நேற்று முன்தினம் நண்பர்களுடன் காரில் ஊட்டி கிளம்பினேன். யோகேஸ்வரன் வந்தார். என் அழைப்பை ஏற்று கரூரில் இருந்து லிங்கராஜ் வந்து சேர்ந்துகொண்டார். பல்லடம் நண்பர் தீபன் சக்கரவர்த்தியின் கார். அவருடைய காரை நண்பர் சபரி ஓட்டினார். காலையில் வெண்பா கீதாயன் அறைக்கு வந்தாள். அவளும் உடன்வர விரும்பினாள். இடமில்லை.
ஊட்டிசென்று சேர்ந்தோம். அங்கே ஏற்கனவே வெண்பா வந்திருந்தாள். விஜய் சூரியனிடம் அடம்பிடித்து பைக்கிலேயே வந்திருந்தார்கள். ஊட்டியில் நல்ல குளிர். மழை பெய்யுமா பெய்யுமா என்று தயங்கிக்கொண்டிருந்தது. வியாசப்பிரசாத் சுவாமியும் அமெரிக்க தத்துவ எழுத்தாளரான இயானும் மட்டும்தான் குருகுலத்தில் இருந்தனர். செல்லும் வழியிலேயே பரிசுப்பணத்தை ஐசிஐசிஐ வங்கி வழியாக வியாசப்பிரசாத் சுவாமிக்கு அனுப்பியிருந்தேன். வணங்கி வாழ்த்துபெற்றேன்
ஒரு நீண்ட நடை சென்றோம். லவ்டேல் பாலம் வழியாக ரயில்பாதைக்கு வந்து திரும்பிவரும் வழக்கமான வழி. ஊட்டியின் அந்தக் குளிரும் மழையும் நிறைந்த சூழல் அற்புதமான அமைதி ஒன்றை உள்ளத்தில் நிறைத்தது. வழக்கம்போல இலக்கிய அரட்டை. சிரிப்பு.
பயணக்களைப்பால் ஒன்பதரைக்கே தூங்கிவிட்டோம். மறுநாள் காலை ஒரு சிறிய சுற்றுநடைக்குப்பின் எட்டுமணிக்குக் கிளம்பி கோவை வந்தேன். ஓய்வுக்குப்பின் புத்தகக் கண்காட்சி சென்றேன். தி ஹிந்து அரங்கில் ஒரு இசைநிகழ்ச்சி. செல்வி சாருமதி பாடினார். நல்ல குரல். உச்சஸ்தாயியில் உடையாமல் நின்றிருக்கும் கம்பீரம். நல்ல இசையனுபவம். அந்த திருவிழாச்சூழலுக்குரிய பாடல்கள்
மாலை அரங்கில் நான் பேசினேன். புவியரசு அவர்கள் இன்னொரு பேச்சாளர் அத்தனைகூட்டம் திரளுமென நான் நினைத்திருக்கவில்லை. வேலைநாள். கூட்டமும் பொதுவான திரள் அல்ல.
புவியரசு மென்மையாகவும் என்மேல் மிகுந்த பிரியத்துடனும் உரையாற்றினார். கோவையில் நான் அடைந்த நல்லுறவுகளில் ஒன்று அவருடையது. பலசமயம் சில பெரியவர்களின் வாழ்த்துக்களே நாம் புவியில் அடைந்த பெரும் செல்வம் என்று தோன்றுகின்றது.
என் பேச்சு சற்று தீவிரமானது, ஆனால் அமர்ந்து கேட்டார்கள். இலக்கியம் என்பது ஏன் யதார்த்தம் அல்ல, எவ்வாறெல்லாம் அது யதார்த்தத்தை மாற்றியமைக்கிறது என்று பேசினேன்
கோவையின் இனிய முகங்கள் பல. அறிஞர்களுக்குரிய நிதானமும் குறும்பும் கொண்ட டி.பாலசுந்தரம் அவர்கள்,எப்போதும் உற்சாகம் குறையாத இயககோ சுப்ரமணியம் அவர்கள்,இனிய நண்பரான நடராஜன், அரங்கின் முழுப்பொறுப்பையும் சேர்ந்து நடத்தும் சௌந்தர், விஜய் ஆனந்த் ஆகியோர். அவர்களுடன் ஐந்துநாட்கள் என்றே இந்த தங்குதல் எனக்குப்பொருள்பட்டது.
இந்த கண்காட்சியில் என் நூல்களுக்கான தனிஅரங்கு ஒரு முக்கியமான நிகழ்வாகப் பட்டது. என் நூல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்ப்பது பரவசத்தையும் அச்சத்தையும் ஒருங்கே அளித்தது. பத்துநாட்களும் கோவையில் தங்கி அரங்கை அமைத்த கடலூர் சீனுவுக்கும் உதவிய தாமரைக்கண்ணனுக்கும் நன்றி தெரிவிக்கும்முகமாக பொன்னாடை போர்த்தும் நிகழ்ச்சி. வழக்கமான கிண்டலுடனும் கைத்தட்டலுடனும்
இரவில் பன்னிரண்டரை மணிவரை என் அறையில் பதினைந்து நண்பர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கோவையின் நண்பர் சந்திப்புகள் பெரிய கொண்டாட்டமாக ஆகிவிட்டிருக்கின்றன. இன்று 26 மாலை நாகர்கோயில் திரும்புகிறேன். புத்தகக் கண்காட்சி வரும் 31 ஆம் தேதிவரை நிகழ்கிறது. மேலும் கொண்டாட்டமாக அது ஆகுக.