துணை:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோக‌ன் அவர்களுக்கு
‍”மானுடம் மீது பெரும் காதலும் மனிதர்கள் மீது சலிப்பும் கொண்டவர் அவர் என்பார்கள்”
மிகவும் முரண்பாடாக உள்ளது.ஒருகால் ஒருகாலத்தில் மானுடம் மீது பெரும் காதல் இருந்திருக்கலாம்.
சக மனிதர்களை நேசித்து ஏற்க முடியாதவர் என்ன மானுடத்தை நேசித்து என்ன?
தாங்கள் பேசாமல் கதவை உதைத்து அவரின் அந்த நாகரீகமற்ற செயலுக்கு கண்டனம் தெரிவித்து அவரின் முரண்பாட்டை அவருக்கு உணர்த்தி இருக்கலாம்.
அன்புடன்
சுஜா

அன்புள்ள சுஜா,
நிறைய கலைஞர்களுக்கு அந்த இயல்பு உண்டு. மானுடம் என்ற ஒரு கருத்தாக்கம் மீது அவர்களுக்கு ஆர்வமும் பிரியமும் இருக்கும். அந்த கருத்தாக்கம் மிகப்பெரியதாகையால் அது ஒரு இலட்சியக்கனவாகவே அவர்கள் மனதில் இருக்கும்.  தனிமனிதர்களின் லௌகீகமான தன்மை அவர்களுக்குச் சைப்பூட்டுகிறது. இந்த முரண்பாட்டை நம்முடைய பெரும் புரட்சிக்காரர்களிடம் காணலாம். அவர்கள் எளிய மக்களுக்காக புரட்சிசெய்கிறார்கள். அவர்களுக்காக உயிரையும் கொடுப்பார்கள். ஆனால் அந்த எளிய மக்களுடன் பேசிப்பழகி அவர்களில் ஒருவராக அவழ அவர்களால் முடியாது. அந்த எளியமனிதர்களுக்கு இவர்களின் இலட்சியமே புரியாது. இவர்களை கோமாளிகளாக மட்டுமே அவர்கள் பார்ப்பார்கள். இதுதான் பல புரட்சி இயக்கங்கள் அதிகாரத்தை அடைந்ததுமே மக்களுக்கு விரோதமாகப்போய் மக்களை அழிக்க ஆரம்பிப்பதற்குக் காரணம் என்பது என் எண்ணம்
ஜெ

**

அன்புள்ள ஜெ, வைலோப்பிள்ளி சீதர மேனோனைப்பற்றிய நல்ல கட்டுரையை சற்று பிந்தித்தான் படித்தேன். அவரது மனதை நன்றாகவே சொல்ல உங்களால் முடிந்திருக்கிறது. கவிஞர்கள் போன்ற இலட்சியவாதிகளுக்கு இந்த பிரச்சினை உண்டு. அவர்கள் பெர்ஃபெக்ஷனிஸ்டுகள். அந்த தன்மை கொஞ்சம் குறைந்தால்கூட அவர்களால் தாங்க முடியாது. ஆகவே தங்கள் கற்பனையை மட்டுமே அவர்களால் தாங்க முடியும். கவிஞனுக்கு கற்பனை காதலி மட்டும்தான் இருக்க முடியும். நிஜ காதலியை அவன் கொன்றுவிடுவான். கூல்ரிட்ஜின் ஒரு கவிதை என்ரு நினைக்கிரேன், இல்லை டென்னிசனா தெரியாது. காதலியை அவளுடைய கூந்தலாலேயே கழுத்தை இறுக்கிக் கொன்றுவிடுவான். ஏன் என்றால் அவள் மிக அழகாக இருந்தாள். மிக உன்னதமாக இருந்தாள். அந்த அழகும் உன்னதமும் குறைவதை அவன் விரும்பவில்லை. கவிஞனின் காதல் கொல்லும்காதல்தான்
ராம் ஸ்ரீதர்

துணை