நத்தையின் பாதை 1 உணர்கொம்புகள்
நத்தையின் பாதை இந்த மாபெரும் சிதல்புற்று
ஜெமோ,
‘சிதல்புற்று ‘ வழியாக பூடகமாக உணர்த்திய பின்நவீனத்துவத்தின் அவசியத்தை ‘தன்னை அழிக்கும் கலை‘ வழியாக கொஞ்சம் அழுத்தமாக நிறுவியிருக்கிறீர்கள்.
தன்முனைப்புக் கொண்டு மண்ணைப் பிளந்து கொண்டு வெளியில் வரும் செடிக்கு மரமாக கிளை பிரித்து வளரும் வரை இருப்பது நவீனத்துவத்தின் இயல்பு. நான் தான் வளர்கிறேன் என்ற ஒரு போதை.
நானென் மரபாகிய வேராலும் மண்ணாலும் வளர்த்தெடுக்கப்படுகிறேன் என்ற பிரக்ஞை வருவது பின்நவீனத்துவம் என்று உணர்கிறேன்.
தன் படைப்புகளில் துருத்திக்கொண்டிருக்கும் படைப்பாளன், அதில் தன்னை கரைத்துக்கொள்ள முயல்வதே பின்நவீனத்துவம் என்றும் தொகுத்துக் கொள்கிறேன்.
மேலும், ஏற்கனவே உங்களுடைய பழைய கட்டுரைகளில் கூறியதைப்போல,நவீனத்துவத்தில் திளைப்பவர்களுக்கு இவ்வுலகமே தான் பிறக்கும் போது தான் பிறந்தது என்ற அசட்டு எண்ணம் உண்டு. நாம், நம்முடைய மரபுகளின் நீட்சி, வரலாற்றின் எச்சம் என்ற புரிதலுக்குள் புக பின்நவீனத்துவத்தின் கதவைத் தட்டியாகவேண்டும்.
குறிப்பு: நவீனத்தையும் (Modern) நவீனத்துவத்தையும்(Modernism) போட்டுக் குழப்பிக்கொள்ளவில்லை என்றே எண்ணுகிறேன்.
அன்புடன்
முத்து
அன்புள்ள ஜெமோ
உண்மையில் தடம் இதழில் நீங்கள் எழுதும் கட்டுரைகளின் உள்ளடக்கம் நீங்கள் பலகாலமாக இணையத்தில் எழுதியும் பேசியும் வருவதுதான். தடம் இதழில் அவற்றை சுருக்கமாகத் தொகுத்துக்கொள்ள முடிகிறது. இணையத்தில் வாசித்தவர்கள் அதை அக்கட்டுரைகளில் கூர்மையாக்கிக்கொள்ளமுடியும். முதன்முதலாக அங்கே வாசிப்பவர்கள் இணையக்கட்டுரைகள் வழியாக விரிவாக அதை வாசிக்கமுடியும்.
தொடர்ச்சியாக நம் அழகியல், நம் தத்துவம் என்ற ஒரு தேடலில் இருக்கிறீர்கள். அதற்காக பலகோணங்களில் முட்டிமோதுகிறீர்கள். விவாதிக்கிறீர்கள். ஆனால் இது ஒரு தொடக்கம். ஒரு அறைகூவல். அந்த தனித்தன்மையான இயக்கம் இப்படி பலர் பலகோனங்களில் செயல்படுவதன் வழியாகவே வந்தமைய முடியும் என நினைக்கிறேன்
எஸ்.சுப்ரமணியம்