வம்சவிருட்சாவும் கோராவும் -சுசித்ரா

bhaira

“கோரா” படித்தபோது இந்தியாவிலேயே எழுதப்பட்ட சிறந்த நாவல் இதுவா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. “கோரா” என் மனதுக்கு மிக நெருக்கமான நாவல். அதில் உள்ள சமன்பாடு, மிதமை, அழகுணர்ச்சி எல்லாமே என்னை ஈர்க்கும் விஷயங்கள். இரட்டைகளால் கட்டமைக்கப்பட்ட நாவல் – கோரா x வினய், கோரா x சுசரிதா, ஆனந்தமயி x ஹரிமோஹினி, சுசரிதா x லலிதா, கோரா x கோராவின் அப்பா, பிரம்மோ x இந்து, இந்து மதம் x இந்துத்துவம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

கோராவின் கதாபாத்திரம் – அவன் எவ்வளவு உன்னதமானவன்! அவன் காணும் இந்தியாவின் சித்திரம் அலையலையாக கண்முன்னால் விரிகிறது. நீலவானத்தைப்போல் மனதை நிரப்புகிறது. ஆனந்தமயி இந்திய அன்னையே. வந்தே மாதரத்தில் வரும் துதிக்கப்படவேண்டிய அன்னையென்றல்லாமல் அன்பும் கனிவும் விசாலமனப்பான்மையும் கொண்டவள். தன்னுடைய பிறப்பைபற்றித் தெரியவரும் போது கோரா, தன்னுடைய சமரசமற்ற மரபுத்தன்மையையும், சடங்குகள் மீதும் சமூக கட்டுமானத்தின் மீதும் கொண்ட நம்பிக்கையையும்,  உலகளாவிய தரிசனம் ஒன்றை உணர்ந்து விட்டுக்கொடுக்கிறான். அவன் உள்ளம் விசும்பளவு விரிகிறது. லகுவாகிறது. எல்லாவற்றையும், எல்லோரையும், தன்னுடையதாக அவனால் ஆக்கிக்கொள்ளமுடிகிறது. இதுவே நவீன இந்தியனின் பாதை என்று தாகூர் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

உள்ளே புழுங்கிய மனம் சாளரம் திறந்து வெளிசுவாசம் பருகும் புத்துணர்வு கோராவில் உள்ளது. அதனால்தானோ என்னவோ, கோரா வம்சவிருட்சாவோடு ஒப்பிடுகையில் காலத்தில் முந்தியது என்றாலும் (1910-ல் எழுதப்பட்டது என்று நினைக்கிறேன்), கோராவே நவீன சிந்தனைகள் கொண்டதாக இருக்கிறது. வம்சவிருட்சாவின் உலகம் இன்னும் மரபானது.

வம்சவிருட்சம் படிக்கும்போது கோராவையே நினைத்துக்கொண்டேன். இதுவும் இரட்டைகளால் கட்டமைக்கப்பட்டுள்ள நாவல் (சிரோத்ரி x சதாசிவ ராவ், காத்யாயனி x நாகலட்சுமி,  நாகலட்சுமி x கருணா…). இந்த நாவலிலும் ஒரு விதத்தில் சமன்பாடு உள்ளது. ஆனால் சிரோத்ரியை ஒப்பிடும்போது கோரா விடலைப்பையனாகத் தோன்றுகிறான். சிரோத்ரி இந்த நாவலின் போக்கில் ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறதை பார்க்கிறோம். கோராவுக்கு அந்த ஆழம் இல்லை. அதுவும் எப்படிப்பட்ட வாழ்க்கை. ஒரு மகனுக்கு மேல் தனக்கு வாய்க்காது என்று தெரிந்து, அந்த ஒரு மகனும் இழந்து, அவனுடைய மனைவி மறுமணம் செய்துக்கொண்டு விலகி, தன்னுடைய மனைவியும் இறந்து, வயோதிகத்தில் பேரப்பிள்ளையை வளர்த்து ஆளாக்கும் நிர்பந்தம் வந்து – எல்லாவற்றையும் சமநிலையுடன் தாங்கிக்கொண்டு குல தருமம்; வம்ச விருத்தி என்ற தருமத்தின் நெறிப்படி சீராக வாழ்ந்து முடிக்கிறார்.

கங்கை பிரவாகத்தை பார்ப்பதுபோன்ற உணர்வை தருகிறது இந்நாவல். சிரோத்ரியின் மனம் பரந்த மனம் என்று சொல்லிவிடமுடியாது. அவர் கட்டுக்கள் உடையவர். தருமத்தின் நெறி படி நடப்பவர். ஆனால் அவரவருக்கு அவரர் கருமை வினையும் தருமமும் உண்டு, அதன் படி தான் நடப்பார்கள், அதை யாரும் தடுத்துவிட முடியாது; அதற்காக வருத்தப்பட நினைப்பது அபத்தம் என்று நினைப்பவர். அதுவே அவருடைய விசாலமானத்துக்கான அடித்தளம்.

ஆனந்தமாயியுடன், அவள் கோராவை தத்தெடுத்து தாயானபோது அடைந்த உலகுணர்வுடன் இதை ஒப்பிட்டுப்பார்க்கலாம். ஆனந்தமயி அடைந்தது ஒரு தாயின் அன்பு. எல்லாவற்றையும் தன் பெரும் சிறகில் அடக்கி அடைகாக்கும் தாய்ப்பறவையின் அரவணைப்பு. அந்த அன்பே அவளுக்கு அமைதியையும் அறிவையும் எல்லாவற்றையும் எதிர்த்து நிற்கும் மனோபலத்தையும் தந்தது. சிரோத்ரியிடம் இருப்பது ஒரு மாபெரும் குடும்பத்தின் வயதான மூத்தவருக்குள் குடிபுகுந்த எல்லாம்கண்டு உள்நிறைந்த மௌனம். அவர் ஒரு பிதாமகர், பெருந்தந்தை. தன் பெருஞ்சிறகுகளின் நிழல் மொத்த பூமி மீதும் விரிய, எங்கோ எல்லாவற்றிற்கும் மேலே, வானத்தில் பறக்கும் தனிக்கழுகு அவர். ஆனந்தமாயி காத்யாயனியை அவளுடைய மகனிடமிருந்து பிரித்திருக்கமாட்டாள். சிரோத்ரியின் பேராண்மை உலகில் அது அத்தியாவசியம்.

tagore

ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்? என்ற கேள்வியையும் இரண்டு நாவல்களும் கேட்கின்றன. வம்சவிருட்சத்தில் மூன்றுவகை திருமணங்களை நாம் காண்கிறோம். சிரோத்ரி மணம் செய்திகொண்டது, கிருகஸ்தனாக தனது செயல்களை நிறைவேற்ற, வம்சத்தை வளர்க்க. ராவ் மணம் செய்திகொண்டது, கடமையுணர்ச்சிக்காக, அன்றாட வாழ்வை எளிமையாக்குவதற்காக. அவர் கருணாவை மனம் செய்திகொள்வது அவருடைய பணிக்கு ஒரு உறுதுணை தேவை என்பதற்காக. ராஜாவும் காத்யாயனியும் திருமணம் செய்துகொள்வது காதலுக்காக.

கோராவில் இதே கேள்வி வேறுவிதமாக வருகிறது. சுசரிதா ஹரன் பாபு என்பவரை சமூகநிலை காரணங்களுக்காக மணம் செய்துகொள்ள சம்மதிக்கிறாள். லலிதாவுக்கு முதலிலிருந்தே அதில் உடன்பாடில்லை. ஏற்பாட்டு திருமணங்களை கோரா நிராகரிக்கிறது. கோராவில் நல்ல மணம் என்று சொல்லப்படுவது தோழமையும் பிரியமும் பரஸ்பர மதிப்பும் நிறைந்த மணம். ஆனால் வம்சவிருட்சம் எது ‘நல்ல மணமுறை’ என்று எந்தவித நிலைப்பாடும் எடுக்கவில்லை. எல்லாமே மூலப்பிரகிருதியின் வடிவங்களாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

ஒவ்வொரு கணத்திலும் சிரோத்ரியின் தருமம் மோதுவது மூலப்பிரக்ருதியின் விசைகளோடு தான். தன் மகனை கபிலா நதி இட்டுச்செல்வதும், தனக்கு வேலைக்காரி லட்சுமி மீது ஒரு கணத்திற்கு ஈர்ப்பு ஏற்படுவதும், காத்யாயனி விலகிச்செல்வதும், எல்லாமே இயற்கையின் நியதிகள். அதை எதிர்த்து ஒவ்வொருமுறையும் அமைதியாத சிரோத்திரி போர்தொடுப்பதை காண்கிறோம். தன்னுடைய வம்சம் என்பது இயற்கையின் மண்ணை மிதித்து மேலெழுந்த மரம். அதன் மெய்க்காப்பாளர் சிரோத்ரி. ஆகவே தன் பிறப்பை பற்றி அவருக்குத் தெரியவரும் கணம் என்பது கோரா அதாவது போன்ற புரிதலின் கணம் என்று சொல்ல முடியாது. கோராவின் புரிதல் சாளரத்தை திறக்கின்றன. விசாலத்தை நோக்கி இட்டுச்செல்கிறது அது. ஆனால் சிரோத்ரி தன் பிறப்பை புரிந்துகொள்ளும்போது வெறுமையை நோக்கி இட்டுச்செல்லப்படுகிறார். கோரா வானை நோக்கி பறக்கிறது என்றால் வம்சவிருட்சம் மண்ணில் புதைகிறது.

தான் பிறக்கக்காரணம் பொறாமையும் போட்டியும் வேட்கையும்தானா? ஆசையும் கோபமும் தானா? ராவை பார்த்து ஒரு கட்டத்தில், அவருடைய பெரும் பணியும் மூல பிரகிருத்தியின் ஒரு வடிவம் தான் என்கிறார். ஆசைக்காக மணம்செய்திகொள்வதும் ஒரு பணியை முடிக்க மணம் செய்துகொள்வது உற்றுநோக்கி பார்த்தால் வெவ்வேறல்ல என்கிறார். வம்சம் வளர்ப்பதும் அப்படித்தான் என்று அவருக்கு இப்போது புரிகிறது. அது அவரை ஆதிவெறுமையை நோக்கி கொண்டுசெல்கிறது. அங்கிருந்துதான் அவருடைய ஞானம் தொடங்குகிறது என்று சொல்லலாம். கோரா அடைந்தது உன்னதம். சிரோத்திரி அடைந்தது ஞானம்.

வம்சவிருட்சத்தின் இறுதியில் சிராத்திரி காவி உடுத்தி சந்நியாச தர்மத்தை பற்றி பேரனுக்கு உரைக்கும் பகுதியில் உணரும் வெறுமை இன்னும் முழுதாக விலகவில்லை. வாழ்வில் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக உரித்து உரித்து விலக்கிவிட்டு, இவ்வளவுதான் பார் என்று காட்டியிருக்கிறார் பைரப்பா. சிரோத்திரி கிளம்பிச்செல்லும்போது சிசு கருப்பான, இருட்டான பனிக்குடத்தை உடைத்துக்கொண்டு வெளிச்சத்துக்கு வருவது போன்ற ஒரு உணர்வு. It’s a primal story.

பைரப்பா மரபார்ந்தவர் என்று கதை காட்டிக்கொடுக்கிறது. இக்கதை 1960களில் எழுதப்பட்டது. 1940களில் நடப்பதாக கணிக்கலாம். ஆனால் கதையின் உலகம் அதை விட பழையதோ என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. நாவலில் சதாசிவ ராவ் இந்தியாவின் கலாச்சார வரலாறை வருடக்கணக்காக எழுதித்தள்ளுகிறார். அதற்காக தன் ஆராய்ச்சி மாணவியை திருமணமும் செய்துகொள்கிறார். இதனால் புண்படும் மனைவி அவர் இந்த பெருநூலை எழுதும் அதே நேரத்தில் ராமநாமத்தை பல நோட்டுபுத்தகங்கள் சேரும் அளவுக்கு  லட்சக்கணக்கான முறைகள் எழுதுகிறாள். ஒரே சொல்லை எழுதி எழுதி தன்னை அதில் கரைக்கிறாள்.

அவர் தன பணியை முடித்து இறக்கும்போது அவர் தலை சாய்ந்திருப்பது அவள் மடியில் தான். இந்தியாவின் கலாச்சார வரலாற்றுக்கு கணவர் நூல் எழுதினாலும், மனைவி அதை வாழ்ந்து காட்டியிருக்கிறார், இந்திய கலாச்சாரத்தின் சாரம் நிறைந்தது அவளுடைய செயலில் தான், என்று இந்த பகுதியை வாசிக்கலாம். இது ராவின் பணியையே ஒரு விதத்தில் கேள்விக்குள்ளாக்குகிறது. அபத்தப்படுத்துகிறது.

ஆனால் நாகலட்சுமியின் ‘வெற்றி’யை கருணாவுடனும் காத்யாயணியுடனும் ஒப்பிட்டுப்பார்க்கும் போது அவ்வளவு உவப்பில்லை. இவ்விரண்டு பெண்களும் குழந்தைகளுக்காக ஏங்குபவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ராவ் இறந்த பிறகு, கருணா உறவுகள் இல்லாமல், வாழ்வில் பிடிப்பில்லாமல் தாய்நாட்டுக்குத் திரும்புகிறாள். காத்யாயனிக்கும் ராஜாவுக்கும் பிள்ளைப்பேறு இல்லாமல், ராஜா தன் ஆண்மையை இழக்கும் நிலை வந்து, அவள் அவனுடைய அன்பை இழந்துவிடுவோமா என்று சந்தேகம் கொண்டு, உடல்தளர்ந்து, நோய்வாய்ப்பட்டு, பெற்ற மகனிடம் பேசமுடியாமல் இறக்கிறாள்

அவர்கள் ஆசைப்பட்டு தேடி அலைந்தது எதுவும் அவர்களுக்கு நிறைவை அளிக்கவில்லை என்றும், அவர்கள் வாழ்வின் விசைகளின் அபத்தத்தையும் புரிந்துகொள்ளமுடிகிறது – என்றாலும் இவ்விரண்டு சம்பவங்களும் சற்று நாடகத்தனமாக இருப்பதாகவும், நாவலின் சமனை குலைப்பதாகவும் நான் உணர்கிறேன். ஒரு வேளை இதில் ஒரு கண்டிப்பும் அறிவுரையும் நீதிக்கத்தையும் பொதிந்துள்ளதை நான் வாசிப்பதால் இருக்கலாம். இயல்பாக இல்லை. இந்த சித்தரிப்புகளும் நிலைப்பாடுகளும் இந்த நாவல் நிகழும் காலத்திற்கு ஒரு வேளை பொருந்தலாம். மற்றபடி காலத்தில் நின்று நிலைக்கப்போகும் கதையில் இந்த மரபான, சமனற்ற நிலைப்பாடு பொருந்தவில்லை என்பது என் எண்ணம்.

இது ஒரு குறை என்றோ குற்றச்சாட்டு என்றோ சொல்லவில்லை. இந்த ஒரு நாவல், சிரோத்ரி என்ற ஒரு பாத்திரம், அவர் காவி உடுத்தும் ஒரு தருணம் போதும், பைரப்பாவின் ஆழத்தை அறிய. பருவம் படிக்கப்படிக்க அந்த ஆழத்தின் மீது என்னுடைய மதிப்பு கூடிக்கொண்டுதான் போகிறது. ஒரு மாபெரும் கதாசிரியர் என்றும் என் அன்புக்குரிய எழுத்தாளர் என்றும் என் முன்னோடி என்றும் அவர் எனக்கிங்கு இருக்கிறார். ஆனால் அவர் மரபானவர். மரபின் பல இழைகளை விமர்சித்தாலும், மேலும் பல இழைகள் அவருக்குள் மூழ்கிகிடைப்பதையே அவரை வாசிக்க வாசிக்க நான் உணர்கிறேன். அதுவே ஒரு அறிதல்.

சுசித்ரா

எஸ்.எல்.பைரப்பா
அனந்தமூர்த்தி, பைரப்பா, தாகூர்
தனிப்பயணியின் தடம்
எஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது
யு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’
முந்தைய கட்டுரைஎழுத்தாளன் எனும் சொல்
அடுத்த கட்டுரைஅஞ்சலி ஹெச்.ஜி.ரசூல்