ஆ.மாதவன் கடிதங்கள்

அன்புள்ள ஜெ

ஆ.மாதவனைப்பற்றிய உங்கள் நீண்ட கட்டுரையும் அவரது மனம்திறந்த பேட்டியும் மிக முக்கியமானவை. ஆ.மாதவனைப்பற்றிய விரிவான அறிமுகத்தை அவை அளித்தன. ஒரு படைப்பாளிக்கு விருதளிக்கும்போது அதை ஒரு சந்தர்ப்பமாகக் கொண்டு அவரை விரிவாக அறிமுகம் செய்யவும் ஆராயவும் நீங்கள் முயற்சி எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது. விருதுகள் இப்படித்தான் அமையவேண்டும்.

ஆ.மாதவன் பேட்டியிலே நீங்கள் கேட்க மறந்த ஒரு கேள்வி. அவர் மலையாளம் படித்து கேரளத்திலே வாழ்பவர். நீங்கள் தமிழகத்தில் இருப்பதைப்போல. அவர் ஏன் மலையாளத்திலே எழுதாமல் தமிழிலே எழுதினார்?

செல்வம் கெ

செல்வம்,

ஆ.மாதவன் தமிழர். அதுதான் முதல்காரணம். அவர் தமிழில் எழுதுவதற்கான சூழலே சாலை பஜாரில் உள்ளது. கேரளத்தில் இருந்தாலும் அது தமிழ்ப்பகுதி போல. தமிழே எங்கும் முழங்கும். அங்குள்ள தமிழர்கள் கோயில் தமிழ்ச்சங்கம் என எல்லாவகையிலும் தமிழ்வாழ்க்கையே நிகழ்த்துகிறார்கள். சொல்லப்போனால் ஆ.மாதவனுக்கு மலையாள வாழ்க்கையுடன்தான் அதிகத் தொடர்பு இல்லை

நான் பிறந்த மண் தமிழகத்திற்கு வந்தது அவ்வளவே. மலையாளம் உருவாகும் முன்னரே என் முன்னோர்கள் இங்கே இருக்கிறார்கள். வேண்டுமென்றால் ஆதித்தமிழர் என்று சொல்லுங்கள்)))

ஜெ

=======================================]

அன்புள்ள ஜெயமோகன்,

ஆ.மாதவன் பேட்டியை விரும்பி வாசித்தேன். ஓர் இலக்கியவாதியாக மட்டும் அல்லாமல் அவரது எல்லா முகங்களையும் தொட்டுச்செல்வதாக பேட்டி அமைந்திருந்தது. அவரை அதிகம் பேசாத ஒருவராகப் பேட்டி காட்டியது. அமைதியான மனிதர். அவரை உருவாக்கியது திராவிட இயக்கம் என்பது அறிந்து மகிழ்ச்சி. திராவிட இயக்கம் பெரிய படைப்பாளிகளை உருவாக்கவில்லை என்று எங்கோ எழுதியிருந்தீர்கள் அல்லவா? ஆ.மாதவனை எப்படி வகுப்பீர்கள்?

செல்வராஜ்

அன்புள்ள செல்வராஜ்

ஆம்.ஆ.மாதவன் திராவிட இயக்கம் உருவாக்கிய படைப்பாளி. பெரும் படைப்பாளிதான். ஆனால் அவர் அங்கிருந்து வந்தபின்னரே உருப்படியாக எழுத ஆரம்பித்தார். அங்கே அவர் எழுதியவற்றை அவரே தன் தொகுப்புகளில் சேர்க்கவில்லை. இதை மட்டும் யோசியுங்கள்.

ஜெ

================================================================

அன்புள்ள ஜெ,

ஆ.மாதவன் பேட்டி படித்தேன். தமிழிலே வந்த நல்ல பேட்டிகளில் ஒன்று. இத்தனை பெரிய படைப்பாளியை இதுவரை எவருமே பேட்டி கண்டதில்லை, இதுவே முதல் பேட்டி என்பது ஆச்சரியம் அளிக்கிறது. தொண்ணூறுகளில் சுபமங்களா வெளிவந்தபோது நிறைய பேட்டிகள் வந்தன. திலகவதி கூட பேட்டி கொடுத்திருந்தார் என்பது ஞாபகம். ஆ.மாதவன் மட்டும் எப்படி விடப்பட்டார்? ஆ.மாதவனுக்கு ஒரு புத்தகவெளியீட்டுவிழா கூட நடக்கவில்லை என்று கேள்விப்பட்டதும் மிகவும் வருத்தம் அடைந்தேன். நீங்கள் கொடுத்திருக்கும் பேட்டி முக்கியமானது.

அதிலே சுந்தர ராமசாமி ஆ.மாதவனை யதார்த்தவாத எழுத்துக்கு கொண்டுவந்தார் என்ற செய்தி ஆச்சரியம் அளிக்கிறது. தீவிர இலக்கியத்தை நோக்கி ஆ.மாதவனைக் கூட்டிவந்ததோடு அல்லாமல் நல்ல கதை எழுதியதும் அவர் உற்சாகமாகக் கடிதம் எழுதி பாராட்டியதும் அவரது பண்புநலனை காட்டுகிறது

சாமி

அன்புள்ள சாமி

தமிழில் இலக்கியம் சிற்றிதழ்களை மட்டுமே நம்பி இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவர் ஆ.மாதவன். பின்பு நடு இதழ்களின் அலை எழுந்த காலகட்டத்தில் ஒதுங்கி இருந்தார். அதுவே காரணம்

சுந்தர ராமசாமி என்றுமே இலக்கியம் என்ற விழுமியத்தில் நம்பிக்கை கொண்டவராகவே இருந்திருக்கிறார். இதே போல கி.ராஜநாராயணனும் ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கிறார். கதவு சிறுகதை – கிராவின் முதல் கதை அது – வந்தபோது சுந்தர ராமசாமி தந்தி அடித்துப் பாராட்டியதை.

ஜெ

ஆ.மாதவன் விருது அழைப்பிதழ்

ஆ.மாதவன் பேட்டி1
ஆ.மாதவன் பேட்டி 2
ஆ.மாதவன் பேட்டி 3

ஆ மாதவன் கட்டுரை 1

ஆ மாதவன் கட்டுரை 2

ஆ.மாதவன் கட்டுரை
நூல்கள் * | தொடர்பு-உத

விஷ்ணுபுரம் விருது , விழா

முந்தைய கட்டுரைமாவோயிச வன்முறை 3
அடுத்த கட்டுரைமாவோயிச வன்முறை 4