73. தெய்வமெழுதல்
தருமன் வருவதற்குள்ளாகவே விராடர் கிளம்பிவிட்டிருந்தார். ஏவலன் “அரசர் சென்றுவிட்டார்” என்று சொன்னான். “தங்களுக்காக காத்திருந்தார். பொழுதாகிறது என்றதும் கிளம்பினார். சற்றுமுன்னர்தான்.” தருமன் விரைந்து முற்றத்தை அடைந்தபோது விராடர் தேர் அருகே நின்றிருந்தார். அருகே நின்ற உத்தரனிடம் ஏதோ கையசைத்து சொல்லிக்கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் திரும்பி நோக்கியபின் பேச்சை தொடர்ந்தார். அவர் தனக்காகக் காத்திருக்கிறார் என உணர்ந்த தருமன் அருகே சென்று தலைவணங்கினார்.
“சூதர் சொல்லை நாம் ஒன்றும் செய்யமுடியாது. சூதர்சொல்லின் இயல்பு என்னவென்றால் அச்சொற்களை அவர்களின் பிற சொற்களே அழிக்கும் என்பதுதான். அதுவரை நாம் காத்திருப்போம்” என்றார் விராடர். பின்னர் தருமனை நோக்கியபின் தேரிலேறிக்கொண்டார். தருமன் ஏறி அவர் அருகே அமர்ந்ததும் தேர் கிளம்பியது. விராடர் இயல்பாக சாய்ந்துகொண்டு “நகரில் உலவும் கதைகளை வந்து சொல்கிறான் மூடன். நகரில் அப்படி எத்தனை கதைகள் அலையும்! நாம் அதை என்ன செய்யமுடியும்?” என்றார்.
உத்தரன் தன் தேரில் ஏறிக்கொள்வதை தருமன் நோக்கினார். விராடர் “கீசகனை நாம் நஞ்சூட்டி கொன்றுவிட்டோம் என்கிறார்கள். நாம் அமைத்த ஒற்றர்கள் அவனை ஒளிந்திருந்து தாக்கியதாக இன்னொரு கதை” என்றார். “அவனுக்கும் இங்கே அணுக்கப்படைகள் இருந்தன. இத்தனை ஆண்டுகள் இந்நகரை ஆண்டிருக்கிறான். அவர்கள் சொல்லத்தான் செய்வார்கள்.” தருமன் “அவர் வெல்லப்பட முடியாதவர் என இவர்கள் எண்ணியிருந்தனர். அவர்மேல் என்னென்ன காழ்ப்பும் கசப்பும் இருந்தாலும் அவர் நிஷாதர்களின் பெருமிதம். இத்தனை எளிதாக அவர் கொல்லப்பட்டது அவர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை” என்றார்.
“ஆம், அதேதான். அவன் இறந்ததுமே வீரனென்றாகிவிட்டான். அவனை எரியூட்டியபோது எழுந்த துயரை நோக்கியிருப்பீர்கள். நகரமே நெஞ்சறைந்து கதறியபடி இடுகாட்டைச் சூழ்ந்து கூடியது.” தருமன் “ஆம், எரி ஏறியபோது வீரமுரசுகள் முழங்கவில்லையே என நான் எண்ணினேன். வாழ்த்தொலிகளில் அவ்வோசை மூழ்கிவிட்டதை சற்று கழித்தே உணர்ந்துகொண்டேன்” என்றார். “அவன் இறந்ததுமே மீண்டும் பிறந்தான். அவனைப்பற்றி நாளும் கதைகள் எழுந்துவந்தன. அவனுடைய வீரம், கொடைத்திறன், அளி, பெருமிதம். இவ்வழி சென்றால் இன்னும் சில மாதங்களில் அவன் இறைவடிவாகிவிடுவான்.”
“அக்கதைகளில் பெரும்பாலானவை உண்மையானவை” என்று தருமன் சொன்னார். விராடர் வியப்புடன் திரும்பி நோக்கினார். “நாம் உயிருடனிருப்பவரை நம் தேவைக்கும் உணர்வுகளுக்கும் ஏற்பவே நோக்குகிறோம். அதற்கப்பால் அவருக்கு என இயல்புகள் பல இருக்கலாம். கீசகர் மாபெரும் படைத்தலைவன். பெருமல்லன். படைவீரர்களை மைந்தர்களென நடத்தாதவன் களம்வெல்ல முடியாது. மல்லர்கள் மானுடரை உடலால் அறிபவர்கள். அன்னையரைப்போல.” விராடர் “எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் நல்லவன் என்றால் இங்கே தீயவர் எவர்? நானா?” என்றார்.
தருமன் “உயிரோடிருத்தல் குற்றவுணர்வை உருவாக்குகிறது. இறந்தவர்பால் உளநெகிழ்வுகள் பெருக அதுவே ஏதுவாகிறது” என்றார். விராடர் பெருமூச்சுவிட்டு “நடுகல் நாட்டி வீரவழிபாடு செய்தாகவேண்டும் என்றார்கள். அது தேவையில்லை என்பது அமைச்சர் ஆபரின் கூற்று. காலப்போக்கில் அதை ஒரு பள்ளிப்படை ஆக்குவார்கள். அரசுக்கு எதிரான உணர்வுகள் எப்போதும் எவ்வரசிலும் இருக்கும். அவை அடையாளம் தேடி அலையும். அவ்வாலயம் அவர்களுக்குரிய மையமாக ஆகிவிடக்கூடும் என்றார்.”
தருமன் சிரித்து “அப்படி ஓர் அடையாளத்தை அவர்களுக்கு அளிப்பதே நல்லரசன் செய்யவேண்டியது” என்றார். விராடர் நோக்க “அவர்களின் உணர்வுகள் அவ்வழி வழிந்து செல்லட்டும். அரசே, கீசகரின் குரல் உங்கள் குலத்திற்கிணையாகவே பெரிதென்றால் மட்டுமே நாம் பிறிது எண்ணவேண்டும்” என்றார். விராடர் “ஒவ்வொன்றுக்கும் ஒரு மாற்றுச்சொல் கொண்டிருக்கிறீர்” என்றார். “இதுவும் நாற்களமே” என்றார் தருமன் சிரித்தபடி. “அரசியின் மாற்றமே என்னை அச்சுறுத்துகிறது. அவள் தன் உடன்பிறந்தவனை தெய்வமாக ஆக்கிவிட்டாள். அரண்மனையில் அவனுக்கு ஒவ்வொருநாளும் பலிகொடையும் பூசனைகளும் நிகழ்கின்றன. சூதர்கள் வந்து அவன் புகழை பாடிக்கொண்டிருக்கிறார்கள். காவியங்களே பிறந்துவிடும் போலிருக்கிறது” என்றார்.
“நீங்கள் எதை அஞ்சுகிறீர்கள், அரசே?” என்றார் தருமன். “இந்தக் கதைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையை” என்றார் விராடர். “அவனை நான் கொல்லவில்லை. ஆனால் நான் கொல்ல விழைந்தேன். கொல்லப்பட்டது என்பொருட்டே.” தருமன் “அதை அஞ்சவேண்டாம். கீசகர் கொல்லப்பட்டது குறித்த கதைகளில் நிலைக்கப்போவது ஒன்றே” என்றார். விராடர் நோக்க புன்னகையுடன் “அவரை கந்தர்வன் ஒருவன் கொன்றான் என்பது” என்றார் தருமன். “ஏன்?” என்றார் விராடர். “ஏனென்றால் அதுதான் முற்றிலும் நம்பமுடியாததாக உள்ளது” என தருமன் நகைத்தார்.
“விளையாடாதீர், குங்கரே” என்றார் விராடர். “ஆம், அதுவே உண்மை. எண்ணிப் பாருங்கள். கீசகரின் கதையை இன்னும் ஓராண்டுக்குப்பின் எண்ணிக்கொள்பவர்கள் யார்? எவர் எவரிடம் சொல்லப்போகிறார்கள்? சிறுவர்களுக்கு முதியோர் சொல்லும் கதைகளாக மட்டுமே அவர் நினைவு நீடிக்கும். அக்கதைகளில் அவரை வீரரில் வீரர் என சொல்லி பெருக்குவார்கள். அத்தகைய மாவீரனை வஞ்சமோ நஞ்சோ கொன்றதென்றால் அது சிறிதாகத் தெரியும். கந்தர்வன் கொன்றான் என்பதே கதையென முழுமைகொண்டிருக்கும்.”
“இப்புவிவில் வாழும் செய்திகளில் பெரும்பாலானவை அவை உண்மை என்பதனால் வாழவில்லை, அழகானவை என்பதனால் வாழ்கின்றன” என்று சொல்லி தாடியை நீவியபடி வெளியே நோக்கத் தொடங்கினார் தருமன். விராடர் அவரையே நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் “நன்று, உம்மிடம் பேசிப்பேசி எது விந்தையானதோ அதுவே உண்மை என நம்புவதற்குப் பழகிவிட்டேன்” என்றார் விராடர். இருவரும் சேர்ந்து நகைத்தனர்.
கீசகனின் நடுகல்லிடத்தில் முன்னரே காவலர்கள் சூழ்ந்திருந்தனர். நிஷாதகுடித் தலைவர்களும் குலமூத்தார்களும் அமைச்சர்களும் அகம்படியினரும் திரண்டிருந்தார்கள். அரசத்தேர் அணுகியதும் கொம்புகளும் முரசுகளும் முழங்கின. தேர் நின்றதும் விராடர் கைகளைக் கூப்பியபடி இறங்க வாழ்த்தொலிகள் எழுந்தன. தரையில் விரிக்கப்பட்ட நடைபாவாடையில் கூப்புகையுடன் நடந்த விராடருக்குப் பின்னால் தருமன் தலைகுனிந்து நடந்தார்.
சிற்றமைச்சர்கள் வந்து அரசரை எதிர்கொண்டு அழைத்துச்சென்றனர். இடுகாட்டின் நடுவே கீசகனின் ஆளுயர நடுகல் செம்பட்டு சுற்றப்பட்டு செங்காந்தள் மாலை சூடி நின்றிருந்தது. அவனருகே கிடைக்கல்லாக பிரீதையின் தாய்க்கல் மலருடன் அமைந்திருந்தது. குலப்பூசகர் எழுவர் அங்கே செம்பட்டுக் கச்சை சுற்றி மலர்மாலை அணிந்து நின்றிருந்தார்கள். அரசருக்குரிய மேடையில் விராடர் சென்று நின்றதும் வாழ்த்தொலிகள் அமைந்தன. அரசர் கைகாட்ட சடங்குகள் தொடங்கின.
உறுமி மட்டும் பொங்கிப் பொங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. நடுகல்லுக்கு மஞ்சள்குங்கும செவ்விழுதை அள்ளிப் பூசினர். மஞ்சள்பொடியும் அரிசிப்பொடியும் கொண்டு முழுக்காட்டினர். பெரிய உருளியில் ஆவிபறக்க கொண்டுவரப்பட்ட அன்னம் நடுகல்லின் முன்னால் விரிக்கப்பட்ட ஈச்சைப்பாயில் கொட்டப்பட்டு ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அதன்மேல் செவ்வரளி, தெச்சி, செண்பகம், செந்தாமரை, காந்தள் மலர்களைப் போட்டு கமுகுபூக் குலையை நட்டனர்.
கரிய ஆட்டுக்கிடாக்கள் மூன்றை பூசகர் இழுத்து வந்தனர். அவற்றின் கழுத்தை வளைத்து குருதிக்குழாயை சிறு கத்தியால் வெட்டி பீறிட்ட குருதியை அந்த அன்னத்தின்மேல் வீழ்த்தினர். விடப்பட்ட ஆடு கால்பதற ஓடிச் சுழன்று விழுந்து துள்ளத் தொடங்கியது. அடுத்த இரு ஆடுகளின் குருதியை பெரிய மரக்குடுவையில் பிடித்து நடுகல்லுக்கு முழுக்காட்டு செய்தனர். கூடி நின்றிருந்தவர்கள் “மாவீரர் வெல்க! வீரப்பலி நிறைவுறுக! மூதாதையர் மகிழ்க! குலதெய்வங்கள் அருள்க!” என வாழ்த்தொலி எழுப்பினர். அலையலையாக இறங்கிய செங்குருதி மாவையும் மஞ்சளையும் கரைத்து குழம்பென்றாகி மண்ணில் ஊறிப் பரவியது.
குருதியில் சில துளிகள் பிரீதையின் தாய்க்கல்மீதும் வீழ்த்தப்பட்டன. “திருமாபத்தினி வாழ்க! மூதன்னையர் அடிசேர்க!” என்று வாழ்த்தியது திரள். குருதியன்னத்தில் ஏழு பிடி எடுத்து பிரீதைக்கு படைத்தார் பூசகர். நெய்ப்பந்தம் ஏற்றப்பட்டு இரு நடுகற்களுக்கும் அனலாட்டு செய்யப்பட்டது. படைப்பன்னத்தின் ஏழு பகுதிகளில் ஒன்றை மட்டும் எடுத்து வாழையிலையில் பரப்பி அதில் முதல்பிடியை அள்ளி அரசருக்கு அளித்தார் முதுபூசகர். மற்றவர்களுக்கும் அன்னம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
பூசனை முடிந்ததும் விராடர் திரும்பி நோக்காமல் நடந்தார். அவரைத் தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் நடந்தனர். “திரும்பி நோக்கலாகாது” என எவரோ சொல்லும் மெல்லொலி கேட்டது. உத்தரன் பின்னால் வந்து குனிந்து தருமனிடம் “குங்கரே, பிரீதையின் குடியினர் இங்கே அவளுக்கு பத்தினி வழிபாடு செய்ய ஒப்புதல் கோரினர்” என்றான். “அதிலென்ன?” என்றார் தருமன். “அவள் முறைப்படி மணம்புரியவில்லை. ஆகவே உடன்கட்டை ஏறினாலும் கீசகரின் துணைவியல்ல என்றார்கள் சிலர். பூசல் மிகுந்தபோது ஆபரிடம் சென்று கேட்டோம். இதில் அவர் சொல்ல ஏதுமில்லை என்றார்.”
தருமன் “ஆம், ஆணும் பெண்ணும் எவ்வகையில் இணைவதென்று எவர் சொல்வது? கீசகர் ஷத்ரியன், அவர் காந்தர்வ மணம் செய்வதற்கு நெறியொப்புதல் உண்டு” என்றார். “ஆம், அதையே நானும் சொன்னேன்…” என்றான் உத்தரன். “இளவரசே, அவள் அவருடன் விண்ணேகுவாள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவள் பத்தினி அல்ல என்றால் வேறு எவர்?” உத்தரன் “மிக எளிய அரசியல் கணக்குகள்தான். அவள் சூதப்பெண். சூதர்களில் இன்றுவரை எவரும் உடன்கட்டை ஏறி பத்தினித் தெய்வமாக ஆனதில்லை” என்றான்.
“ஆவதற்கு தடையுண்டா என்ன?” என்றார் தருமன். “இல்லை, ஆனால் வீரக்கல்லும் பத்தினிக்கல்லும் அமைவதென்பது அக்குலத்திற்கு பெருமையும் முதன்மையும் சேர்க்கிறது. அதை பிறர் விரும்புவதில்லை” என்றான் உத்தரன். தருமன் “அதை முடிவெடுக்க வேண்டியவர் அரசர்” என்றார். “ஆம், ஆனால் அவர் முடிவெடுப்பதற்கு முன்னரே நகர்மக்கள் முடிவெடுத்துவிட்டனர். நகரமெங்கும் பெண்கள் அவளைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் அவளைப்பற்றி பேசுவதை தவிர்க்கும்தோறும் அவர்கள் மேலும் பேசுகிறார்கள்.”
உத்தரன் பேசிக்கொண்டே சென்றான். நகரின் நிகழ்வுகள் அவனுடைய அன்றாட வாழ்க்கையின் அலுப்பை நீக்கி கிளர்ச்சிகொள்ளச் செய்திருப்பது தெரிந்தது. “கீசகரின் உடல் சிதையில் வைக்கப்பட்டபோது புதர்களுக்குள் இருந்து அவள் ஓடிவந்ததை நான்தான் முதலில் கண்டேன். முதலில் என்ன நிகழ்கிறதென்றே புரிந்துகொள்ளவில்லை. இடுகாட்டில் பெண்டிர் வரும் வழக்கமில்லை என்பதுகூட என் எண்ணத்தில் உறைக்கவில்லை. அமைச்சர்கள் இவள் எங்கே வந்தாள் என்று கூவினர். அப்போதுதான் நான் எல்லாவற்றையும் உணர்ந்தேன்.”
“அத்தனை காட்சிகளையும் பலமுறை கனவில் கண்டுவிட்டேன்” என உத்தரன் தொடர்ந்தான். “கீழே கிடந்த செவ்வரளி மாலையை எடுத்து கழுத்திலணிந்துகொண்டு எரிந்தெழுந்த சிதையில் ஏறி கீசகரை அணைத்தபடி அவள் படுத்துக்கொண்டபோது என் உடல் பதறியது. கண் பார்வையே மங்கலானது. அவள் உடன்கட்டை ஏறுவதற்காகவே வந்திருந்தாள். புத்தாடை அணிந்திருந்தாள். அது கீசகர் அவளுக்கு முன்பெப்போதோ அளித்த இளநீலப் பட்டாடை. அது அவரால் அவளுக்கு முதன்முதலாக அளிக்கப்பட்டது என்றும் அதை அவள் மணவுடை என கொண்டிருந்தாள் என்றும் சொல்கிறார்கள்.”
“அவள் நீராடி ஈரத்துடன் வந்திருந்தாள். ஆனால் பட்டாடை அன்னச்சிறகுபோல பொசுங்குவதை கண்டேன். அவள் உடல் துள்ளித்துள்ளிப் புரண்டது. ஆனால் கீசகர் உடலை கைகளாலும் கால்களாலும் இறுகப் பற்றியிருந்தாள். அவள் தசைகள் வெந்து உருகுவதைக் கண்டேன். கூந்தல் பொசுங்கும் வாடையை இப்போதுகூட உணர்கிறேன்.” உத்தரன் தலையை உலுக்கிக் கொண்டான். “அவள் உடன்கட்டை ஏறியதை யாரோ ஒருவன் எரியேறிய பத்தினி வெல்க என்று கூவியபோதுதான் புரிந்துகொண்டேன். அதற்குள் கூட்டம் வெறிகொண்டு கூச்சலிடத் தொடங்கியது. எரியூட்டல் முடிந்து நகருக்குள் நுழைகையில் நகரமே அதை முழங்கிக்கொண்டிருந்தது.”
“நான் அப்போதெல்லாம் உங்கள் அருகேதான் இருந்தேன். இவையனைத்தையும் நானும் கண்டேன்” என்றார் தருமன். “ஆம், ஆகவேதான் நான் இதை உங்களிடம் சொல்கிறேன். என்னால் இப்போது எண்ணினால்கூட…” என உத்தரன் தொடர்ந்தான். விராடர் தேர் அருகே நின்று “செல்வோம்” என்றார். உத்தரன் “நான் எஞ்சியதை நாளை நேரில் வந்து சொல்கிறேன், குங்கரே. அதற்குள் நகருக்குள் ஒரு சுற்று உலவி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று அறிந்துவிட்டு வருகிறேன்” என்றான்.
உத்தரை தன்னுடன் நடந்த பிருகந்நளையிடம் “நான் இப்பூசனையைத் தவிர்க்கவே எண்ணினேன். பலவாறாகச் சொன்னாலும் அன்னை ஏற்கவில்லை. கீசகர் எனக்கு குருதிமுறையில் தாய்மாமன். மச்சர்களில் அது தந்தைக்கு நிகரான உறவு. அவரும் எனக்கு அவ்வாறே இருந்திருக்கிறார். இப்போது எண்ணிப்பார்க்கையில் அவர் என்னை கனிந்த விழிகளால் அன்றி நோக்கியதில்லை என்றும் என் எண்ணம் எதையும் விலக்கியதில்லை என்றும் தோன்றுகிறது” என்றாள். பிருகந்நளை “இறப்பு என்பது அனல். அதிலிட்டுத் துலக்கினால் துருவும் களிம்பும் அகன்று ஒளி மீள்கிறது” என்றாள்.
உத்தரை “எதையும் தத்துவமாக ஆக்கவேண்டியதில்லை” என்றாள். பிருகந்நளை சிரித்தாள். “இன்று நகரில் கீசகர் ஒரு வீரத்திருவாக ஆகிவிட்டிருக்கிறார். இந்த நாளில் இதே பொழுதில் நூறு இடங்களிலாவது அவருக்கு அன்னக்கொடையும் குருதிக்கொடையும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்றாள். “அது அவரால் இயன்றது அல்ல. அந்தப் பெண், அவள் பெயரென்ன?” உத்தரை “பிரீதை” என்றாள். “ஆம், காதல்கொண்டவள் என்று பொருள். கீசகர் பொருட்டு அவள் உடன்கட்டை ஏறியதனால் உருவான உள எழுச்சி அது.”
“அவளை நான் அறிவேன். ஒருபோதும் நல்லியல்புள்ளவளாக அவள் எனக்குத் தெரிந்ததில்லை” என்றாள். “கணவனின் நல்லியல்பும் அல்லியல்பும் பெண்டிரில் ஆடியென எதிரொளிக்கின்றன” என்றாள் பிருகந்நளை. “நல்ல பெண்ணாக இருந்திருக்கலாம். அவளுக்குள் என்னென்ன உணர்வுகள் இருந்தன என்று எவரும் அறிந்திருக்கவில்லை. இனியும் அறியப்போவதில்லை. நேற்று வரை அவள் உடல் மறைத்தது அவளை. இனி அவள் புகழ் மறைக்கும்.”
அவர்கள் அரண்மனை முகப்புக்குச் சென்றதும் சுபாஷிணி ஓடிவந்து அவர்களை எதிர்கொண்டாள். “பேரரசி மூன்றுமுறை கேட்டார்கள், இளவரசி. வந்ததும் அழைத்துவரச் சொன்னார்கள்.” உத்தரை “பூசனை தொடங்கிவிட்டதா?” என்றாள். “நடந்துகொண்டிருக்கிறது. கொடைகள் காலையிலேயே தொடங்கிவிட்டன. இரவுதான் கொட்டிப்பாடல் நிகழ்வு. கீசகரைப்பற்றி விஸ்ருதர் எழுதிய பாடலை நான்கு சூதர்கள் பாடப்போகிறார்கள்.”
“சைரந்திரி எங்கே?” என்று உத்தரை கேட்டாள். “அவர்கள் உடல்நலமில்லாமல் தன் அறைக்குள் படுத்திருக்கிறார்கள். பூசெய்கைக்கு சேடியர் அனைவரும் வந்தாகவேண்டும் என்று அரசி ஆணையிட்டார். அதை நான் சென்று சொன்னபோது வர மறுத்துவிட்டார்கள்.” உத்தரை சிரித்து “அதை அன்னையிடம் சொன்னாயா?” என்றாள். “இல்லை. ஆனால் சொல்லாமலேயே அரசி அதை அறிந்துகொண்டார்கள். அவர் முகம் சினத்தால் சுருங்குவதை உணர்ந்தேன்” என்றாள் சுபாஷிணி.
அரண்மனைக்குள் மணியோசை கேட்டது. விரிந்த கூடத்தில் அரண்மனை மகளிர் அமர்ந்திருந்தனர். அவர்களைக் கண்டதும் சுதேஷ்ணை திரும்பிப்பார்த்து முன்நிரைக்கு வரும்படி கைகாட்டினாள். உத்தரை முன்னால் சென்று அரசியின் அருகே அமர்ந்தாள். பிருகந்நளை பின்நிரையில் அமர்ந்தாள். அவளருகே இருந்த பெண்கள் சற்று விலகிக்கொண்டார்கள். சுதேஷ்ணை அவளிடம் “பூசெய்கைக்கு வருவதென்பது அரசகடமை. இது மகளிர் மட்டுமே கூடுமிடம்” என்றாள். “அவர் பெண்ணும்தானே?” என்றாள் உத்தரை. “நீ சொல் மிஞ்சிச் சென்றுகொண்டிருக்கிறாய்” என்றாள் சுதேஷ்ணை.
“சைரந்திரி எங்கே?” என்றாள் உத்தரை. “அவள் தன்னை அரசி என எண்ணிக்கொண்டிருக்கிறாள். இவை அனைத்தும் முடிந்த பின்னர் அவளுக்கு அவள் யாரென்று கற்பிக்கிறேன்” என்றாள் சுதேஷ்ணை. “வேண்டாம், அன்னையே. அவள் கந்தர்வர்களால் காக்கப்படுபவள்” என்றாள் உத்தரை. “நோக்குக, அவளைத் தொட்டதற்காக கழுத்தொடிக்கப்பட்டார் உங்கள் உடன்பிறந்தார்.” சுதேஷ்ணை “வாயை மூடு!” என்றாள். உத்தரை புன்னகையுடன் வேறுபக்கம் நோக்கை திருப்பினாள்.
அறை நடுவே செம்பட்டு விரிக்கப்பட்ட மேடையில் கீசகனின் உடைவாளும் பிரீதையின் வெண்கலச் சிலம்பும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு வெண்மலர் மாலைசூட்டி பொரியும் வெல்லமும் படைத்திருந்தனர். எண்மங்கலங்கள் கொண்ட ஏழு தாலங்கள் முன்னால் இருந்தன. ஒரு முதிய விறலி கைமுழவை முழக்கிக்கொண்டிருந்தாள். வெளியே சங்கொலி கேட்டது. அனைவரும் எழுந்து நின்றனர். சங்கு முழக்கியபடி சேடி ஒருத்தி முன்னால் வர ஏழு சேடியர் தொடர்ந்தனர். அனைவரும் தங்கள் கைகளில் சிறிய வெண்கலக் கலங்களில் வெண்பட்டு மூடிய அன்னத்தை வைத்திருந்தனர்.
பெண்கள் குரவையிட்டனர். பூசகியாக நின்ற முதிய சேடி கையசைத்து அவர்களை அழைக்க அவர்கள் அந்த அன்னக் கலங்களை கொண்டுவந்து பீடத்தின் முன் வைத்து துணிகளை விலக்கினர். மங்கல இசை எழுந்தது. முதுபூசகி “விண்புகுந்தவளே, கொண்டவனைக் காத்து குலம் காத்து கொடிவழி காத்து நில்! அங்கு நின்று இங்குள்ளோருக்கு அருள்பொழி! உன் அடிபணிகிறோம், அன்னையே” என்று கூவினாள். பெண்கள் குரவையிட்டபடியே இருந்தனர். “விண்புகுந்த வீரனே, மண்ணில் உன் பெருமைகள் வாழ்க! விண்ணில் நீ ஒளி கொள்க!”
உத்தரை சூழ்ந்து நின்ற பெண்களை பார்த்தாள். அனைவர் விழிகளிலும் நீர் நிறைந்திருந்தது. சிலர் குனிந்து விசும்பினர். அது மெய்யான கண்ணீர் என்றே அவளுக்குத் தோன்றியது. அந்தச் சூழலா பிரீதையின் உயிர்க்கொடையா எது அந்த விழிநீரை உருவாக்குகிறது? உண்மையில் விழிநீர் பெரும்பாலும் ஒருவகை உளப்பயிற்சியின் விளைவு என அவள் அறிந்திருந்தாள். பெண்கள் விழிநீர் விடும் தருணம் அது என்றால் அதை அறியாமலேயே செய்துவிடுகிறார்கள். மீண்டும் அவர்களை பார்த்தாள். முகங்கள் அனைத்தும் உருகிக்கொண்டிருந்தன. அவர்கள் நடிக்கிறார்கள் என்று தோன்றியது.
எளிய பெண்கள் தமக்கென்று எண்ணமோ உள்ளமோ இல்லாதவர்கள். நீரோடையின் நிறம்போன்று அருகிருப்பவையே அவர்கள். அதைச் சொன்னது பிருகந்நளை. அவள் திரும்பி பின்நிரையில் நின்றிருந்த அவளை நோக்கினாள். கூரிய விழிகள் ஒவ்வொன்றையும் உட்புகுந்து அறிந்து ஆனால் சற்றும் பொருட்படுத்தாமல் கடந்துசெல்பவை. அமர்ந்தெழுந்து செல்லும் கிளைகளை குனிந்து ஒருகணம் மட்டுமே நோக்கும் பறவை. இவர்கள் நடிக்கிறார்களா? ஆம், இப்போது இவர்கள் பிரீதையாக நடிக்கிறார்கள்.
முதுவிறலி சுடராட்டு காட்டினாள். மணிகளும் சங்குகளும் முழங்கின. குரவையோசைகள் உடனிழைந்து சூழ்ந்தன. ஊடே புகுந்த அலறலோசையைக் கேட்டு அவள் திரும்பி நோக்கினாள். அனைவரும் நோக்கும் திசைக்குத் திரும்பியபோது வாயிலில் நின்றிருந்த சுபாஷிணியை கண்டாள். அவள் இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி விரிந்த குழல் தோளில் இழைய வெறித்த விழிகளுடன் உள்ளே வந்தாள். மீண்டும் ஓர் அலறல். பெண்குரல் அல்ல. காட்டுவிலங்குபோல. நெருப்பு பற்றி எரிபவளின் இறப்பொலி போல.
அனைத்து ஓசைகளும் அடங்கின. முதுவிறலி “யார் நீ? சொல்! நீ யார்?” என்றாள். மீண்டும் ஒருமுறை அலறி கைகளைத் தூக்கினாள் சுபாஷிணி. மெல்லிய கைகள் மேலும் முறுகி வடம்போலாயின. எலும்புகள் நெரியும் ஒலி கேட்டது. பற்கள் உரசிக்கொள்வதைக்கூட கேட்க முடிந்தது. கழுத்திலும் கன்னங்களிலும் நெற்றியிலும் நீலநரம்புகள் எழுந்தன. “யார் நீ? இங்கே ஏன் எழுந்தாய்? சொல்! யார் நீ?” என்றாள் முதுவிறலி. அன்னை தன் தோளைப் பற்றியபடி நடுங்குவதை உத்தரை உணர்ந்தாள்.
சுபாஷிணி “என் பெயர் கன்யாகவசன். விண்வாழும் கந்தர்வன்” என்றாள். எடைமிக்க ஆண்மகன் ஒருவனின் கடுங்குரல். “இவ்விழிமகனை சங்குநெரித்துக் கொன்றேன். அவன் உயிரை என் வாயால் உறிஞ்சிக்கொண்டேன். என் நெஞ்சில் உள்ளது அவன் ஆவி…” சுபாஷிணி உடல் மெய்ப்பு கொள்ள இரு கைகளையும் நெஞ்சில் சேர்த்துக்கொண்டாள். “ஏன் கொன்றாய்? சொல்! ஏன் கொன்றாய்?” என்றாள் முதுவிறலி. “நான் கன்னியருக்குக் காவலாக அமைபவன். இவ்விழிமகன் பெண்ணொருத்தியின் பொற்பை சிறுமை செய்தான். அவைநடுவே அவளை மிதித்தான். அவள் என்னை அழைத்தாள். அவள் ஆணையை ஏற்று இவனை துயிலில் தூக்கிக்கொண்டு மலர்க்காட்டுக்குச் சென்றேன். மண்கலத்தை என இவன் நெஞ்சுடைத்துக் கொன்றேன்.”
சுபாஷிணியின் சொற்கள் நெரிபட்டு கல்லுரசுவதென ஒலித்த பற்களின் ஒலிக்கிடையே எழுந்தன. “எங்குமிருப்பேன். பொற்புடைப் பெண்டிர் நலன் காக்க நூறு கைகளுடன் எழுவேன். ஆயிரம் நச்சுக்கூருகிர் கொண்டிருப்பேன். ஆம்!” அவள் இரு கால்களின் கட்டைவிரல்களை மட்டும் ஊன்றியிருந்தாள். சேடியரில் எவரோ “தேவா! எங்களை காத்தருள்க!” என்று கூவினாள். மறுகணமே அங்கிருந்த அனைவரும் “இறையே, விண்ணவனே, நூறுகரத்தனே, காத்தருள்க!” என்று கூவத் தொடங்கினர். சிலர் கதறியழுதபடி முன்னால் வர பிறர் அவர்களை பற்றிக்கொண்டனர். உளம்தளர்ந்து சிலர் நிலத்தில் விழுந்தனர். தரையுடன் முகம் பதித்து கைகளால் அறைந்தபடி அழுதனர்.
சில கணங்களுக்குள் அந்த அறை ஒரு பித்தர் மாளிகை என ஆகிவிட்டதை உத்தரை கண்டாள். சுற்றிச்சுற்றி நோக்கி உடல்பதற நின்றாள். பின்னர்தான் தானும் கண்ணீர் வழிய அழுதுகொண்டிருப்பதை உணர்ந்தாள். “சொல், நாங்கள் என்ன செய்யவேண்டும்? எங்கள் குலத்தோன் விண்ணேற நாங்கள் ஆற்றவேண்டியதென்ன? பலியா? கொடையா? பிழைநிகர் பூசனைகளா? நீ வேண்டுவதென்ன?” என்று முதுபூசகி கேட்டாள். “இவனை நான் நூறாண்டுகள் என் வாய்க்குள் வைத்திருப்பேன். அதன் பின்னரே வெளியே விடுவேன். அதுவரை இவனுக்கு வீரவழிபாடு நிகழக்கூடாது. நீர்க்கொடையும் அன்னப்பலியும் நிகழலாகாது.”
“இவனை விண்ணேற்றுபவள் இப்பெரும் பத்தினி. இவனுக்குரியவை அனைத்தும் அவளுக்கே அளிக்கப்படவேண்டும் இக்குடியின் சேடியருக்குக் காப்பென அவள் நின்றிருப்பாள். நெறி மீறுபவர்களை கொன்று குருதியாடுவாள்… ஆணை! ஆணை! ஆணை!” சுபாஷிணி ஓங்கி தரையில் அறைந்தாள். அந்த மெல்லிய கைகளில் இருந்து அந்த ஓசை எப்படி வந்தது என உத்தரை எண்ணினாள். ஒருக்களித்து விழுந்து கைகால்கள் இழுபட துடித்தாள் சுபாஷிணி. வாயோரம் நுரை வழிந்தது.
முதுசெவிலி குங்குமத்தையும் மலர்களையும் எடுத்து “விலகுக… விலகுக… விலகுக!” என கூவி அவள்மேல் அறைந்தாள். மெல்ல அவள் கைவிரல்கள் விடுபட்டன. கைகள் வானோக்கி மலர்ந்தன. வாய் திறந்து பற்கள் தெரிந்தன. முதுசெவிலி அவள் கன்னத்தைத் தட்டி அழைத்தாள். கண்ணிமைகளை விரித்துப் பார்த்தாள். உள்ளே கருவிழிகள் மறைந்திருந்தன. “நீர்” என்றாள் முதுசெவிலி.
இரு சேடியர் ஓடிச்சென்று கொண்டுவந்த நீர்ச்செம்பை வாங்கி சுபாஷிணியின் வாயில் வைத்தாள். அவள் விழித்துக்கொண்டு எழுந்தமர்ந்து இரு கைகளாலும் நீரை வாங்கி ஓசையெழக் குடித்தாள். “நீர்” என்று மூச்சொலித்தாள். மூன்று நிறைசெம்பு நீரை அருந்தியபின் மீண்டும் படுத்து கண்களை மூடிக்கொண்டாள். மெல்ல நீள்மூச்சொலி எழுந்தது. சிறுமுலைக்குவைகள் அசைந்தன. அவள் இமைகள் சோழிகள் போல சற்றே விரிசலிட்டு வெள்விழி காட்டின. ஆழ்ந்த துயிலுக்குள் செல்லச்செல்ல அவள் கைகால்கள் முற்றிலும் தளர்ந்து நிலத்தில் படிந்தன.
உத்தரை தன்னைச் சூழ்ந்து சேடியர் அழுதுகொண்டு படுத்திருப்பதை நெஞ்சைப் பற்றியபடி கண்ணீருடன் நின்றிருப்பதை பார்த்தாள். விழிகள் சென்று தொட்டபோது பிருகந்நளை புன்னகை செய்தாள்.