68. நெளிநீர்ப்பாவை
முதலிருள் செறிவுகொள்ளத் தொடங்கியதுமே உணவு முடித்து அனைவரும் துயிலுக்கு படுத்துவிட்டிருந்தனர். ஷத்ரியக் காவலர்கள் நால்வர் மட்டும் விழித்திருந்தனர். அடுமனைப் பெண்டிர் விரித்த ஈச்சம்பாயில் தன் தோல்பொதியை தலையணையாக வைத்து தமயந்தி படுத்தாள். ஆலமரத்தின் மேலிருந்து சருகுகள் சுழன்று அவள்மேல் உதிர்ந்துகொண்டிருந்தன. காட்டின் கனவுக்குழறல் என ஒலித்த பறவைக் குரல்களையும் காற்றின் ஓசையையும் கேட்டுக்கொண்டு எதனுடனும் தொடுத்துக்கொள்ளாமல் சிதறிப் பரவிய எண்ணங்களை வேறெங்கிருந்தோ நோக்கிக்கொண்டிருந்தாள்.
பின்னர் அவள் விதர்ப்ப அரண்மனையிலிருந்தாள். இடைநாழியினூடாக சலங்கைகள் ஒலிக்க அரையில் கிண்கிணி குலுங்க ஓடிச்சென்றபோது குறுக்காக அவிழ்ந்த தலைப்பாகை என ஒன்று கிடப்பதை கண்டாள். மிக அருகே சென்றபோதுதான் அது உடல் மின்னும் நாகம் என்று அறிந்தாள். பின்னடி எடுத்து வைக்கவோ கூக்குரலிடவோ தோன்றவில்லை. விழிவிலக்க முடியாத ஈர்ப்புடன் நெஞ்சில் கை சேர்த்து அங்கேயே நின்றாள். நாகத்தின் உடலுக்குள் அதன் உள்ளம் என ஒன்று உருள்வது போலிருந்தது. நீர்ச்சுழியின் வளைவசைவின் மெல்லொளி. வால் மட்டும் வேறொரு உயிருடையதென அதன் உடலின் விரைவற்ற வழிவிற்கு மாற்றாக துடித்தது.
உடல் சுருட்டி அதன் நடுவே தன்னை எழுப்பிக்கொண்டது. மேலிருந்து கண்காணா சரடொன்று அதை கட்டி மெல்ல ஆட்டுவதுபோல அவளுக்குத் தோன்றியது. அதன் இமையா விழிகளை நோக்கியபின் கை நீட்டி அதன் நாய்க்குட்டி மூக்கை தொடமுயன்றாள். பின்பக்கம் சேடி ஒருத்தியின் அலறல் கேட்டது. காலடி ஓசைகள் முழங்க அவள் ஓடிவந்து அவளைப் பற்றித் தூக்கி காற்றில் சுழற்றி இடையில் வைத்துக்கொண்டு அப்பால் விலகிச்சென்றாள். அவ்வோசையில் விதிர்த்துச் சீறி எழுந்த நாகம் மறுகணமே வாழைத்தண்டு விழும் ஒலியில் நிலத்தில் படமறைய விழுந்து விரைந்தோடி சாளரத்தில் ஏறி மறுபுறம் சென்று மறைந்தது.
காவலர்கள் ஈட்டிகளும் வாள்களுமாக ஓடிவந்தபோது அவளைப் பற்றி உடலோடு அணைத்திருந்த சேடி சாளரத்தை சுட்டிக்காட்டி “அங்கே! அங்கே!” என்று கூவினாள். அவள் அச்சாளரத்தையே வெறித்து நோக்கியபடி அசைவின்றி இடையில் அமர்ந்திருந்தாள். பின்னர் அச்சாளரமே நாகவிழி நோக்கு கொண்டது. ஒளியுடன் கனவுகளில் அது திறந்துகொண்டது. அதன் அருகே சென்று வெளியே நோக்கி கனவிலாழ்ந்து நிற்பது அவள் வழக்கமாகியது.
தன்னருகே எவரோ அமர்ந்திருப்பதை உணர்ந்து விழித்தெழுந்தாள். கரிய பேருடலன் ஒருவன் மின்னும் கண்களுடன் அவளை நோக்கிக்கொண்டிருந்தான். இரு பக்கமும் யானை மருப்பென திரண்டெழுந்து வளைந்து நரம்புக் கிளைபரவி தசையிறுகி நீண்டிருந்த கைகள் அவளை தொட்டுக்கொண்டிருந்தன. அவள் இருமுறை உதடுகளை அசைத்தபின் மூச்சை இழுத்து துடிக்கும் நெஞ்சை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு “என்ன?” என்றாள். “உன்னை பார்க்க வந்தேன்” என்றான். “என்னையா? இங்கா?” என்று அவள் கேட்டு திரும்பி தன்னைச் சுற்றி துயின்றுகொண்டிருந்தவர்களை பார்த்தாள்.
“அவர்கள் விழிக்கமாட்டார்கள்” என்றான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “இது வேறு இடம், வேறு வெளி, முற்றிலும் வேறு காலம்” என்றான். அவன் விழிகள் இரு பச்சைக் கற்கள்போல உள்ளொளியுடன் அவளை நோக்கி இமையாது நிலைத்திருந்தன. “ஏன் வந்தாய்?” என்று அவள் கேட்டாள். “இன்றோடு நீ காட்டின் எல்லை கடக்கிறாய். நான் ஆளும் சோலையைத் துறந்து நீ செல்லவிருக்கிறாய்” என்றான். “ஆம், நான் சென்றாக வேண்டும்” என்று அவள் சொன்னாள். “நான் அன்னை, துணைவி, அரசி.”
“என்னுடன் வா” என்றான். “எங்கே?” அவன் “அங்கே நாமிருந்த நிலத்திற்கு” என்றான். அவள் “இல்லை, நான் அறிவேன். அது நோய், நஞ்சு, இறப்பு” என்றாள். அவன் விழிகள் அவள் உள்ளத்தைப் பற்றி அசைவழித்து நிறுத்தின. செவிக்குள் அவன் சொற்கள் ஒலித்தன. “இல்லை தேவி, அது இன்பம், அமுது, அழிவின்மை.” அவள் இல்லை என தலையசைத்தாள். “இங்கிருந்து பார்க்கையில் பிறிதொன்றென தோன்றும், நீ அறிவாய். அங்கிருந்து பார்க்கையில் இவை நோயென்றும் நஞ்சென்றும் இறப்பென்றும் தோன்றவில்லையா?”
அவள் தலையசைத்து எடையுடன் எங்கோ கிடந்த சொற்களை மீட்டெடுத்து “என்னை விட்டுவிடு” என்றாள். “நான் எவரையும் பற்றிக்கொள்வதில்லை. விழையாதவரை அணுகும் ஆற்றல் மறுக்கப்பட்டவன் நான்” என்றான் அவன். “இக்கணம்கூட நீ விழைந்தால் என்னை விட்டுவிடலாம். ஆனால் துளி விருப்பு எஞ்சியிருக்குமென்றால்கூட நான் உன்னுடன்தான் இருப்பேன்.” அவள் தலைகுனிந்து “வேண்டாம், செல்க!” என்றாள். “எதை தெரிவு செய்யப்போகிறாய்? இருப்பெனும் நோய், விழைவெனும் நஞ்சு, அகவையெனும் சாகாடு கொண்ட இதையா? மெய்யிலாமையும் காமமும் முடிவின்மையும் கொண்டு திளைக்கும் அதையா?”
“இல்லை, சென்றுவிடு” என்றாள் அவள். “என் விழிகளை நோக்கி அதை நீ சொல்லவேண்டும். உன் விழிகளும் சான்றாகவேண்டும்” என்றான். அவள் விழிகளைத் தூக்காமல் அழுகைநோக்கி தணிந்த குரலில் “சென்றுவிடு சென்றுவிடு” என்றாள். “நான் அறிந்ததுபோல் எவர் அறிந்திருக்கிறார்கள் உன்னை? உன்னுள் நுழைந்து நீயென்றாகி அனைத்தையும் நடித்திருக்கிறேன்.” அவள் விம்மியழுதபடி “சென்றுவிடு… அளிகூர்ந்து என்னை விட்டுவிடு” என்றாள்.
அவன் அவள் கைகளைப்பற்றி இறுக்கி பிறிதொரு கையால் அவள் கன்னத்தைத் தொட்டு முகத்தை திருப்பினான். அவன் கைகள் குளிர்ந்து ஈரம் கொண்டிருந்தன. “என்னை நோக்கு. பிறிது எதையேனும் நீ இத்தனை உளமகிழ்வுடன் கொண்டாடி இருக்கிறாயா? வேறெங்கும் பிளவுறாது இருந்திருக்கிறாயா?” அவள் “வேண்டாம்” என்று விம்மினாள். “ஏன்?” என்றான். “நான் அஞ்சுகிறேன்.” அவன் “எதை?” என்றான். அவள் விழிதூக்கி “பழியை” என்றாள். “எவர் மீதான பழி?” என்றான். “இது பிழை.” “என்ன பிழை? அறிவிழந்து சொல்லெடுக்காதே. இவை நிகழும் சூழ்வெளி பிறிதொன்று. இங்கு நாமிருவர் மட்டுமே.”
“இது வேட்கையின் வெளி, தேவி. ஆகவே இங்கே பிறன் என்றும் பிறிதென்றும் எதுவுமில்லை. இங்கு நான்கு திசைகளும் முற்றிலும் திறந்து முடிவிலாதுள்ளன. விண்ணில் தேவர்களோ மண்ணுக்கு அடியில் இருள் தெய்வங்களோ இங்கில்லை.” அவள் சினத்துடன் பற்களைக் கடித்தபடி “நான் என்ன செய்யவேண்டும்? சொல், நான் என்ன செய்யவேண்டும்?” என்று உரக்க கேட்டாள். “என் கணவரின் நெஞ்சில் நச்சு வாளை செலுத்தவேண்டுமா? என் மைந்தரை மறக்கவேண்டுமா? பாலூட்டிய முலைகளை அறுத்தெறியவேண்டுமா?”
“எதை நீ உண்மையிலேயே விரும்புகிறாயோ அதை செய்க! பிறிதொன்று எஞ்சாது எதில் முழுதமைவாயோ அதில் இறங்கு. மற்றொன்றை நான் சொல்வதற்கில்லை” என்றான். “விந்தை! ஏன் மானுடர் எப்போதும் ஒன்றின் பொருட்டு பிறிதை செய்கிறார்கள்? மகிழ்வதற்கு அஞ்சும் விலங்கு ஒன்றே இப்புவியில்.” அவள் “பிளவுண்ட நாக்கின் சொற்கள். விலகு” என்று கூவினாள். “நீ அறிந்த நிலம் அது. அங்கு நிலவு தேய்வதில்லை. மலர்கள் உதிர்வதில்லை விழியொளிர் விலங்குகளும் ஒளிச்சிறைப் புட்களும் கொண்ட பெருங்களியாட்டப் பரப்பு அது” என்றான்.
அவள் “வெறும் சொற்கள்!” என்று கூவினாள். “நானறிவேன், இச்சொற்களை எங்கெங்கோ கற்றிருக்கிறேன். நூல்களிலிருந்து இவற்றைத் தொகுத்து என்னுள் பூழ்த்தி வைத்திருக்கிறேன்.” அவன் சிரித்து “ஆம், இவையனைத்தும் நீ அறிந்தவையே. மண்ணில் வற்றும் நீர் ஆழ்பாறைக்குள் தேங்குவதுபோல, நீ எண்ணியவை, கேட்டவை, கற்றவை.” அவள் எழுந்த வெறியுடன் அவனை அறைந்தாள். பூனைக்கை என அவன் தோள்களிலும் நெஞ்சிலும் அவள் நகங்கள் கோடிழுத்தன. “சென்றுவிடு! சென்றுவிடு!” என்று அவள் கூச்சலிட்டாள்.
“இவ்வினாவுக்கு மட்டும் மறுமொழி சொல். ஏன் மானுடர் விடுதலையை கனவு கண்டபடி தளைகளை பூட்டிக்கொள்கிறார்கள்?” அவன் சொற்களை கேட்காதிருக்கும்பொருட்டு தலையை விசையுடன் ஆட்டியபடி “சென்றுவிடு! செல்! சென்றுவிடு!” என அவள் கூவியபடியே இருந்தாள். “இரு… பொறு” என அவன் அவள் கைகளைப் பற்ற அவனை பிடித்துத் தள்ளமுயன்றாள். மண்ணில் நிலைத்த பாறைபோல் இருந்தது. தசைகள் கரிய இரும்பென இறுகிய அவன் கைகள் நீண்டு வந்து அவள் இடையை வளைத்தன. “வேண்டாம்!” என்று அவள் கூவினாள். குரல் தழைய “வேண்டாம்” என்றாள்.
“உள்ளம் சொல்லவேண்டும் அவ்வாறு” என்றபடி அவன் அவளை தன்னுடன் சேர்த்துக்கொண்டான். விழிகள் சொக்கி மூட, இதழ்கள் மெல்ல அசைய, தனக்கே என “வேண்டாம் வேண்டாம்” என்று அவள் சொல்லிக்கொண்டிருந்தாள். உடல் வெம்மைகொள்ள, உள்ளங்கால்கள் இழுத்துக்கொண்டு நீள உடல் இனிய தளர்வில் அத்தனை முடிச்சுகளையும் அவிழ்த்துக்கொண்டது. மேலுதட்டில் வியர்வைத் துளிகள் அரும்பின. மூச்சுலைவில் முலைக்குவைகள் எழுந்தமைந்தன. அவன் அவள் உதடுகளை தன் உதடுகளால் கவ்விக்கொண்டான். அவன் கைகள் அவள் உடலைச் சுற்றி வளைத்து இறுக்கி அவள் உடலென்றே ஆயின.
இருண்ட பெருமாளிகையின் உள்ளறை ஒன்றில் எஞ்சிய ஒற்றை அகல்சுடரென மிக ஆழத்திலெங்கோ நானென்னும் தன்னுணர்வு மட்டும் இருக்கக்கண்டாள். காற்றில் அது அசைந்தது. இதோ அணையப்போகிறதென்று தோன்ற மீண்டும் எழுந்து அமைந்தது. மீண்டும் அதை ஊதி அணைக்கத் துடித்தது காற்று. எழுந்து காற்றில் நின்று மீண்டும் திரியுடன் வந்து பொருந்திக்கொண்டது சுடர். மெல்ல குறுகி சிறுசெம்மணியென்றாகி இதோ மறையப்போகிறேன் என்று உணர்த்தி மீண்டும் நீண்டெழுந்தது.
அவள் தன் இடக்கையை மட்டும் தன்னால் இயக்க முடியுமென்று உணர்ந்தாள். கை நீட்டி தான் படுத்திருந்த தரையை துழாவினாள். வேறொன்று பற்றக் கிடைத்தது. ஐந்து விரல்களாலும் அதை இறுகப் பற்றிக்கொண்டாள். பெருவிசையுடன் இழுத்துச்செல்லும் ஆற்றில் இருந்து தப்ப விழைவதுபோல அதை பற்றிக்கொண்டாள். அவள் தசைகள் இறுகித் துடித்தன. கை அறுந்து உடல் அகன்றுவிடும்போல இருந்தது. மூச்சனைத்தையும் திரட்டி தன்னுணர்வு அனைத்தையும் குவித்து அந்தக் கையால் தன்னை உந்தி மேலெழுப்பிக்கொண்டாள்.
வெளியே அலறலொன்று கேட்டது. திடுக்கிட்டு எழுந்து கையூன்றி உடல் குறுக்கி அமர்ந்து நடுங்கினாள். அவள் வலக்காலின் கட்டைவிரலை கவ்வியிருந்த நாகம் ஓடும் நீரில் வளைந்தாடும் சரப்பாசிபோல் உடல் நெளித்தது. “பாம்பு! பாம்பு!” என்று அடுமனைப் பெண்கள் கூவினர். ஒருத்தி சுற்றும்முற்றும் பார்த்து அருகிலிருந்த தடி ஒன்றை எடுத்து அதை அடித்தாள். அது உடலை விலக்கிக்கொள்ள நிலத்தில் விழுந்தது அடி. பாம்பு அவள் விரலை விட்டுவிட்டு பின்னகர்ந்து தலைசொடுக்கி எழுந்து படம் காட்டியது. பின்னர் வளைந்து விரைந்து அப்பரப்பெங்கும் நெளிந்துகொண்டிருந்த நிழல்களில் ஒன்றென ஆகியது.
ஓசை கேட்டு காவலர் பந்தங்களுடன் ஓடிவர அனல் நெளிவில் அங்கிருந்த அனைத்து விழுதுகளும் நாகங்களென நெளிந்தன. ஒருவன் குனிந்து அவள் காலை பார்த்தான். “கடித்துவிட்டது. ஆழமாக பல் பதிந்துவிட்டது” என்றாள் அடுமனைப் பெண். பூமிகர் தன் சிறுகுடிலில் இருந்து தவழ்ந்து வெளியே வந்து என்ன என்ன என்றார். “புதிய அடுமனைப் பெண்ணை பாம்பு கடித்துவிட்டது” என்று கூவினாள் அடுமனைப் பெண். “நச்சுமுறி இருக்கிறதல்லவா? சுதீரரை அழை…” என்று பூமிகர் கூவினார்.
இரு ஏவலர்கள் தலைவழியாக ஆடையைப் போர்த்து துயின்றுகொண்டிருந்த முதிய மருத்துவர் சுதீரரை தட்டி எழுப்பினர். “என்ன?” என்று அவர் கேட்டார். “பாம்பு கடித்துவிட்டது. எழுங்கள்… வந்து பாருங்கள்.” அவர் எழுந்து இடையாடையை முறுக்கி உடுத்து “எங்கே? யாரை?” என்றார். “வருக! புதிய அடுமனைப் பெண்ணை பாம்பு கடித்துவிட்டது, கட்டைவிரலில்…” அவர் கூன் விழுந்த உடல் நடுங்க கைகளை காற்றில் துழாவியபடி அருகணைந்தார். தொலைவிலேயே அவளை நோக்கிவிட்டார். “தெய்வங்களே, அரசநாகம் அல்லவா?” என்றார்.
தமயந்தி தன் உடலெங்கும் நஞ்சின் வெம்மை ஓடி பரவி நிறைவதை உணர்ந்தாள். காது மடல்களும் உதடுகளும் எரியத் தொடங்கின. கண்ணிமைகள், கழுத்து, முலை மொட்டுகள் என அந்த இனிய எரிச்சல் பரவியது. சுதீரர் குனிந்து அவள் கால்களை பார்த்தார். “ஆழக் கடித்திருக்கிறது” என்றபடி நிமிர்ந்து அவளைப் பார்த்து “நெடுநேரமாக கடித்துக்கொண்டிருந்திருக்கிறது. என்ன செய்தார்கள்? நாகத்தை மிதித்துவிட்டார்களா?” என்றார். “ஏதேனும் செய்யுங்கள்” என்றார் பூமிகர். “துயில்கையில் அதன் தலையை மிதித்து அழுத்தியிருக்கிறார்கள். நஞ்சு உடலில் நிறைந்துவிட்டது” என்றார். பூமிகர் “உடனே மருந்து அளியுங்கள், அவர் வெறும் அடுமனைப் பெண் அல்ல” என்றார்.
“இத்தனை நஞ்சுக்கு என் மருந்து ஆற்றுமா என்றறியேன். அளித்துப் பார்க்கிறேன்” என்றார் சுதீரர். அவர் தன் மரப்பெட்டியைத் திறந்து அதற்குள்ளிருந்து ஒன்பது சிறிய சிமிழ்களை எடுத்து உள்ளிருந்த வெவ்வேறு நிறம்கொண்ட வேதிப்பொருட்களை எடுத்து சிறிய கலுவமொன்றில் போட்டு சிறிய குழவியால் கலக்கத் தொடங்கினார். “என்ன செய்கிறீர்கள்?” என்றார் பூமிகர். “இது பாஷாண மருத்துவம். இவை அனைத்தும் நஞ்சுகள். பெருநஞ்சை சிறுநஞ்சுகளின் தொகையால் எதிர்க்கும் பீதர்நாட்டு முறை. இந்நஞ்சுகள் சற்று அளவு மிகுந்தாலும் இவையே உயிர்குடிப்பவையாக ஆகிவிடும்” என்றார்.
தமயந்தியின் உடலில் தசைநார்கள் இழுபட்டு உடல் பிழையாக நாணேறிய வில்லென கிடந்தது. நவபாஷாணத்தை கலுவத்தில் எடுத்தபடி அருகணைந்த சுதீரர் சிறிய ஊசியால் அதைத் தொட்டு அவள் கழுத்துநரம்புகளிலும் கைநரம்புகளிலும் குத்தினார். அதன்பின் அவள் வாயை சிறிய மர ஆப்பால் நெம்பித் திறந்து நாவில் ஒரு துளியை விட்டார். கலுவத்தை தன்னருகே நின்ற இளைஞனிடம் அளித்து “ஏழு அடி குழிதோண்டி இப்படியே புதைத்துவிடு…” என்றார். அவன் அதை வாங்கிக்கொண்டு சென்றான். பூமிகரிடம் “எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை. பார்ப்போம்” என்றார் சுதீரர்.
அன்று இரவு முழுக்க வணிகர் குழுவில் எவரும் துயிலவில்லை. அரைநாழிகைக்குப்பின் சுதீரர் தமயந்தியின் கைகளிலும் கால்களிலும் நீலநரம்புகளில் ஐந்து இடங்களில் கிழித்து குருதியை வெளியே பெருகச் செய்தார். அவள் உள்ளங்கையைப் போழ்ந்து குருதி எழுந்த காயத்தில் மேலும் சில மருந்துகளை வைத்து சேர்த்து கட்டினார். அவ்வப்போது வலிப்பு கொண்டு அதிர்ந்து பின் ஓய்ந்தது அன்றி அவள் உடலில் எந்த மாற்றமும் நிகழவில்லை. இமைகளை விரலால் திறந்து நோக்கியபோது கருவிழிகள் உள்ளே மறைந்திருக்கக் கண்டார். கண் பரப்பு குருதிப் புண்போல் சிவந்திருந்தது.
எவரும் படுக்கத் துணியவில்லை. “அந்த நாகம் இங்கெங்காவது பதுங்கியிருக்ககூடும்” என்றார் பூமிகர். காவலர்கள் பந்தங்களுடன் அனைத்து வேர்மடிப்புகளையும் கிளைப்பொந்துகளையும் நோக்கினர். இலைபறித்து புகையிட்டு தரையெங்கும் பரப்பினர். பூமிகர் மருத்துவரிடம் “கடந்துவிட்டார்களா?” என்றார். “இறப்பென்றால் எப்போதோ நிகழ்ந்திருக்கும். உடல் போரிடுகிறதென்பதனால் இன்னும் நம்பிக்கை இருக்கிறது” என்று அவர் சொன்னார். அச்சமும் பரபரப்பும் அவர்களை நெடுநேரம் அமரவிடவில்லை. பின்னர் அதனாலேயே களைத்து ஆங்காங்கே குழு சேர்ந்தமர்ந்தனர். சொல்லில்லாமல் விழிவிரிய அமர்ந்திருந்தனர்.
பூமிகர் உடல் அதிர்ந்து இழுபட்டுக்கொண்டிருந்த தமயந்தியை நோக்கியபடி “விழிப்பதென்றாலும் இதற்குள் நடந்திருக்க வேண்டுமே?” என்றார். “ஆம், அதை எண்ணித்தான் நானும் அஞ்சிக்கொண்டிருக்கிறேன். அவர்கள் முழுக்க நலமடைவதற்கு வாய்ப்பில்லை” என்றார் சுதீரர். பெருமூச்சுடன் “நற்செய்தியை வந்து சொல்லுங்கள், மருத்துவரே” என்றபின் மீண்டும் உதறிக் கட்டப்பட்ட தன் சிறுகுடிலுக்குள் நுழைந்து தோல்படுக்கையில் படுத்துக்கொண்டார் பூமிகர்.
அவள் பிழைக்கமாட்டாளென்ற எண்ணம் ஒவ்வொருவரிலும் உருவாகியது. சொல்லப்படாமலேயே அது பகிரப்பட்டது. எதிர்பார்க்க ஏதுமில்லை என்பது அத்தருணத்தின் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. அவர்கள் மெல்ல சரிந்து புரண்டு நீள்மூச்செறிந்து குறட்டையென்றாகி துயில்கொள்ளத் தொடங்கினர். மருத்துவர் தன் இளவலிடம் “நானும் சற்று ஓய்வெடுக்கிறேன். முதிர்ந்த உடல் எனக்கு” என்றார். சிறு சம்புடத்தை நீட்டி “ஒவ்வொரு முறையும் இவ்வலிப்பு வந்தவுடன் இம்மருந்தை இவர்கள் நாவுக்குள் விடு. பார்ப்போம்” என்றார். அவன் தலையசைத்து மருந்தை வாங்கிக்கொண்டான். அருகிலேயே தழைப் படுக்கை அமைத்து அதில் தன் கூன் உடலை நீட்டி அலுப்போசையுடன் படுத்துக்கொண்டார் சுதீரர்.
காலையில் கருங்குரங்கொன்றின் ஓலம் கேட்டு பூமிகர்தான் முதலில் விழித்துக்கொண்டார். சில கணங்களுக்குப்பின் முந்தைய இரவின் நிகழ்வுகள் அனைத்தும் நெஞ்சில் எழ குடில் விட்டு வெளிவந்து எழுந்து நின்றார். தொலைவில் நாணேற்றிய விற்களுடன் நான்கு காவலர்கள் நின்றிருந்தனர். அவர்களில் ஒருவன் அவரைப் பார்த்து தலைவணங்கினான். விடிவெளிச்சம் நன்கு எழுந்து மண் வெளுத்திருந்தது. அவர் தன்னைச் சுற்றி துயின்றுகொண்டிருந்த ஏவலர்களையும் அடுமனைப் பெண்களையும் பார்த்தபடி நடந்து தமயந்தி கிடந்த இடத்திற்கு வந்தார்.
அங்கெங்கும் தமயந்தியை காணவில்லை என்பதை உணர்ந்து எங்கு சென்றிருப்பாளென்று புதர்ப்பரப்பை பார்த்தார். பின்னர் குனிந்து துயின்றுகொண்டிருந்த மருத்துவரை காலைத் தட்டி அழைத்தார். சுதீரர் எழுந்து வாயைத் துடைத்தபின் “பூமிகரே?” என்றார். “நாகம் என் கனவில் வந்தது. புன்னகைத்தது. அவர்கள் பிழைத்துக்கொள்வார்கள்.” பூமிகர் “அவர்கள் எங்கே?” என்றார். சுதீரர் ஆடையை நன்கு கட்டியபடி எழுந்து “யார்?” என்றார். “பாம்பு தீண்டிய அடுமனைப் பெண். இங்குதானே இருந்தார்?” என்றார் பூமிகர்.
சுதீரர் நான்கு பக்கமும் நோக்கியபின் “எழுந்து சென்றுவிட்டார்களா?” என்று தனக்குத்தானே கேட்டபடி தலையை வருடினார். துயின்று கொண்டிருந்த அடுமனைப் பெண்ணொருத்தியை தட்டியெழுப்பி “நாகம் தீண்டியவள் எங்கே?” என்றார். அதற்குள் அமர்ந்தபடியே துயின்ற அவர் இளவல் எழுந்து “இங்குதானே இருந்தார்கள்? சற்று முன்புகூட…” என்று சொல்லி திரும்பினான். அக்கணமே உரக்க அலறியபடி எழுந்துவிட்டான். “என்னடா, மூடா?” என்றார் பூமிகர். “இதோ… இதோ” என அவன் கைநீட்டி கூச்சலிட்டான்.
அக்கணத்தில் அனைத்தும் புரிய பூமிகரும் வியப்பொலி எழுப்பினார். தமயந்தி இலைப்படுக்கையில் முற்றிலும் பிறிதொருத்தியாகி படுத்திருந்தாள். அவள் உடற்தசைகள் பலவாறாக இழுத்து இறுகிநிற்க கைகளும் கால்களும் கோணலாகி நின்றிருந்தன. கைவிரல்கள் ஒன்றுடன் ஒன்று ஏறி முறுகியிருந்தன. முகம் வலப்பக்கமாக இழுபட்டு கோணல் கொண்டிருந்தது. அது உடல் முழுக்க இருந்த கோணலின் விளைவு எனத் தெரிந்தது. கண்களும் மூக்கும் வாயும் வலப்பக்கமாக இழுபட்டு உருமாறியிருந்தன. தோல் பல்லாண்டு முதுமை கொண்டதுபோல் ஒளியிழந்து சுருக்கங்கள் அடர்ந்திருந்தது.
“முற்றிலும் மாறிவிட்டார்கள்” என்றார் பூமிகர். “மானுட முகத்தோற்றம் என்பதே வலப்பக்கமும் இடப்பக்கமும் கொள்ளும் பொருத்தம்தான். அது மாறினால் அனைத்தும் மாறிவிடும்” என்றார் சுதீரர். அவள் கைபற்றி நாடியை நோக்கியபின் “குதிரைநடை… இறப்பு அகன்றுவிட்டது என்பது உறுதி” என்றார்.
மறுநாளே தமயந்தி எழுந்துவிட்டாள். ஒற்றைக்காளை வண்டியில் சென்றுகொண்டிருக்கையில் அவள் நினைவு மீண்டாள். முனகலோசை கேட்டு அருகணைந்த அடுமனைப் பெண்களிடம் முதுமகளின் தளர்குரலில் “என்ன ஆயிற்று?” என்றாள். “நாகம் பற்றியது. நச்சு ஏறி நோயிலிருந்தீர்கள். இப்போது மீண்டுவிட்டீர்கள்” என்றாள் சலஃபை. அவள் எழுந்தமர்ந்து “நான் முன்னரும் நஞ்சுப் பீடிப்பு கொண்டிருந்தேனே” என்றாள். அவளருகே வந்த சுதீரர் “ஆம், அதனால்தான் இந்த நச்சுப் பீடிப்பிலிருந்து தப்பினீர்கள். அது நட்பு நஞ்சு. இது பகை நஞ்சு” என்றார்.
அவள் விழிகளை நோக்கி எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர் அவர்கள். அவள் “என் குரல் ஏன் இப்படி இருக்கிறது?” என்றாள். அவர்கள் விழிகளில் வந்த மாறுபாட்டை அறிந்ததும் தன் கைகளை நோக்கி “என்ன?” என்றாள். சுதீரர் “தேவி, நாக நஞ்சால் நீங்கள் உருமாறு கொண்டுவிட்டீர்கள்” என்றார். “உருமாறு என்றால்…?” என்றாள் தமயந்தி. “பிறர் அறிய முடியாதபடி…” அவள் திகைப்புடன் சில கணங்கள் நோக்கிவிட்டு அருகிருந்த தாலம் ஒன்றை எடுத்து தன் முகத்தை நோக்கினாள். அவள் தலை நடுங்கியது. நீள்மூச்சுக்கள் எழுந்தமைந்தன. பின்னர் தலையசைத்து “நன்று” என்றாள்.
“நாளடைவில்…” என தொடங்கிய சுதீரரிடம் “இப்போதைக்கு இது நன்று, மருத்துவரே. நான் என் உடலுக்குள் ஒளிந்துகொண்டதைப்போல் உணர்கிறேன்” என்றாள் தமயந்தி. சுதீரர் தலைவணங்கினார். அவள் அத்தனை எளிதாக அதை ஏற்றுக்கொண்டது அடுமனைப் பெண்களுக்கு உகக்கவில்லை. சலஃபை “உங்கள் அழகிய முகம்…” என்று தொடங்க “ஆம், அதைத்தான் இன்றுவரை சுமந்துகொண்டிருந்தேன். இனி நோக்குகள் எனைச் சூழாது. இந்த விடுதலையை நான் எப்போதும் கனவு கண்டிருந்தேன்” என்றாள்.
மறுநாள் அவள் உடலின் நோய் முற்றிலும் அகன்றது. எழுந்து அடுமனைப் பணிகளில் ஈடுபடலானாள். அங்கிருந்த அனைவரும் அவளை நன்கறிந்திருந்தபோதிலும்கூட அவள் உடல் மீண்டும் மீண்டும் அவர்கள் விழிமுன் தோன்றி தானே அவள் என நிறுவிக்கொண்டது. சலஃபையும் பிற அடுமனைப் பெண்களும் அவளை அதட்டி வேலை வாங்கினர். பூமிகர் ஏவலரிடமென அவளிடம் எரிச்சல் காட்டினார். அவள் ஓரிரு நாட்களே உடலுக்குள் பொருந்தாமல் பிறிதென்றிருந்தாள். பின்னர் அவள் அகம் உடலை கற்றுக்கொள்ளத் தொடங்கியது. சிற்றடி வைத்து குனிந்து நடப்பதும், நிற்கும்போது இடையில் கைவைத்து அலுப்பொலி எழுப்புவதும் அமர்ந்ததும் கால்நீட்டி நீவிக்கொள்வதும் தானே என அவள் அகம் ஆகியது.
உடலறிந்த எல்லைகளும் உடலை நோக்கிய விழிகளும் அவளை முழுமையாக வரையறுத்தன. எழுபது நாட்களில் அவள் முற்றிலும் முதுமகளென்றானாள். எங்கோ கடந்த இளமை என அவள் அதை உணர்ந்தாள். அவள் இளமையுடனிருந்ததை பார்த்தவர்களே கூட அதை முற்றிலும் மறந்தனர். வணிகக் குழுவில் இடைவெளியில்லாத பணிகளிருந்தன. அமையுமிடம் சென்றதுமே அடுமனைப் பணி தொடங்கி அடுகலங்களை எடுத்து அடுக்குவதுவரை நீடித்தது. விட்டுவரும் இடத்துடன் அந்நாளையும் உதறிவிட்டு முன்சென்றமையால் காலமென்பது அந்நாள் மட்டுமே என நிகழ்ந்தது.
விழிநோக்கு மங்கலானமையால் வண்ணங்களை அவள் இழந்தாள். செவிக்கூர் மழுங்க ஓசைகளும் பொருளற்றதாயின. நினைவுகள் இணையாமையால் மணங்கள் வெறும் மூக்கறிவுகளாகவே வந்து சேர்ந்தன. உடலென அவள் உணர்ந்தது களைப்பையும் வலியையும் மட்டுமே. காமம் என்று ஒன்றை அவ்வுடல் அறிந்திருந்தது, உள்ளம் ஓயாது அளைந்திருந்தது என்பதே எப்போதேனும் வாள்வீச்சென அவளைப் போழ்ந்து அதிரச்செய்து மறையும் கூரிய குறுங்கனவுகள் வழியாகவே அவளுக்குத் தெரிந்தது.
எஞ்சியிருந்தது புலன் சுவை மட்டுமே என்பதனால் அவள் எப்போதும் நாவில் வாழ்ந்தாள். அனைத்துச் சுவைகளும் அவளை கிளரச்செய்தன. சுட்ட ஊன், எஞ்சிய அன்னம், ஆறிய அப்பம், காய்கள், கிழங்குகள். ஒன்றுமில்லையென்றால் புளிக்காயையும் உப்பையும் சேர்த்து வாயிலிட்டு எச்சிலுடன் மென்றாள். பருப்பையும் அரிசியையும் மடியில் கட்டிவைத்து வாயிலிட்டு குதப்பிக்கொண்டே இருந்தாள். அடுமனைப் பெண்டிர் விலக்கி அதட்டினால் அவர்களை நோக்கி மூக்கு வளைந்த சுருங்கிய முகம் இழுபட புன்னகைத்தாள். எந்த வசைக்கும் அவள் கூசவில்லை. எதையும் சிறுமையென்று எண்ணவில்லை.
முதலில் அவளை விலக்கி அதட்டியவர்கள் பின்னர் சிறுகுழவியென்று அவளை நடத்தலாயினர். அவளுடைய துடிக்கும் நாவே அவளை குழந்தையாக்கியது. அடுகலங்களை கழுவும்போது விளிம்புவட்டத்தில் படிந்திருந்தவற்றைச் சுரண்டி அவள் வாயிலிடுவதைக் கண்டு “என்ன அது? என்ன? துப்பு… துப்பு அதை” என்று சலஃபை கூவினாள். ஓடிவந்து கையை ஓங்கி “துப்பு… துப்பச் சொன்னேன்” என்றாள். அவள் துப்பிவிட்டு தலைகுனிந்து நின்றாள். “எது கிடைத்தாலும் வாயில் போடு. நோயுற்றால் எவர் பார்ப்பது?” என்றாள் சலஃபை. ஆனால் அன்று படுக்கும்போது அவள் கையால் மென்மண்ணை அள்ளி ஊதி வாயிலிடுவதைக் கண்டு தலையிலடித்துக்கொண்டாள்.
அப்பால் நின்ற சுதீரர் சிரித்தபடி “வாய்வெறுமை முதுமைக்குரிய இயல்பு. பாக்கு பழகச் சொல்” என்றார். வெற்றிலைச் சுருக்கை அவளிடம் அளித்து “இதோ வைத்துக்கொள்… இனி இதை வாயிலிடு” என்றாள். அவள் பாக்கை எடுத்து வாயிலிட்டு ஊறவைத்து அதன் துவர்ப்பை உணர்ந்து முகம் சுருங்கி விழி மூடினாள். பின்னர் எப்போதும் அவள் வாயில் பாக்கு இருந்தது. சற்று இடைநேரம் அமையும்போதெல்லாம் ஓரமாகச் சென்றமர்ந்து பாக்கை வாயிலிட்டு கண்மூடி அரைத்துயில் கொள்ளலானாள். “அசைபோடும்போது அனைவரும் விலங்குகளே” என்றார் சுதீரர்.
அவர்கள் சேதி நாட்டு எல்லையில் வணிகவிடுதி ஒன்றில் தங்கியிருந்தனர். தாழ்ந்த கூரையிட்ட கொட்டகையில் பெண்களுக்கான மூலையில் தரையில் இட்ட பாயில் அமர்ந்து அவள் பாக்குப் பொதியை அவிழ்த்தபோது அப்பால் ஒரு சூதர் நிஷதநாட்டு நளனும் தமயந்தியும் கலியின் சினத்தால் அழிந்த கதையை சொல்லிக்கொண்டிருந்தார். “தமயந்தியை காமுற்றான் கலி. அவளைக் கொள்ள நளனை வெல்லவேண்டுமென்று அவன் உணர்ந்தான். தக்கம் நோக்கி நிழலென நளனுக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்தான். எப்போதும் அரசனுடன் இரு நிழல் இருந்ததை எவரும் நோக்கவில்லை.”
“வேள்விக்கு அந்தணர் அழைத்தபோது அவன் புரவியுடன் இருந்தான். மூன்றாம் முறை அமைச்சரே வந்து அழைத்தபோது விரைந்தெழுந்து கைகால்களை கழுவிக்கொண்டான். அமைச்சர் அவனிடம் அரசே வேள்விக்கு தூய உள்ளத்துடன் செல்லவேண்டும். கைகால் கழுவி புரவிமணம் களையுங்கள். உள்ளத்தில் புரவி விழைவை ஒழியுங்கள் என்றார். ஆம் ஒழிந்தேன் என்று சொல்லி அவன் கைகழுவி முடித்து அமைச்சருடன் சென்றான். அந்தப் பதற்றத்தில் அவன் தன் இடக்காலின் குதிமுனையை கழுவத் தவறிவிட்டிருந்தான். அதனூடாக கலி அவன் உடலுக்குள் புகுந்தான்.”
திகைத்தவளாக சலஃபை திரும்பி முதுமகளை நோக்கினாள். அவளுக்கு படபடப்பாக இருந்தது. இரு கைகளையும் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டாள். “அவனிலமர்ந்த கலி இளையோனை சூதுக்கு அறைகூவினான். சூதுமேடையில் இளையோன் அருகே காளை வடிவில் அமர்ந்த கலியின் தூதன் அவனுக்கு வழிகாட்டினான். பகடையில் புகுந்துகொண்டார்கள் கலியின் மூன்று துணைவர்கள்.” சலஃபை முதுமகளை மீண்டும் நோக்கினாள். அச்சொற்கள் அவள் காதில் விழுகின்றன என்று தெரிந்தது. ஆனால் அவை அவளுக்கு எவ்வகையிலும் பொருளாகவில்லை. பாக்கு ஊறத்தொடங்கிய சுவையே அவளை நிறைத்திருந்தது.