வலசைப்பறவை

valasai-paravai

அரசியல் கட்டுரைகளை எழுதுவது  இணையத்திற்கு நான் வந்தபின்னர்தான் தொடங்கியது. இணையம் ஒரு பெரிய உரையாடல்வெளி. நாள்தோறும் அதில் எழுத முடிகிறது. நேரடியாக எதிர்வினைகள் வருகின்றன. எந்த ஊடகத்தடையும் இல்லை. அமைப்புக் கட்டாயங்களும் இல்லை. ஆகவே எழுதுவதைத் தவிர்க்க முடியாது. பெரும்பாலும் இவை எதிர்வினைகள் மட்டுமே.

ஏற்கனவே என் அரசியல்கட்டுரைகள் ‘சாட்சிமொழி’ என்னும் தொகுதியாக வெளிவந்துள்ளன. இது இரண்டாம் தொகுதி. இதுதவிர அண்ணா ஹசாரே குறித்த கட்டுரைகள் அனைத்தும் ஒருதொகுதியாக அண்ணா ஹசாரே, ஊழலுக்கு எதிரான போராட்டம் என்னும் நூலாக வெளிவந்துள்ளன. தேர்தலரசியல் குறித்த அடிப்படைகளைப் பேசும் ‘ஜனநாயக் சோதனைச்சாலையில்’ தினமலர் வெளியீடாக வந்துள்ளது.

அரசியல்கட்டுரைகளை எழுதுவதில் ஒரு நெறியை வைத்திருக்கிறேன். அதாவது எதற்கும் உடனடியாக எதிர்வினை ஆற்றுவதில்லை. காரணம் அந்த விவாதம் சூடாக இருக்கையில் வெறும் சண்டையையே உருவாக்குகிறது. அனைத்தும் சற்று ஓய்ந்தபின் எழுதுவதே என் வழக்கம். விதிவிலக்குகளும் உண்டு. அதோடு நான் வேறேதையும் எழுத முயன்றுகொண்டிருக்கும் நேரமாக அது இருக்கக் கூடாது. எதுவாக இருந்தாலும் புனைவெழுத்தைவிட முக்கியமானதல்ல எனக்கு.

இக்கட்டுரைகள் வழியாக தெரியும் நான் இந்தியதேசியத்தில் நம்பிக்கை கொண்டவன். அதை ஒரு மத நம்பிக்கையாக அல்ல, ஒரு நடைமுறைவாய்ப்பாகவே கருதுகிறேன். மாபெரும் மானுடப்பரவல் கொண்ட இந்த நாடு ஒன்றாக இருந்தாலொழிய வளர முடியாது, பிரிந்தால் குருதிப்பெருக்கே எஞ்சும் என நம்புகிறேன். ஆகவே முதன்மையாக பிரிவினை அரசியல் பேசி சுயலாபம் தேடும் குழுக்களை, ஐந்தாம்படையினராகச் செயல்படும் அறிவுஜீவிகளையே முதன்மையாக எதிர்கொள்கிறேன். தமிழ் அறிவுப்புலத்தில் மிகப்பெரிய சக்திகள் இவர்களே

மற்றபடி என் எதிர்வினைகள் எல்லாமே ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு பொதுக்குடிமகனுடையவை மட்டுமே. சாமானியனாக நின்று வரலாற்றை நோக்குவதே என் வழி. சாமானியனைவிட மேலதிகமாக என்னிடமிருப்பது தொகுத்துநோக்கும் மொழி மட்டுமே

saran

இந்நூலை என் நண்பர் சரவணன் விவேகானந்தன் [சிங்கப்பூர்] அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.

ஜெ

[நற்றிணை வெளியீடாக வந்துள்ள வலசைப்பறவை நூலுக்கான முன்னுரை]

முந்தைய கட்டுரைசன்னி கேரளம்
அடுத்த கட்டுரைவாஞ்சி -இந்துவின் மன்னிப்புகோரல்