பத்து நாட்கள்

kovai

இனிய ஜெயம்,

புத்தக திருவிழா முடிந்து, வந்ததும் மருத்துவமனை திருவிழா  அண்ணனுக்கு கண்சிகிச்சை. தம்பி மகனுக்கு டெங்கு. அனைவரையும் அதற்கான இடங்களில் சேர்த்துவிட்டு சற்றுமுன்புதான் ஆசுவாசமாகி அமர்ந்தேன்.

சற்றே நினைவை மீட்டினேன். நண்பர்களுடன் , புதிய முகங்களுடன் ,புதிய வாசகர்களுடன்  இனிக்க இனிக்க பின்மறைந்தது கடந்த பத்து நாட்களும்.  இம்முறை கோவை புத்தக விழாவில்  வாசகர் வரத்து குறைவு என்று பொதுப் பேச்சு. அங்கே சென்னையிலும் அவ்வாறே எனக் கேள்விப்பட்டேன்.  பண்பாட்டுக் காரணிகளை தவிர்த்து விட்டு , வணிக காரணிகளை மட்டுமே கருத்தில் கொண்டால் , முதல்  குறை  விளம்பரம்.  கோவை சென்னை என எந்த நிலம் எனினும்  அந்த ஊரை சுற்றி உள்ள குறைந்த பட்ச்சம் பத்து சிறு நகரங்களில் , அந்தந்த நகரங்களின் பேருந்து ,தொடர்வண்டி நிலையங்கள் முன்பும், பள்ளிகள் பொது ஜனம் கூடும் முக்கிய இடங்கள் முன்பும் பதாகைகள் வைக்கப்பட வேண்டும்.

இரண்டாவது குறை அரங்க அமைப்பு.    பொது தேர்வு ,பள்ளி கல்லூரி  நூல்களுக்கான கடைகளை  எந்த சமரசமும் இன்றி அரங்கத்தின் இறுதி மூலைக்கு  அனுப்பிவிட வேண்டும்.  பொது வாசகர்களுக்கான  நூல்கள் உள்ள கடைகள் ,  முன் வரிசைக்கு வரவேண்டும். அந்த வரிசையில் ஆங்காங்கே தீவிர இலக்கிய , அறிவு துறை சார்ந்த நூல்களை விற்கும் கடைகள் அமைய வேண்டும்.  அரங்கத்தில்  வலது மூலையில்  கழிப்பறை வசதிகள் இருக்கும் எனில் , இடது மூலையில்  பொம்மைகள் ,குழந்தை புத்தகங்கள் விற்கும் கடைகள் ,உணவகங்கள் வரவேண்டும்.  குலுக்கல் முறை ,முன்னுரிமை இவற்றை தவிர்த்து இந்த ஒழுங்கில் அரங்கம் அமைந்தால் ,  அனைவருக்குமான வணிகம் சீராக அமையும்.   புத்தக சந்தை என்பதே  பொதுக்கல்விக்கு வெளியே உள்ள அறிவு மற்றும் கலை  இயக்கங்களை பொது மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பண்பாட்டு நிகழ்வு  எனும் பிரக்ஞ்சை  திருவிழா அமைப்பாளர்களுக்கு முதலில் பதிய வேண்டும். இந்த மையத்தில் நின்றே விழா சார்ந்த அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட வேண்டும்.

எந்த டிஜிட்டல் தொழில் நுட்பமும், அதற்க்கு முந்தய ஒன்றினை  மிக விரைவில் இடம் பெயர்க்கும்.  மாறாக  கிண்டில்  வந்து பல ஆண்டுகள் கடந்தும் ஒவ்வொரு சந்தையிலும் கிண்டில் ஒரு கடை எடுத்து தனது வாடிக்கையாளர்களை தேடிக்கொண்டு இருக்கிறது.  கிண்டில் வந்து விட்டது இனி புத்தகங்கள் இருக்காது  எனும் முழக்கம் மூன்று வருடமாக கேட்டுக்கொண்டு இருக்கிறது.   ஆக  கிண்டிலும் இருக்கும் ,புத்தகங்களும் இருக்கும் என்பதே யதார்த்தம். தேவைக்கு நூறு புத்தகங்கள் கூட அச்சிட்டு கொள்ளும் வசதி வந்து விட்டது.  எனவே புத்தக வணிகம் குறையலாமே அன்றி  எங்கும் காணாமல் போய் விடாது .  கிண்டில் ,இனைய நூல் விற்பனை முறை இவற்றை தாண்டி புத்தக விழாக்கள் சிறக்க வேண்டும் எனில் ,  எந்த ஊர் எனினும்  மெரினா பீச் பஜ்ஜி கடை போல தினமும் சந்தை நடத்தாமல் ,வருடம் ஒரு முறை மட்டுமே இந்த திருவிழாவை முன்னெடுக்க வேண்டும்.

இது  பொது தளத்தில் , கோவையில் மட்டும் எனில்  விஜயா பதிப்பகம் திரு வேலாயுதம் அவர்கள் செய்தது புத்தக விழா எனும் பண்பாட்டு நிகழ்வுக்கே எதிரானது.  அவருக்கும் கோவை புத்தக சந்தை அமைப்பாளர்களுக்கும் என்ன சிக்கல் நான் அறியேன். எதுவாக இருப்பினும் அதை கலந்து பேசி தீர்த்துக் கொள்வதே அறிவுடைமை. இந்த பத்து நாளும் அவர் தனியாக ஒரு புத்தக திருவிழா நடத்தி இருக்கிறார்.  எந்த வகையில் புத்தக விற்பனை நடந்தாலும் நான் அதன் ஆதரவாளன் , மாறாக விஜயா பதிப்பகம்  இந்த விழாவுக்கு போட்டியாக தனது விற்பனையை பெருக்குவதற்கு பதில் ”எதிராக ” நின்று வணிகம் செய்திருக்கிறார். இத்தகைய விஷயங்கள் வணிக லாபம் ,தன்முனைப்பு  இவற்றின் மேல் நிலைபெறுவது.  இத்தகைய விஷயங்கள் பேசி களையப்பட வேண்டும்.

இறுதி சனி ஞாயிரு வணிகத்தில், சனிக்கிழமை வணிகத்தில் அடி .புத்தக விழா நுழைவு வாயில் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்களின் கட்சி கூட்டம்.  அனைத்தையும் தாண்டி  ஜெயமோகன் நூல்கள் கடையில் சிறப்பான விற்பனை.  நமது நெருங்கிய நண்பர்கள் ,  ஜெயமோகன் தளம் வாசிப்பவர்கள் இவர்கள் முப்பது சதமான வணிகத்துக்கு காரணம். மீதி எழுபது சதம் புதிய வாசகர்கள். உதாரணமாக விஷ்ணுபுரம் நாவலை மட்டும் எடுத்துக் கொள்வோம். நமது நெருங்கிய வாசகர்கள் அனைவருமே அதை வாசித்திருக்கிறார்கள்  . எனவே  விற்கும்  விஷ்ணுபுரம் நாவல் எல்லாம் புதிய வாசகர்கள் வாங்குவதே.  இதை அடிப்படையாகக் கொண்டால் நமது கடையில் விற்ற விஷ்ணுபுரம் நாவல் மட்டுமே இருபது. சந்தையின் பிற கடைகளில் மொத்தமாக சேர்த்து ஒரு இருபது என யூகிக்கலாம் .ஆக இந்த பத்து நாளில் நாற்பது புத்தகம். வெளியாகி இருபது ஆண்டுகள் தொடப்போகும் ஒரு நூல். அடுத்த நிலையில் காடு கொற்றவை ,இன்றைய காந்தி. மூன்றாவதாக பின் தொடரும் நிழலின் குரல்.  அட்டைப்படத்தின் வசீகரத்தால் பொது வாசகர்கள் தொடர்ந்து எடுத்து சென்ற நூல் இரவு நாவல்.  நேர் எதிராக லோகி நூல் ஒன்றே ஒன்றுதான் விற்றது ,அதை வாங்கியவர் பதாகையில் இருந்த நித்ய சைதன்ய யதியை காட்டி, அவர்தானே இவர் என லோகியை காட்டினார். ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி  எனும் மெய்மை நோக்கில் நின்று ஆமாம் என தலை ஆட்டினேன்.  வாசகரை ஏமாற்றும் நூல் ஏதேனும் நீங்கள் எழுதி இருக்கிறீர்களா என்ன?

புதிய வாசகர்கள் ,நண்பர்கள் ,எழுத்தாளர்கள் சந்திப்பு என உற்சாகமான தினங்கள். ஜடாயு .அனிஷ் கிருஷ்ணன் ,போகன் ,  மரபின் மைந்தன் , கார்த்திகை பாண்டியன் ,  நாஞ்சில் என யாரேனும் ஒரு ஆளுமையை தினமும் சந்த்தித்து உரையாட நேர்ந்த மகிழ்ச்சியான தினங்கள். குறிப்பாக பேராசிரியர் க மணி அவர்களை சந்தித்தது.   ரிச்சர்ட் டாக்கின்ஸ் இன்  தி பிளைண்ட் வாட்ச் மேக்கர் நூலை முகாந்திரமாகக் கொண்டு  பரிணாமத் தச்சன் ,  ஸ்தீபன் ஹாக்கின்ஸ்  இன்  காலத்தின் விரிவான வரலாறு நூலை முகாந்திரமாகக் கொண்டு காலம் ,  மூளை ,ஜீனோம் ,அணு , என பாப்புலர் சைன்ஸ் நூல்கள் பல எழுதி இருக்கிறார் [அபயம் பதிப்பகம் ] அனைத்தையும் வாசித்திருக்கிறேன்.  தமிழ் மட்டுமே அறிந்தவன்  சமகால அறிவுத் துறை  எந்த அளவு முன் சென்றிருக்கிறது என்பதை அறிவதில் பின் தங்கி விடாமல் இருக்க செய்யும் ,சரளமான வாசிப்பு அனுபவம் தரும் நல்ல நூல்கள் அவை.

அவரது உரை முடிந்து ,கேள்வி பதில் நேரத்தில் ,பாதியில் தான் உள்ளே போனேன்.

ஏதோ ஒரு கேள்விக்கு இவ்வாறு பதில் சொல்லி முடித்துக்கொண்டு இருந்தார் ,”இது என்ன என அறியும் ஆவல் கொண்ட யாரும் பாமரன் அல்ல ”

பல கேள்விகள் ஊடாக  ஒழுங்கு குலைந்து  உருவாகி வந்த இந்த அசேதன பிரபஞ்சம் , அதிலிருந்து  ஒரு ஒழுங்கு உருவாகி  அதன் முகமாக முன்வந்திருக்கும் உயிர் , அறிபவன் அறிபடு பொருள் எனும் அடிப்படையின் மேல் நிற்கும் ஆய்வுகள் , உருவாய் அருவாய் ஒரே சமயம் தோற்றம் காட்டும் அணு என விரிவாக ஒரு தத்துவப்பாடமே நிகழ்த்தினார்.  ஒருவர் கேட்டார்  ஒரே நேரத்தில்  உருவாகவும் ,அருவாகவும்  இருக்கும் ஒன்றினை விஞானம் எவ்வாறு வரையறை செய்யும் ?  பேராசிரியர் பதிலளித்தார் ” அறிபவனும் அறிபடு பொருளும் வந்து நிற்கும் இறுதி சிகரமுனை இதுதான். அடுத்த காலடி வைக்க இடம் இல்லை. இரண்டாகவும் தோற்றம் தரும் அது என்ன என விஞ்ஞானம் இனி ஊகம் நிகழ்த்தும். நமது தத்துவ மரபைக் கொண்டு நாம் அதை பிரம்மம் என அழைக்கலாம் ” என்றார்.  பிரம்மம் எனும் பெயர் காதில் விழுந்ததும் ஒரு சில்லுண்டி பெரிசு  பாய்ந்து  எழுந்து ”ஐயா எனக்கொரு கேள்விங் ….. முஸ்லிம்க்கு குரான் , க்ரிஸ்டின்க்கு பைபிள் , அப்டி இந்து மதத்துக்கு  ஒரு புத்தகம்  என்னங்கய்யா ?” பேரா ” ஒண்ணு இல்ல மூணு இருக்கு ,பிரம்ம சூத்ரம் ,உபநிஷத் ,பகவத் கீதை ”  அந்த பெரிசு ”ஐயா கீதைல இந்த நாலு வர்ணம்….” எனத்துவங்க  மைக் பிடுங்கப்பட்டு உரையும் அத்துடன் நிறைவடைந்தது. பேராசிரியர் மணியை தேடிச்சென்று அறிமுகம் செய்து கொண்டேன். இந்த கருப்பு உடை காட்டானை கண்டு சற்றே பீதி அடைந்தார் . அருகில் இருந்த புவியரசு நல்ல பையன்தான் என சர்டிபிகேட் தர .சற்றே வெட்க சிரிப்புடன் கைகுலுக்கினார்.   முன்வரிசை இல்லத்தரசி ”வாங்கங் ….பிக்பாசு  ஆரம்பிச்சிடும்  என உசுப்பேத்தி தனது பதியை இழுத்துக்கொண்டு போனாள் .

நான் தொலைக்காட்சியை துறந்து ஒரு வருடம் ஆகிறது. பெரிய காரணங்கள் ஒன்றும் இல்லை.  அது எனக்கு எதையும் அளிப்பதில்லை. கூடுதலாக எனது நேரத்தை பிடுங்கி கொள்கிறது. உபரியாக எனக்குள் உறங்கும் மண்ணாந்தையை தட்டி எழுப்பி விடுகிறது. மாறாக இந்த வருடம் நான் தேடிக் கண்டடைந்த கவிதைகள் என் ஆயுளுக்கும் என் உடன் வரும் கவிதைகள் ஒரு நூறு கவிதைகளாவது தேறும்.  எனது வாட்சப் தோழமைகளுக்கு  அநேகமாக இந்த வருடம் முழுதும் நான் ரசித்த கவிதைகளை பகிர்ந்திருக்கிறேன் .  இன்னும் வாசிக்காத இருபது கவிஞர்கள் பெயர் குறித்து வைத்து அவர்களின் கவிதைகளை சேகரித்துக்கொண்டு இருக்கிறேன். இக் கணம் யோசிக்க இதுதான் நான் என்று என்னைக் குறித்தே மகிழ்ச்சியாக இருக்கிறது.

அன்றுதான் முதன்முறையாக பிக்பாஸ் பார்த்தேன்.  சராசரிகள்  இந்த கேளிக்கையில் திளைப்பதில்  எந்த ஆச்சர்யமும் இல்லை. தீவிர இலக்கியம் எனும் தளத்தில் இயங்கும் பல கூரிய மனங்களும் இதில் திளைப்பதுதான் எனக்கு ஆச்சர்யம்.  நான் கேளிக்கை எதற்கும் எதிரானவன் அல்ல. ஆனால் கேளிக்கையில் தொடர்ந்து கிடந்தது திளைக்கும் மனங்கள்  தனது கூர்மையை இழந்து விடும்.  ஒரு இலக்கிய வாசகன் இந்த கேளிக்கையில் உழல ,அவன் முன்வைக்கும் அத்தனை காரணங்களை விடவும்  இலக்கியம் அளிக்கும் விவேக ஞானமும் , பிரதி தரும் இன்பம் வழியே இலக்கியம் நல்கும் இன்பமும் பலமடங்கு உயர்வானவை.  இந்த நூறு நாளுக்குப் பிறகு என்னுள் இருக்கும் மண்ணாந்தையை பிக்பாஸ் அப்படியேதான் வைத்திருக்கும். மாறாக இந்த நூறு நாளில் நான் போரும் அமைதியும் நாவலை மறு வாசிப்பு செய்தேன் எனில் அது எனக்களிக்கும் தன்னம்பிக்கையே வேறு.  இலக்கிய வாசகன் எனும் தன்னம்பிக்கை கொண்டவன் யாரும் இதைத்தான் செய்வான்.  பிக்பாஸ் பாக்காதது வழியா உன்ன புத்திஜீவியா காட்டிக்கிறியா என்றார்.  அவர் எனது நெருங்கிய நண்பர் என்பதால் உரிமையுடன் சொன்னேன் ” தமிழ்நாட்டில்  ஒரு தொலைக்காட்சியில்  சராசரிகளுக்கு எது கம்யூனிகேட் ஆகுமோ அது மட்டுமே ஒளிபரப்பப்படும். எது அதிகபட்ச சராசரிகளை ஈர்க்கிறதோ அதுவே ப்ரைம் டைமில் இடம் பிடிக்கும். நான் புத்தி ஜீவியா தெரியாது. ஆனால் நீ நிச்சயமாக அந்த சராசரிகளில் ஒருவன் ”

பொதுவாக தொண்ணூறுகளுக்குப் பிறகு தொலைக்காட்சி தொடர்கள் பிரபலமாகி பெண்கள் புத்தகவாசிப்பு என்பதில் இருந்து காணாமல் போனார்கள்.  இந்த பிக் பாஸ் அலையில் தீவிர இலக்கிய வாசகர்கள் பலர் காணாமல் போய்விடுவார்கள் என்று தோன்றுகிறது. நல்லதுதான் யார் இலக்கியத்துக்கானவரோ அவர் மட்டுமே எஞ்சும் நல்ல சோதனைக்களம்தான் இது.

போதும்  .பீமனும்  கீசகனும்   சமயலறையில் முதன்முறையாக சந்த்தித்துக் கொள்ளும் அத்யாயத்தில் நிறுத்தி விட்டு கோவை வந்தேன். நீர்க்கோலத்தை முதலில் இருந்தது துவங்கப் போகிறேன்.

கடலூர் சீனு

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 72
அடுத்த கட்டுரைசுசித்ரா பேட்டி -Asymptote