ஒருமலைக்கிராமம்;கடிதங்கள்

ஒரு மலைக்கிராமம் படித்தேன்..
நான் கோவையில் ஸ்டேர்லிங்கில்   வேலைபார்த்த பொது தொண்டாமுத்தூருக்கு அருகில் நரசிப்புரம் என்ற கிராமத்தை அடுத்த ரிசர்வ் காடுகளில் அலைந்து திரிந்ததுதான் ஞாபகம் வருகிறது. கொஞ்சம் கூட கல்மிஷம் இல்லாத மக்களுடன் பழாகும் வாய்ப்பு கிடைத்தது அங்கேதான் . எங்கள் கம்பெனிக்கு சொந்தமான நிலப்பரப்பு அந்த காடுகளை எல்லையாக கொண்டிருந்தது. அரைமணி நேரத்துக்கு ஒருமுறை யானையின் பிளிறல் மிக அருகில் கேட்கும். பலமுறை அந்த காடுகளின் ஊடாக சென்று அந்த மலை கிராமத்து மக்களை எங்கள் கம்பெனி வேலைக்கு அழைத்து வரும்போது நிங்கள் பெற்ற அனுபவத்திற்கு சற்றும் குறையாமல் அனுபவத்திருக்கிறேன். இது போன்ற மலையேறும் அனுபவம் காந்திகிராமத்தில் படிக்கும்போதும் பெற்றிருக்கிறேன். என்ன … உங்களைப்போல எழுத்தில் கொண்டுவரும் திறமைதான் இல்லை..  :-)
அருமையான நடை வழக்கம்போல்..
ஜெயக்குமார்

அன்புள்ள ஜெ,
ஒரு மலைக்கிராமம் கட்டுரையைப்படித்துவிட்டு நான் உடனே படித்தது டிசம்பர் இதழ் உயிர்மையிலே சு. தியடோர் பாஸ்கரன் அவர்கள் ஆப்ரிக்க பழங்குடிக்கிராமம் ஒன்றைப்பற்றி எழுதிய கட்டுரை.  அந்த பழங்குடியினரின் கிராமங்கள் மிகவும் சுத்தமாக இருக்கின்றன என்று அவர் சொல்கிறார். நீங்களும் சொல்கிறீர்கள். நான் கிழக்கு பச்தரில் 1990களில் ஆதிவாசிகளின் ஊர்களைக் கண்டிருக்கிறேன். அவையெல்லாமே சுத்தமானவை. நம்முடைய ‘நாகரீக ஊர்கள்’ மட்டும்தான் அசுத்தமானவை. நியூயார்க் நகரம் கூட அசுத்தமானதுதான். பெரிய கட்டிடங்களுக்கு நடுவே மிக அசுத்தமான பல பகுதிகள் உண்டு. ஏன் இந்த அசுத்தம்? என்ன காரணம்? என் ஊகம் என்னவென்றால் ஆதிவாசிகளுக்கு சமூகக் கட்டுப்பாடு உண்டு. துப்பக்கூடாது என்று சொல்லிவிட்டால் துப்பக்கூடாதுதான். நாமென்றால் தெரியாமல் துப்புவோம். தெரியாமலே குப்பை போடுவோம். நமது குப்பையை நம் எல்லைக்கு அப்பால் கொட்டுவோம். இந்த மனநிலைதான் நம்மையெல்லாம் குப்பைமேடுகளாக ஆக்கியிருக்கிறது. அதாவது நம்முடைய சிவில்சென்ஸ் கோளாறுதான் அசுத்தத்துக்குக் காரணம்

கெ.ராமகிருஷ்ணன்

ஒரு மலைக்கிராமம் நல்ல கட்டுரை. தெளிவான பதிவு. அந்த மலைக்கிராமத்தின் இரவு என் கண்முன்னாலேயே நிற்கிறது. நன்றி ஜெ. நகரத்து அறைக்குள் புழுங்கிக்கொண்டிருக்கும் எங்கள் சார்பில் நீங்கள் பயணம் செய்கிறீர்கள். உங்களுடன் நாங்களும் பயணம்செய்கிறோம். அந்த கிராமம் சுத்தமாக இருக்கிறது என்று சொன்னீர்கள். ஏன் தெரியுமா? அங்கே உள்ளவர்கள் நுகர்வது கொஞ்சம். எல்லாமே மலை ஏற்றிக்கொண்டுவந்தாகவேண்டுமே. நாம் ஒருநாளில் போடும் குப்பையை அவர்கள் ஒரு வருஷமானால் பொடமாட்டார்கள்.நாம் ஒருமாசம் போடும் குப்பையை அமெரிக்கன் ஒருநாலில் போட்டுவிடுவான். நாகரீத்தையே குப்பையை வைத்து அளந்துவிடலாம். நம்முடையது ஒரு குப்பை நாகரீகம் junk culture
சிவசு

ஒரு மலைக்கிராமம்

முந்தைய கட்டுரைமத்தகம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுருதிச்சின்னங்கள்[கம்பனும் காமமும்.5]