மேகலாயா மாநிலத்தின் மலைப்பகுதிகளில் ஒளியேற்றிய தமிழ் அதிகாரி
அன்பின் ஜெ,
இன்று எதேச்சையாக இக்கட்டுரையை காண நேர்ந்தது. இருமுறை கடந்து சென்றபின் தெரிந்த முகம் என உறைத்து படித்து பார்த்தேன். மேகாலயாவின் தொலைதூர மலைப்பகுதியை நமது குழும நண்பர் (உயர்ந்த மனிதர்) ராம்குமார் IAS அவர்கள் அம்மக்களின் பங்களிப்போடு ஒளியேற்றிய கதை.
ஒரு நாளில் பல செய்தி கட்டுரைகளை கடந்து செல்கிறோம். பெரும்பாலும் எதுவும் கவனத்திலோ நினைவிலோ நிற்பதில்லை. ஆனால் இக்கட்டுரையில் சில எளிய தகவல்கள் மற்றும் அனுபவங்கள் வழியே அந்நிலத்திற்கு கூட்டிச் செல்கிறார் நமது கலெக்டர்.
அறித்த முகங்களை செய்திக் கட்டுரையில் பார்ப்பது எப்போதும் ஒரு பரவசம்தான்:)
தே.அ.பாரி
***
அன்புள்ள பாரி,
நன்றி. நீங்கள் சொல்லவில்லை என்றால் கவனித்திருக்க மாட்டேன். நம் நண்பர்கள் குழு அனைவருக்குமே பெருமிதம் அளிக்கும் செய்திதான். ராம் குமார் அந்த மாநிலத்திற்குச் செய்த பிற பணிகளும் நாம் அறிவோம். ஒவ்வொரு தருணத்திலும் அவர் அந்த மாநிலத்தையே நினைத்துக்கொண்டிருப்பதை எண்ணி வியந்து பேசியிருக்கிறோம்.
ஒருமுறை பயணத்தில் மிளகுக்கொடியைப் பார்த்ததுமே மிளகு மேகாலயாவில் வளருமா என்று அவர் ஆர்வம்கொண்டதையும் அதற்கான நிபுணர் ஆலோசனைகளை தேடியதை நினைவுகூர்கிறேன். சூரிய ஒளி மின்சக்தி அளிப்பதைப்பற்றி அவர் தொடர்ந்து உற்சாகத்துடன் பேசியிருக்கிறார்
வெற்றுப் பேச்சு நம்மை ஆட்கொண்டிருக்கும் காலம் இது. உண்மையான செயல்வீரர்கள் நம் வணக்கத்திற்குரியவர்கள்.
ஜெ