பெயர்கள் கடிதங்கள்

IMG_20160308_182851

பெயர்கள்

 

அன்பு ஜெ.

வணக்கம்.

 

பெயர்கள் கட்டுரை படித்தேன்.தன்மானம்..இனமானம்..வருமானம்.  சு.சமுத்திரம் -S.Ocean.வயிறு குலுங்க சிரித்தேன். நன்றி.

 

எங்களூர் சமதர்மம்,நாத்திகன் இவர்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம்.நீங்களும் ஒருமுறை வந்து சிறப்பிக்க வேண்டும் என்பதால்எங்கள் பள்ளி நிகழ்வுகளை கவனப்படுத்த இத்துடன் இணைத்துள்ளேன்.

 

தங்கமணி

மூக்கனூர்ப்பட்டி

அன்புள்ள தங்கமணி,

நலம்தானே? தலை நரைத்துவிட்டது புகைப்படத்தில்

இனமானமும் தன்மானமும்கூட இப்போது வயதாகிவிட்டிருப்பார்கள் இல்லையா?

சந்திப்போம்

ஜெ

*

இனிய ஜெமோவிற்கு,

வணக்கங்கள் . நலமா? பெயர்களைப் பற்றிய மீள்கட்டுரை சிரிப்பையும் சிந்தனையும் வித்திட்டன , அதையொட்டிய திரு எஸ். ராமகிருஷ்ணனின் பெயர் பற்றிய ஓர் துணையெழுத்து  சிறுகதையும் மனதில் நிழலாடியது.

இந்தப் பெயர்  என்னைப்படுத்தும்பாடு என் ஐந்து வயது மகள் வரை வந்துவிட்டது. தந்தையின் பெயர ஆராவமுதன், வெகுசிலர் தவிர்த்து இப்பெயரை சரியாக உச்சரிப்பவர்கள் குறைவு. அதிலும்  ஆங்கிலத்தில் எழுதப்பட்ட  அப்பெயரை அலுவலகத்தில்  ஒருவர் அருவா’முதன்  என்றாரே அது அப்பெயரின்  உச்சக்கட்டம்.

என்னுடயபெயர் லங்கேஸ்வரன், எண் தாயாரின் நிறைமாத பிரசவகாலங்களில் குடும்பச் சமேதராக இலங்கை சென்றுவிட்டு வந்தவுடன் பத்திரமாகப் பிறந்ததால் இட்ட காரணப்பெயர்.

ஆளைப்பார்த்தால் அம்மாஞ்சி மாதிரி இருக்கான் இவனுக்கு
லங்கேஸ்வரன்னு பெயரா!? லங்கேஸ்வரன் கெட்டவனில்லை நல்லவன்தான் என இதிகாசக்கதையை எண் மனதை தேற்றுவதாகச் சொல்பர்கள் நினைத்து நொந்து நூடுல்ஸ் ஆனதுதான் மிச்சம் :-(

இவ்வனைத்தையும் தாண்டி எண்சீமந்த புத்ரிக்கு ஸ்ம்ரிதி என்று பெயர வைத்தேன் , ஆங்கிலத்தில் எழுதப்பட்ட Smriti இப்பெயரின் ஸ்பெல்லிங்கை உச்சரித்துவிட்டு சீன நண்பர் சிங்கையின் பிரபலமான போக்குவரத்து நிறுவனமாக இருக்கும் SMRT என்று அவளைக் கூப்பிட ஆரம்பித்துவிட்டார் :-)

வெகுநாளாக மனதில் தோன்றிய இக்கேள்வியை உம்மை விட்டால் விவரிக்க யாரும் இயலாது என்று கேட்கிறேன்.

அலுவலகத்தில் உடன்வேலைசேய்யும் சக மலையாளிகளின் பெயரை பற்றிய கேள்வி . சோனி, shony , பினிஷ், டிட்டோ, ப்ரிஜோ எனப் பல வித unique பெயர்கள் . ஏன் இங்குமட்டும் இந்திய மைய்யஒட்டத்தின் பெயர் குறைவாகக் காணப்படுகின்றன. நேரமிருப்பின் விளக்கினால் மகிழ்ச்சி .

லங்கேஸ்வரன்,

 

அன்புள்ள லங்கேஸ்வரன்

 

இதுவே போதியவேடிக்கையுடன் இருக்கிறது. ஆராவமுதனின் மகன் லங்கேஸ்வரன்.

என் சித்தப்பா மகள் பெயர் ஷாஜி. குள்ளமான பெண். என் இசைவிமர்சக நண்பர் பெயரும் ஷாஜிதான். இவர் ஆறடி ஆண். கேரளத்தில் ஷாஜி, பிந்து போன்ற பெயர்கள் போடுவதை நானும் கேலியுடன் பார்த்ததுண்டு.

 

டிங்கு. ஜிஞ்சு, பிஞ்சு, டிம்பு என இன்று மலையாளிகள் பெயரிடுகிறார்கள்.ஒருமுறை ஒரு நண்பர் மகளுக்கு ஆலா என்று பெயரிட்டிருந்தார். என்ன பொருள் என்றேன். பொருள் இல்லை என்றார். பின்னர் அவரே விளக்கினார். மத அடையாளம் இல்லாத, பண்பாட்டு அடையாளம் இல்லாத பெயர் வேண்டும் என இதைப்போட்டதாக. உலகக்குடிமகனாக மகள் இருக்கவேண்டும் என்று. விளைவு என்ன என்பதல்ல நோக்கம் சரியானதே

 

ஜெ

 

 

 

சார் வணக்கம்

நேற்று  தங்களின் தளத்தில் வெளியான ‘ பெயர்கள் ‘ பதிவை வாசித்தேன். உங்களின் அப்பாவின் கன்னத்தை வேறு தட்டிவிட்டதால் அவர் வையக்கூடும் என்று வாசிக்கையில் புன்னகைக்க தொடங்கி, சாராதாவிற்கு தக்‌ஷணை போடச்சொல்கையில்  மெல்ல சிரித்து, ரினீஷ், துமேஷ், ஜிலீஷ் ரமேஷ் குமெஷில்  வாய் விட்டுச்சிரித்து, செட்டியார்கள் வருமானம் என்று பெயரிடுவதில் சிரிப்பை அடக்க சிரமப்பட்டென், இடுப்பில் தாயத்து மட்டுமணிந்த குஷ்பூவை வாசிக்கையில் குபீரென் சிரித்து  பேருந்து ஓட்டுனரே திரும்பி பார்த்தார்.

 

ஆனால் ’பெரும்பன்னி’  என்பது உயர் சாதியினர் இட்ட பெயராயிருக்கலாமென்பதையும்  ’கும்பிடெறேன் சாமி’ எனும்  தலித் ஒருவரின் பெயரும் நிறைய யோசிக்க வைத்தது. எங்கள் வீட்டில் தோட்டம் எல்லாம் சுத்தம் செய்ய உதவும் பெண்ணின் பெயர் ஓவியா,  நல்ல கருப்பாய் அழகிய கருங்கல் சிற்பம் போல இருப்பாள், தெரிந்தே வைத்திருப்பார்கள் போல.

 

என்னுடன் பணி புரியும் ஒரு பேராசிரியர்  மகனுக்கு ’பியாரி மக்ரே’ என்று பெயரிட்டிருக்கிறார்.கேட்டதற்கு ரஷ்ய புரட்சியாளர் பெயரென்றார் அடுத்து பிறந்த மகனுக்கும் என்னவோ பெயர் சொன்னார் என் சிற்றறிவிற்கு அதை  நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லைஎங்கள் கல்லுரி முதல்வர் தமிழ்த்துறையை சார்ந்தவர், அவர் மனைவி ஆங்கிலத்துறை ,ஒரெ மகள் ’மொழி

 

ஒவ்வொரு வருடமும் முதலாம் ஆண்டு மாணவர்களின் வருகைப்பதிவேட்டில் அழகிய வித்தியாசமான பெயர்கள் இருக்கும் சரியாக உச்சரிக்க கண்ணாடியை துடைத்துப்போட்டுக்கொண்டுதான் வகுப்பிற்கு செல்வேன்

 

நேற்று  மாதத்தின் இறுதி நாளாகியதால்  சரணை  விடுதியிலிருந்து அழைத்து  வந்தேன். வழக்கம் போல அவன் விட்டுச்சென்றிருந்ததிலிருந்து துவங்கி  மாமலர் 3 அத்தியாயங்கள் சொல்லிவிட்டு இந்த பெயர்களைபற்றிய உங்களின்  பதிவைச் சொல்லிக்கொண்டிருந்தேன்

அவன் பள்ளியில் அவனுடன்  படிக்கும் ’’ தண்ணீர்மலை, தீர்த் , அனுபவ் அகர்வால், துளிர்’’  பற்றியெல்லாம் உங்களுக்கு அவன் சொன்னதாக எழுதும்படியும் ’ ஐஷ்வர்யா முல்லாமாரீ’  எனும் பெண்ணுக்கு ஏன் தமிழ் பசங்க எல்லாம் தன் அப்பா பெயரைச்சொல்லி கிண்டல் பண்ணுகிறார்கள் என்று   தெரியாவிட்டாலும்    இவன்களை எங்கு பார்த்தாலும் ஒரே ஒட்டமாய் ஓடிவிடுவாளென்றும்  சொல்லிக்கொண்டிருந்தான். தங்களின் வாழ்நாள் சாதனையாளர் விருதில் அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி

 

தவமாய் தவமிருந்து  இரண்டு பெண்களுக்கு பிறகு  ஒரு   மகனை பெற்றெடுத்த என் பெற்றோர் எனக்கும் அக்காவிற்கும் லோகமாதேவி , சங்கமித்ரா என்று சுருக்கமாக பெயரிட்டு விட்டு அவனுக்கு மட்டும் ’விஜயரகுனாத பாஸ்கர சேதுபதி தொண்டைமான் பூபதி காளிங்கராய சுப்ரமணிய சுந்தர வடிவேல் (கவுண்டர்)  எனப்பெயரிட்டு அவன் மீதான் பிரியத்தை காட்டி  இருக்கிறார்கள் அவன்  திருமண் அழைப்பிதழிலும்  கூட இப்படியேதான் அச்சிட்டோம்

 

பாரதியார் பல்கலையில் மொழியியலில், நீலகிரி தோடர்கள்,  படுகர்கள்  பெயர்களில் ஆய்வு செய்த என் தோழியுடன் 97ல் கள ஆய்விற்கு  நானும் சென்றிருந்த  போது ஒரு வீட்டில்  3 பெண்குழந்தைகளுக்கு  வயலெட், ஆரன்ஞ், மற்றும் ரோஸ் என்று பெயரிட்டிருந்தார்கள்,  அங்கிருந்த அக்குழந்தைகளின் பாட்டன் என்  பெயரைக்கேட்டு விட்டு லோகமாதேவி என்பது  மிக புராதானமாயிருக்கிறது என்று  அபிப்ராயபட்டார், வயலட்டிற்கு இது புராதானம்தான்.

 

நிறைய சிரிக்கவும் அதைவிட நிறைய சிந்திக்கவும் வைத்த பதிவிற்கு நன்றிகளுடன

 

லோகமாதேவி

 

அன்புள்ள லோகமாதேவி,

என் அப்பாவின்பெயர் இந்தியாவிலேயே மிக அரிதானது. திருவனந்தபுரம் பகுதி நாயர்களுக்கு மட்டுமே உரியது. பாகுலேயன். கைகள் மிகுந்தவன் என்று பொருள். முருகனின் பெயர். நான் பெரும்பாலான இடங்களில் இதை விரிவாக விளக்குவேன். ஆனால் என் அண்ணனின் பெயர்தான் உண்மையில் சிக்கலானது. பாலசங்கர். சங்கரனுக்கு பால்யமே கிடையாது. என் சித்தப்பாவின் சொந்த உருவாக்கம்

 

ஜெ

முந்தைய கட்டுரைசெங்கல்பட்டில் பேசுகிறேன்…
அடுத்த கட்டுரைஎழுத்தாளனைப் புனைந்துகொள்ளுதல்…