குறளைப் பொருள்கொள்ளுதல்…

valluvar

அன்பின் ஜெ,

எனக்கு ஒரு குறளின் பொருள் குறித்து ஓர் ஐயம் உள்ளது.

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். – குறள் 774.

இதில் பறியா என்பது எதிமறையாக வருகிறது என்றும் அதை நாம் “பறித்து” என்றே பொருள் கொள்ள வேண்டும் என்றும் யாவரும் கூறுகின்றனர்.

ஆனால் இது எந்த வகை இலக்கணம் என்று எங்கேயும் குறிப்பிடப் படவில்லை. கிறு கின்று ஆநின்று என்ற வகையில் இது வருவதாக ஒரு யூகம் உள்ளது! உண்ணாநின்றான் என்பது உண்ணுகிறான் என்ற பொருளே தரும். ஆனால் ’பறியா நகும்’ என்பது அவ்வகையில் சேராது என்பதே என் கருத்து. வள்ளுவன் இங்கு பறியா என்பதை பறிக்காமல் சிரித்தான் என்ற பொருளிலேதான் கூறினார் என்பது என் யூகம். இதை யாரேனும் விளக்க முடியுமா?

நன்றி,
பாலா.

***

அன்புள்ள பாலா

திருக்குறள் உள்ளிட்ட பழைய நூல்கள் இன்றைக்கு ஆயிரத்தைநூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டவை. நூறாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட உரைநடையை வாசிக்கவே ஏராளமான பொருட்குழப்பங்கள் உருவாகின்றன என்னும் நிலையில் இந்நூல்களை ஐயம்திரிபறப் பொருள் கொள்வது இயல்வதே அல்ல.

அப்படியென்றால் இவற்றுக்கான பொருட்கோள் எப்படி நிகழ்ந்தது? அது கூட்டான வாசிப்பின்மூலம் பொதுவாக ஏற்கப்பட்ட பொருள்தான். அதாவது அந்தப்பொருள் குறளின் சொற்களைக்கொண்டு பிற்காலத்தில் ‘கட்டமைக்கப்பட்ட’ ஒன்று. நூலின் பொருள் என்பது வாசிப்பில் உருவாவது, சமூகம் மாறமாற வாசிப்பும் பொருள்கோடலும் நுட்பமாக மாறிக்கொண்டே இருக்கின்றன என்று நவீன ஏற்புக்கோட்பாடுகள் வாதிடுகின்றன.

குறளைப் பொருள்கொள்ளும்போது பதினெட்டாம் நூற்றாண்டு அறிஞர்கள் மதநூல்களின் மனநிலையிலேயே இருந்துள்ளனர். அன்றைய மைய அறிவுப்போக்கு மதம்சார்ந்தது. ஆகவே ‘மிகச்சரியான’ பொருளை எடுக்கும் முயற்சி ஒரு பக்கமும் உரைகள் வழியாக குறளின் பொருளை திருப்பிக்கொள்ளும் முயற்சி மறுபக்கமும் நிகழ்ந்தது. இதன் விளைவாகவே சொல்லாராய்சியும் அதிலிருந்து பலவகையான பூசல்களும் நிகழ்ந்தன. இப்போக்கு இன்றும், முந்தைய தலைமுறை அளவு இல்லையென்றாலும், நீடிக்கிறது.

இதில் குறள் எந்தெந்த முதற்பிரதிகளில் இருந்து எடுக்கப்பட்டது, பாடபேதங்கள் என்னென்ன என்பதெல்லாம் மிகப்பெரிய ஆய்வு வெளி. பாடபேதங்களுடன் குறளை வாசிக்கவேண்டும் என்றால் கி.வ.ஜ தொகுத்த குறள் ஆய்வுரை [ மயிலை ராமகிருஷ்ண மடம் வெளியீடு] யை வாசித்துப்பார்க்கலாம்.

இந்த விவாதத்திற்குள் சென்றால் நாம் குறளை ‘மாறாத பொருள்’ கொண்ட ஒரு வரையறைத்தொகுதியாக நிலைநிறுத்திக்கொள்வோம். அதன்பின் அதிலுள்ள கவிதையைச் சென்றடையமுடியாது. பொருள்மாறாமை அல்ல பொருள்மயக்கமே இலக்கியத்தின் வழிமுறை[வில்லியம் எம்ஸனின் ஏழுவகை பொருள்மயக்கங்கள் என்னும் கட்டுரை, ஒரு தொடக்கத்துக்காக]

ஆகவே நீங்கள் இலக்கணம் அனுமதித்தால் உங்களுக்கான பொருளைக் கொள்வதில் பிழையில்லை. ‘சரியான’ அர்த்தம் என்ன, வள்ளுவர் உண்மையில் என்னதான் எழுதினார் என்றெல்லாம் தேடிச்சென்றால் கவிதைக்கு நேர் எதிரான இடத்திற்குச் செல்வீர்கள்.

மெய்வேல் பறியா நகும் என்பதை பறிக்காமல் என்று பொருள்கொண்டால் அவன் வேலை எறிந்துவிட்டு தன்மகிழ்வுடன் நின்றுகொண்டிருப்பதை காட்டும் கவிதை ஆகிறது. பறித்து என்றால் மேலும் போருக்குச் செல்பவனின் போர்ச்சிரிப்பாக ஆகிறது. அர்த்தம் உங்களுடையது.

kural

சரி, நான் என்னபொருள் கொள்கிறேன்? பறித்து என்றுதான். வேலைக் கைவிடுவது போரில் செய்யக்கூடுவது அல்ல . அதற்கு இலக்கணம் உண்டா? ஆம். சும்மா கைபோன போக்கில் நினைவிலிருந்த சொல்லைத் தேடி எடுத்த உதாரணம்

ஐய உள்ளெழுந் தருளுக! வடிகணீ ர் அடியேன்
உய்ய வேண்டிய பணிதிரு வுளத்தினுக்கு இசையச்
செய்ய வல்லன் என்று அஞ்சலி செய்ய, உள் நகையா
மைய நோக்கியை நோக்கி மீனோக்கி தன் மணாளன்.

[திருவிளையாடற் புராணம்]

என்னும் பாடலில்  “உள் நகையா மைய நோக்கியை நோக்கி” என வரும் வரியைப் பாருங்கள். நகையா என்ற சொல் நகைத்து என்றே இங்கே பொருள்படுகிறது. [மீனோக்கி மீனாட்சிக்கு அருமையான தமிழ்வடிவம்]. சங்கப்பாடல்களில் நகையா, நில்லா என்னும் சொல்லாட்சிகள் நகைத்து,நின்று என்னும் பொருளில் பல இடங்களில் வருகின்றன. அது அக்காலத்தைய ஒரு மொழியாட்சி.

ஜெ

 

முந்தைய கட்டுரைபாரதிமணியின் திருமணம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 77