துளிக்கனவு

dreams
Dmitry Stepanoff

கடந்த ஐந்தாண்டுகளாகவே எனக்கு ஒரு வழக்கம் உள்ளது. காலையில் எப்போது எழுந்தாலும் சரி பத்துமணி வாக்கில் ஒரு குட்டித்தூக்கம் வரும். குட்டித்தூக்கம் என்றால் சரியாக பத்துநிமிடம். எழுதிக்கொண்டோ வாசித்துக்கொண்டோ இருப்பேன். கண்கள் தளரும், ஆரம்பத்திலெல்லாம் அதைக் கடக்க முயல்வேன். ஆனால் மூளை நின்றுவிட்டிருக்கும்

எழுந்துசென்று கண்ணை மூடிக்கொண்டு படுப்பேன். உடனே தூக்கம் வந்து மூடிவிடும். ஆழமான தூக்கம் அல்ல. சூழ்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் ஓசைகள் மறையும். ஆனால் இசை வலுப்பெற்று மிகக்கூர்மையாக ஒலிக்கும். ஒரு குட்டிக்கனவு வந்துசெல்லும். விழித்துக்கொள்வேன். மனம் இளகி நெகிழ்ந்து உருமாறும் ஜெல்லி போலிருக்கும். நினைவுகள் ஒன்றுடன் ஒன்று மயங்கி எங்கிருக்கிறோம் என்றே தெரியாமல் சிலநிமிடங்கள். அவ்வளவுதான்.

இந்தக்கனவுகள் எல்லாமே படைப்புக்கு உதவியிருக்கின்றன. வெண்முரசு எழுதிக்கொண்டிருந்தேன் என்றால் வெண்முரசை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத இடத்தில் திறப்பவையாக இருக்கும் அவை. பல சிறுகதைகள் முழுக்கதையாகவே தோன்றியிருக்கின்றன.  பல கதாபாத்திரங்கள் நேரில் உரையாடியிருக்கின்றன. ஆனால் ஆச்சரியமென்னவென்றால் ஒரு கெட்ட கனவுகூட கிடையாது. அச்சமோ பதற்றமோ இல்லை.

பின்னர் இந்த இனிய பத்துநிமிடத்திற்காக ஏங்க ஆரம்பித்தேன். ஆகவே சரியாக அந்தநேரத்தில் படுத்துவிடுவேன். அந்த இனிமை படுக்கும்போதே அமைந்துவிடும். அனேகமாக சாரதா நகர் அப்போது மிகமிக அமைதியாக இருக்கும். மையத்தமிழகத்தில் எப்போதும் எங்கும் ஒலிக்கும் சினிமாப்பாடல்கள், தொலைக்காட்சி ஓசைகள் இங்கே கேட்பதில்லை. வீட்டு ஒலியை வெளியே கேட்கச்செய்வது அநாகரீகமாகக் கருதப்படுகிறது. ஆகவே குடியிருப்புப் பகுதிகளில் காற்றும் பறவைகளும் மட்டுமே ஒலித்துக்கொண்டிருக்கும்.

பத்துமணிக்கு வீடுகளில் வயதான பெண்கள் மட்டும்தான் இருப்பார்கள். காற்றில் தென்னை ஓலைகள் அசையும் ஒலியை, காகங்களும் அணில்களும் எழுப்பும் குரலாடலை கேட்டுக்கொண்டிருக்கையில் வாழ்க்கையின் பொருளில்லாத இனிமை மட்டுமே நெஞ்சில் இருக்கும். இருத்தல் என்பது எத்தனை எடையற்றது. மிக எளிதாகக் கனவுகளின் பெட்டியைத் திறந்துகொள்ளமுடியும்

பின்னர் கண்டுகொண்டேன் இந்த மனநிலையுடன் கடந்தகால ஏக்கம் சரியாக இணைந்துகொள்கிறது என. ஜேசுதாஸின் எழுபதுகளுக்கு முன் வந்த மலையாளப்பாடல்கள். அப்பாடல்கள் நான் தூங்கத்தொடங்கும்போது மிக ஆழத்திற்குச் சென்றுவிடுகின்றன. அங்கிருந்து ஒலிக்கின்றன சென்றகால முகங்கள், இடங்கள், வாசனைகள், குரல்கள். சென்றகாலத்தின் அபாரமான ஒளி.

நண்பரிடம் சொன்னேன். ‘இது சர்க்கரை நோயேதான். மூளைக்கு சர்க்கரை கம்மியாகிறது” என்றார். உடனே சென்று சோதனைசெய்யச்சொல்லி வற்புறுத்தினார். மருந்துகொடுத்து இதை இல்லாமலாக்கவேண்டுமா என எனக்குத் தயக்கம். ஆனால் அருண்மொழி என்னை இழுத்துச்சென்றாள். சர்க்கரை இல்லை. ‘You are as fit as a Thamburu I hate fiddle’ என்றார் தெரிசனங்கோப்பு டாக்டர் மகாதேவன்

“தூக்கமின்மையாக இருக்குமோ?” என்றார் இன்னொரு நண்பர். “நான் எப்படியும் எட்டுமணிநேரம் தூங்குகிறேனே?” என்றேன். “ஆழ்ந்த தூக்கமாக இருக்காது. குரட்டைப்பிரச்சினை இருக்கும். ஆகவே ரெம் என்னும் துரிதகண்ணசைவுப்பொழுது அதிகரித்திருக்கும். ஆழ்ந்த துயில்நேரம் குறைந்திருக்கும். டாக்டரைப்பாருங்கள். தூக்கமின்மையால் சோர்வு நினைவுக்குறைவு எல்லாம் வரும்”

நான் திருவனந்தபுரம் சென்று துயில்நிபுணரிடம் என்னை ஒப்படைத்தேன். அம்மையார் என் நல்ல வாசகி. ஒழிமுறியைப்பற்றி புளகாங்கிதம் கொண்டு பேசினார். என்னை இரவு துயிலவிட்டு உடலில் பலவிதமான மின்பொருட்களையும் மின்கடத்திகளையும் பொருத்தி சோதனைசெய்தார். “மெல்லிய குரட்டைதான். தூக்கம் மிகச்சிறப்பாக இருக்கிறது. சொல்லப்போனால் இந்த அளவு தூக்கம் வருவது விழித்திருக்கும்போது கடுமையாக வேலைசெய்வதனால்தான்”

அப்படியென்றால் இது என்ன? கடைசியாக ஒருநண்பர் சொன்னார் “ஒன்றுமில்லை, வயோதிகம்தான்” நான் “எனக்கு ஐம்பத்தைந்துதானே?” என்றேன். “ஆமா, இப்போதே அந்த அடையாளங்கள் ஆரம்பித்துவிடும். நீங்கள் அதைத்தான் கண்டுபிடித்து பெரிதாக்கி ரசிக்கிறீர்கள். வயதானவர்களுக்குத்தான் இப்படி அடிக்கடி குட்டித்தூக்கம் வரும். அதில் பெரும்பாலும் இனிமையான கனவுகளும் கடந்தகாலத்தைய இனிய நினைவுகளும் வரும். அது அவர்களை உற்சாகப்படுத்தும். முதுமையை ஏற்றுக்கொள்ள உள்ளம் போடும் நாடகம் இது. கவலை பதற்றம் எல்லாம் இதன்வழியாக இல்லாமலாகும். மிகமுதியவர்கள் எந்த கவலையும் இல்லாமல் இருப்பது இதனால்தான்”

ஆச்சரியமாக இருந்தது. எனக்கு ஏற்கனவே எந்தக்கவலையும் இல்லை. “நீங்கள் இதை ஒரு சுயமனவசியமாக பழகிக்கொண்டிருக்கிறீர்கள். அல்லது ஒருவகை தியானம் இது” என்றார் நண்பர் ஒருவர். “ஆனால் தியானம் வேறு செய்கிறேனே” அவர் “அது வேறு. இது ஒரு வகை மனப்பயிற்சிதான். தற்செயலாக நடந்ததை நீங்கள் கண்டுபிடித்து வளர்த்துக்கொண்டீர்கள்” என்றார்

ஆனால் என்னவானால் என்ன இனியகனவுகள் போல படைப்பூக்கம் கொண்டவை வேறில்லை. அவை அறியாத நூல் ஒன்றை புரட்டி முன்பில்லாத கதைகளை அளிக்கின்றன. இத்தனை ஆயிரம் பக்கங்கள் வெண்முரசு எழுதியபின்னரும் கனவுகளுக்குச் சலிக்கவில்லை.புத்தம்புதிய கதைகளை கண்டடைகிறேன் அங்கே. குறைந்தது இதை எழுதிமுடிக்கும்வரையாவது இந்த வாசல் திறந்துகொண்டே இருக்கவேண்டும். அன்றாடம்.

முந்தைய கட்டுரைசன்னிபாதை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 89