வள்ளுவரும் இறைவாழ்த்தும்

அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு

நான் உங்கள் வாசகன் நீங்கள் இன்று எழுதிய கட்டுரை வாசித்தேன் அப்போது என் நண்பர்களுடன் ஒரு சிறிய உரையாடலில் திருவள்ளுவர் பற்றியும் திருக்குறள் பற்றியும் விவாதம் எழுந்தது அதில் ஒரு நண்பர் திருவள்ளுவர் முதலில் எழுதியது கடவுள் வாழ்த்து அல்ல என்று கூறினார் நான் தேடிய வரையில் எந்த தெளிவும் பிறக்கவில்லை தங்கள் இதற்குரிய தெளிவினை தருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

 

அன்புடன்,

பே.ஜதுர்சனன்

 

அன்புள்ள ஜதுர்சனன் அவர்களுக்கு

இதுவரை கேட்காத பெயர். நீங்கள் ஜைனரா?

நான் பள்ளியில் படிக்கும் காலகட்டத்திலேயே  இந்த விவாதம் நடந்து ஓரளவு முடிவுக்கு வந்துவிட்டது. என் வகுப்புகளில் அன்றைய தமிழாசிரியர்கள் இதைப்பற்றி பேசியிருக்கிறார்கள்

தமிழ்ப் பதிப்பியக்கமும், சைவமறுமலர்ச்சி இயக்கமும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நூறாண்டுகளுக்கு முன் தொடங்கியவை.  அன்று திருக்குறளை ஒரு சைவநூல் என நிறுவும் பல்வேறு உரைகள் எழுந்தன. கா.சு.பிள்ளை எழுதிய உரைவிளக்கநூல் அதில் முதன்மையானது

அதன்பின் ஐம்பதுகளில் திருக்குறளை மதச்சார்பற்ற தமிழ்ப்பொதுமறையாக நிலைநிறுத்தும் முயற்சிகள் தொடங்கின. அன்றைய தமிழியக்கம், திராவிட இயக்கத்தின் பண்பாட்டுப்பணிகளில் முக்கியமானது இது. பல்வேறு உரைகள் வழியாக இது நடந்தது. முதன்மையான உரை மு.வரதராசனாருடையது. மிகப்பிரபலமானதும் அதுவே

இருசாராருக்குமே சிக்கலாக இருந்தது திருக்குறளின் கடவுள்வாழ்த்து அதிகாரம்தான். சைவர்களுக்கு அதிலுள்ள இறைவிளக்கம் அவர்களின் சைவ மரபுசார்ந்த விளக்கங்களுடன் பொருந்தாததாக இருந்தது. ஆதிபகவன், மலர்மிசை ஏகினான், பொறிவாயில் ஐந்தவித்தான், வாலறிவன் போன்ற சொல்லாட்சிகள் சமணத்தின் அருகர்களுக்குப் பொருந்துபவை. அவற்றை சைவத்துக்குள் கொண்டு வைக்க மிகப்பெரிய சொல்திரிப்பும் கருத்துவளைப்பும் தேவைப்பட்டது.

அதேபோல மதச்சார்பின்மைவாதிகளுக்கும் அந்த அதிகாரத்தை என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்கள் இரண்டு வாதங்களை முன்வைத்தார்கள். ஒன்று குறளின் பிற அத்தியாயங்களில் எங்கும் வாழ்க்கையின் சிக்கல்களுக்குத் தீர்வாக இறைவழி சொல்லப்படவில்லை. ஊழுக்கு அளிக்கப்பட்ட இடம் கூட கடவுளுக்கு அளிக்கப்படவில்லைஆகவே கடவுள்வாழ்த்துப் பகுதி பின்னர் சேர்க்கப்பட்டதாக இருக்கலாம்

இரண்டாவது வாதம், தேவநேயப் பாவாணர் வழிவந்தது. அவர் சொற்திரிப்புக்கு உலகளவில் நிகரற்றவர். ஆதிபகவன் முதலிய அனைத்துச் சொற்களையும் இலக்கணநெறிகளைக்கூட மீறி விருப்ப்படி பிரித்து எந்த விதப் பண்பாட்டுக்குறிப்புகளும் இல்லாமல் பொருள்கொண்டு அவை குறிப்பிடுவது இறைவனையே அல்ல என்றும் தொல்தமிழ் மூத்தார்வழிபாட்டை மட்டும்தான் என்றும் அவர் சொன்னார்.

உண்மை என்ன? நமக்கு திருக்குறள் எப்போது கிடைக்கிறதோ அப்போதே இறைவாழ்த்துடன் 1330 குறள்களுடன்தான் உள்ளது. அதன் எண்ணிக்கை பல இடங்களில் சொல்லப்பட்டிருப்பதனால் அந்நூலின் அமைப்பு எளிதில் மாற்றப்படக்கூடியது அல்ல.

தமிழ்நூல்களில் சமண பௌத்தப் பின்புலம் கொண்ட நூல்களில் இடைச்செருகல்களும் பாடபேதங்களும் குறைவு. சமண பௌத்த மதங்கள் விரிவான எழுத்துமரபும் கல்விப்புலமும் கொண்டவை என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். சமண பௌத்த மதங்களின் சரிவுடன் அவையும் மறக்கப்பட்டு நீண்டநாட்களுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டது இன்னொரு காரணமாக இருக்கலாம்.

கம்பராமாயணம் போன்றவற்றிலுள்ள இடைச்செருகல்கள் அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தாலும் மதம்சார்ந்த முக்கியத்துவத்தாலும் உருவானவை. காப்பியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் போன்ற சமண பௌத்த நூல்களிலேயே குறள் தூயபிரதியாகவே நமக்குக் கிடைத்தது.

ஆகவே இறைவாழ்த்தை வள்ளுவர் எழுதவில்லை, இறைவாழ்த்தை அவர் பின்னால் எழுதியிருக்கலாம் என்று சொல்வதற்கு மிகச்சிறிய ஆதாரத்தைக்கூட நாம் இன்று கண்டடைய முடிவதில்லை

திருக்குறள் கிபி நான்காம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம். 1500 ஆண்டுகள் பழைமை கொண்ட ஒரு பிரதியைப்பற்றி அப்படி ஆதாரபூர்வமாக ஏதும் சொல்லிவிடமுடியாது. அத்துடன் தமிழில் நமக்கு தெளிவாக வரலாறுகளைப் பேணும் வழக்கமும் இல்லை.

திருக்குறளை மட்டும் வைத்துக்கொண்டு இத்தகைய ஊகங்களை நிகழ்த்துவதெல்லாம் வெறும் தர்க்கவிளையாட்டு. எல்லா பழைய நூல்களும் அவ்வாறு சமகாலத்தில் வாசித்து அர்த்தப்படுத்தப்படுகின்றன. பல்வேறு கோணங்களில் வாசிப்பு நிகழ்கிறது. அவற்றுக்கிடையேயான ஒரு சமரசமாக அந்நூலுக்கான பொதுவாசிப்பு திரண்டு வருகிறது. இது முடிவடையாது நடந்துகொண்டே இருக்கும் ஒரு செயல்பாடு.

பொதுவாக மூலநூல்களை ஒவ்வொரு தரப்பும் தங்கள் நோக்குக்கு இழுக்க முயல்வது எங்கும் நிகழ்வதுதான். இந்திய மரபில் நமக்கு இவ்வாறு உரைகள் வழியாக மூலநூல்களை வளைத்துக்கொள்வது ஒரு அங்கீகரிக்கப்பட்ட சிந்தனைமுறையாகவே உள்ளது. பிரம்மசூத்திரமோ கீதையோ தலைமுறை தலைமுறையாக வெவ்வேறு சிந்தனைப்பள்ளிகளால் வெவ்வேறுவகையில் உரைவிளக்கம் அளிக்கப்பட்டுள்ளன. அதுவே குறள்சார்ந்தும் தொடர்கிறது என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்

ஜெ

வள்ளுவரும் அமணமும்
குறள் – கவிதையும், நீதியும்.
குறளறம்
இந்திய சிந்தனை மரபில் குறள்.1
இந்திய சிந்தனை மரபில் குறள் 2
இந்திய சிந்தனை மரபில் குறள் 3
இந்திய சிந்தனை மரபில் குறள் 4
இந்திய சிந்தனை மரபில் குறள் 5
தேவநேயப் பாவாணர் விக்கி
முந்தைய கட்டுரைஇருத்தலியல் கசாக் –மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்விருது விழா 2017