64. மாநாகத்தழுவல்
அரண்மனை அகத்தளத்தின் அனைத்துச் சுவர்களிலும் தண்ணுமையின் மென்மையான தாளம் எதிரொலியென அதிர்ந்துகொண்டிருந்தது. அத்தனை அறைகளும் மூடியிருந்தன. இடைநாழிகள் அனைத்தும் ஆளொழிந்து கிடந்தன. சாளரங்கள் அனைத்தும் திறந்திருக்க வெளியே எரிந்த பல்லாயிரம் கொத்துவிளக்குகளும் தூண்விளக்குகளும் நெய்ப்பந்தங்களும் பெருக்கிப் பரப்பிய செவ்வொளி நீள்சதுரவடிவ செம்பட்டுக் கம்பளங்களாக விழுந்து கிடந்தது. சிலம்புகள் மெல்ல சிணுங்க திரௌபதி நடந்தபோது அவள் ஆடை எரிகொண்டு அணைந்து மீண்டும் கனலானது.
படிகளில் அவள் இறங்கியபோது கீழே சுபாஷிணி அமர்ந்திருப்பதை கண்டாள். அவள் குழல் அவிழ்ந்து நீண்டு படிகளில் வளைந்து கிடந்தது. ஒரு காலை நீட்டி பிறிதொன்றை மடித்து அதில் கை ஊன்றி முகவாய் சேர்த்து அமர்ந்திருந்தாள். திரௌபதி வரும் காலடியோசையை அவள் கேட்டதாகத் தெரியவில்லை. அவளருகே வந்து நின்று குனிந்து அவள் தலையை திரௌபதி தொட்டபோதுதான் திடுக்கிட்டு எழுந்து ஆடையை அள்ளி இடையுடன் அழுத்தியபடி நின்றாள். “இசை நிகழ்வுக்கு செல்லவில்லையா?” என்றாள்.
சுபாஷிணி ஏதோ சொன்னாள். அது சரியாகக் கேட்கவில்லை. “என்ன? ஏன் இங்கே தனியாக இருக்கிறாய்?” என்றாள் திரௌபதி. அவள் தொண்டையைச் செருமி “இங்கே எல்லாம் கேட்கிறது” என்றாள். “ஆம், ஆனால் அங்கே தோழிகளுடன் அமர்ந்திருக்கலாம் அல்லவா?” அவள் கண்களைத் தாழ்த்தி “ஆம்” என்றாள். “வா” என அவள் கையை பற்றிக்கொண்டு திரௌபதி நடந்தாள். அவள் பெருமூச்சுவிடுவதைக் கேட்டு திரும்பி நோக்கி “என்ன?” என்றாள். “எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றாள் சுபாஷிணி. “என்ன அச்சம்?” என்றாள் திரௌபதி. “நான் பிச்சி ஆகிவிடுவேனா?” என்றாள் சுபாஷிணி.
“ஆனால் என்ன? அனைத்தும் மூடியிருப்பதைவிட ஒன்றிரண்டு வாயில்கள் திறந்திருப்பது நன்றுதானே?” அவள் “இல்லை, எனக்கு ஏதேதோ எண்ணங்கள்” என்றாள். திரௌபதி “எல்லா கரவெண்ணங்களும் நன்று. அவை இருக்கும்வரைதான் வாழ்க்கை” என்றாள். “உங்களுக்கு இவை உண்டா?” திரௌபதி அவள் தோளைத்தட்டி “மும்மடங்கு” என்றாள். “அவற்றால்தான் நான் ஆற்றல்கொள்கிறேன்.” சுபாஷிணி சில கணங்கள் தலைகுனிந்தபடி வந்தபின் “தேவி” என்றாள். “சொல்” என்றாள் திரௌபதி. “நாம் இறுதியில் உடலைத்தான் விழைகிறோமா? நாம் பிறிதெவருமல்லவா?” திரௌபதி அவள் தோளைப்பற்றி உலுக்கி “உடலை அல்ல ஆற்றலை” என்றாள்.
சுபாஷிணி “ஆம்” என பெருமூச்சுவிட்டாள். பின்னர் “ஆற்றல் மட்டுமே என்றால்…” என்றாள். “ஆற்றல் நம்மை அள்ளிச் செல்லவேண்டும்… நாம் அடைவது பிளவுண்டிருக்கலாகாது. முழுமையாக நம்மை வந்தடைய வேண்டும்.” சுபாஷிணி முகம் மலர்ந்து “ஆம்” என்றாள். திரௌபதி அவள் காதருகே குனிந்து “கரவுக்காட்டுக்குள் எதுவுமே பிழையல்ல” என்றாள். அவள் “ஏன்?” என்றாள். “அங்கு நாம் செல்வதில்லையே… நம்மிலுறையும் தெய்வங்கள் அல்லவா அங்கே உருக்கொண்டு எழுகின்றன. அவற்றை நாம் எப்படி ஆளமுடியும்?” சுபாஷிணி “ஆம்” என்றாள்.
அவர்கள் கூத்தம்பலத்தை கடந்தார்கள். சகஸ்ரதேஜஸ் என்று அந்த நீள்வட்ட மண்டபத்திற்குப் பெயரிட்டிருப்பது ஏன் என்று திரௌபதி அப்போதுதான் உணர்ந்தாள். சுவர்கள் முழுக்க விளக்குகள் ஏற்றப்பட்டு பற்றி எரியும் புதர்க்காடென அது தெரிந்தது. உள்ளே நடனநிகழ்ச்சியின் சலங்கையோசையுடன் தண்ணுமையும் பேரியாழும் முயங்கும் இசை ஒலித்தது. “இளவரசி உள்ளே இருக்கிறார்” என்றாள் திரௌபதி. “பிருகந்நளை ஒருக்கிய நடனம் இது. பதினெட்டு விறலியர் ஆடுகிறார்கள்.”
அவர்கள் உள்ளே சென்றபோது அரங்கு நிறைந்திருந்தது. தரையில் விரிக்கப்பட்ட கம்பளங்களில் பெண்கள் அமர்ந்திருக்க பிறர் சுவரோரமாக மானுடக்கரை என சூழ்ந்திருந்தனர். அரங்கில் நிறைந்திருந்த சுடரொளி தாளத்தில் அதிர்வதுபோலத் தோன்றியது. அனைத்து நிழல்களும் ஒளியால் கரைக்கப்பட்டிருந்தமையால் அரங்கு மாபெரும் சுவரோவியம் போன்றிருந்தது. அவர்கள் உள்ளே நுழைந்ததை எவரும் அறியவில்லை. மேடையில் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மெல்லிய வெளிச்சம் சிப்பிக்குவைகளாலும் பளிங்குப்பரப்புகளாலும் எதிரொளித்து பரப்பப்பட்டிருந்தது. அதில் நடுவே பிருகந்நளை பெண்ணுருவில் ஆடிக்கொண்டிருந்தாள். கொண்டையை மீறி வழிந்த நீள்குழலும் அதிலணிந்த செம்மலர்களும் கழுத்திலணிந்த செம்மலர் மாலையும் அசுரகுலத்திற்குரிய நெற்றிக்குறியும் அவளை தேவயானி என்று காட்டின. கசன் உருவில் அவளருகே நின்றிருந்த விறலி நெற்றியில் மூன்றாம் விழி ஒன்றை வரைந்து புலித்தோலாடை அணிந்திருந்தாள்.
கசன் வலக்கையில் வெண்தாமரை மலர்களை வைத்திருந்தான். அவர்கள் வளைந்தும் நெளிந்தும் பிரிந்தும் இணைந்தும் ஆடியபோது அவர்கள் நடுவே அந்த வெண்தாமரை மலர்கள் வந்துசென்றன. ஒருமுறைகூட அவை எங்கும் படவோ இதழுலையவோ இல்லை. அவர்கள் ஆடுவதை அறியாமல் பிறிதொரு விழியறியா நீர்ச்சுழலில் அந்தத் தாமரைகள் சுழன்றுகொண்டிருந்தன. ஆட்டம் விசைகொண்டு கைகளும் கால்களும் விழிதொடமுடியாத விரைவை அடைந்து உச்சத்தில் அவர்கள் சிவசக்தி லயநிலையில் உறைந்தபோது கசன் தலைமேல் வெண்தாமரை அப்போது மலர்ந்ததுபோல் இதழ் விரித்திருந்தது. வலக்கையால் அவன் அஞ்சல் குறி காட்ட இடக்கையால் அவள் அருளல்குறி காட்டினாள்.
கூடியிருந்தவர்கள் “உமாசிவம்! உமாசிவம்!” என்று கூவி வாழ்த்தினர். கரவெழினி இமையென மெல்ல சரிந்து வந்து மேடையை மூடியது. எங்கும் அசைவுகள் பரவ சேடியர் அவைமுகப்பிலிருந்த இளவரசிக்கும் பிற பெருங்குடிப் பெண்டிருக்கும் வாய்மணமும், இன்னீரும் கொண்டு குனிந்து நிரைகள் நடுவே பரவினர். “அரசி இங்கில்லையா?” என்றாள் திரௌபதி. “இல்லை, அவர் அப்பால் சிற்றம்பலத்தில் பாட்டு கேட்கிறார்.” திரௌபதி “நாம் அங்கே செல்வோம்” என்றாள். “இங்கே இன்னும் எட்டு பாதங்களாக இந்த ஆடல் நிகழும்” என்றாள் சுபாஷிணி. “அங்கே செல்வோம்” என திரௌபதி நடந்தாள்.
தொலைவில் கூத்துமுற்றத்தில் ஆண்களுக்கான கொடுகொட்டி நிகழ்ந்துகொண்டிருந்தது. சூழ்ந்திருந்த பந்தங்களின் ஒளி ஆட்டர்களின் நிழல்களைப் பெருக்கி வானோக்கிச் செலுத்த அங்கே இருள்வடிவ தேவர்களின் நடனம் தெரிவதுபோலிருந்தது. “நகரில் பன்னிரு இடங்களில் இப்போது கூத்து நிகழ்கிறது, தேவி” என்றாள் சுபாஷிணி. “கோட்டைமுகப்பில் நிகழும் கூடியாட்டமே சிறந்தது என்று சொல்லி பிரீதையும் அவள் குழுவும் சென்றிருக்கிறார்கள். சூதத்தெருவில் பீதர்நாட்டு நடனம் ஒன்று நிகழ்கிறது. அதற்கு சிலர் சென்றிருக்கிறார்கள்.”
அவர்கள் முற்றத்தை வளைத்துச்சென்ற கல்பரப்பிய பாதையில் நடந்தனர். செவ்வொளியில் கருங்கல் ஈரமாக இருப்பதுபோலத் தோன்றியது. சிற்றம்பலத்திற்கு வெளியே இரு ஆளுயர தூண்விளக்குக் கற்கள் உடலெங்கும் சுடர்சூடி பூத்த வேங்கை என நின்றிருந்தன. “அங்காடியில் கலிங்கக் கழைக்கூத்தாடிகள் விருத்திர வதம் என்னும் நாடகத்தை நடத்துகிறார்கள் என்று சூத்ரி சொன்னாள். மொத்த நாடகமும் வானிலேயே நிகழுமாம். கீழே நின்று அண்ணாந்துதான் பார்க்கவேண்டும். அனைவரும் கழிகளிலும் கயிறுகளிலும் தொங்கியபடி அதை ஆடுவர் என்றாள்” என்றாள் சுபாஷிணி.
“இங்கே என்ன கதைப்பாடல்?” என்றாள் திரௌபதி. “அறியேன். இங்கே தென்னகத்தின் நாகநாட்டிலிருந்து வந்த முதிய விறலி பாடுகிறாள். அவள் பெயர் சூலி. அவள் குரலும் நன்றாக இல்லை. கடுங்குளிரில் பாடுவதுபோல ஒரு நடுக்கம். ஆனால் அரசி அவள் பாடிக் கேட்க முடிவுசெய்தார்…” அவர்கள் உள்ளே நுழைந்தபோது ஒற்றைவிரல் முழவின் சீரான தாளம் கேட்டுக்கொண்டிருந்தது. “மரங்கொத்தியின் ஒலிபோலக் கேட்கிறது. இப்படியா முழவை தட்டுவார்கள்?” என்றாள் சுபாஷிணி.
அது இருபதுபேர் அமரும் சிறிய நீள்வட்டக் கூடம். தரையிலிட்ட மரவுரிக் கம்பளத்தில் அரசி அமர்ந்திருக்க சேடியர் எழுவர் சூழ்ந்திருந்தனர். ஏழு திரியிடப்பட்ட நிலைவிளக்கு சுடரசையாமல் எரிந்தது. அதில் முழவுடன் அமர்ந்திருந்த முதுவிறலியின் பெருநிழல் எழுந்து வளைவுக்கூரையில் மடிந்து நின்றது. அவள் கைகளின் அசைவு இரு பக்கச் சுவர்களிலும் பெருகித் ததும்பியது. மெல்லிய கிழக்குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. முதலில் அது என்ன மொழி என்றே திரௌபதிக்குத் தெரியவில்லை. பின்னர்தான் சொற்கள் முகம் காட்டத் தொடங்கின.
அவள் நுழைந்து பின்னிரையில் அமர்வதை அரசி நோக்கி தன்னருகே வந்து அமரும்படி கைகாட்டினாள். திரௌபதி சென்று அருகே அமர்ந்துகொண்டாள். நாகவிறலியின் விழிகள் வெண்சோழிகள் போலிருந்தன. திரௌபதி முதலில் விந்தைகொண்டது அவள் கைவிரல்களை நோக்கித்தான். அவை குட்டிப் பாம்புகளின் அடுக்கெனத் தோன்றின. பிறர் விரல்களைவிட இருமடங்கு நீளம். எண்ணமுடியாத கோணங்களிலெல்லாம் வளைந்து நெளிந்தன. அவள் ஒரு சிறு அமைதியின்மையை உணர்ந்து ஆடை திருத்திவிட்டு நோக்கியபோது நாகவிறலியின் விழிகள் தன்னை நோக்கி நிலைத்திருப்பதைக் கண்டாள். ஆனால் அவள் நோக்கவுமில்லை. அருகே இருந்த அரசியையும் சேடியரையும் நோக்கினாள். அவர்களும் அவள் விழிகளில் நோக்கி அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவரையும் அவள் விழிகள் உற்றுநோக்குகின்றனவா?
“கரியன், கனல்விழியன், நீளுடலன், ஆராவனல் கொண்ட பல்லன், அரவிலி, அறிந்தோன், அகலான். அவன் வாழ்க!” என்று நாகவிறலி பாடினாள். அங்கு நுழைந்தபோது அவள் மாநாகக் குலத்தின் பிறவிக்காதையை சொல்லிக்கொண்டிருந்தாள் என்று திரௌபதி நினைவுகூர்ந்தாள். “கிழக்கே, காமரூபத்திற்கும் மணிபூரகத்திற்கும் அப்பால் உள்ளது தொல்நாகநாடு. அதற்கு கார்க்கோடகம் என்று பெயர். அங்கே ஓடுகிறது சீதோதை என்னும் பெருநதி. நாகநதி. விண்ணிலொரு நாகமெனப் பிறந்தவள். மண்ணில் நீர்ப்பெருக்கென்று உடல்கொண்டாள். நூறுநூறாயிரம் நாகக்குழவிகளைப் பெற்று இழுத்து தன்னில் அணைத்துக்கொண்டு ஒழுகினாள்.”
“கேளுங்கள் இதை. அது கன்னங்கரிய நதி. கரும்புகையென அருவியாவது. இருள்விரிவென விரிநிலம் பரவி நிறைவது. அலைவளைவுகளில் கருமை ஒளியென்றாவது. கடுங்குளிர் நீர்ப்பெருக்கு கொண்டதனால் சீதோதை என்றழைக்கப்பட்டது. தொட்ட விரல் அக்கணமே கல்லாகும் குளிர் கொண்டது. விழுந்த இலை தகடென்றாகும் அழுத்தம் கொண்டது. வெண்பளிங்கு மீன்கள் விழிமின்ன வால்சுழிக்கும் பெருக்கு அது” என்றாள் நாகவிறலி. “நாகங்கள் அப்பெருக்கில் இறங்கியதுமே உடல்கரைந்து இருத்தலின் நெளிவுமட்டுமே என்றாயின. அம்புகள் நேரெனச் சென்றடையா இலக்குகளை நோக்கி நெளிந்து நெளிந்து சென்றடையும் நாகங்கள் வெல்க!”
“அந்நிலமே கார்க்கோடகம், நாகர்களன்றி பிறர் அணுகமுடியாத மண். அங்கு வாழும் ஆயிரம்கோடி கருநாகங்கள் வாழ்க! ஆயிரம்கோடி பொன்னிற நாகங்கள் வாழ்க! ஆயிரம்கோடி வெண்ணிற நாகங்கள் நீடுவாழ்க!” என்று நாகவிறலி சொன்னாள். “தொல்பிரஜாபதியாகிய காசியபருக்கு கத்ரு என்னும் நாகத்தாயில் பிறந்த ஆயிரத்தெட்டு மைந்தரில் ஆற்றல்மிக்கவன் கார்க்கோடகன். அன்னை அவனை ஒரு சிறிய கரியவேர் என்றாக்கினாள். அதை கிழக்குநிலத்தில் சீதோதையின் குளிர்க்கரையில் நட்டாள். அவன் அங்கே மரமென முளைத்தெழுந்தான். வேரென்றும் விழுதென்றும் விதையென்றும் பெருகினான். கார்க்கோடகத்தின் அத்தனை மரங்களும் நாகங்களே என்றறிக!”
“மாற்றுரு கொண்டு உலகறியக் கிளம்புவது இறப்பற்ற கார்க்கோடகனின் வழக்கம். சிறுபாம்பென பொந்துகளினூடாக சென்று இல்லங்களுக்கு அடியில் வாழ்வதுண்டு. துயில்பவர்களின் கனவுக்குள் நுழைந்தேறி நெளிநெளிந்து அவர்களை புன்னகை செய்ய வைப்பான். பத்திவிரித்து அவர்களை அஞ்சி முகம்பதறச் செய்வான். நா நீட்டிச் சீறும்போது அவர்கள் அலறி விழித்தெழுந்து உடல்நடுங்குவர். அப்போது அறைமூலையில் நெளிந்தமையும் கணநேரக் கருநிழல் அவனே என அவர்கள் அறிவதில்லை. இலையசைவாக திரையுலைவாக தூண்நிழலாட்டமாக அதை அவர்களின் விழிகாணச் செய்வதும் அவன் மாயமேயாகும்.”
அன்றொருநாள் வரதை என்னும் ஆற்றில் அவன் நீர்ப்பாம்பென அலையிலாடும் மரங்களின் நிழல்பாவைகளுடன் கலந்து நெளிந்து சென்றுகொண்டிருக்கையில் உடன் நீந்திச்சென்ற சிறுமியொருத்தியை கண்டான். அவளுடன் சேர்ந்து அவன் நீந்தியபோது அவள் தன் கைகளும் கால்களும் எண்ணியிராதபடி எளிதாகி விசைகொள்வதை அறிந்தாள். அவை அப்போது நெளிவென்பதை நன்கறிந்திருந்தன. அதுவரை நீரலைகளை முறித்தும் கலைத்தும் அசைந்து விசை வீணாக்கின. அப்போது அவை அலைகளில் முற்றிலும் இயைந்து வான்பருந்துச் சிறகுகள் காற்றில் என அவளை நலுங்காமல் கொண்டுசென்றன.
வரதாவில் புதுப்புனல் பெருகிச்சென்ற முதல் மழைக்காலம். அவளுடன் புனலாடிய தோழிகள் குரல் மயங்கி மிகத் தொலைவில் அகன்றனர். நீர் தனிமையென ஓசையின்மை என அவளைச் சூழ்ந்தது. கலங்கிய மலைமழைநீரில் தங்கத்தாலானவை என ஒளியுடன் திரும்பின இலைகள். மெல்ல உருண்டுசென்றன மலைமரத்தடிகள். மீன்கள் துள்ளி வெள்ளி மின்னி பொன்னென்று மூழ்கின. வாய்திறந்து வாங்கி மூடிக்கொண்டது நீர்ப்பரப்பு. அவள் நிலமென்று ஒன்றிருப்பதை மறந்தாள். மீன் என அப்பெருக்கில் பிறந்து வளர்ந்தவளென்று சித்தம் மயங்க அங்கே திளைத்தாள்.
அவளை கார்க்கோடகன் நீரென்றாகி இடைசுற்றி இழுத்துச் சென்றான். பெருஞ்சுழி என்று உடல்வளைத்து அதன் நடுவே அவளை ஆழ்த்தினான். தன்னைச் சூழ்ந்து நீர் வளைந்தோடுவதை அவள் நோக்கிக்கொண்டிருந்தாள். பின்னர் அவள் தலைகீழாக நீருக்குள் சென்றாள். அவளுக்குக் கீழே திரைகள் என நீர்ப்படலங்கள் விலகி விலகி உள்ளிழுத்துக்கொண்டன. தலைக்குமேல் நீராலான வானம் மெல்லொளியுடன் குமிழிகள் கொப்பளித்துச் சுழல விரிந்திருந்தது. அவள் ஆடை விலகி சிறகுகொண்டதுபோல் எழுந்து மேலே சென்று நீண்டு நிறத்தீற்றலாகி மறைந்தது. அவள் குழல் சிறகு என விரிந்து மெல்ல திரையடித்தது.
ஒளியென்றிலங்கிய நீர் இருளென்றாகியது. மேலும் மேலும் இருண்டு இன்மையென்று எடைகொண்டு அவளை பல்லாயிரம் கைகளால் ஒவ்வொரு தசையிலும் அழுத்திப் பற்றிக்கொண்டது. அழுத்தம் மிகுந்தோறும் அவள் உடல் சுருங்கிச் சுருங்கி அணுவென்றாகியது. சிறு துகளென நீரில் நின்றுலைந்தாள். தத்தளித்துச் சுழன்றுசென்று பெருங்குமிழி ஒன்றில் ஒட்டிக்கொண்டாள். அதன் பளிங்கு வளைவுக்கு அப்பால் அவள் ஒரு பெருநகரைக் கண்டாள். ஒளிரும் பொன்னிறக் குமிழ்க்கூரைகள் கொண்ட மாடநிரைகள். கொடிகள் பறக்கும் காவல்மாடங்கள். பெருவீதிகள். படையணிகள்.
அவளை நீருள் வீசப்பட்ட கொக்கியால் தொடுத்தெடுத்து மேலே தூக்கிய தோணிக்காரர்கள் அவள் விழிகள் திறந்து முகம் மலர்ந்திருப்பதையும் இதழ்கள் ஏதோ சொல்லிக்கொண்டிருப்பதையும் கண்டனர். அதன்பின் பன்னிரு நாட்கள் தொடர்ந்த கடும் காய்ச்சலின்போது அவள் அச்சொற்களை சொல்லிக்கொண்டே இருந்தாள். அவள் உதடுகளருகே செவி வைத்தும் சேடியரால் அவற்றை உய்த்தறிய முடியவில்லை. நிமித்திகர் வந்து நோக்கி “கார்க்கோடகன் என்று அவள் சொல்கிறாள்!” என்றார்.
அரண்மனை பதற்றம் கொண்டது. விதர்ப்பத்தின் அரசர் அந்தணரையும் நிமித்திகர்களையும் அழைத்துவந்து இடர்தீர் வேள்விகளையும் பிழைநிகர் சடங்குகளையும் செய்தார். நாகப்பற்று நிகழ்ந்துள்ளது என்றனர் நிமித்திகர். “எளிய பூசனைகளில் விலகும் தெய்வம் அல்ல மாநாகம். இது காருருக்கொண்டு நிழலெனப் பெருகுவது. கீழ்த்திசையிலிருந்து வந்தது. நீரென நெளிந்து சூழ்ந்தது.”
நாகசூதர் எழுவர் தங்கள் விறலியருடன் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அரண்மனைமுற்றத்தில் நூற்றெட்டு சுழல்களாக மடிந்து நிறைந்த கருநாகக் களம் வரைந்தனர். அதன் எட்டு மூலைகளிலும் எட்டு நாகப்புற்றுக்கள் அமைக்கப்பட்டு அதில் கமுகப்பூக்குலை நாட்டப்பட்டது. தென்கிழக்கு மூலையில் பாய்விரித்து நிறைபறைகளில் பொன்னெல்லுடன் மா, பலா, வாழை, அத்தி, மாதுளம், இலந்தையுடன் கடுந்துவர்ப்புள்ள எட்டி என ஏழுவகைக் கனிகளும் அரளி, தெச்சி, காந்தள், முருக்கு, தாமரை என ஐந்துவகை செம்மலர்களும், கஸ்தூரி, கோரோசனை, புனுகு என மூன்றுவகை நறுமணங்களும் படைத்து பூசனை செய்தனர்.
பெருங்களம் முதிர்கையில் வெறியாட்டெழுந்த நாகவிறலி தன் குழல்கற்றையை விரித்துச் சுழற்றி வீசி மூன்று வண்ணப்பொடியால் வரையப்பட்ட நாகபடத்தை அழித்தாள். வண்ணங்கள் கலந்த வெளியில் புரண்டெழுந்த அவள் வாய்க்குள் இரு நச்சுப்பற்கள் எழுந்திருந்தன. விழிகள் நாகமென மணிநிலை கொண்டன. சீறும் ஒலியில் அவள் சொன்னாள் “இவள் என்னவள். இவளுடனிருப்பேன் என்றும். இவள் இப்புவியின்மேல் தன் இடக்கால் வைத்து எழுந்தமர்ந்து முக்குடை சூடுவாள். இவள் மணிமுடியின் ஒளியை விண்ணிலிருக்கும் இந்திரன் காண்பான்! ஆம்! ஆம்! ஆம்!”
“அது நற்குறியென்றே எண்ணுகிறேன், அரசே” என்றார் நிமித்திகர். “ஷாத்ர வல்லமை அரசகுலத்திற்கு அழகு. ஷாத்ர வல்லமைகளில் முதன்மையானது மாநாக நஞ்சு. இளவரசியிடம் அந்த ஆற்றல் நிறையட்டும். நம் குடி பெருகும்.” வைதிகர்தலைவர் சம்புநாதர் மட்டும் “நஞ்சு நன்று. ஆனால் நாகமன்றி எவர் நஞ்சுகொண்டாலும் தன்னை கருக்காதொழியமாட்டார்” என்றார். “வேண்டுமென்றால் தென்னகத்திலிருந்து நாகபூசகரை வரவழைப்போம். அந்நாகத்தை ஒழிய வைப்போம், உங்கள் விழைவு அது” என்றார் நிமித்திகர். முகவாயை நீவியபடி அரியணையில் அமர்ந்திருந்த அரசர் பின் நீள்மூச்சுடன் “இவளால் நம் குடிபெருகுமென்றால் அது நிகழ்க! அதன்பொருட்டு இவள் துயருறுவாளென்றால் அதுவும் ஆகுக! அது களப்பலிக்கு நிகர்” என்றார்.
“ஆம் அரசே, இன்னும் நாம் இந்த நதிக்கரைச் சேற்றில் சிறுநகர் என்று வாழக்கூடாது. இங்கிருந்து கிளைவிரித்து பாரதம் மீது எழவேண்டும்” என்றார் பெரும்படைத்தலைவர். மூதமைச்சர் “இளவரசியின் கையில் புவியாளும் பேரரசிக்குரிய குறிகள் உள்ளன என்று பிறவிநூலர் சொன்னார்கள் அல்லவா?” என்றார். “நீ என்ன எண்ணுகிறாய், அரசி?” என விதர்ப்பர் தன் துணைவியிடம் கேட்டார். “ஆம், அதுவே நிகழ்க!” என்றாள் அரசி. ஆனால் விழிநீர் பெருக மேலாடையால் முகம் மறைத்துக்கொண்டாள்.
தோள்திரண்டு உடற்கருமையில் ஒளி நிறைந்து கன்னியென தமயந்தி வளர்ந்தபோது அவளை பாரதத்தை ஆளும் பேரரசி என்றே அவள் சுற்றமும் அகம்படியும் நம்பினர். பிறிதொன்றை அவளும் எண்ணியிருக்கவில்லை. அன்னைக்கும் தந்தைக்கும் அவள் ஆணைகளையே இட்டாள். விழியசைவால் ஏவல்களை நிகழ்த்தினாள். ஒவ்வொருநாளும் சென்று தன் படைப்பிரிவுகளை நோக்கிவந்தாள். சிற்பியருடன் அமர்ந்து கோட்டைகளையும் மாடமாளிகைகளையும் வரைந்துகொண்டாள். சொல்தாழ்ந்து தலைநிமிர்ந்தாள். அடியெண்ணி என நடந்தாள். காற்றிலென படியிறங்கினாள்.
அந்திமங்கலின் ஒளியில் அவள் நிழலென எழுந்து கூரைவளைவில் படிந்து படமெடுத்து வளைந்த மாநாகத்தை பலரும் கண்டிருந்தனர். அவள் துயிலும் அறையிலிருந்து எழும் காற்றுச்சீறல் ஓசையை, அவள் நீராடும் ஆற்றின் ஆழத்தில் நெளியும் பேருடலை சேடியர் கண்டு தங்களுக்குள் சிறுகுரலில் சொல்லிக்கொண்டனர். அவள் அழகொளியைக் கண்ட சூதர் “பிறிதொன்றில் ஆழம் அமையாமல் இப்புவியில் எவரும் மேலெழ இயலாதென்றறிக! அவள் அழகு இங்குள்ளதல்ல. வேறெங்கோ அது சமைக்கப்படுகிறது” என்றனர்.
பின்னிரவில் அகலொளியில் அவள் ஆழ்ந்து துயில்கையில் சாளரம் வழியாக நோக்கிய முதிய சேடி ஒருத்தி பிறிதொருத்தியை அழைத்துச் சுட்டி சொன்னாள் “நோக்குக, அவள் கண் அறியா எவரையோ முயங்குகிறாள்.” அவள் திகைப்புடன் “என்ன சொல்கிறாய்?” என்றாள். “நோக்கு” என்றாள் முதல் சேடி. நோக்கிய மற்றவள் ஒரு கணத்தில் அவள் கைகளும் கால்களும் உடலும் தழுவிய இடைவெளியை எண்ணத்தால் நிறைத்து அதை கண்டுகொண்டாள். “ஆ! அது ஒரு மாநாகம்” என்றாள். சொல்லாதே என முதல் சேடி வாய்மேல் விரல் வைத்தாள்.
நளன் அவளை மணந்த முதல்நாளிரவில் கோதைக்கரையிலமைந்த வசந்த மண்டபத்தில் அவளிடம் கேட்டான் “நான் அனுப்பிய அன்னம் உன்னிடம் சொன்னதென்ன?” அவள் புன்னகைத்து “அதனிடம் நான் சொல்லி அனுப்பியதென்ன என்று சொல்லுங்கள், நான் கேட்டதை சொல்கிறேன்” என்றாள். அவன் சொல்ல வாயெடுத்தபின் “நான் சொல்வதும் நீ சொல்லியனுப்பியதும் வேறுபட்டிருந்தது என்றால் என்ன செய்வோம்?” என்றான். அவள் “அதையே நானும் கேட்கிறேன், நான் சொல்வது நீங்கள் சொன்னதல்ல என்றால் நம் உறவை என்ன செய்வோம்?” என்றாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி புன்னகை செய்துகொண்டார்கள். அவள் தன் காதிலிருந்த குழையைக் கழற்றி அதை உள்ளங்கையில் வைத்து “சொல்வதா வேண்டாமா? ஆம் என்றால் மேலே, இன்றெனில் கீழே” என்றாள். “இதென்ன விளையாட்டு?” என அவன் சிரித்தான். “இளமையில் இதைத்தான் வினாக்களுக்கு விடைதேட ஆடுவோம்.” அவன் உரக்க நகைத்தபடி “நன்று” என்றான். அவள் அதை சுண்டி மேலே வீசி இரு கைகளாலும் பொத்திப்பிடித்து கையை விரித்தாள். “வேண்டாம் என்கின்றது குழை” என்றாள். அவன் “நம் உறவு நீடிக்கவேண்டும் என்கிறதா?” என்றான். “இன்னொருமுறை” என்று அவள் சுண்டிப் பிடித்தாள். “மீண்டும் அதுவே, சொல்லவேண்டியதில்லை.” அவன் “நம் உறவில் ஒரு சொல்லப்படாத இடம் நீடிக்கட்டும் என்கின்றதா?” என்றான்.
“மீண்டும் ஒருமுறை?” என்றாள் தமயந்தி. “வேண்டுமா?” என்றான். “ஒன்றில்லையேல் மூன்று என்பதே நெறி” என்றாள். “நன்று” என்றான். மீண்டும் அன்று என்றது குழை. “நம் உறவில் ஒரு பிரிவுண்டு என்று சொல்கிறது” என்றான். “எப்படி சொல்கிறீர்கள்?” என்றாள் புருவம் சுருங்க. “ஒன்றின் நீட்சியே மூன்று” என்றான். அவள் சில கணங்கள் நோக்கியபின் சிரித்துக்கொண்டாள். “குழையை அணிந்துகொள்” என்றான். “போதுமா?” என்றாள். “ஆம்” என்றான். அவள் குழையை காதிலணியத் தொடங்க அவன் அவள் அசைவுகளை நோக்கிக்கொண்டிருந்தான்.
புருவங்களால் என்ன என்றாள். இல்லை என்று தலையசைத்தான். “என்ன?” என்று சிணுங்கினாள். “ஒன்றுமில்லை” என்றான். “என்ன பார்க்கிறீர்கள்?” அவன் சிரித்து “உன்னை” என்றான். குழை நழுவியது. “கை நிலைகொள்ளவில்லை… என் கையில் குழை நழுவியதே இல்லை.” அவன் அவளிடமிருந்து அதை வாங்கி “நான் போடுகிறேன்” என்றான். “வலிக்கலாகாது” என்றாள். “இல்லை, வலிக்காது” என்றான். குழையை காதின் துளையிலிட்டு திருகியை மறுபக்கம் பொருத்தியபோது அவள் முகத்தை மிக அருகே நோக்கினான். வியர்த்த மேலுதடு மெல்ல எழுந்துவளைந்திருக்க ஈரத்துடன் மலர்ந்த கீழுதடு. மூக்குமுனையின் பனிப்பு. கண்ணிமை கன்றிய மென்மை. கீழிமைக்குக் கீழ் மெல்லிய தசைமடிப்புக்கள். வலக்கன்னத்திலொரு சிறிய பரு.
குழை நழுவியது. அவள் சிரித்து “என்ன?” என்றாள். “இல்லை” என்றான். “உங்களுக்கும் கை நழுவுகிறது…” அவன் மெல்ல “உன்னை அண்மையில் பார்த்தமையால்” என்றான். அவள் விழிதாழ்த்தி “உம்” என்றாள். அவன் இன்னொரு காதின் குழையில் கை வைக்க “இந்தக் காது” என்றாள். “இதையும் கழற்றிவிடுகிறேன்” என்றான். அவள் “ஆ” என்று திடுக்கிட்டவள்போல் ஓசையிட்டு பின்னகர அவளை அணைத்துக்கொண்டான். “உன்னை அண்மையில் நோக்கியபோது என்ன எண்ணினேன் தெரியுமா?” என்றான். அவள் அக்குரலை தன்னுள்ளிருந்து ஒலிப்பதுபோல் கேட்டாள். “என்ன?” அவன் “உனக்கு மெல்லிய மீசை இருக்கிறது” என்றான். அவள் சீறி அவன் தோளை அறைந்தாள். சிரித்தபடி அவன் அவளை இறுக்கிக்கொண்டான்.
பின்னிரவின் குளிரில் அவள் விழித்துக்கொண்டபோது எதிர்ச்சுவரில் நிழலென நின்றிருந்தது மாநாகம். இரு வெள்ளிகள் என மின்னிய விழிகள். மூச்சுச்சீறல் அவள் குழலை அசையச்செய்தது. “நான்தான் அது.” அவள் வெறுமனே நோக்கியிருந்தாள். “உடல்பெற்றேன், அறிந்திருப்பாய்.” அவள் முலைக்குமிழிகள் எழுந்தமைய மூச்செறிந்தாள். “என் விசை. என் நஞ்சு. பிறிதழியும் என் முழுத்தழுவல்.” அவள் விழிதாழ்த்திப் புன்னகைத்து “ஆம்” என்றாள்.
அவன் கை என நாகம் எழுந்து அவளைத் தொட்டது. அவள் அவன் முகத்தை நோக்கினாள். ஆழ்மூச்சொலியுடன் அவன் துயின்றுகொண்டிருந்தான். கை நெளிந்து அவள் உடல்மேல் பரவி இடைவளைத்து இறுக்கியது. அதன் முகம் முலைகள் மேல் பதிந்தது. “நீ இனியவள்” என்றது. “சொல், நீ விழைவதுதான் என்ன?” அவள் மூச்சிழுத்தாள். “சொல், நீ வேண்டுவது என்ன?” அவள் மெல்லிய குரலில் “தேவயானியின் மணிமுடி” என்றாள். “பாரதவர்ஷத்திற்குமேல் என் இடக்கால்.” நாகம் சீறியபோது அவள் முகத்தில் வெம்மைநிறைந்த நச்சுக்காற்று பரவிச்சென்றது. அவள் இதழ்களில் மும்முறை தலைசொடுக்கி முத்தமிட்டது. “ஆம்! ஆம்! ஆம்!” என்றது.