பண்பாடுதான் எழுத்தாளனின் பேசுபொருள். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் பண்பாடும் ஆழ்மனமும் கொள்ளும் பூசலும் முயக்கமும். அது எவ்வளவு எழுதினாலும் தீராத பெருஞ்சிக்கல். எழுதிக் குவித்தமைக்கு வெளியே பேசுவதற்கும் எதிர்வினையாற்றுவதற்கும் நாள்தோறும் வந்துகொண்டிருக்கின்றன குழப்பங்களும் கேள்விகளும்.
ஆசாரங்கள் தேவையா? பண்டிகைகள் கொண்டாடத்தான் வேண்டுமா? குடும்ப உறவில் ஏன் இத்தனை வன்முறை? தற்கொலை தியாகமாக ஆகுமா? செய்தொழிலைப் பழிக்கலாகுமா? நம்பண்பாட்டுக்கென உடை உண்டா? பெண்களின் கற்பு நிலையாக இருக்கவேண்டுமா? பண்பாட்டை சுமக்கத்தான் வேண்டுமா?
எனக்கு வந்த கடிதங்கள் எழுப்பிய இவ்வினாக்களுக்கு முடிந்தவரை நேரடியாகப் பதில்சொல்ல முயன்றிருக்கிறேன். இத்தகைய கேள்விகளுக்கு சமூகவியல், உளவியல், மானுடவியல் சார்ந்த பல்வேறு மேலைநாட்டுக் கோட்பாடுகளை கொண்டு விளக்கம் அளிக்க முயல்வதே அறிவுஜீவிகளின் வழக்கம். நான் அறிவுஜீவி அல்ல என்பதனால் என் வாழ்க்கையில் நான் அறிந்ததைக் கொண்டு பதில் காண முயன்றிருக்கிறேன். எழுத்தாளன் என்பதனால் மேற்குறிப்பிட்ட அத்தனை அறிவுத்துறைகளின் ஆய்வுமுறைகளையும் பயன்படுத்திக்கொண்டு அந்த அறிதலை நிகழ்த்தியிருக்கிறேன்.
நம் பண்பாடு குறித்து அரசியல்வாதிகள்தான் எப்போதும் பேசிவந்திருக்கிறார்கள். அவர்கள் பண்பாடுபற்றிப் பேசுவது அதிலிருந்து அதிகாரத்தை உருவாக்குவதற்காக மட்டுமே. எழுத்தாளனின் நோக்கம் அது அல்ல. அதிலிருந்து வாழ்க்கைக்கான வழிகளை கண்டடைவது மட்டுமே. அவ்வகையில் இந்நூல் ஒரு வரைபடம். அடர்காட்டில் வழிதேடிச் செல்வதற்குரியது. ஆகவே இது பிறவற்றிலிருந்து மாறுபடுகிறது, பயனுள்ளதாகிறது என நினைக்கிறேன்.
இந்நூலை என் அனைத்துச்செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக உள்ள கோவை நண்பர் ‘டைனமிக்’ நடராஜன் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
ஜெயமோகன்
***
[நற்றிணை வெளியீடாக வந்துள்ள சொல்லிமுடியாதவை நூலுக்கான முன்னுரை]
***