சமூகத்தின் கூட்டுமனம் ஆளுமைகளைப் புனைந்துகொள்கிறது. அந்த ஆளுமைகளின் உடற்தோற்றத்திற்குச் சமானமாகவே அவர்களின் பங்களிப்பும் அதை அச்சமூகம் எதிர்கொள்ளும் விதமும் அதில் தொழில்படுகிறது. தமிழகத்தில் அவ்வாறு சென்றகாலங்களில் நாம் புனைந்துகொண்ட ஆளுமைச்சித்திரங்களை நினைவுகூர்ந்தால் இதை எளிதில் வகுத்துக்கொள்ளலாம்.
வள்ளுவர் ஒரு சைவத்துறவியின் சாயலுடன் புனையப்பட்டார். அவருடைய சமணப்பின்புலம் அச்சித்திரம் வழியாக நம் நினைவிலிருந்து மறைக்கப்பட்டது. கம்பன் ஷத்ரியத் தோற்றத்துடன் புலமைமிடுக்குடன் புனையப்பட்டான். அவனுடைய உவச்சர்குலம் அவ்வோவியத்தில் தெளிவாகவே தெரிகிறது.
இவர்களின் தோற்றம் நமக்குத்தெரியவில்லை. இவர்களைப்பற்றிய செய்திகள் மற்றும் இவர்களின் படைப்புகள் சார்ந்தும், இவர்களை நாம் வகுத்துக்கொள்ள விரும்பும் கோணத்திலும் இவர்களின் உருவங்கள் வரைந்தெடுக்கப்பட்டன.
பாரதி நம் முன் வாழ்ந்தவன். புகைப்படங்களாக நமக்குக் கிடைப்பவன். ஆனால் சுதந்திரப்போராட்ட காலகட்டத்தில் ஓவியர் ஆர்யா அவர்களால் வரையப்பட்ட ஓவியமே பாரதியின் முகமாக நம் சமூகமனதில் நிலைநிறுத்தப்பட்டது. அது பாரதியின் புறத்தோற்றத்தின் சில அம்சங்களை எடுத்துக்கொண்டு மீளுருவாக்கம் செய்யப்பட்ட முகம். முண்டாசு முறுக்குமீசை ஆகியவை பாரதியின் அடையாளங்களாக ஆயின.
அந்த ஓவியத்தில் உள்ளதுபோல பாரதி முண்டாசு கட்டிய புகைப்படம் ஏதுமில்லை. அது சீக்கியபாணியில் அமைந்த தலைப்பாகை.. அதில் தெரியும் பாரதியில் ஷத்ரியவீரம் முதன்மைப்படுகிறது. சினந்த விழிகள், நெரித்த புருவங்கள். சுதந்திரப்போராட்டத்திற்கு அந்த பாரதி ஒரு பதாகை. அறைகூவுபவன், கொந்தளிப்பவன், அடங்க மறுப்பவன். தமிழ்ச்சமூகத்தின் எதிர்க்குரல்.
ஆனால் பாரதியின் ஆளுமையில் சிறுபகுதியே அது வ.ரா எழுதிய பாரதிவரலாறு இந்த ஓவியத்திற்குரியதாகத் தோன்றுகிறது யதுகிரி அம்மாள், கனகலிங்கம், செல்லம்மாள் பாரதி ஆகியவர்களின் நூல்களிலும் வ.உ.சிதம்பரம்பிள்ளை குறிப்புகளிலும் தெரியும் பாரதி பிறிதொருவர். ஒருவகையான ஞானக்கிறுக்கர். அபின்பழக்கம் தெரியும் வெறிக்கண்களும் தாடிமீசையுமாக மெலிந்த உடலுடன் நின்றிருக்கும் பாரதியின் புகைப்படத்திற்கும் அந்த ஓவியபாரதிக்கும் சம்பந்தமே இல்லை. சிற்றிதழ்களில் ஐம்பதுகளுக்குப்பின் இந்தப் பித்தன் பாரதி பிரபலமானார்.
நவீன இலக்கியவாதிகளில் ஜெயகாந்தனுக்கு மட்டுமே அப்படி ஒரு ஆளுமைச்சித்திரம் அமையும் வாய்ப்பு கிடைத்தது. ஆதிமூலத்தின் கோட்டுப்படங்கள் வழியாக. புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, க.நா.சு, செல்லப்பா போன்றவர்கள் கோட்டோவியங்களாக வரையப்பட்டுள்ளனர். அந்த ஓவியங்கள் அனைத்தும் அவர்களின் புகைப்படங்களிலீருந்து உருவான கோட்டுச்சித்திரங்கள். அவற்றில் அவர்களின் உருவத்தனித்தன்மைகள் சில தெரிகின்றன. அவர்களின் ஆளுமையோ இலக்கியத் தனித்தன்மையோ அவர்களுக்கு சமூகக்கூட்டுமனம் அளித்த எதிர்வினையோ இல்லை.
அதற்குக் காரணம் அவற்றை வரைந்தவர்கள் வெறும் ஓவியர்கள், அவர்களுக்கு இலக்கியரசனையோ இலக்கியம் வழியாக உருவாகிவரும் கூட்டு உளச்சித்திரத்தை உணரும் நுண்ணுணர்வோ இல்லை என்பதுதான்.
ஆதிமூலம் ஜெயகாந்தனை மட்டுமே வாசகனாகவும் சமூகக்கூட்டுப் புனைவின் பகுதியாகவும் நின்று எதிர்கொண்டிருக்கிறார் என தோன்றுகிறது. ஜெயகாந்தனின் இருதனித்தன்மைகள் அவருடைய கோட்டுச்சித்திரங்களில் வெளிப்படுகின்றன. ஒன்று அவருடைய தனிமை. இன்னொன்று, அவருடைய நிமிர்வு அல்லது ஆணவம். முன்னது ஆதிமூலமே நேர்ப்பழக்கத்தில் உணர்ந்தது. பின்னது சமூகப்பொதுமனத்தின் உருவகம்.
கேரளத்தின் முக்கியமான புனைவெழுத்தாளர்கள் அனைவருமே ஓவியர்களால் உருபுனையப்பட்டுள்ளனர். கோட்டோவிய நிபுணரான நம்பூதிரி மிகத்தேர்ந்த இலக்கிய வாசகர், திரைப்பட ஆர்வலர். அவருடைய வரைகோடுகள் வழியாக பஷீர் மகத்தான கதாபாத்திரமாக உருவாகி வந்து கேரளச் சமூகக் கூட்டுநினைவில் அழியா ஓவியமாக வாழ்கிறார். தகழி, தேவ், ஓ.வி.விஜயன் போன்ற பிற எழுத்தாளர்களுக்கும் அப்படி பல்வேறு கோணங்களில் மிகச்சிறந்த சித்திரங்கள் உள்ளன.
சமீபத்தில் பாஷாபோஷிணி இதழில் பாஸ்கரன் எம்.டி.வாசுதேவன் நாயரை வரைந்த கோட்டோவியத்தை மீளமீள நோக்கிக் கொண்டிருந்தேன். எம்.டி.வாசுதேவன் நாயரின் படைப்புக்களை வாசித்தவர்களுக்கு அவருடைய ஆளுமையை பாஸ்கரன் கட்டமைத்திருப்பது எத்தனை நுட்பமானது என தெரியும்.
அவருடைய தலைப்புக்கள் வழியாகவே அங்கே சென்று சேரமுடியும். இந்த ஓவியத்திற்கே ‘ஆள்கூட்டத்தில் தனியே” என்ற தலைப்பு மிகப்பொருத்தம். சென்ற தலைமுறையின் சமூக மாற்றங்களின் கசப்புகளை இலக்கியமாக்கியவர் அவர். பிரியத்தை வெளிக்காட்டாத கறாரான குடும்ப மூத்தவரின் ஆளுமை அவருடையது. அதே சமயம் இலக்கியவாதி என்ற நிமிர்வு.
ஒர் ஊகச்சித்திரம். ஓர் அறையில் ஃபிணராயி விஜயன், உம்மன் சாண்டி. மம்மூட்டி, மோகன்லால், ஜோஸ் ஆலுக்காஸ் ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள். எம்.டி.வாசுதேவன் நாயர் உள்ளே நுழைந்தால் என்ன நடக்கும்? அனைவரும் மரியாதையுடன் எழுந்து அவருக்கு வணக்கம் கூறி அவர் அமர்ந்தபின்னரே அமர்வார்கள். ஏறத்தாழ இதேபோன்ற ஒரு காட்சியை ஒரு திருமணவிருந்தில் நானே கண்டிருக்கிறேன். இந்தக்கோட்டோவியம் காட்டுவது அந்த எம்.டி.வாசுதேவன் நாயரை.