வேதசகாயகுமார், இயற்கைவேளாண்மை,வசை

vetha

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

முதலில் என்னைப் பற்றி: ச முத்து குமார சுவாமி, ஆரல்வாய்மொழி BHEL போபாலில் ஜெர்மன் மொழி பெயர்ப்பாளராக இருந்து 2009ல் ஓய்வு பெற்றேன்.

முகனூலில் சில நாட்களுக்கு முன் தங்களைப் பற்றிப் படிக்க நேர்ந்தது. இயற்கை விவசாயம் பற்றி தங்கள் கருத்துக்கு எதிரான கடுமையான கருத்துக்கள்.  அதனால் கடந்த சில நாட்களாக  jeyamohan.inல் தங்கள் ஆக்கங்களைப் படித்து வருகிறேன். ஒரே மாவட்டக் காரர்கள் என்பதால் ஒரு இயற்கையான பாசம்.

இன்ப அதிர்ச்சியாக எனது பால்ய நண்பர் ராஜப்பன் எனும் வேதசகாய குமாரைப் பற்றி படிக்க நேர்ந்தது. நாங்கள் ஆரலில் 7ஆம் வகுப்பு வரை சேர்ந்து படித்தோம். (1966-69 BSc Chemistry in ST Hindu College Nagercoil.) 1990 க்குப்பின் சந்திக்கவில்லை. குமாரின் என்சைக்ளோப்பீடியாவில் ஈ மெயில் விவரம் கிடைத்தது. தொடர்பு கொண்டு 3/8/2017ல் பேசி மகிழ்ந்தோம்.

நாங்கள் இருவருமே இரசாயனம் படித்துவிட்டு மொழியியலாளர்களாகிவிட்டொம். ஒரே வித்தியாசம். அவர் தமிழ் இலக்கியவாதி. நான் தொழில்னுட்ப மொழியியலாளன்.( ஜெர்மன்-ஆங்கிலம்).

தங்கள் மூலம் நண்பரின் தொடர்பு கிடைத்தது. மிக்க நன்றி.

என்றும் இனிய அன்புடன்

ச முத்துகுமாரசுவாமி

***

அன்புள்ள முத்துக்குமாரசாமி அவர்களுக்கு

நலம்தானே? அவ்வப்போது இவ்வகையான அதிர்ச்சிமகிழ்ச்சிகள் நிகழ்கின்றன. வேதசகாய குமார் ஓய்வுக்குப்பின் மேலும் பரபரப்பாக இருக்கிறார். அவருடைய அகராதி தமிழில் மிகமுன்னோடியான ஒரு முயற்சி. நூல்வடிவாக வந்தாகவேண்டும்

வேதசகாயகுமாரைப்பற்றிய என்னுடைய கட்டுரையைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் [வேதசகாயகுமார் அல்லது ‘எனக்கு பொறத்தாலே போ பிசாசே!’ ]

இயற்கை வேளாண்மையைப் பொறுத்தவரை எனக்கு எப்போதுமிருக்கும் ஆச்சரியம்தான். அதை ஆதரிப்பவர்களும் சரி எதிர்ப்பவர்களும் சரி நான் அவர்களுடைய முதன்மை எதிரி என திடீரென கண்டுபிடித்து வசைபொழிகிறார்கள்

வசை என்பது தமிழர்களின் நுண்கலைகளில் ஒன்று. அதற்குரிய மேடை முகநூல். ஈ.வே.ரா இருந்திருந்தால் இங்கேதான் பழியாகக் கிடந்திருப்பார்

ஜெ.

***

விரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.

வேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம்

குமார் 60 கடிதங்கள்

வேதசகாயகுமார் விழா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 78
அடுத்த கட்டுரைவாசிப்பு என்பது போதையா?