இடிதாங்கி

C360_2016-05-06-12-37-25-417

 இடிதாங்கி

இடிதாங்கி என்னும் நிலையில் இருந்து உயர்ந்து ”அதிகார மையமாக” மாறிக்கொண்டிருக்கிறேன் என தோன்றுகிறது. கடந்த ஆறு மாதமாக நான் உங்களை சந்திக்காமல் தவிர்க்க வைத்த எண்கள் மட்டுமே ஒரு இருபது தேறும். இவர்களில் மூன்று வகையறா முக்கியமானவர்கள்.

முதல் வகையறா உங்களை சந்தித்து [வழி அறியாமல் சற்றே தடுமாறிக் கொண்டிருக்கும் உங்களை] மிக சரியான வழிகளை எடுத்து இயம்பி தமிழ் தேசியராக,அல்லது இந்துத்துவராக ,அல்லது காந்தியராக உங்களை உயர்த்தும் உத்வேகம் கொண்டவர்கள்.  இவர்கள் அனைவரும் உங்கள் கட்டுரைகளை மட்டுமே படித்தவர்கள்.  ரொம்ப கிண்டினால் அறம் [அதில் சோற்று கணக்கு மட்டும்] வாசித்திருப்பார்கள்.

இரண்டாம் வகையறா, உங்கள் படைப்பின் மேல் ”முனைபவர்கள் ” சார் கிட்ட ஒரு பேட்டி எடுக்கணும். … முதல் கேள்வி உங்கள் பெயர் என்ன? நிற்க.  புத்தக சந்தைக்கு ஒரு பேராசிரியை வந்தார். கவர் பிரிக்காத காடு நாவலை ரொம்பநேரம் கையில் வைத்து பார்த்துக்கொண்டு இருந்தார். ரொம்ப ரொம்ப யோசித்து நூலை வாங்கினார். காலேஜுக்குங்க கொஞ்சம் தள்ளுபடி போட்டு குடுங்க என்றார். நான் புத்தகத்தை அவர் கையில் வைத்தே அதன் பின்புறத்தை புரட்டி காண்பித்தேன். அந்த நாவலின் தேடல் குறித்து அதன் பின்புறம் கண்டிருக்க வார்த்தைகளை வாசித்தார், அய்யய்யோ நான் ஏதோ சூழலியல் பத்தின புத்தகம்னு நினைசேன் என்றார்.

மூன்றாம் வகையறா உங்களுக்கு உதவியாளராக இணைத்து சினிமாவுக்கு கதை எழுதும் கலையை அறிந்து கொள்ள விழையும் இளைஞர்கள்.  இவர்கள் உங்களின் எதையுமே வாசித்திருக்க மாட்டார்கள். நேற்று ஒருவர் தொலைபேசினார்.  சார் அட்ரஸ் கிடைக்குமா அவருக்கு ஒரு புத்தகம் அனுப்பனும் என்றார். இத்தகய குரலே அதன் துவனியே இப்போது அத்துப்படி ஆகி விட்டதால் ”சார் யாரையும் அசிஸ்டெண்டா சேத்துக்கறது இல்லை ” என பதிலிறுத்தேன். ”சார் சார் எப்படியாவது ஷங்கர்க்கிட்ட. …. என உடனடியாக தாவி இன்று வரை துரத்திக்கொண்டு இருக்கிறார்.

மற்றொரு போன் கால். உங்கள் முகவரி.  கவிதை நூல் அனுப்ப கேட்டு. இது மெய்யாகவே நூல் அனுப்ப விரும்பும் குரல். கவிதை நூல் தலைப்பை கொஞ்சம் சொல்லுங்க என்றேன். ”நிழல் தேடும் மரங்கள் ” என்றார்.  பதட்டத்தில் எனது முகவரியை அளித்து விட்டேன். என்ன ஒன்று எப்போதும் எனது முகவரியில் நான் இருக்கமாட்டேன் என்பதே ஒரே ஆறுதல்.

கடலூர் சீனு

***

அன்புள்ள ஐயா

உங்கள் நெம்பருக்கு பலமுறை கூப்பிட்டாலும் சீனுவாசன் என்பவர் ஃபோனியில் வருகிறார். இவர் உங்கள் நெம்பரைத் தர மாட்டேன் சொல்கிறார். அடியேன் ஃபோனியில் தங்களிடம் முக்கியமான சில செய்திகளை அளிக்க ஆசைப்படுகிறேன். அடியேன் சக்தி உபாசகன். வடபத்ரகாளி அம்மனை உபாசனை செய்து சக்தி கிட்டியிருக்கிறேன். அடியேனும் மலையாளி என்துகொண்டு உங்களை கூப்பிட்டேன். நிறைய விஐபிஸ் வந்து என்னிடம் அருட் வாங்கி செல்கிறார்கள். ருசு உண்டு. அம்மன் த்ருஷ்டாந்தமாக வருவது கன்கூடு. உங்கள் நெம்பரை அனுப்பி உதவவும்

சக்திதாஸன்

பகவதிப்ரியன்

***

முந்தைய கட்டுரைஉச்சவழு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஈர்ப்பதும் நிலைப்பதும்