிராக இரு கால் மடித்து அமர்ந்து மடியில் கைகளை வைத்துக்கொண்டு தாழ்ந்த குரலில் பேசத்தொடங்கினாள் உத்தரை. முகமனோ தயக்கமோ இல்லை. அவள் அச்சொற்களை நீரை கைகளில் அள்ளிக்கொண்டுவருவதுபோல கொணர்ந்திருக்கவேண்டும்.

பிருகந்நளைக்கு உணவு சமைக்கும் சிறுகுடில் அதே சோலையில் சற்று அப்பால் இருந்தது. அங்கு சென்று குளிர்நீரும் பாக்கும் ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு முக்தன் திரும்பி வந்தான். அவற்றை அவர்கள் இருவருக்கும் நடுவே வைத்தான். அதுவரை பேசிக்கொண்டிருந்த உத்தரை இறுதியாகச் சொன்ன சொல் கண்களிலும் முகத்திலும் உறைந்து நின்றிருக்க அவனை பார்த்தாள். அவள் கண்கள் சற்று கலங்கியிருப்பதுபோல முக்தனுக்குத் தோன்றியது. பிருகந்நளையின் முகத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை.

தலைவணங்கி அவன் வாயிலை நோக்கி செல்ல பிருகந்நளை “இளவரசியின் மணத்தன்னேற்புக்கு நாள் குறிக்கப்போவதாக கேள்விப்பட்டேன்” என்றாள். முக்தன் அவர்கள் இருவர் முகத்தையும் மாறி மாறி நோக்கியபின் “ஆம், அது நகரில் அனைவரும் அறிந்ததே” என்றான். “இளவேனில் தொடக்கத்தில் அல்லவா?” என்றாள் பிருகந்நளை. “ஆம், ஆசிரியரே” என்றான் முக்தன். அதை ஏன் அவர்கள் தன்னிடம் சொல்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை. எதன்பொருட்டு தன்னை உள்ளிழுக்க முயல்கிறார்கள்?

“மணத்தன்னேற்பு நன்று. அது எவ்வகையிலோ அவ்விளவரசியை முதன்மைப்படுத்துகிறது. அவளை பாரதவர்ஷம் திரும்பி நோக்குகிறது. பேரரசியென்று அவள் கொழுநன் நகர்புகுவாள். அரியணை சிறக்கவும் புகழ் நிலைக்கவும் மணத்தன்னேற்பு ஒரு நல்ல தொடக்கம். பாரதவர்ஷத்தில் அத்தனை பேரரசியரும் மணத்தன்னேற்பினூடாகவே அறியப்பட்டார்கள். தமயந்தியும்கூட” என்றாள் பிருகந்நளை. “ஆம், ஆசிரியரே” என்று முக்தன் சொன்னான். அப்போதும் அவ்வுரையாடல் எதற்காக என்று அவனுக்கு புரியவில்லை. உத்தரை எதுவுமே சொல்லவில்லை.

முக்தன் அங்கு நின்றிருப்பதா விலகிச் செல்வதா என்று அறியாமல் உடல் திகைத்தான். பிருகந்நளை “எப்படியென்றாலும் பெண் தன்னை உடலென முன்வைத்தே ஆகவேண்டும். அவள் உடல் அதன்பொருட்டே மலர்வு கொண்டுள்ளது. வெறும் உடலாக முன்வைப்பதுதான் பிற குடிகளின் வழக்கம். கொடியும் முடியும் அகம்படியுமாக அவற்றைச் சூடிய ஆணவமுமாக தன்னை முன்வைப்பதென்பது ஓர் அருங்கொடை” என்றாள் பிருகந்நளை.

எதிர்பாராதபடி உத்தரை உரத்த குரலில் அவனிடம் “இங்கென்ன செய்கிறாய்? வெளியே போ!” என்றாள். அந்தக் கடுங்குரல் அவனை திகைக்க வைத்தது. “பொறுத்தருள்க, இளவரசி” என்று அவன் சொன்னான். “வெளியே போ” என்று அவள் கைநீட்டி மூச்சிரைக்க கூவினாள். “இதோ” என்று அவன் தலைவணங்கி புறங்காட்டாது வெளியே சென்றான். “கதவை மூடு!” என்று அவள் ஆணையிட்டாள். அவன் கதவை மூடிவிட்டு வெளியே நின்று கொண்டான்.

உள்ளே அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை செவி கொடுத்து உளம் ஏற்றக்கூடாது என்று முடிவெடுத்தான். மரத்தடியில் நின்றபோது மெல்லிய குரல் கேட்டது. அழுகையோ மன்றாட்டோ என உத்தரை பேசிக்கொண்டிருந்தாள். அவன் மேலும் நடந்து மகிழ மரத்தடியில் சென்று நின்றான். அங்கு முற்றிலும் குரல் கேட்கவில்லை. ஆயினும் கேளாக் குரலை உள்ளம் நடித்துக்கொண்டிருந்தது. கண் மூடினாலும் எஞ்சும் விழித்தோற்றம்போல. அவன் தன் வேலை மடியில் வைத்து மகிழ மரத்தடியில் அமர்ந்தான். அங்கு வெயில் அவன் கால்களில் விழுந்து வெம்மை காட்டியது.

எண்ணியிராதபடி குடிலுக்குள் உரத்த குரலில் உத்தரை “இறப்பதொன்றே வழி” என்று கூவுவதை கேட்டான். மீண்டும் தாழ்ந்த குரலில் அவர்கள் பேசிக்கொள்ள உத்தரை மீண்டும் உரத்த குரலில் “நான் இறந்தேன் என்றால் என்ன செய்வீர்கள்? நான் கேட்பது அதுதான். என் இறப்பை ஒரு பொருட்டாகக் கருதுவீர்களா?” என்றாள். முக்தன் மூடிய கதவையே பார்த்துக்கொண்டு நின்றான். அந்தக் கதவு அழுகையை அடக்க முயலும் இதழ்போல விம்முவதாகத் தோன்றியது. நீர் நிறைந்த ஏரியின் மதகுபோல உள்ளிருந்து அழுத்தம் அதை முட்டியது.

அவன் ஒவ்வொரு கணமாக கடந்து சென்றான். தன் உடலில் அனைத்து தசைகளும் இறுகி நின்றிருப்பதை உணர்ந்தான். பின்னர் கதவு வெடிப்போசையுடன் திறந்து சுவரில் அறைந்தது. உத்தரை வெளியே வந்து படிகளில் இறங்கி ஓடி அவனை நோக்கி வந்தாள். அவன் தலைவணங்குவதை நோக்காமல் அவனைக் கடந்து அரண்மனையை நோக்கி ஓடினாள்.

பிருகந்நளை குடிலிலிருந்து வெளியே வந்து மரப்படிகளில் கைகளைக் கட்டியபடி நின்றாள். இளங்காற்றில் அவள் ஆடை தழலென உலைந்தாடிக் கொண்டிருந்தது. முக்தன் பிருகந்நளையை நோக்கி சென்று தலைவணங்கி நின்றான். அவனை சில கணங்கள் கூர்ந்து நோக்கியபின் “அரண்மனைக்கு செல்க! இளவரசியின் தோழியரிடம் அவள் எங்கும் தனியாகச் செல்லவேண்டியதில்லை என்று நான் ஆணையிட்டதாகக் கூறுக!” என்றாள். முக்தன் “ஆணை” என்று தலைவணங்கினான். “நீரும் இங்கிருக்க வேண்டியதில்லை. இளவரசி மாளிகைக்கு அருகிலேயே இரும்” என்றாள். “ஆனால் என் பணி…” என்று அவன் சொல்ல “இதுவும் என் ஆணை என்று சொல்க!” என்றாள் பிருகந்நளை. தலைவணங்கி “அவ்வாறே” என்றான் முக்தன்.

flowerமுக்தன் உத்தரையின் அரண்மனை அகத்தளத்தின் புறவாயிலில் வேலுடன் நின்றிருந்தான். அங்கு முன்னரே நின்றிருந்த நான்கு காவல் வீரர்களும் அவன் யாரென்றே அறியாதவர்கள்போல் இருந்தனர். முதல் நாள் அங்கு அவன் வந்தபோது அவனை அங்கு நிற்க ஒப்பவில்லை. “இளவரசியுடன் நான் இருக்க வேண்டுமென்பது ஆசிரியரின் ஆணை” என்று அவன் சொன்னான். “எங்களுக்கு அரசகுலத்தாரன்றி பிறர் ஆணை பிறப்பிக்க முடியாது” என்றார்கள்.

அவர்களுடன் நிற்காமல் பெருந்தூண் அருகே பாதி உடல் மறைத்து நின்றிருந்தான். நீராட்டறைக்குச் செல்வதற்காக தோழியருடன் இளவரசி வந்தபோது அவன் தலைவணங்கி அவர்களுக்குப் பின்னால் சென்றான். அவள் நின்று திரும்பி அவனை நோக்கி புருவங்களை தூக்கினாள். “தங்களுடன் நானிருக்க வேண்டுமென்பது ஆசிரியரின் ஆணை, இளவரசி” என்றான். அவள் ஒன்றும் சொல்லாமல் திரும்பிக்கொண்டாள்.

அதையே ஆணை என்று எடுத்து அவன் அவளை தொடர்ந்து சென்றான். அவள் நீராட்டறைக்குள் சென்ற பின்னர் இடைநாழியில் வேலுடன் நின்றான். மீண்டும் அவளுடன் திரும்பி வருகையில் வாயிற்காவலர் அவனை நோக்கிய விழிகள் மாறியிருந்தன. இளவரசி உள்ளே சென்றபின் அவன் அவர்களிடம் “இளவரசியின் ஆணை வேண்டுமென்றால் அவர்களிடமே சொல்கிறேன்” என்றான். அவர்கள் ஒன்றும் சொல்லாமல் விழிகளை விலக்கிக்கொண்டனர். பின்னர் அவனிடம் ஒரு சொல்லும் உரையாடவில்லை.

பகல் முழுக்க அவன் அங்கேயே வேலுடன் நின்றிருந்தான். அந்தியில் முறை மாற்றம் நிகழ்ந்து புதிய வீரர்கள் வந்தனர். அவர்களிடம் பழைய வீரர்கள் தாழ்ந்த ஓரிரு சொற்களில் அவன் யாரென்று சொல்லிச் சென்றனர். சேடி ஒருத்தி அவனிடம் வந்து “நீங்கள் உணவருந்தி வரலாம், வீரரே” என்றாள். அவன் தயங்கி “இல்லை…” என்று சொல்லத்தொடங்க “இளவரசி தாங்கள் உணவருந்தினீர்களா என்று கேட்கச் சொன்னார்” என்றாள். “இல்லை, உணவருந்தி வருகிறேன்” என்று மடைப்பள்ளிக்கு சென்றான். உணவருந்தி முகம் கழுவி மீண்டும் வந்து அங்கு காவல் நின்றான். உத்தரையின் முகம் அவனுள் மாறிவிட்டிருந்தது.

அந்தி எழுந்தபோது இளவரசி ஆலய வழிபாட்டிற்குரிய வெண்பட்டாடை அணிந்து கையில் பூசைத் தாலத்துடன் தோழியர் சூழ வெளிவந்தாள். இடைவெளி விட்டு அவன் அவளைத் தொடர்ந்து சென்றான். துர்க்கை ஆலயத்திலும் ஏழு மூதன்னையர் ஆலயத்திலும் பூசனைகள் முடித்து இருளெழுந்த பின்னர் அவள் திரும்பி வந்தாள். மீண்டும் வெளிவந்து இடைநாழியில் நடந்தபோது மெல்லிய ஒற்றை ஆடை அணிந்திருந்தாள். கழுத்தில் ஒரு முத்தாரம் மட்டும் சுடர்ந்தது.

தண்ணுமையின் கூரொலி கேட்டது. அவள் கதை கேட்கச் செல்கிறாள் என புரிந்துகொண்டான். உத்தரை சிற்றம்பலத்திற்குள் நுழைந்து அங்கே முன்னரே வந்திருந்த பேரரசி சுதேஷ்ணையுடன் சேர்ந்து அமர்ந்தாள். சுதேஷ்ணையின் பின்னால் சைரந்திரி அமர்ந்திருப்பதை அவன் கண்டான். சற்று அப்பால் அரைவட்ட வடிவில் அகத்தளப் பெண்டிர் அமர்ந்திருந்தனர். முன்னரே கதை நிகழ்ந்துகொண்டிருந்தது. தண்ணுமையும் யாழும் சிறுமுழவுடன் இணைந்த இசை மெல்ல துள்ளிக்கொண்டிருந்தது.

முக்தன் கூத்தம்பலத்தின் வாயிலில் தன் நிழல் உள்ளே விழாதவாறு ஒதுங்கி வேலை சுவரில் சாய்த்து வைத்து கைகட்டி நின்றான். மரவுரி விரிக்கப்பட்ட மேடையில் கன்னங்கரிய உடலும் நீண்ட விழிகளும் கொண்ட விறலி குறுமுழவுடன் அமர்ந்திருந்தாள். அவள் விழிகளில் சிரிப்பு வெள்ளி தீற்றியதுபோல அழியாமல் இருந்தது. விரல்கள் துடிப்பதும் வாய் கதை சொல்வதும் அவற்றுக்குத் தெரியாதென்பதைப்போல.

அந்தக் கதை எதைப் பற்றியதென்பது வெகுநேரம் அவனுக்கு புரியவில்லை. விதர்ப்ப நாட்டின் முடியுரிமைக்கான பூசல் என்று மெதுவாக தெரிந்துகொண்டான். விதர்ப்ப அரசர் பீமகர் தன் இரு மைந்தர்களுகிடையேயான முடிப்பூசலில் மூத்தவனை ஆதரித்தார். அவரை இளையவன் சிறையிட அவர் தப்பி ஓடி மூத்தவனுடன் சேர்ந்துகொண்டார். அவரை தேடிப்பிடித்துக் கொல்வதற்காக இளையவன் பீமத்துவஜன் படைகளை அனுப்பினான். ஆனால் மூத்தவன் பீமபலன் தன் குடிகள் அனைவரிடமிருந்தும் முடியொப்புதலை பெற்றான். ஒவ்வொரு குடியிலிருந்தும் சிறிய படையை அவனுக்கு அனுப்பத் தொடங்கினர். மெல்ல அவனுடைய படை பெருகியது. எல்லைப்புறச் சிற்றூர்களை ஒவ்வொன்றாக அவன் பிடித்தான். காட்டெரி படர்ந்து வருவதுபோல இரு கைகளையும் விரித்து திசைகளைச் சூழ்ந்து குண்டினபுரியை நோக்கி வந்தான்.

அவன் எவ்வகையிலும் விரைவை காட்டவில்லை. ஏனெனில் குண்டினபுரியை ஆண்ட பீமத்துவஜன் தன் குடியின் படையுடன் அருகிருந்த சிறு நாடுகளிலிருந்து திரட்டிய படையையும் வைத்திருந்தான். குடிப்போர் நிகழ்ந்து விதர்ப்ப வீரர்கள் ஒருவரோடொருவர் மோதினால் விதர்ப்பமே ஆற்றல் குன்றி அழியும் என்று பீமகர் தன் மூத்த மைந்தனுக்கு அறிவுறுத்தினார். எனவே போர் நிகழாமலேயே ஊர்கள் ஒவ்வொன்றையாக கைப்பற்றி முழு நாட்டையும் தன் ஆட்சிக்குக்கீழ் கொண்டுவந்தபடி இருந்தான் பீமபலன். மூழ்கும் படகென குண்டினபுரியின் நேரடி ஆளுகைக்குக் கீழிருந்த பகுதிகள் சுருங்கி வந்தன. தான் வெல்வது உறுதி எனும் எண்ணத்தை தன் குடிகள் நடுவே உருவாக்குவதில் பீமபலன் வெற்றி பெற்றான். சிற்றூர்கள் அவனுடன் சென்று சேர சேர மேலும் சிற்றூர்கள் அவனுடன் சென்று சேர்வது விரைவு மிகுந்தது.

பின்னர் குண்டினபுரியும் அதைச் சூழ்ந்த நான்கு கோட்டைகளுமன்றி பிற நிலங்கள் அனைத்தும் பீமபலனிடம் சென்று சேர்ந்தன. குண்டினபுரியில் தன் படையுடன் சிறைப்பட்டவன் போலிருந்த பீமத்துவஜன் ஒவ்வொரு நாளும் பொறுமையிழந்தான். சினம் கொண்டு படைத்தலைவரிடமும் குலத்தலைவரிடமும் கூச்சலிட்டான். எளிய வீரர்களை தூக்கிலிட்டும் கழுவிலேற்றியும் வெறி தணித்தான். அவனைச் சூழ்ந்திருந்த ஒவ்வொருவரும் அவன் முன்னரே தோற்றுவிட்டான் என்று உணர்ந்தனர்.

தன் படைகள் அனைத்தையும் திரட்டி பீமபலனைத் தாக்கி வெல்லவேண்டுமென்று ஈராண்டுகளுக்கு மேலாக திட்டமிட்டுக்கொண்டிருந்தான் பீமத்துவஜன். ஆனால் படைகள் குண்டினபுரியைவிட்டுக் கிளம்பியதுமே குண்டினபுரியின் மக்கள் கிளர்ந்து நகரை கைப்பற்றிவிடக்கூடும் என்ற அச்சம் அவனைத் தடுத்தது. காலப்போக்கில் தன் ஆணைக்குக் கட்டுப்பட்டு தன் படைகள் எழுமா என்ற ஐயமே அவனுக்கு ஏற்பட்டது. ஆணை பிறப்பிக்கப்பட்டு அதை படைவீரர்கள் மறுத்துவிட்டால் அனைத்தும் அன்றே முடிந்துவிடும் என்பதனால் அந்த ஆணையை பிறப்பிக்காமலேயே காலம் கடத்தினான். ஆனால் போர் முடிந்துவிட்டதென்று அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவனுடைய காவல் கோட்டைகளும் பீமபலனால் கைப்பற்றப்பட்டன. குண்டினபுரியின் கோட்டை முகப்பிலிருந்த காவல் மாடத்தில் ஏறி நின்று நோக்கினால் தெரியும் தொலைவுக்கு பீமபலனின் படைகள் வந்து நின்றிருந்தன.

முக்தன் தன்னையறியாமலேயே அந்த அரசியல் களத்தில் உளம் ஈடுபட்டான். முற்றிலும் உள்ளத்திலேயே நிகழ்ந்து முடியும் ஒரு போர். ஒருமுறைகூட வாள் உருவப்படவில்லை. ஓர் அம்புகூட எழவில்லை. போர் முரசுகளின் மீது முழைக்கோல் ஒவ்வொரு கணமும் காத்திருந்தது. சித்தம் பேதலித்து கண்கள் பதறி தொடர்பற்ற சொற்களைப் பேசி அழுகையும் சிரிப்பும் என கொந்தளித்து தன் அரண்மனைக்குள்ளேயே சுற்றிவந்தான் பீமத்துவஜன். பீமபலனின் தூதர்கள் அவனுடைய குலத்தலைவர்களை எவரும் அறியாது வந்து பார்த்தனர். பீமகரின் சொல்லுறுதி பெற்றபின் ஃபீலர்களின் குலம் முழுமையாகவே அடிபணிந்தது.

ஒருநாள் புலரியில் பீமபலனின் படைகள் விதர்ப்பத்தின் கொடி பறக்க வெற்றி முரசு கொட்டியபடி குண்டினபுரியை அணுகின. குண்டினபுரியின் மேலிருந்து ஃபீலர்களின் கொடி தாழ்ந்து குண்டினபுரியின் கொடி ஏறியது. கோட்டைக்காவலர்கள் அனைவரும் படைக்கலங்கள் தாழ்த்தி பீமபலனின் படைகளிடம் பணிந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். நன்கு ஒத்திகை பார்க்கப்பட்ட ஒரு படை விளையாட்டுபோல குண்டினபுரியை பீமபலன் மீண்டும் கைப்பற்றினான்.

ஏழு படைவீரர்கள் பீமத்துவஜனின் அறைக்கதவைத் தட்டி அவனை அழைத்தபோது அவன் உடல் நடுங்கியபடி மஞ்சத்தின்மேல் அமர்ந்திருந்தான். கதவைத் திறந்த அவன் பட்டத்தரசி சுதேவை கண்ணீர்விட்டு அழுதபடி தன் மைந்தர்களை இடையுடன் அணைத்திருந்தாள். படைத்தலைவன் “இளவரசே, வருக” என்று அழைத்தான். பாய்ந்தெழுந்த பீமத்துவஜன் தன் குறுவாளை எடுத்து கழுத்தில் வைக்கப்போனபோது இருவர் பாய்ந்து அக்கைகளை பற்றிக்கொண்டனர். அவனை கைகள் பற்றி அரசவைக்கு கொண்டு சென்றனர்.

பீமபலன் குண்டினபுரியின் அரியணையில் அமர்ந்திருந்தான். ஃபீலர்குடித் தலைவர்களும் பைலர்குடித் தலைவர்களும் இணைந்து எடுத்தளித்த மணிமுடியையும் செங்கோலையும் சூடியிருந்தான். குடிகள் அவனை வாழ்த்தும் முழக்கம் அவை நிறைத்திருந்தது. வீரர்களால் அழைத்துவரப்பட்ட பீமத்துவஜன் அவையில் நுழைந்தபோது அமைதி ஏற்பட்டது. பேரரசர் பீமகர் தனது இருக்கையில் நெஞ்சுடன் கைகட்டி தலை குனிந்து அவனை நோக்காது அமர்ந்திருந்தார். பீமத்துவஜன் கலங்கிய கண்களும் பதறி முட்டிக்கொண்ட கால்களும் நிலையழிந்து தத்தளித்த உடலுமாக அவை நடுவே வந்துநின்றான். அவனால் நடக்க முடியவில்லை. இரு வீரர்கள் அவன் இரு தோள்களையும் பற்றி மெல்ல தள்ளிக்கொண்டு வந்தனர்.

பீமத்துவஜனின் பட்டத்தரசியும் நான்கு மனைவியரும் ஆணிலி வீரர்களால் அவைக்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டனர். பீமபலன் அவையினரிடம் “குடித்தலைவர்களே, சான்றோரே, மணிமுடி மறுசொல்லின்றி இருக்கையில் மட்டுமே ஆற்றல் கொண்டதாகிறது, மறுக்கப்பட்ட மறுகணமே அரியணை தன் ஆற்றலில் பாதிப் பங்கை இழந்துவிடுகிறது என்கிறார்கள் அரசுநூலோர். ஆகவே மணிமுடியை மறுக்கும் எவருக்கும் இறப்பே தண்டனை என்று முன்னோர் வகுத்துள்ளனர். பாரதவர்ஷத்தில் எங்கும் எப்போதும் அம்முறை மீறப்பட்டதில்லை” என்றான். அவை அசைவற்று அமர்ந்திருந்தது.

“எந்தையின் சொல்லை கேட்க விழைகிறேன்” என்றான் பீமபலன். பீமகர் எழுந்து ஓங்கிய குரலில் “வருங்காலத்திலும் குண்டினபுரியின் மணிமுடி உறுதியாக நின்றாக வேண்டும். அதை இவன் குருதி நிறுவட்டும்” என்றார். பீமபலன் “ஆம், இறப்பே தண்டனை. ஆனால் இளையோனாகிய இவனை முடிசூட்டி போஜகடகத்தில் அமர்த்தியது எனது தமக்கை தமயந்தி. இவனை தண்டிக்கவும் பொறுக்கவும் உரிமை படைத்தவர் அவரே. அவர் இல்லாத இவ்வவையில் அம்முடிவை நான் எடுக்க இயலாது” என்றான். அமைச்சர்களிடம் “நான் என்ன செய்ய வேண்டும், அமைச்சரே?” என்றான்.

முதிய அமைச்சர் விஸ்ருதர் எழுந்து வணங்கி “நூல்நெறிப்படி இறப்புகள் பல உண்டு. பீமத்துவஜர் தன் பெயரையும் குலத்தையும் துறந்தால் இறந்தவர் என்றே கருதப்படுவார். வரதாவில் மும்முறை மூழ்கி ஆடை களைந்து கரையேறட்டும். அவரது மைந்தன் அவருக்கு அன்னம் வைத்து நீர்க்கடன் செய்து முடிக்கட்டும். வேறு ஒரு பெயருடன் வேறொரு மனிதராக அவர் இங்கு வாழ்வதில் தடையேதுமில்லை” என்றார். பீமகர் ஏதோ சொல்வதற்குள் பீமபலன் “ஆம், அதுவே எனது ஆணை. இளையோனே, பிறிதொருவனாக என்னுடன் இரு” என்றான்.

கால்கள் தளர்ந்த பீமத்துவஜன் தன்னைத் தாங்கியிருந்தவர்களின் கைகளில் தொங்கியவன் போலிருந்தான். அவர்கள் அவனை மெல்ல அமரவைத்தனர். “இளையவனே, உன் இறப்பு நிகழ்வதற்குமுன் இந்த அரியணையையும் செங்கோலையும் முழுதேற்பதாக மும்முறை நிலம் தொட்டு ஆணையிடு. உன்னையும் என்னையும் இங்கமர்த்திய நமது மூத்தவர் திரும்பி வருகையில் நம்மைக் குறித்து அவர் நிறைவையே அடையவேண்டும்” என்றான் பீமபலன். இரு கைகளையும் நெஞ்சோடு சேர்த்து தலைமுடி முகத்தில் பரவியிருக்க தாடை மார்பில் பதிய தலைகுனிந்து அமர்ந்திருந்தன் பீமத்துவஜன்.

பீமகர் உரத்த குரலில் “ஆணையிடு, மூடா! நீ ஆற்றிய பிழையெல்லாம் போதும்” என்றார். பீமத்துவஜனின் அரசி “அவர்பொருட்டு நான் ஆணையிடுகிறேன். என் மைந்தரின் தலை தொட்டு ஆணையிடுகிறேன்” என்றாள். பீமத்துவஜனை சற்று நேரம் நின்று நோக்கிய பீமபலன் “நீ ஆணையிடவில்லையென்றால்கூட எனது தீர்ப்பில் மாற்றமில்லை, இளையோனே. நீ செல்லலாம்” என்றான்.

பீமத்துவஜன் முழந்தாளிட்டு உடல் நிமிர்த்தி எழுந்தான். தலை தூக்கி பீமபலனைப் பார்த்து “இக்கணம்வரை இவ்வரியணை எனக்குரியது என்றே எண்ணியிருந்தேன். எனக்குரியதை இழந்தேன் என்றே வருந்தினேன். மூத்தவரே, இக்கணம் அறிகிறேன், இது தாங்கள் அமரவேண்டிய அரியணை. இதிலமரும் அறச்செல்வர்கள் இந்நாட்டை புகழ்பெறச் செய்யவேண்டும்” என்றபின் “இக்கொடிக்கும் இம்முடிக்குமென ஒருநாள் எங்கோ ஒரு களத்தில் குருதி சிந்தி விழுவேன். நான் ஆற்றிய அனைத்திற்கும் அவ்வண்ணம் ஈடு செய்வேன். ஆணை! ஆணை! ஆணை!” என்றான்.

அவையிலிருந்த அனைவரும் விழிநீர் சிந்திக்கொண்டிருந்தனர். பீமபலன் “நன்று இளையோனே, நாளை பிறிதொரு உடன்குருதியினன் எனக்குக் கிடைக்கையில் அவனை நெஞ்சோடு தழுவி எஞ்சியதை சொல்ல விழைகிறேன்” என்றான். பீமத்துவஜன் எழுந்து மீண்டும் நிற்க முடியாமல் தள்ளாடி இரு வீரர்கள் அவனை பற்றிக்கொள்ள நிமிர்ந்த தலையுடன் அவையை ஒரு முறை நோக்கிவிட்டு வெளியேறினான்.

பீமபலன் “போஜகடகம் இரண்டாவது தலைநகராகவே நீடிக்கட்டும். என் இளையோனின் அரசி அங்கிருந்து ஆளட்டும். அவள் மைந்தனுக்கு இப்போது பதினான்கு வயதாகிறது. பதினெட்டு வயதுக்குப்பின் அவனே அங்கு முடி சூடட்டும்” என்றான். அவை வாழ்த்துரைத்து முழக்கமிட்டது.

விறலி கதையை சொல்லி முடித்தபின் மெல்ல தலைதிருப்பி அவையை பார்த்தான் முக்தன். பெண்டிர் அனைவரும் விழிநீர் கொண்டிருப்பதைக் கண்டான். அத்தனை தொலைவிலிருந்துகூட விழிநீர் மட்டும் எத்தனை தெளிவாகத் தெரிகிறது என்று எண்ணிக்கொண்டான். தன் இமைகளிலும் நீர் இருப்பதை உணர்ந்தான். பெருமூச்சுடன் மீண்டும் இருளுக்குள் உடலை இழுத்துக்கொண்டான். கண்களைத் துடைத்தபோது மலர்ந்த முகத்தில் விழிநீர் எழுவதுதான் மனித உணர்ச்சியின் உச்சமா என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது.

முந்தைய கட்டுரைநியோகா
அடுத்த கட்டுரைஏழாம் உலகம் கடிதங்கள்