வாசிப்பு இருகடிதங்கள்

2014-03-25

அன்பின் ஜெ,

 

கோவை புத்தகத் திருவிழா அரங்கில் உங்களைச் சந்தித்த கணத்தில், உள்ளூர பரவசமும் கொஞ்சம் பயமும் ஒருங்கே எழுந்து வந்தன. அந்த பயம், ஒரு குருவிடம் நமக்கு ஏற்படும் பக்தியின் பாற்பட்டது எனப் பின்னர் எண்ணிக் கொண்டேன். உண்மையில், உங்களின் பல கதைகளை / கட்டுரைகளை படித்து முடித்தவுடன் எழும் பரவச எண்ணத்தை, பல முறை கடிதங்களாக எழுத முடிந்தும் ஒருமுறை கூட அனுப்பும் துணிவு வந்ததில்லை. குறிப்பாகச் சொல்வதானால், தேர்வு மற்றும் அம்மையப்பம் இரண்டையும் வாசித்த கணத்தில் அடைந்த உணர்வுகள். கோவை அரங்கில் மனம் முழுக்க சொற்கள் நிறைந்திருந்தும் ஓரிரு சொற்களைத் தவிர வேறெதையும் உங்களிடம் பேச முடியாமல் போனது.

 

 

நேற்றிரவு மீண்டும் ஒருமுறை அம்மையப்பம் வாசித்தேன். கிறுக்கர்கள் ஊரில் வாழும் ஆசாரி என்றுதான் “கிறுக்கனாசாரி”யை புரிந்து கொள்ளத் தோன்றுகிறது. பணத்துக்காக செட்டியார்களிடம் நிற்கும் எம்.வி.வெங்கட்ராம், ஜெமினி ப்ரொடக்‌ஷன் யூனிட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த அசோகமித்ரன் என பலரை நினைக்க வைக்கும் கதை. என்ன ஒரு சின்ன வித்தியாசம், கதையில் ஆசாரியிடம் பேசும் எல்லோரும் அவரைத் திட்டினாலும் உள்ளூர அவர் கலைஞன் என்று கண்டுகொண்டதால் ஒரு மெல்லிய மரியாதை கலந்த விலக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், நம் அன்றாட வாழ்வில், அப்படிப்பட்ட ஒரு எளிய மரியாதை கூட கலைஞனுக்கு கிடைப்பது சந்தேகம் என்றே தோன்றுகிறது.

 

இத்தருணத்தில், தன் அங்கீகாரம் குறித்த கலைஞனின் மனவோட்டமாக உங்கள் சொற்களையே (http://www.jeyamohan.in/100683#.WXldNdIjGM8) மீண்டுமொருமுறை நினைத்துக் கொள்கிறேன்.

 

 

காளீஸ்வரன்.

 

அன்புள்ள காளீஸ்வரன்,

கோவை புத்தகத் திருவிழாவில் அத்தனை நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சியூட்டும் அனுபவம். முகங்கள் அலையலையாக வந்துகொண்டே இருந்தன. வாசகர்களின் விதவிதமான எதிர்வினைகளை ஒரேநாளில் சந்திப்பது எழுதுவதற்கான அபாரமான உந்துதலை அளிக்கிறது

 

மீண்டும் சந்திப்போம். அப்போது தடைகள் இன்னும் மறைந்திருக்கும்

ஜெ

0

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

தாயகம் திரும்பி jetlag தணிந்ததும் புத்தகம் வாங்கச் சென்றேன். நான் தேடிய விஷ்ணுபுரம், அபிப்ராய சிந்தாமணி எங்கும் கிடைக்காமல் Amazon Kindleஇல் வாங்கினேன். முன்பே தெரியாமல் போய்விட்டது. இரண்டையுமே நானும் மனைவியும் ரசித்துப் படித்துக்கொண்டிருக்கிறோம்.

 

நிற்க, Book Exhibition இல் என்னைத்தவிர இரண்டே பேர் தான் மற்றபடி  ஏகாந்தம். முன்பு கோலாகலமாக இருந்த பல பொது இடங்கள் (உ-ம் கோளரங்கம்,…) இப்போது தூசும் குப்பையும் சிறுநீர் நெடியுமாக உள்ளன. இது அதிகாரிகள் கவனத்துக்கு வரவில்லையா? அருகில் உள்ள அண்ணா நூலகம்  வெகு நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறதது .அதே ஏற்பாட்டை எல்லா இடங்களுக்கும் விரிவுபடுத்துவதில் என்ன சங்கடம்?

 

அன்புடன்,

 

சாம கிருஷ்ணன்

அன்புள்ள சாம கிருஷ்ணன்

 

பொதுவாக தமிழகத்தில் அனைத்துப் பண்பாட்டு அமைப்புகளிலும் மாபெரும் அலட்சியமும் சீரழிவும் காணப்படும். இரண்டு காரணங்கள். ஒன்று அதில் எந்த அக்கறையுமில்லாத அதிகாரிகள் இருப்பார்கள். இன்னொன்று பொதுவாகத் தமிழ்மக்களுக்கு லௌகீக வெறியும் அதை நிகர்செய்ய கேளிக்கைவெறியும்தான் உண்டு. பண்பாட்டு அக்கறைகள் ஏதுமில்லை. எந்தப்பண்பாட்டு அக்கறையும். பண்பாட்டு அரசியல் உண்டு, அவர்கள் பண்பாட்டுக்கு எதிரிகள். இங்குள்ள எந்த நினைவகமும் நூலகமும் இந்நிலையில்தான் இருக்கும். எட்டையபுரம்சென்று பாரதிநினைவகத்தைப்பாருங்கள்

 

சென்னைப் புத்தகக் கண்காட்சி ஒருதவறான முயற்சி. டிசம்பர் – ஜனவரி புத்தகக் கண்காட்சி அந்த காலகட்டத்தின் விடுமுறை மனநிலை, பொங்கல் போனஸ் ஆகியவற்றுடன் இணைந்தது. மார்கழி தமிழகத்தில் பொதுவாக உற்சாகமான மாதம். ஒரு விழா ஆண்டில் ஒருமுறை என்னும்போதுதான் அதில் கவனம் நிற்கும். இவர்கள் இப்படி ஏதேனும் பெயர் சொல்லி ஆண்டுக்கு மூன்று புத்தகக் கண்காட்சியைச் சென்னையில் நிகழ்த்துவார்கள் என்றால் அத்தனை புத்தகக் கண்காட்சிகளுமே கவனிக்கப்படாமல் போகும். ஆனால் அதை நடத்தும் வணிகர்களிடம் அதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கமுடியாது

 

ஜெ

 

முந்தைய கட்டுரைபௌத்த நோக்கில் விஷ்ணுபுரம் நாவல்
அடுத்த கட்டுரைகோவையாசாரம்!