இல்லக்கணவர்

dogலண்டனில் நான் சந்தித்த ஒரு வாசகி அழகி. அவர் கணவர் என்ன செய்கிறார் என்று கேட்டேன். நான் கொஞ்சம் பழைய ஆள், இதையெல்லாம் எப்படியும் கேட்டுவிடுவேன். “வீட்டில்தான் இருக்கிறார்” என்றார். இருவரும் வேலை பார்த்திருக்கிறார்கள். குழந்தை பிறந்துவிட்டது. இருவரில் ஒருவர் வேலையை விடவேண்டும் கணவருக்கு வேலைக்குப் போவதில் விருப்பமில்லை. குடும்ப ஆணாக இருக்கவே ஆர்வம். சரி என்று இவர் வேலைக்குச் செல்கிறார்.

லண்டன் ஆனதனால் “அடப்பாவி பொண்டாட்டி வேலைக்குப்போக உக்காந்து சாப்புடுறியா?” என எவரும் கேட்பதில்லை. “அதெப்டி வீட்டு வேலையை புருஷன் தலையிலே கட்டுறே? பெரிய பாவம்” என்று சமூகம் அதையும் இவரே செய்யச் சொல்லவில்லை இருவருக்கும் மனம்போல வாழ்க்கை.

ஆனால் இங்கே நிலைமை வேறு. அருண்மொழி காலையில் வேலைக்குச் செல்கிறாள். எட்டுமணிக்கெல்லாம் போய்விடுவாள். சாயங்காலம் ஏழுமணிக்கு வந்துசேர்வாள். நான் பெரும்பாலும் வீட்டில் இருக்கிறேன். எழுத்துவேலை. கூடவே வீட்டுவேலை. \ஹவுஸ்ஹஸ்பெண்ட்’/ பாத்திரம் கழுவுதல். வீட்டைச் சுத்தம்செய்தல். அருண்மொழி இல்லையேல் சமைத்தல்.

ஆனால் இதை கமுக்கமாகச் செய்ய வேண்டியிருக்கிறது. ஆடிமாதமாகையால் வீட்டுக்கு முன் சருகும் குப்பையும் குவிகிறது. மஞ்சள்மரம் ஒன்று பூக்களாக உதிர்க்கும். டோரா கண்டதையும் கொண்டுவந்து குதறிப்போட்டுவிட்டு பாராட்டை எதிர்பார்க்கும். வெளியே சென்று முற்றத்தைக் கூட்டமுடியாது. வேறு பெண்கள் பார்த்துவிடக்கூடாது

ஆகவே பதினொருமணி வாக்கில் வந்து நைஸாகக் கூட்டிவிடுவேன். எவராவது பார்த்தால் துடைப்பத்தை கீழேபோட்டுவிட்டு ஒரு ஹம்மிங். இயற்கையழகை ரசித்தல். டோராவைக் கொஞ்சுதல்.

ஆனால் இதெல்லாம் ஒரு சமாதானத்திற்காகத்தான். கூரியர் கொண்டு வருபவர்கள், துணிகளை இஸ்திரி போடுபவர் அனைவரும் நிலைமையை அறிந்திருக்கிறார்கள். “சார்!” என்றுதான் கதவைத் தட்டுகிறார்கள். ஒரு ஆள் வந்து கதவைத்தட்டி “அம்மா இல்லீங்களா?” என்றான். “இருக்கிறாள்” என உள்ளே சென்று சொன்னேன். அருண்மொழி வந்ததும் “மேடம் எங்க கிட்ட பல இன்வெஸ்ட்மெண்ட் பிராஜக்ட்ஸ் இருக்கு. இப்ப பாத்தீங்கன்னாக்க….”

முந்தைய கட்டுரைஇருத்தலியலும் கசாக்கின் இதிகாசமும் – கஸ்தூரிரங்கன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 76