இந்தத் தொகுதியில் உள்ளவை நான் வெவ்வேறு காலகட்டங்களில் வாசகர்களுடனான உரையாடலில் மதம், ஆன்மிகம், பண்பாடு குறித்து எழுதிய கட்டுரைகள். நான் வளர்ந்த குமரிமாவட்டச் சூழல் இடதுசாரித்தனம் நிறைந்தது. ஆகவே மரபு எதிர்ப்பையே நான் இளமைமுதல் அறிந்து வளர்ந்தேன்.
இளமையில் சந்தித்த தனிவாழ்க்கை நெருக்கடிகள், குறிப்பாக நண்பனின் தன்னிறப்பை ஒட்டிய கொந்தளிப்பும் தனிமையும், என்னை ஆன்மிகம் நோக்கித் திருப்பியது. என்னுள் எழுந்த வினாக்களுக்கு மார்க்ஸியமோ மேலைநாத்திகமோ மறுமொழி சொல்வதில்லை என்று கண்டுகொண்டேன். மதம் நோக்கித் திரும்பினேன்.
ஆனால் நான் ஒருபோதும் மதநம்பிக்கையாளனாக ஆகவில்லை. மதத்தில் என்னை கரைத்துக்கொள்ளவில்லை. நான் மதத்தை ஒரு திரள் அடையாளமாக, விடைகளின் தொகுப்பாக, மூதாதையரின் வழிகாட்டுதலாக பார்க்கவில்லை. இதுவரை இங்கு வாழ்ந்த மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் பட்டவையும் அறிந்தவையும் மொழிவடிவமாகவும் குறியீட்டுவடிவமாகவும் சேமிக்கப்பட்டுள்ள ஒரு களஞ்சியமாகவே மதத்தை நான் பார்த்தேன்.
ஆகவே மதத்தை நான் அறியமுற்பட்டேன். மதநூல்களை வாசித்தேன். பக்தியுடன் அல்ல. நோயில் இருப்பவன் மருந்துக்குறிப்பை வாசிப்பதுபோல. அவற்றைப் புரிந்துகொள்ள முயன்றேன். அவற்றிலிருந்து ஞானிகளை நோக்கிச் சென்றேன். போலிகளும் தன்னைக்கண்டடையாதவர்களும் தனியர்களுமே நான் கண்டவர்கலில் மிகுதி. ஆனால் உண்மையிலேயே ஞானிகளை சந்திக்க எனக்கு வாய்த்தது.
நான் இந்நூலில் பேசியுள்ளவை அனைத்தும் நான் என் அறிதலால் உணர்ந்தவை. அவற்றின் முக்கியத்துவம் இதுவே. வாழ்நாள் முழுக்கத் தேடியவன் கண்டடைந்தவை இவை. கண்டடையாத தவிப்பும் இவற்றில் இருக்கக்கூடும்.
மருந்துக்களை மருத்துவர்தான் கொடுக்கமுடியும். ஆனால் சிறிய நோய்களுக்கு நாம் நம் வாழ்க்கையில் சோதித்துப்பார்த்த சிறிய மருந்துக்களைச் சொல்லாமலும் இருக்கமுடியாது.. இது என் கைமருந்து
இந்நூலை பலவகையிலும் எனக்கு ஊக்கமும் உதவியும் செய்துவரும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
ஜெயமோகன்