வெண்முரசு எழுதத்தொடங்கியபின் நான் சிறுகதைகள் எழுதுவது மிகவும் குறைந்துவிட்டது. வெண்முரசு நாவல்களின் இடைவெளியில்தான் அவ்வப்போது சிலகதைகளை எழுதுகிறேன். சென்ற இரண்டாண்டுகளில் அவ்வாறு எழுதிய 10 கதைகள் இதிலுள்ளன. இவை வெவ்வேறு வகையான சித்தரிப்புகள் கொண்டவை. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் என் ஆழத்தில் எப்போதுமிருக்கும் தேடலையே இவை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன என்று தோன்றுகிறது.
அதை அடையாளம் காணும் வாசகர் வட்டம் எனக்கு உருவாகியிருப்பதை அறிகிறேன். அவர்களுக்கு ‘உச்சவழு’வும் ‘சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதலும்’ ஒரே கேள்வியை கொண்டவை என புரியும். ‘கெய்ஷா’வும் ‘ஒரு கணத்துக்கு அப்பாலும்’ ஒன்றின் இரு பக்கங்களே என தெரியும்.. அவர்களுடனான நுட்பமான உரையாடல்களே இக்கதைகள். பிறரை இவ்வுலகுக்கு நான் இழுக்கவிழைகிறேன், அவ்வளவுதான்
என் கதைகள் எவையும் அன்றாடவாழ்க்கையின் உணர்வுநிலைகளைச் சார்ந்தவை அல்ல. எளிய மெல்லுணர்வுகள் என எவையும் இதுகாறும் என்னால் எழுதப்படவில்லை என்பதைத் திரும்பிப்பார்க்கையில் தெளிவுறக்காண்கிறேன். என் ஆக்கங்கள் எப்போதுமே ஒட்டுமொத்தமாக வாழ்க்கையை நோக்குபவை, சிறுகதைகள் அந்நோக்கை ஒரு கணத்தில் குவிக்கமுயல்பவை. ஆன்மிகமான தத்தளிப்பும் தேடலும் கண்டடைதலும் மட்டுமே என் புனைவுகளின் உள்ளடக்கம். இவையும் அவ்வாறே.
இத்தொகுதியை என் பிரியத்திற்குரிய ஜா..ராஜகோபாலனுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். என் நண்பராகவும் நல்ல வாசகராகவும் அருந்துணையாக இருந்துவருபவர் அவர்
ஜெ
நற்றிணை வெளியீடாக வந்துள்ள உச்சவழு [சிறுகதைத் தொகுதி] முன்னுரை