வரையறைகள் பற்றி..

jaya

ஜெ

இடங்கை இலக்கியம் வாசித்தேன்,

நீங்கள் இலக்கியம் குறித்த உரையாடல்களில் வரையறைகளை அளிக்க முயல்வதைப்பற்றி ஒரு பேச்சு எங்களுக்குள் ஓடியது. [நாவல் என்றால் என்ன? முற்போக்கு இலக்கியம் என்றால் என்ன?] இப்படி வரையறைசெய்யலாமா, இதை நாம் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் பேச்சு எழுந்தது. வரையறைசெய்வது சரியா என்று கேட்க விரும்புகிறேன்.

ஏனென்றால் நீங்கள் வரையறை செய்து சொன்னதுமே ஒரு வரையறை மீறலையும் சொல்லிவிடுகிறீர்கள். முற்போக்கு இலக்கியம் என்ற உங்கள் கட்டுரையின் வரையறையை வைத்துப்பார்த்தால் உள்ளடக்கம் அல்லது பார்வை சார்ந்த சில பொது அம்சங்களை மட்டுமே முற்போக்கு இலக்கியத்தின் அடையாளங்களாகச் சொல்லமுடியும். எங்கள் பேச்சில் ஒரு தெளிவுக்காக இதைக்கேட்கிறேன்.

சரவணன்

***

அன்புள்ள சரவணன்,

ஒரு தலைப்பைப் பற்றிப் பேசும்போது நான் என்ன சொல்லவருகிறேன் என்று விளக்கவே அந்த வரையறை தேவையாகிறது. உதாரணமாக ‘இந்தப்படைப்பு நாவல் வடிவை அடையவில்லை’ என்பதோ “இந்நாவலுக்கு வடிவ ஒருமை அமைந்துள்ளது’ என்றோ சொல்லும் விமர்சகன் அதற்கு முன் நாவல் என்றால் அவன் என்ன என்று எண்ணுகிறான் என்று தெளிவாக்கவேண்டும் அல்லவா? இல்லாவிட்டால் அந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்?

ஆகவேதான் நான் வரையறைகளை அளிக்கிறேன். வாசகர் அவ்வாறு வரையறுத்துக்கொள்ளவேண்டும் என சொல்லவில்லை. அதுவே முடிவான வரையறை என தீர்ப்பளிப்பதுமில்லை. அந்தக் கட்டுரையிலேயே அந்த வரையறை அந்த விவாதத்தில் என் தரப்பை தெளிவாக்கும்பொருட்டே என சொல்லியிருப்பேன். என் கட்டுரைகள் எல்லாமே ’இப்படியும் பார்க்கலாமே’ என்ற அழைப்புதான். அதன்மூலம் வாசகனுக்கு இன்னொரு வாசிப்புக்கோணத்தையே அளிக்கிறேன். எந்த விமர்சனத்திலும் முக்கியமாக உள்ளவை அவ்விமர்சனம் படைப்புகள் மேல் முன்வைக்கும் புதிய அவதானிப்புகள் மட்டுமே. இதை என் விமர்சனநூல்கள் அனைத்திலும் சொல்லியிருப்பேன்

வரையறைகளைச் சொல்லும்போது இலக்கியப் படைப்பாளியாக எனக்கு மிகவும் தயக்கம் உண்டு. இலக்கியத்தில் ஒருநிலையிலும் கறாரான முழுமையான விமர்சனங்கள் சாத்தியமல்ல. கூடவும்கூடாது. அது வாசிப்பை ஒடுக்குவதுதான். ஒரு குறிப்பிட்ட கோணத்தை அளிக்கக்கூடியதும், அதேசமயம் வேறுபட்ட பல படைப்புகளை உள்ளடக்கும்விதமாக நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவுமே இலக்கிய வரையறைகள் இருக்கமுடியும்.

இலக்கியத்தின் ஒன்றுபிறிதொன்றில்லாத தன்மை காரணமாக எந்த வரையறையும் முன்வைக்கப்பட்டதுமே தன்னை மறுக்க ஆரம்பிப்பதையும் காணலாம். வரையறைக்கு வெளியே உள்ளவற்றை ‘ஆனால்’ போட்டு உள்ளே கொண்டுவரத் தொடங்குகிறோம். இந்த விரித்தெடுத்தலினூடாக ஒருபக்கம் அந்த வரையறை மழுங்குகிறது, அந்தக்கோணம் துலங்குகிறது. அதை என் இடங்கை இலக்கியம் கட்டுரையிலும் காணலாம்.

எல்லா இலக்கிய வரையறைகளும் பொதுமைப்படுத்தலில் இருந்து உருவாகின்றவை. ஏதேனும் ஓர் அம்சத்தை எடுத்துக்கொண்டு அந்தப் பொதுமைப்படுத்தலைச் செய்கிறோம். பிறிதொரு அம்சத்தை எடுத்துக்கொண்டால் அது பொருந்தாமலும் ஆகும். ஜெயகாந்தனையும் பூமணியையும் மிகப்பொதுப்படையான முற்போக்குப் பார்வை என்னும் அடிப்படையில் ஒரே நிரையில் கொண்டுவர முடியும். கொண்டு வந்ததுமே வேறுபாடுகளைச் சொல்லிவிடவேண்டியிருக்கிறது.

ஆகவே இலக்கிய விமர்சனத்தின் தர்க்கம் ‘வரையறுத்தல் வரையறையை மீறுதல்’ என ஊசலாடுகிறது. இலக்கியவிமர்சனத்தை அவ்வாறுதான் செய்யமுடியும். அதுவும் கொஞ்சம் முதிரமுதிர எதிலும் இறுதிச்சொல் சொல்ல வாய் தயங்கியபடியே செல்லும். இவற்றின் விவாதமதிப்பே இவற்றின் பயன். அதன்மூலம் வாசகர் ஒவ்வொருவருவரும் தங்கள் சொந்தப்புரிதலைச் சென்றடையலாம். தர்க்கங்களை இன்னும்கொஞ்சம் துலக்கிக் கொள்ளலாம்

-ஜெ

***

இடங்கை இலக்கியம் -கடிதங்கள்
இடதிலக்கியம் கடிதங்கள் 2
இடதிலக்கியம் – கடிதங்கள்
சிறிய மனங்கள்
 

முந்தைய கட்டுரைகழிவின் ஈர்ப்பு
அடுத்த கட்டுரைஉச்சவழு -கடிதங்கள்