கேள்வி பதில் – 44

விமர்சகன், அவனே ஒரு படைப்பாளியாகவும் இருக்கும்பட்சத்தில் ஏதாவது ஒரு இடத்திலாவது அவனுக்கு சார்புநிலை வந்துவிடாதா? படித்த படைப்புகளோடு ஒப்பு நோக்கவேண்டிய வாசகப்பார்வை போய் எழுத்தாளன் எட்டிப்பார்த்து, தான் படைத்த படைப்புகளோடு, தன் படைப்புத் திறமையோடு ஒப்புநோக்கினால், அந்தப் படைப்புக்கான மதிப்பீட்டுக் கணக்கு தவறாதா?

— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

திறனாய்வாளன் யாராக இருந்தாலும் சார்புநிலை இருக்கும். சொல்லப்போனால் தன் சார்புநிலையையே அவன் வெளிப்படுத்துகிறான். அதுவே அவனது தனிப்பட்ட பார்வைக்கோணமாகும். முற்றிலும் புறவயமான ஓராய்வு அல்லது மதிப்பீடு இயல்வதேயில்லை.

அப்படியானால் திறனாய்வாளன் முன்வைக்கும் மதிப்பீடுகளுக்கு என்ன பொருள்? அவன் ஒரு ஆக்கத்தைப் பற்றிய ஒரு தரப்பை மட்டுமே முன்வைக்கிறான். அது அந்த ஆக்கம் அச்சூழலில் உருவாக்கும் பற்பல விவாதத்தரப்புகளில் ஒன்று. இவ்வாறு பலவகையான வாசிப்புகள் முன்வைக்கப்படும்போது ஒரு விவாதக்களம் உருவாகிறது. அதன்மூலமே அப்படைப்பின் மீதான சமூக வாசிப்பு அல்லது கூட்டுவாசிப்பு உருவாகிறது.

ஒரு படைப்பு வெளிவந்த காலத்தில் அது புரிந்துகொள்ள சிக்கலானதாக இருப்பதும் காலப்போக்கில் எளிதாக ஆகிவிடுவதும் நாம் காண்பதே. உதாரணமாக ஜெ.ஜெ சில குறிப்புகளைச் சொல்லலாம். ஏன் அப்படி நிகழ்கிறது? அப்படைப்பு பற்பல கோணங்களில் பலரால் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு அதன் மூலம் உருவாகும் மையச்சரடாகச் சமூகவாசிப்பு உருவாகியுள்ளது. இன்றைய வாசகன் அதன் நீட்சியாக நின்று வாசிக்கிறான். அத்தனைபேரின் வாசிப்பையும் தான் அடைந்துவிட்டு மேலே வாசிக்கிறான். அவனது வாசிப்பு பெரிதாகிவிட்டிருக்கிறது. இவ்வாறு வாசிப்பை பெரிதாக ஆக்குவது, சமூகவாசிப்பை உருவாக்கும் ஒருதரப்பாக நின்று அதற்கு முயல்வதே திறனாய்வாளனின் பணி.

திறனாய்வாளன் படித்த படைப்புகளுடன் மட்டுமே ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அவனது சொந்தவாழ்க்கை, அவன் கற்ற நூல்கள் அவனது அளவுகோல்களை உருவாக்கலாம். அவன் படைப்பாளியாக இருந்தால் அவனது படைப்பனுபவம் உதவலாம். எப்படி இருந்தாலும் அது அவனது அகவய நோக்கே ஒழிய புறவயநோக்கு அல்ல. அவன் நல்ல திறனாய்வாளனாக இருந்தால் அந்த அகவயநோக்கை புறவயமான தர்க்கமுறையால் விளக்கிக் காட்டுவான் அவ்வளவுதான்.

உலக இலக்கியமரபில் பெரும் திறனாய்வாளர் பலர் பெரும் படைப்பாளிகளும்கூட. குறிப்பாக இன்றைய திறனாய்வின் அடிப்படைகளை உருவாக்கிய மாபெரும் ஆங்கிலேயத் திறனாய்வாளர்கள் சாமுவேல் ஜான்சன், கூல்ரிட்ஜ், மாத்யூ ஆர்னால்ட் முதல் டி.எச்.எலியட், எஸ்ரா பௌண்ட் வரையிலானவர்கள் படைப்பாளிகள்தான். கண்டிப்பாக அவர்களுடைய திறனாய்வுநோக்கில் அவர்களின் படைப்புநோக்கு, செல்வாக்கு செலுத்தியுள்ளது. ஆனால் அவர்களால் படைப்பில் எது முக்கியம் என உணரவும், படைப்பின் நுட்பங்களுக்குள் செல்லவும், தங்கள் தரப்பை ஆற்றலுடன் சொல்லவும் முடிந்தது. அது வலிமையான தரப்பாக அமைந்தது.

திறனாய்வைமட்டும் செய்தவர்களிலும் பெரும் பங்காற்றிய பலர் உள்ளனர். ஆனால் என் நோக்கில் அவர்களில் எப்படியோ ஒரு பண்டிதத்தனம் காலப்போக்கில் உருவாகிவிடுகிறது. தாங்கள் பேசும் படைப்பைவிடவும் தங்கள் கல்வியும் தர்க்கத்திறனும் மேல் என எண்ண ஆரம்பித்துவிடுகிறார்கள். இளம்வயதில் படைப்புமுன் தங்களைத்திறந்து வைத்ததைப்போல பிற்பாடு முடியாமலாகிறது. படைப்பாக்கத்தின் பல நுட்பங்கள் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை. ஆனால் இவர்கள் தங்களுடைய தர்க்கம் மீதான நம்பிக்கை காரணமாக அவற்றை எளிமைப்படுத்தி தங்கள் தர்க்கத்துக்குள் அடக்கிக் காட்டிவிடுகிறார்கள். அவை காலப்போக்கில் அர்த்தமிழந்து போகின்றன.

இலக்கியத்தில் பெருவியப்பை அளித்த படைப்பாளிகளல்லாத திறனாய்வாளர்கள் அமெரிக்க புதுத்திறனாய்வாளார்கள் என்றழைக்கப்பட்ட குழுவினர்தான். குறிப்பாக கிளீந்த் ப்ரூக்ஸ். இலக்கியத்தையே அவர்கள் இறுதியாக வகுத்துவிட்டார்கள் என்று சொல்லப்பட்டது. இன்று அவர்களுடைய அதிநுட்பமான தர்க்கங்களை அமைப்புவாதமும், பின் அமைப்புவாதமும் சாதாரணமானவையாக ஆக்கிவிட்டன. அமைப்புவாதமும் பின்அமைப்புவாதமும் வைத்த தர்க்கங்கள் அடுத்தகட்ட தர்க்கங்களால் உடைபட்டுவிட்டன. அது முடிவேயற்ற போக்கு.

ஆனால் மாத்யூ ஆர்னால்ட் அல்லது எலியட்டின் திறனாய்வுகள் அப்படி பின்னகர்வதில்லை என்பது என் அனுபவம். அவை முன்வைக்கும் தர்க்கபூர்வ நோக்குகள் அடுத்தக் கட்டத் தர்க்கங்களால் உடைபடக்கூடும். அவை வெளிப்படுத்தும் உள்ளுணர்வுசார்ந்த கண்டடைதல்கள் அபூர்வமான மொழியாள்கையின் துணையுடன் இலக்கியப் படைப்புகள் போலவே காலத்தை வென்று நிற்கும்.

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 43
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 45, 46