மன்மதன் [சிறுகதை]
அன்புள்ள ஆசானுக்கு,
மன்மதன் சிறுகதையை நான்கு நாட்களுக்கு முன்பு படித்தேன் அப்பொழுது அந்த சிறுகதை அதன் விரிவை என்னால் உணரமுடியவில்லை,நேற்று வெய்யோனில் தீர்க்கதமஸ் பற்றி சூதர் படும் பாடல் பற்றி படித்தேன்.அதை பற்றி சிந்திக்கும்போது தீர்க்கதமஸ் மற்றும் மன்மதன் கதையில் வரும் ராஜுக்கும் உள்ள ஒற்றுமை புரிந்தது.
கண் இல்லாதவரின் காமம்;கண் எல்லாத்தையும் மூன்று பரிமாணத்தில் திரையிட்டு காட்டுகிறது ஆனால் பொருள் கொண்ட பிரம்மமோ பரிமாணம் அற்றது பொருளினுள் உறைவது.காமம் அது காணும் உறுப்பில் முழுவதுமில்லை அந்த திரையை கிழித்து உள்ளே சென்றால் மட்டுமே அதை தொட்டுபாக்க முடியும்.பிறவியிலிருந்தே கண் இல்லாதவனுக்கு அந்த முதல் திரையை எளிதில் கிழிக்க முடியும்.
காமம் இரண்டு பாம்புகளையும் சார்ந்தது,ஒரு பாம்பால் முற்றிலும் அதை அறிய முடியாதது.இரண்டும் தன்னை கிழித்து தன்னிளிலுள்ள பிரம்மத்தை ஒன்றையொன்றை நிரப்பி ஒன்றென ஆவதே காமம்.
மன்மதன் கதையில் வரும் கிருஷ்ணனோ காலியாக உள்ள கோவிலில் செருப்பை கழட்டுவதற்கே யோசிக்கிறான் அவனால் தன் உடலை இழந்து காமத்தை அறிவது கடினம்.அவன் கண்களால் புற உலகத்தை வெறும் நிறம் மற்றும் வடிவ ஒழுங்குகளாக பார்க்கிறான்.கிருஷ்ணன் மல்லியையும் அதே போன்று தான் பார்க்கிறான்.அவன் மல்லியோட முலைகள் சிற்பக்கள் முலைகள் போன்று “சரிசமமாக” இருந்தது என நினைக்கிறான்.அவனால் அந்த முதல் பரவச அனுபவத்தை தாண்டி அறிய முடியவில்லை
ராஜு வாழ்வது அவன் சமைத்த அவனுடைய உலகில் அங்கு அவனுக்கு நாம் படைத்தை நெறிகள் கிடையாது,நிறம் மற்றும் வடிவ ஒழுங்கு கிடையாது.அவனுக்கு கண் காட்டும் திரை கிடையாது.அவனும் அறிபடுபொருள் மட்டுமே.அவனால் எளிதில் உடலுக்கு அப்பால் அல்லது பொருளுக்கு அப்பால் உள்ள அதை உணர முடியும்.
“சமமா பொண்ணு நின்னாக்க அதுல அழகு இல்ல. அந்தால வெளக்குநாச்சி செலைகள பாருங்க பொம்மைகணக்காத்தான் இருக்கும்”
ராஜுவை புரிந்ததினால் மல்லியும் கண் இல்லாத உலகத்தின் தடையின்மையை,ஒழுங்கின்மையை உணர்ந்திருக்கிறாள்.இரண்டு பேரும் ஒன்றையொன்றை உணர்ந்து,ஒன்றையொன்றை இழந்து,ஒன்றையொன்றை நிரப்பி காமத்தில் உறையும் பிரம்மத்தை அறிந்திருக்கிறார்கள்.
”மன்மதன் கிட்ட எந்த ஆயுதமும் கெடையாது சார்…அந்தக் கரும்புவில்லும் மலரம்பும் மட்டும்தான்…”
வில்லை போன்ற வளைதலும் அம்பை போன்று தொடுதலும் கொண்டே காமத்தை அறிய முடியும்.எந்த அறிதலும்,தடையும் மனதிற்குள் இருந்தால் காமத்தை முற்றுணர முடியாது.
இதை உணர்ந்த போது நான் உணர்ந்த காமம்;ஒரு இழை இன்னொரு இழை தழுவும் காமம்,இந்த புடவி இடையறாது இயற்றும் காமம்.காமம் பிரம்ம நடனத்தின் உச்ச கணம்.
இனி செவி திறந்து ஒலியை புணர்வேன்,
கை விரித்து கற்றை புணர்வேன் “நிம்மதியாக”.
இப்படிக்கு உங்கள் மாணவன்
தி.ஜினுராஜ்.
அன்புள்ள ஜெ
மன்மதன் கதையை ஒரு எளிமையான நிகழ்வாகத்தான் வாசித்தேன். மன்மதன் என்பது அச்சிலையைக் குறிக்கிறது என்று நினைத்தேன். ஆனால் வாசகர்கடிதம் ஒன்றில்தான் அது அந்த விழியில்லாதவனைத்தான் குறிக்கிறது என்று தெரிந்தது. சில கிரேக்கச் சிலைகளில் க்யூபிட் கண்களைக் கட்டிக்கொண்டிருப்பார். அதேபோல கண்ணில்லாத மன்மதன். பத்துவிரல்களும் கண்களாக ஆனவன். பத்துதலை ராவணனைப்போல. அபாரமான கற்பனை.
கணேஷ்
1 ping
எழுத்தாளர்களும் வாசகர்களும்
August 6, 2017 at 12:02 am (UTC 5.5) Link to this comment
[…] மன்மதனின் காமம் […]